குடும்பம் என்ற அமைப்பு !!

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#1
எழுத்தாளர் கவிதாயினி அ. வெண்ணிலா அவர்களின் முகப்புத்தகத்தில் இந்த தொடரைப் படித்தேன். குடும்பம் என்ற அமைப்பையும் அன்பையும் பற்றி அலசியிருந்தார்கள். சர்ச்சைக்குரிய வாதங்கள் ,சிந்தனையைத்தூண்டியது. போன வருடம் பகிர்ந்திருந்தார்கள். நான் இப்போது தான் படித்தேன் :)
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#2
Re: குடும்பம் என்ற அமைப்பு

ரௌத்திரம் செப்டம்பர் மாத இதழில் வெளியாகியுள்ள பத்தி....

எங்கிருந்து தொடங்குவது?


எங்கிருந்து தொடங்குவது?

’’சாப்ட வர்றீங்களா’’
”ம்’’
”கிளம்பிட்டீங்களா”
“ம்ம்”
”டீ போடணுமா?”
“ம்ம்ம்”
’’செலவுக்குக் கொஞ்சம் பணம் தர்றீங்களா?”
’’ம்ஹூம்”
இது மனைவியும் கணவனும் பேசுவது.
இப்பொழுது கணவனும் மனைவியும் பேசுவது.
“இங்க வச்ச சட்டையை காணோமே?”
சமையலறைக்குள் இருந்து ஒரு டம்ளர் பட்டென்று வைக்கப்படும் சப்தம் கேட்பது.
“ இங்க இருந்த கர்ச்சீஃப் எங்கதான் போகுமோ?”
தட்டொன்று வேகமாக தரையில் வைக்கப்படும் சப்தம்.
“வண்டி சாவியைக் காணோமே”
குழம்புக் கிண்ணம் ஒன்று வேகமாக கீழே போடப்படும்.
இவ்வுரையாடலை எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொண்டு செல்லலாம்.
திருமணமான புதிதிலோ, காதலிக்கும் நேரத்திலோ வாய் ஓயாமல், தொட்டதற்கெல்லாம் சிரித்துக் கொண்டும், சின்ன விஷயம் ஒன்றுவிடாமலும் பகிர்ந்து கொள்ளும், கணவனும் மனைவியும் அதிகபட்சம் ஐந்தாண்டுகளில் வீட்டில் அன்னியோன்யமான பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள். வீடுகளில் பேச்சென்பதே வெறும் செய்திகளை கேட்டறிவதற்கு என்பதாகிவிடுகிறது. முப்பது வயதிற்குமேல் குழந்தைகள்மூலம் பேசிக் கொள்கிறார்கள். ஐம்பது வயதிற்குமேல் சுத்தமாக பேச்சொழிந்து போகிறார்கள். ஒரு சில தம்பதியினருக்கு இந்த கால எல்லை முன்பின்னாக இருக்கலாம். ஆனால் விலகி நிற்கும் சதவீதம் நிச்சயம் இருக்கவே செய்கிறது.
கணவன் மனைவியை சார்ந்திருக்கும் இடங்களும், மனைவி கணவனை சார்ந்திருக்கும் இடங்களும் குடும்பத்திற்குள் என்னவாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள மேற்சொன்ன உரையாடல்கள் ஓரளவுக்கு உதவி புரியலாம்.

நம்முடைய உறவுகளிலேயே மிக உன்னதமான உறவாக கணவன் – மனைவி உறவைச் சொல்லுகிறோம். இருவரும் சேர்ந்து வாழும் குடும்ப அமைப்பை உலகின் தனிச் சிறப்பு வாய்ந்த சமூக நிறுவனமாக கொண்டாடுகிறோம். குடும்ப அமைப்பு குலைந்துவிடக்கூடாது என்பதில் நீதிபதிகளில் இருந்து அரசியல்வாதிகள் வரையிலான சமூகத்தின் அனைத்துத் தரப்பு பெருமக்களும் கவனமாக இருக்கிறார்கள்.

ஏன் குடும்பம் தனிச் சிறப்பு வாய்ந்த நிறுவனமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது? உலகம் முழுக்க ஆண்களும் பெண்களும் சேர்ந்து வாழவில்லையா?அன்பாக இல்லையா? குழந்தை பெற்றுக் கொண்டு தங்களுடைய சந்ததியை வளர்க்கவில்லையா என்றால், நம் பதில் ஆம் தான். ஆனால் உலகின் வேறெங்கும் இல்லாத ஒரு பிணைப்பு, பந்தம், அன்பு இன்னும் குடும்பத்தின் வழியாக நம்மிடையே ஒட்டிக் கொண்டிருக்கிறது என வாதித்துக் கொண்டிருக்கிறோம். இதில் உண்மை எவ்வளவு தூரம் இருக்கிறது என வாதித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே நம் ஒவ்வொருவருக்கும் தெரியும்.

நாடோடிகளாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், ஓர் இடத்தில் தங்கி, இனக் குழுக்களாக சேர்ந்து வாழத் தொடங்கிய பிறகே நாகரிகங்கள் உருவாகின. பண்பாடு, கலைகள் எல்லாம் குழுவாக மனிதன் வாழத் தொடங்கிய பிறகே வடிவம் பெற்றன. எனவே, குழுவாக சேர்ந்து வாழ்வது மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், உயிரினங்கள் எல்லாவற்றிற்குமான பாதுகாப்புதேடும் அடிப்படையான குணமாகும். சேர்ந்து வாழ்வது என்பது பலம். சக்தியின் ஒருங்கிணைப்பு. இனக் குழு மக்கள் சேர்ந்து வாழ்ந்ததில் இருந்தே குடும்பம் உருவானது. குடும்பம் என்பது சமூகத்தின் மிகச் சிறிய அலகாக இருந்தாலும், அதுவே பரிணாமத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உருவாக்கும் அலகாகவும் மாறியது.

பிடித்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கான இடமாக குடும்பம் இருக்கிறது. அந்த விருப்பம் மட்டுமே முதன்மையாக இருந்தவரை குடும்பங்களில் அமைதி தழுவவே செய்திருக்கும்.

ஆனால், குடும்பத்திற்குள் யார் முக்கியமானவர் என்ற நீயா நானா தொடங்கிய பிறகு, குடும்பம் சுவர்களால் ஆன, இறுக்கமான ஒரு கட்டிடமாக மாறிவிட்டது.

மனிதர்களின் ஒழுக்கத்தை, பாலியல் தேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக குடும்பங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் ஓர் ஆண் பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வதும், ஒரு பெண் பல ஆண்களுடன் திருமணம் செய்து கொள்வதும் இயல்பான ஒன்றாகவே நடைமுறையில் இருந்தது. ஆனால், ஆணும் பெண்ணும் சேர்ந்த உறவில் பிறந்த குழந்தைகளை ஒட்டி பல்வேறு சிக்கல்கள் முளைத்தன. குடும்பத்தின் சொத்துரிமை உள்ளிட்ட இச்சிக்கல்களுக்கான தீர்வாகவே மனித உறவுகள் முறைப்படுத்தப்பட்டன. இரண்டாவது, ஆண் தனக்கு விருப்பமான பெண்ணை தன்னுடைய பிரத்யேகமான உடைமையாக நினைக்கத் தொடங்கியதும் குடும்பம் என்ற அமைப்பு நிலைபெறுவதற்கான முதன்மையான காரணமாகும்.

மேற்கத்திய நாடுகளில் குடும்பம் என்ற நிறுவனம் மிக ஆழமான இடத்தைப் பெறவில்லை. அங்கு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியோடு வாழ்வதே முதன்மை. பிடிக்கும் காலம் வரை ஒன்றாக இருப்போம் என்ற புரிதலுடன்தான் அவர்கள் இணைகிறார்கள். என்ன நடந்தாலும் பிரியக்கூடாது என்ற கட்டாயத்துடன்தான் நாம் ஒன்றிணைகிறோம்.
நிறுவனம் அவர்களுக்கு முக்கியமில்லை. நமக்கு நிறுவனம் மிக முக்கியம். குறிப்பாக குடும்பம் என்ற நிறுவனம் மதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு புனிதப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தை முறித்துக் கொள்ள விரும்பும் ஆணோ பெண்ணோ தங்களின் மதநெறிகளில் இருந்து வழுவியதாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள். இங்கு ஒரு தம்பதியின் சொந்த வாழ்க்கை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல. அவர்களின் வாழ்க்கையோடு மதம், சாதி, பரம்பரையின் பெருமை, வட்டாரத்தின் பழக்கவழக்கங்கள் என அசைக்க முடியாத கனத்த சங்கிலிகள் பிணைக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு கனத்த ஏற்பாடுகளுடன் தாம்பத்யதிற்குள் நுழையும் இருவருக்கும் தெளிவான, தீர்மானமான கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. தனி நபர்கள் தோற்கலாம். ஆனால் அமைப்பு தோற்கக் கூடாது. அது மெல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் அமைதியையும் குலைத்துவிடும் என்ற பதற்றம் எப்பொழுதின் சமூகத்தின் அடிநாதமாக இருக்கிறது.

என்ன நடந்தாலும் எளிதாக பிரிந்துவிட முடியாது என்ற கட்டுப்பாடே, இணைவதற்கு முன்பே பலருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லி, ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கும் திருமண ஏற்பாடுகளை நிதானமாக நினைத்துப் பார்த்தால் இருவருக்குமே பயத்தைக் கொடுப்பதாகவே இருக்கிறது. “மாப்ளே, கடைசியா சிரிச்சுக்கடா” என ஆண்கள் தங்களுக்குள் கலாய்த்துக் கொள்வதும், “இனிமேல் நீ அவங்க வீட்டுப் பெண்” என பெண்களை பயமுறுத்துவதும் இந்த பதற்றத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது.

”வாழ்க்கையில் மாற்ற முடிந்ததை தானே மாற்ற முடியும், தலைவரே நீங்க மாத்துங்க தலைவரே, எத்தனை சட்டை வேண்டுமானாலும் மாத்துங்க” என என்னுடைய நண்பன் ஒருவன் அடிக்கடி கிண்டல் செய்து சிரிப்பான். ஏன் எல்லா ஆண்களுக்கும் திருமணம் என்பது பெரிய கால்கட்டு என்பது போலவும் அத்துடன் அவர்களின் சகல சுதந்திரங்களும் பறிபோவதை போலவும் ஆண்கள் பேசிக் கொள்கிறார்கள் என எனக்குப் புரிவதே இல்லை. சொல்லப் போனால், ஒரு திருமண பந்தத்தின் மூலமாக, ஒரு பெண்ணின் வாழ்க்கையில்தான் முழுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. வேர்விட்டு வளர்ந்த ஒரு தாவரத்தை பெயர்த்தெடுத்து வேறோர் இடத்தில் நட்டோமானால், மிக அரிதாகவே அந்த தாவரம் உயிர் பிழைத்துக் கொள்ளும். ஆனால், இயற்கையை விஞ்சும் வகையில் பெண்கள் வேர் பிடித்துக் கொள்கிறார்கள். புதிய மனிதர்கள், புது வகையான உணவுப் பழக்க வழக்கங்கள், சுவை, வீட்டின் நடைமுறை, உறவினர்கள் என்று எல்லாமே புதுசான சூழலில் ஒரு பெண் வாழ நேர்வதை நினைத்தால், மிக ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், இதை வழக்கமான ஒன்றாக நினைக்க வைத்து, எளிதாக திருமண பந்தத்திற்குள் தள்ளிவிடுவதில் சமூகம் தன்னுடைய சாமர்த்தியத்தை ஒளித்து வைத்திருக்கிறது.

இப்பொழுது ஒரு நகைக்கடை விளம்பரத்தில், பிரகாஷ்ராஜிடம் தங்களின் பெண் குழந்தைகளை அறிமுகப்படுத்துபவர்கள், இது என் மூத்த டென்ஷன், இது என் முதல் டென்ஷன், இது என்னோட ரெண்டு டென்ஷன் என்று கூறுகிறார்கள். இதில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி என்று அறிமுகம் வேறு. அறிவும் அழகும் திறமையும் இருந்தாலும் பெண் குடும்பத்தின் டென்ஷனாகவும் வயிற்றில் கட்டப்பட்ட நெருப்பாகவும் சொல்லி வளர்க்கப்படுவதால்தான் வேரோடு பிடுங்கி நடப்படும்போது பிழைத்துக் கொள்கிறாள். இதுதான் அடைய வேண்டிய இடம், இதற்காகவே தான் பிறப்பெடுத்தோம் என்ற மனப் பயிற்சி எதற்கும் தயாரானவளாக அவளை உருமாற்றுகிறது.

உடைக்க முடியாத தபசொன்றை போல் இருவரின் முன்னும் நிறுத்தப்படும் இந்தப் போட்டியில், வெற்றியும் தோல்வியும் முக்கியமல்ல…அமைப்பில் இருந்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இணையும் முதல் நாளே இருவரின் தோள்களிலும் சுமத்தப்படுகிறது. தங்கள் விருப்பங்களை மீறி அழுந்தும் சுமை ஆணையும் பெண்ணையும் ஒருவர்மேல் ஒருவர் கசப்புடையவர்களாக மாற்றுகிறது.
வாய் ஓயாமல் பேசி, சிரித்து சிரித்து அன்பு செலுத்தியவர்கள் ஒற்றை வார்த்தையில் பேசுவதும், பேசாமல் போவதும், அன்பற்றவர்களாகவும், ஒருவருக்கு ஒருவர் வாழ்நாள் எதிரிகளாகவும் மாறிப் போவது இந்தக் குடும்பம் தரும் அழுத்தமே…

அழுத்தப்படும் எல்லாம் வெடித்தே தீரும் என்பது விதி…

வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் நம் கண்முன்னால் இரண்டே தேர்வுகள் உள்ளன.

அப்பாவிகளாய் அதில் சிக்கி வாழ்வைத் தொலைத்த மனிதர்களை காப்பதா?

நம் பெருமையின் அடையாளமாய் திகழும் குடும்பத்தைக் காப்பதா?

பேசுவோம்…
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#3
Re: குடும்பம் என்ற அமைப்பு

ரௌத்திரம் மாத இதழ்


எங்கிருந்து தொடங்குவது – 4

குடும்பம் நம்மை கட்டுப்படுத்துகிறதா? நம் சிறகுகளை வலுப்படுத்தி இன்னும் சுதந்திரமாக்குகிறதா?
காலம் காலமாக கேட்கப்படும் கேள்விகளே இவைகள். விடைகள்தான் கண்டறியப்படாதன. வரையறுக்கப்படாதன.
தெனாலிராமனின் பூனையைபோல் நமக்கெல்லாம் இந்தப் பால் சுடும் என்று தெரிந்திருந்தாலும், அந்தப் பாலை குடித்தே தீருவோம் என்ற லட்சியத்துடன்தான் நாம் வாழ்வைத் தொடங்குகிறோம். நல்ல குடும்பம் என்பது நம் எல்லோரின் கனவாகும்.

நாம் எல்லோரும் பிறந்ததில் இருந்தே குடும்பத்திற்குள்தான் இருக்கிறோம். குடும்பமே நமக்கு அன்பைத் தந்திருக்கிறது. நம்மை பாதுகாத்திருக்கிறது. குடும்பத்தின் உறுப்பினர்களே நமக்கு வழிகாட்டிகளாக மிளிர்கிறார்கள். குடும்பம் என்ற அங்கத்தின் மூலமே நாம் நம் பண்பாட்டின் வேரை அடையாளம் காண்கிறோம். தொப்புள்கொடி உறவாய் இந்த சமூகத்துடன் நம்மை பிணைத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு குழந்தைக்கும் குடும்பமே தம்மை வாழ்நாள் முழுக்க காத்து நிற்கும் ஆல விழுதாக கண்ணுக்குத் தெரிகிறது…

ஒரு பெரிய மரத்தின் கிளையை உடைத்து, நுனியில் சாணம் தடவி, புதியதாக ஓர் இடத்தில் பதியனிட்டு வளர்ப்பதைப் போல், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது ஓர் ஆணையும் பெண்ணையும் ஒன்று சேர்த்து பதியனிடுகிறது சமூகம். அதுவரையிலும்கூட குடும்பத்தில்தான் இருந்தோம் என்றாலும், ஆண்-பெண் புதிதாக இணைந்து அமைக்கும் குடும்பமே அவர்களின் தனித்தக் குடும்பமாகிறது. அதுவரை குடும்பத்தின் நிழலை, பாதுகாப்பை உணர்ந்து வந்தவர்களுக்கு அதன் இருளடர்ந்த பகுதிகள் தெரிய வரும். குடும்பம் குளிர்தரு ஆலமரம் மட்டுமல்ல, கடக்க முடியாத பெரும்பாலையும் அதுவே என்பதை தனித்து விடப்படும் ஆணும் பெண்ணும் முதல் கணத்திலேயே தெரிந்து கொள்கிறார்கள்.

அதுவரை குடும்பம் என்பது உறையும் இடம். நேரத்துக்கு சாப்பாடு கிடைக்குமிடம். அன்றாட வாழ்வில் எழும் தேவைகளையெல்லாம் வீட்டில் உள்ள யாரோ பூர்த்தி செய்து விடுவார்கள். குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளும் விவாதங்களும் தனக்குத் தொடர்பில்லாதவை, தன்னை பாதிக்காதவை, பல நேரங்களில் அதை வெட்டி சண்டையாகக் கூட நினைத்துக் கொண்டு குடும்பத்திற்குள் நுழைகிறவர்களுக்கு கொஞ்ச நாட்களில் தெரிய வரும்…குடும்பம் என்பது கட்டிடம் அல்ல, தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் இடமல்ல…அது இரண்டு மனங்களும், இரண்டு உடல்களும் ஒன்றை ஒன்று ஏற்றுக் கொள்ளவும், பொருந்திப் போகவும் முயலும் இடமே.

குடும்பம் இரண்டு அடுக்குகள் கொண்ட ஓர் அமைப்பு. மேலடுக்கு எல்லோரும் பார்க்கும் பூச்சுகள் நிரம்பிய அடுக்கு. கீழடுக்கு கணவன் மனைவி என்ற இரண்டு பேருக்கு மட்டுமே தொடர்புடைய அகவுலகம் தொடர்பானது. மேலடுக்கில் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பிறக்கும். வீடு புதிய பொருட்களால் நிரம்பும். அல்லது புதிய வீடே உருவாகும். அங்கு நண்பர்கள் வருவார்கள். உறவினர்கள் வருவார்கள். தெரிந்தவர்களின் அனைத்து விசேசங்களுக்கும் குழந்தைகளுடன் சென்று வருவோம். குழந்தைகளுக்கான எதிர்கால சேமிப்பு, கல்வி, முன்னேற்றம் போன்றவைகள் எல்லோருக்கும் தெரிந்த வண்ணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த ஒழுங்கில் பெரிதும் பிறழாத குடும்பங்கள் சமூகத்தில் நற்குடும்பங்களாக நற் தம்பதியினராக பெயர் வாங்க முடியும். பொருளாதாரத்தில் முன்பின்னாக இருப்பவர்களுக்குக் கூட இந்த நடைமுறைகள் தவறுவதில்லை.

கீழடுக்கு, பெரும்பாலும் மற்றவர்களால் அறியப்படாதது. அதில் இருக்கும் நிறைவு நிறைவின்மைகளை பற்றி வெளியில் உள்ள யாரும் கவலைப்படுவதுமில்லை. ஆனால், கீழடுக்கில் இருக்கும் புரிதலும் நெருக்கமும்தான் நம் குடும்பத்தின் வெற்றி தோல்வியை, இருப்பைத் தீர்மானிக்கின்றன. இதில் பொருந்திப் போவதற்குத்தான் நாம் முன்பு பார்த்தத் தயாரிப்புகள் குடும்பத்தில் நடைபெறுகின்றன.

ஆனால், எல்லா தயாரிப்புகளும் கணவன் மனைவியின் முன் செயலிழந்து போகின்றன. சகல மன உடல் தயாரிப்புகளுடன் நாம் பழகியிருந்தாலும், இருவர் சேர்ந்து, தனித்து வாழ்வது பெரும் சவாலே. சேர்ந்து வாழ்வது என்பதில் முதலில் பலியாவது ஆணுக்கும் பெண்ணுக்குமான தனித்துவமே. தனித்துவத்தை இழப்பதையே நாம் உண்மையான தாம்பத்தியத்தின் விளக்கமாகக் கொள்கிறோம். ஆனால் அப்படி தங்களின் தனித்துவத்தை விட்டுக்கொடுப்பது யாருக்குமே எளிதான காரியமில்லை. பெண்கள் விட்டுக் கொடுப்பதற்காகவே பழக்கப்படுத்தப்படுவதால் ஓரளவிற்கு சமாளிக்கிறார்கள்.

இருவருமே தங்களின் தனிப்பட்ட ரசனைகள்,விருப்பங்கள் வேறுவேறாக இருக்கலாம் என்ற புரிதல் நமக்குள் இருந்தாலும் அது எளிதாக மாறிவிடுகிறது. வாழ்வின் தொடக்க காலங்களில் இருக்கும் புரிதல், பின்வரும் காலங்களில் இல்லாமல் போகிறது. காலையில் எழுந்தவுடன் கணவனுக்கு காஃபி தான் குடிக்கப் பிடிக்கும் என்றால், மனைவியும் காஃபி குடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், கணவனுக்கு காஃபியும், தனக்கு டீயும் வைத்துக் கொள்வது மனைவியின் வேலையாக ஆகும்பட்சத்தில் மனைவி மெல்ல காஃபிக்கு பழகிக் கொள்கிறாள். மனைவிக்குப் பிடிக்காது என்பதற்காக முழுக்கைச் சட்டை அணியாமல் இருக்க கணவன் பழகிக் கொள்கிறான்.

இப்படி சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கி, அடிப்படையான விருப்பங்கள் வரை விட்டுக் கொடுக்க நேரும். முதலில் அன்பின் மிகுதியால் ஒன்றும் தெரியாது. நாட்கள் ஆக ஆக இருவருக்கும் இடையில் இருக்கும் சாதாரண முரண்பாடுகள் நடைமுறை வாழ்க்கையில் பெரும் கற்பாறைகளைப் போல் முன்னிற்க தொடங்கி விடும். பிள்ளைகள் சண்டையை விலக்க கொஞ்சம் குரல் உயர்த்தினால்கூட, ”ஏன்தான் இப்படி நாள் முழுக்க கத்திக் கிட்டே இருக்கியோ” என்று கணவனும், ”எது நடந்தாலும் காது கேட்காத மாதிரியே உட்கார்ந்திருங்க, நீங்கதானே பேப்பர் படிக்கணும், டி.வி.பார்க்கணும், உலக விஷயங்களை தெரிஞ்சுக்கணும், நாங்க பேசினாலே கத்துற மாதிரி இருக்காத பின்னே” என்று மனைவியும் எதிர் திசையில் நிற்பார்கள்.

முடிந்தால் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பிவிடும் கணவர்கள் ஓரளவுக்கு சண்டைக்கு பயந்தவர்கள். விவாதம் வளர்த்து அதனால் வெளிப்படப் போகும் இருவரின் பலவீனங்களுக்கும் இயலாமைக்கும் பயந்தவர்கள். வெளியேறாத கணவனிடம் மேலும் பேச்சை தொடர்ந்து, கணவனை கொஞ்சமாவது தன் அதிகாரத்தைக் கையில் எடுக்கத் தூண்டும் மனைவிகள் குழந்தைகளின் மனநலம் பற்றி கவலை கொள்ளாதவர்கள்.

சிறுசிறு முரண்பாடுகளை, கருத்து வேறுபாடுகளை கையாளத் தெரியாததால்தான் ஒவ்வொரு குடும்பங்களிலும் கணவனிடமிருந்து மனைவியும், மனைவியிடமிருந்து கணவனும் தப்பிக்க நினைக்கிறார்கள். சேர்ந்தார்போல் அரை நாளோ, ஒரு நாளோ இருந்துவிட்டால் ’எப்படா வெளியே போவோம்’ என்று ஆண்களும், ’கிளம்பினால் பரவாயில்லை’ என்று பெண்களும் காத்திருக்கிறார்கள்.

ஓர் ஒப்பந்தத்திற்கு உட்பட்டவர்கள்போல் குடும்பத்தில் கணவனும் மனைவியும் இருக்கிறார்கள். தனக்கு நூறு சதவீதம் பொருத்தமானவராக தன் துணை அமையவில்லை என்ற உள்ளக் கிடக்கை நம் தமிழ்ச் சமூகத்தில் நிச்சயம் எண்பது சதவீதத்தினருக்கு மேல் இருக்கிறது. காரணம், நமக்குக் குடும்பம் என்பதை அறிமுகம் செய்யும்போது நடக்கும் மிகைத் தன்மையே முதலில் இந்தப் புரிதலின்மைக்கு காரணம்.

எந்த ஆணும் பெண்ணும் நூறு சதவீதம் ஒத்த ரசனை, குணங்கள் கொண்டவர்களாக இருக்க முடியாது என்ற நிதர்சன உண்மையை நம் குடும்பங்கள் நமக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. முரண்பாடுகளின் மூட்டையான மனிதர்களை அன்பு பிணைக்கும்போது, இயல்பாக எழும் விட்டுக் கொடுத்தலையும், புரிந்து கொள்ளலையும் நாம் தவறான விதிகளாக்கி வைத்திருக்கிறோம். நம் மூளைக்குள் இருக்கும் பழம் விதிகள் குடும்பத்திற்குள் துருவேறிக் கிடக்கின்றன. சாதாரணமாக ஒரு வார்த்தைப் பேசினாலும், பெரும் கலவரங்களுக்குள் குடும்பங்கள் எளிதாக நழுவி விழுந்து விடுகின்றன.

ஆணும் பெண்ணும் அன்பாய் இருக்கப் பழக்கப்படுத்துவதற்கு பதில், ஒருவரை ஒருவர் இழை அளவு கூட தனித்திருக்க விடாமல், தனித்தன்மையை மதிக்கத் தெரிந்து கொள்ளாமல் குடும்பங்களை அமைத்து விடுகிறோம். அதனால்தான் மனைவியை கண்காணிப்பது கணவன் வேலையாகவும், கணவனை கண்காணிப்பது மனைவி வேலையாகவும் மாறி விடுகிறது. அன்பாக இருக்கும்போது, சாப்பிட்ட தட்டிலேயே சாப்பிட்டுக் கொள்வதும், சண்டை வந்தவுடன் உணவு மேசையில்கூட உணவை எடுத்து வைக்காமல் இருப்பதும் நடக்கிறது. அன்பாக இருக்கும்போது நள்ளிரவில் வந்தாலும் காத்திருந்து சாப்பிடும் மனம் வரும். சண்டை என்றால், கதவைத் திறக்கையிலேயே தாழ்ப்பாள் உடைந்து விழும்.

இப்படி கணவன் மனைவி உறவுக்குள் மனம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் காற்றோட்டமான இடைவெளி இருக்கும்போது இந்த முரண்பாடுகளின் இறுக்கம் கொஞ்சம் தளரலாம். ஆனால் நாம் கொஞ்சம்கூட அத்யாவசியமான அந்த இடைவெளி வந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறோம். கணவன் எத்தனை சிகரெட் பிடித்தான் என்பதில் இருந்து, மனைவி புதிதாக வாங்கிய காலனி வரை இருவருக்கும் தெரிந்தே இருக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறோம். செய்திகள் தெரிந்து கொள்வதற்கு குடும்பங்களில் காட்டப்படும் ஆர்வம், ஒவ்வொருவரின் ஆன்மாவைப் புரிந்து கொள்வதில் காட்டப்படுவதில்லை.

குடும்பம் என்ற அமைப்பின் மீதான புனிதத் தன்மை அதன் பிரச்சனைகளையும் புழுக்கத்தையும் பற்றி பேச அனுமதிப்பதில்லை. அப்படி பேசினாலே அக்குடும்பத்தை சிதைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
வீடு என்பது சுவர்களால் ஆன ஒரு நிலவியல் பரப்பு என்றாலும், அது ஒரு சமூக அமைப்பாக மாறுவது மனிதர்களாகிய நாம் வாழத் தொடங்கும்போதுதான். விலங்குகளும் இவ்வாறு தங்களுக்கான குடியிருப்புகளை இயற்கையிலேயே உருவாக்கிக் கொள்ளும், இணையுடன் சேர்ந்து வாழச் செய்யும் என்றாலும், விலங்குகளுக்குள் ஒரு குடும்பத்தின் நிர்பந்தங்கள் எதுவும் இருந்ததில்லை. விலங்குகளும் இனப்பெருக்கம் செய்கின்றன. குழந்தைகள் வளர்க்கின்றன.

மனிதர்களுக்கு மட்டும்தான் குடும்பம் பெரும் நிர்பந்தம். குடும்பத்தின் எல்லோரின் மகிழ்ச்சி தொலைந்தாலும், குடும்பத்தை காப்பாற்றியே தீர வேண்டிய நிர்பந்தம்.

குடும்பத்தின் சிக்கலை யார் அதிகப்படுத்துகிறார்கள்?

குடும்பத்தில் சிக்கல் இருந்தாலும் குடும்பத்தை கட்டிக் காக்க விரும்புபவர் யார்?
 
Last edited by a moderator:

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#4
Re: குடும்பம் என்ற அமைப்பு

ரௌத்திரம் மாத இதழில்....
எங்கிருந்து தொடங்குவது - 5
குடும்பம் அன்பினால் கட்டப்படுவது, அன்பை உருவாக்க, வளர்க்க கட்டப்படுவது என்பதே நமது பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், ஆழமாக யோசித்தால் குடும்பத்தைப் போல் வன்முறைகள் நிரம்பிய சமூக அமைப்பு வேறொன்றும் இல்லை.

கணவனும் மனைவியுமாக குடும்பத்திற்குள் இணையும் ஆணும் பெண்ணும், ஆண் பெண் எனும் மயக்கம் தெளிந்தபிறகு, குடும்பம் என்ற மாயசக்தியின் வறண்ட கட்டுப்பாடுகளுக்குள் அடைபட்டுவிடுகிறார்கள்.

குடும்பத்தின் வெளிப்படையான நடைமுறைகள் வேறானவை.
அந்தரங்கத்தில் செயல்படும் விதிகள் வேறானவை. குடும்பம் ஆணையும் பெண்ணையும் ஒருவருக்கு ஒருவர் எதிரான யுத்தத்தில் நிறுத்துகிறது. இந்த யுத்தத்தின் இலக்கு யுத்தம் புரிதல் மட்டுமே. இங்கு யுத்தம் புரிவதற்கான காரணங்கள் வேண்டியதில்லை. யுத்தத்தில் வெற்றி தோல்விகள் தேவையில்லை. வெல்பவர் யார், வீழ்பவர் யார் என்ற தீர்மானங்கள் இல்லை. ஆனால், யுத்தம் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே குடும்பத்தின் அடிப்படை நியதி.

குடும்பம் களத்தில் ஆணையும் பெண்ணையும் இறக்கிவிட்டு அவர்களை பிணைத்திருக்கும் மாயக் கயிறுகளை எல்லா நேரமும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது. அதற்கு குடும்பத்திற்குத் தேவை சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் சில நியமங்களும், காலாவதியாகிப் போன கருத்துக்களும் மட்டுமே. உலகமும் வாழ்க்கையும் எவ்வளாவு நவீனமாகிப் போனாலும், கொஞ்சமும் நவீனமாகாமல் புராதன நெடியில் திணறிக் கொண்டிருப்பவை குடும்பங்களே.

குடும்பத்திற்குள் ஏன் சண்டை வருகிறது என்பதே தெரியாது. சண்டை வருவதற்கான காரணங்களும் தேவையில்லை. கணவன் தேநீரை உறிஞ்சிக் குடிப்பதில் இருந்து, மனைவி காய்கறிகாரரிடம் சிரித்து பேரம் பேசி காய்கறி வாங்குவது வரை காரணங்கள் அற்பமானவை. ஆனால், அதில் தொடங்கும் சிடுசிடுப்பு, இருவருக்கும் இடையில் இருக்கும் அன்பை அடியோடு சுரண்டிக் கொண்டே இருக்கும்.

குடும்பத்திற்குள் மிகுந்த அன்னியோன்யமாக இருப்பதாகச் சொல்லும் கணவன் மனைவியின் அன்பை, அன்பென்ற வகைப்பட்டில் சேர்க்க முடியுமா என்பதே சந்தேகம்தான். கணவன் பேசும் உரையாடலை கண்காணித்துக் கொண்டும், அவன் இல்லாத நேரத்தில் அவன் சட்டைப் பையை ஆராய்ந்து கொண்டும், அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் கணவனை கண்ணாலேயே தீவிர ஸ்கேன் செய்துவிடும் மனைவிகளுக்கும் அது தவறென்றே தெரிவதில்லை. பொண்டாட்டினா சந்தேகப் படாமலா இருப்பாங்க என்று கணவன்களே இதை மகிழ்ச்சியோடு ஆமோதிப்பதும் அன்பின் வழியது உயிர்நிலையா என்று புரியவில்லை.

வெளியில் கணவனும் மனைவியும் சேர்ந்து சந்தோஷமாகக் கிளம்பிப் போவார்கள். தொண்ணூறு சதவீத நேரம், வீட்டுக்கு வரும்போது பிரச்சனைகளோடுதான் திரும்பி வருவார்கள். நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரும் காரணங்களாக இருக்கும். திரையரங்கில் தனக்கு முன்னால் போன பெண்ணை கணவன் உற்றுப் பார்த்தான், சிரித்தான், தன்னை விட்டுவிட்டு முன்னால் நடந்து விட்டான் என காரணங்கள் ஆளுக்கு ஒன்றாக விரியும். ’கூட்டத்துல ஒருத்தன் இடிச்சுட்டுப் போறான், அவன் இடிக்கிறதுகூட தெரியாம, அப்படி என்னடி ஆ ன்னு வேடிக்கை உனக்கு’ என்றும், ’சாப்பிட கூட்டிக்கிட்டு போனா சாப்பிடணும், அங்க வந்து இது இவ்வளவு காசா, ஒரு தோசை ஐம்பது ரூபாயான்னு வாயைப் பொளந்துகிட்டு…பட்டிக்காட்டு நாயைல்லாம் அதுக்குத் தான் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்றது’ என்று கணவன்களும் அங்கலாய்த்துக் கொள்ள மனக் கசப்பிலேயே கழியும் எல்லா வெளியுலக பயணங்களும். நான்கைந்து நாள் சுற்றுலா செல்லும் குடும்பங்களின் சண்டைகள் பற்றி மட்டும் தனி நூலே எழுதலாம்.

திட்டமிடும்போதும், கிளம்பும்போதும் இருந்த ஆர்வமும், களிப்பும் போன இடம் தெரியாமல், காற்று போன பலூன்கள்போல் வீடு திரும்புவார்கள். இதில் சில ஆயிரங்கள் செலவானது மட்டுமே மிச்சமாக இருக்கும்.

தோற்றுப்போன அல்லது மலராமல் போன அன்புடன்தான் பெரும்பாலும் குடும்பங்கள் உள்ளன. விதிவிலக்குகள் எங்கும் உள்ளன. அதன் சதவீதம் முழுமையாக்கும் எண் அளவிற்குக்கூட இல்லை என்பதால், அதைப் பொருட்படுத்த வேண்டியதே இல்லை. தன்னுடைய ஓட்டுனர் முன்னால், தன்னை சத்தம் போட்டுப் பேசியதாகவோ, தன்னைப் பார்க்க வந்த முக்கியஸ்தர் முன்னால் சரியாக நடந்து கொள்ளத் தெரியவில்லை என்றோ வேறுபட்ட காரணங்கள் இருக்கவே செய்யும், இன்னும் கொஞ்சம் பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்திற்குப் போனால். புரிதல் உள்ள குடும்பங்களிலும் நூறு சதவீதம் இதுபோன்ற கருத்து மோதல்கள் இல்லையென்று சொல்ல முடியாது. வாய்விட்டுச் சொல்லிக் கொள்ளாமல் மௌனத்தில் புதைத்துக் கொள்வார்கள் தங்கள் முரண்பாடுகளை. மொத்தத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான உறவில் நூறு சதவீதம் புரிதலுடன்கூடிய அன்பென்பது வாய்ப்பே இல்லை.

ஆனால், அந்தப் புரிதலை ஏற்காமல், அப்படி ஒரு இடைவெளி இருக்கிறது என்பதே தெரியாமல் குடும்பங்கள் நல்ல நாடகத்தை நிகழ்த்துகின்றன. இரவு இரண்டாவது காட்சிக்கு தன்னுடைய நண்பர்களோடு குடித்துவிட்டுச் சென்று, திரையரங்கில் சிகரெட் பிடித்துக் கொண்டும், விசிலடித்துக் கொண்டும், பார்க்கும் பெண்களை பார்வையால் மேய்ந்து கொண்டும் இருக்கும் கணவன், அந்தப் படம் பார்த்துவிட்ட சுவடே தெரியாமல், அடுத்த நாள் மாலை முதல் காட்சிக்கு தன் மனைவி, குழந்தைகளுடன் திரையரங்கிற்கு வந்து அப்போதுதான் அந்தப் படத்தைப் பார்ப்பதுபோல், ரசித்துப் பார்ப்பான். தன் மனைவி, பெண் குழந்தைகளை யாராவது வைத்தக் கண் எடுக்கமல் பார்க்கிறார்களா என்று இடையிடையே காவலாளி வேலையும் சரியாக நடக்கும். இடைவேளையில் குழந்தைகளுக்கு பாப்கார்னும், ஐஸ்கிரீமும் வாங்கிக் கொடுப்பான். குரல் உள்ளடங்கி ஒரு நாகரீகத்தை சுவீகரித்து இருக்கும். குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, மனைவிக்குத் தனியாக சமோசா வாங்கிக் கொண்டு வரும்போது, அவனுடைய சகா யாராவது எதிர்ப்பட்டு, ”டேய் மச்சான், என்னடா படத்துக்கா” என சத்தமாகக் கேட்டால், அவனின் தரத்திலிருந்து தான் மேம்பட்டவன் என்பதைக் காண்பிப்பதைப் போல், ”ஆமாம்ம்ம்ம், ஃபேமலியோட வந்திருக்கேன்’’ என சிரித்து, வழிந்து உடனடியாக அந்த இடத்தை காலி செய்யும் கணவனுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

கணவனுக்கு விதவிதமாக சமைத்துத் தருவதும், அழகாக துணி துவைத்து அயர்ன் செய்து தருவதும், அவனுக்குப் பிடிக்குமே என்று விடுமுறை நாட்களில் எல்லா விசேச உணவுகளையும் செய்து வைத்து திணற வைப்பதும் மனைவி செய்வதே. கணவன் வீட்டில் இருந்தால், பிள்ளைகள்கூட சத்தம் போடாமல் பார்த்துக் கொள்வது, வேலை முடிந்து தாமதமாக வந்தால், தூங்குவதற்கான அமைதியான சூழலை உருவாக்குவது, வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்துவிடுவது எல்லாம் செய்வாள். ஆனால், அவளின் இந்த அன்புக்குப் பின்னால், விளக்கின் கீழ் வளரும் கருநிழலென சந்தேகம் வளர்ந்து கொண்டே இருக்கும். கணவனின் சின்ன நடவடிக்கை மாற்றமும், அவன் சொல்லும் சிறுசிறு பொய்யும், மனைவிக்கு மிகப் பெரிய அடியாக இருக்கும். அவளின் மன உலகம் தன் கணவன் தன் கைவிட்டு வேறெங்கோ போய்விடப் போவதான கற்பனையான பயத்திலும் திகிலிலுமே இருக்கும். அன்பான பல மனைவிகள்கூட கணவனிடம் எல்லா நேரமும் சந்தேக தொனியிலான கேள்விகளால் வறுத்தெடுத்துக் கொண்டே இருப்பார்கள். வெளியில் வேலை முடித்து வீட்டுக்கு வந்து சேர்வதற்குள், ஒவ்வொரு கணவனுக்கும் குறைந்தது நான்கைந்து தொலைபேசி அழைப்புகளாவது வந்துவிடுகிறது. (சில கணவன்கள் மனைவிகளின் இச்செயலை ரசித்து அனுமதிக்கிறார்கள் என்பதும் உண்மையே. அதுவே உண்மையான அன்பின் வெளிப்பாடு என்ற புரிதலும் இதன் பின்னால் இருக்கு.)

கணவன், மனைவியின் அக-புற முரண்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னால் நமக்கு உடன்பாடான, நியாயமான காரணங்கள் ஏராளமாக இருக்கும்/ இருக்கின்றன. ஆனால், அக்காரணங்கள் பொருந்திப் போகக் கூடிய குடும்பங்களின் சதவீதம் மிகக் குறைவே. அக்காரணங்கள் தங்கள் குடும்பத்திற்குப் பொருந்தி வந்துவிடுமோ என்ற பயத்திலேயே பாதி குடும்பங்கள் தங்கள் உறவை, அன்பை அடமானம் வைக்கின்றன.

மனைவிக்கு அழகு கணவனை சந்தேகிப்பதும், கணவனுக்கு அழகு மனைவியை பொத்திப் பாதுகாப்பதும் என்ற புரிதலே நம் குடும்பங்களின் ஆகச் சிறந்த அன்பாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தின் கணவன் மனைவி நடவடிக்கைகளை தள்ளி நின்று தீவிரமாகக் கண்காணித்தால், நம் உறவுகள் எவ்வளவு மோசமாக, அன்பற்ற அன்பினால் கட்டப்பட்டிருக்கின்றன் என்பது புரிய வரும். ஓர் ஒப்பந்தத்தில் சேர்ந்து வேலை செய்கின்ற அலுவலர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச புரிதல்கூட குடும்பங்களில் இல்லை என்ற யதார்த்தம் பச்சை மாமிச வாடையாய் நம்மை முகஞ்சுளிக்க வைக்கும். ஆனால், அந்த முகஞ்சுளிக்க வைக்கும் நடவடிக்கையையே நாம் வெற்றிகரமான குடும்ப வாழ்வாகக் கொண்டாடுகிறோம். ’இதெல்லாம் ஒரு குடும்பஸ்தனுக்கு சகஜமப்பா’ என்று பெருமை பேசுகிறோம். நண்பர்களுடன் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடிக்கும் கணவனும், முக்கிய ஆலோசனையில் இருக்கும் அதிகாரி கணவனும், வீட்டில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பைப் பார்த்தால், லேசாக நடுங்குவதையும், சலித்துக் கொள்வதையும், இதுவரை வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சுதந்திர உணர்வு பறிபோன சோகத்தையும் வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம்.

எல்லா உண்மையும் தெரிந்த நண்பர்களைப் போல், எல்லா துயரங்களையும் பகிர்ந்து கொள்ள முடிந்த உறவைப் போல் கணவனும் மனைவியும் இருக்கவே முடியாதா? காதல் திருமணம் செய்தவர்கள்கூட திருமணத்திற்குப் பிறகு அப்படி இருக்க முடியவில்லை என்கிறார்களே ஏன்?

குடும்பம் என்ன மாய ரசவாதத்தை நம்மில் நிகழ்த்துகிறது. உயிரற்ற ஓர் அமைப்பு, வடிவற்ற ஒரு நிறுவனம், கண்ணுக்குப் புலனாகாத தன்னுடைய சட்ட திட்டங்களின் மூலம் ஆண் பெண்ணின் அடிப்படை அன்பை களவாடிவிட முடியுமா? இயற்கை தந்துள்ள இனக் கவர்ச்சியை வழித்தெறிந்துவிட்டு நிரந்தர பகையாளிகளாக்கிவிட முடியுமா? வெறும் கடமைக்காக ஓடும் இயந்திரங்களாக மாற்றி தனிமனித சுதந்திரங்களை நசுக்கி எறிய முடியுமா?

ஆம். முடியும். குடும்பங்களால் முடியும். குடும்பத்திற்குள் நடமாடிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையோர் சமூகத்தின் நற்பெயருக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தான் கசப்பான வாழ்வைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு கசப்பை ஒவ்வொருவரும் தாங்கிக் கொண்டிருந்தாலும், குடும்பத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரையும், ஒவ்வொருவரும் நகையாடுவோம். தூற்றுவோம். ஏளனம் செய்வோம். அங்கீகாரம் மறுப்போம். வாழ்வில் தோற்றவரின் இழிநிலையை சுமத்துவோம். நம்மின் பலவீனத்தினால்தான் குடும்பத்தின் வன்முறை இன்னும் வளர்கிறது.

நாம் மகிழ்ச்சியாகப் பயணிக்கத் தேர்ந்தெடுக்கும் வாகனத்தை, தோளில் தூக்கிச் சுமந்து கொண்டு செல்லும் நிலை வருவது பெரும் துயரம். அப்படி ஒரு நிலை வந்த பிறகும் அயராது, வாகனத்தைத் தூக்கிச் சுமப்பவர்களுக்கே நம் அகராதியில் குடும்பஸ்தர் என்று பெயர்.

குடும்பம் நடத்தும் இந்த சதி செயலில் பகடைகள் கணவன் மனைவிகள் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்…இல்லை..உண்மையான பகடைகள் குழந்தைகளே….
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#5
Re: குடும்பம் என்ற அமைப்பு

நான் படித்த வரை அன்பு காதல் என்று மாயா மாயா விஷயங்களை வைத்துக்கொண்டு எழுதுபவர்களில் ஆழமாக குடும்பத்தை சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் சிஸ்டமாக அலசியிருப்பது வியப்பளித்தது. சில கருத்துக்கள் எனக்கு உடன்பாடில்லை தான் என்றாலும் இந்தப்பொருள் விவாதத்துக்குரியது. ஆனால் எந்த விடையுமே எம்மால் தர முடியாதது :) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#6
Re: குடும்பம் என்ற அமைப்பு

உஷா,
அருமையான பகிர்வு. பாதி தான் படித்தேன் அதில் அனைத்துமே ஏற்றுக்கொள்ளும்படியான ஆழமான ஆய்வு.

Family is a just a setup, designed by humans, as a part of human civilization, to provide a systematic and reliable life style. - I totally agree.

மீதியும் படித்துவிட்டு வருகிறேன்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#7
Re: குடும்பம் என்ற அமைப்பு

Uchu,

Thought provoking discussion, a good analysis. I second you. Thanks a lot for this wonderful share
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#8
Re: குடும்பம் என்ற அமைப்பு

உஷா,
அருமையான பகிர்வு. பாதி தான் படித்தேன் அதில் அனைத்துமே ஏற்றுக்கொள்ளும்படியான ஆழமான ஆய்வு.

Family is a just a setup, designed by humans, as a part of human civilization, to provide a systematic and reliable life style. - I totally agree.

மீதியும் படித்துவிட்டு வருகிறேன்.
True sissy :) வாங்க வாங்க
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#9
Re: குடும்பம் என்ற அமைப்பு

Uchu,

Thought provoking discussion, a good analysis. I second you. Thanks a lot for this wonderful share
Yeah. We all know this by heart but we cant do anything about it and we don't even want to!

it is like taking bitter medicine for the betterment of health ;) ha ha

muzhuka appadiyum sollida mudiyaathu. Family la kidaikkara happiness protection and love ku vera substitute e kidaiyaathe :)
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#10
அருமையான பகிர்வு உஷாந்தி....

இது போன்ற எண்ணங்கள் என் மனதிலும் அவ்வப்போது தோன்றும்.


பிடித்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கான இடமாக குடும்பம் இருக்கிறது. அந்த விருப்பம் மட்டுமே முதன்மையாக இருந்தவரை குடும்பங்களில் அமைதி தழுவவே செய்திருக்கும்.

என்ன நடந்தாலும் எளிதாக பிரிந்துவிட முடியாது என்ற கட்டுப்பாடே, இணைவதற்கு முன்பே பலருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லி, ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கும் திருமண ஏற்பாடுகளை நிதானமாக நினைத்துப் பார்த்தால் இருவருக்குமே பயத்தைக் கொடுப்பதாகவே இருக்கிறது. “மாப்ளே, கடைசியா சிரிச்சுக்கடா” என ஆண்கள் தங்களுக்குள் கலாய்த்துக் கொள்வதும், “இனிமேல் நீ அவங்க வீட்டுப் பெண்” என பெண்களை பயமுறுத்துவதும் இந்த பதற்றத்தின் அடிப்படையில்தான் நடக்கிறத

இது போன்ற முரண்பட்ட எண்ணங்கள் மூலம்தான் நம் குடும்பம் என்ற அமைப்பு தீர்மாணிக்க பட்டிற்க்கிறது.


குடும்பம் என்பது இணைந்து வாழ்தல் என்ற நிலைமாறி திருமணம் குழந்தைகள் என்பது கடமை, பொறுப்புகள் என பெயர்களில் திணிக்கப்படும் ஒரு அமைப்பாக இப்போது இருக்கிறது.

நாம் பெருமையாக சொல்லி கொண்டிருக்கும் குடும்பம், பாரம்பரியம் பற்றிய இன்னொரு முகத்தை வெளிப்படையாக அலசி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர். இதில் பல விஷயங்கள் எற்றுகொள்ளகூடியதே .

நம் தோழி ரதிதேவி சொன்னது போல் முகமூடி அணிந்து அணிந்தே நம் நிஜத்தை மறந்து விட்டோம்.

நமக்காக நாம் உருவாக்கின கட்டுபாடுகள் இன்று நம்மை கட்டுபடுத்தி நம் சுயத்தை இழக்க செய்து விட்டது. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை.

நமது கலாச்சாரம் சிறப்பானது தான். ஆனால் அவற்றை வரைமுறை படுத்துவது என்பது ஒரு பொது தன்மையாக இல்லாமல் அவரவர்களின் தனித்தன்மையாக மாற்றபட்டால் இந்த நிலை மாறுமோ ?

பொசசிவ்னஸ் எதனால் வருகிறது ? தன் மீது நம்பிக்கை இல்லாமல் தன்னை மற்றவர்களிடம் நல்லவர்களாக காட்டி கொள்ள முயலும்போது தான் அது வரும். அது நம்குடும்ப அமைப்பில் அதிகமாகவே இருக்கிறது என்பது மறுக்க முடியாதது தான்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.