குறைவில்லா நிறைமாதம்

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,797
Likes
1,205
Location
Switzerland
#1
குறைவில்லா நிறைமாதம்
உன்னை நெருங்கும்
ஒவ்வொரு முறையும்
அவுங்க இருக்காங்க
இவுங்க இருக்காங்க என்கிறாய்
தவிப்போடு நானும் இருக்கிறேன்.
-மழைக்காதலன்

இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்கப்போகிறது. ஆனால், அந்தப் பெண்ணின் முகமோ கலக்கத்துடன் இருந்தது. காரணம் கேட்ட மருத்துவரிடம் கண்கள் கலங்க, “என் வீட்டுக்காரர் சுத்தமா மாறிட்டாரு டாக்டர். நிறைமாசத்தில் நான் தடுமாறுவதைப் புரிஞ்சுக்காம இப்ப போய் என்னைத் தொந்தரவு பண்றாரு. என்னால உடன்பட முடியாதது மட்டுமில்லை; வயித்துல இருக்குற குழந்தைக்கும் ஏதாவது ஆயிடுமோன்னு பயமாருக்கு” என்றார். அந்தப் பெண்ணைத் தேற்றிய மருத்துவர் அறைக்கு வெளியே காத்திருந்த அந்தப் பெண்ணின் கணவனை அழைத்தார்.
மருத்துவரின் கேள்விகளுக்கு ஆரம்பத்தில் நெளிந்த அந்தக் கணவன், “அப்போதான் சுகப்பிரசவம் ஆகும். தாய்க்கும் சேய்க்கும் நல்லதுன்னு பெரியவங்க சொன்னாங்க, அதான்” என்று மென்று விழுங்கினார். கணவன் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் அதுவரையிலான கவலையை மறந்து ஆச்சரியமாகப் பார்த்தாள். தங்கள் வீட்டு முதல் வாரிசை எதிர்கொள்ளவிருக்கும் அந்த இளம் தம்பதிக்கு, அவசியமான பல மருத்துவ ஆலோசனையை மருத்துவர் சொன்னார்.
“கர்ப்பவதியான மனைவி, கணவனிடம் வழக்கமான உறவைத் தொடர்வதில் தப்பில்லை. குறிப்பிட்ட சில மாதங்களைத் தவிர்த்துவிட்டு, மனைவிக்கும் அவள் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் பாதிப்பில்லாத வகையில் அவர்கள் இயல்பாக நெருங்கியிருக்கலாம். ஆனால், அப்படி இருந்தால் மட்டுமே சுகப்பிரசவமாகும் என்று மனைவியைக் கஷ்டப்படுத்துறது தப்பு” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார்.
முதல் மூன்றும் கடைசி மாதமும் ‘நோ’!

“நிறைமாத காலத்தில் உறவு கொண்டால் சுகப்பிரசவமாகும்னு பரவலா ஒரு கருத்து இருக்கு. ஆனால், மருத்துவ அறிவியலில் அதை உறுதிப்படுத்துற ஆதாரம் ஏதும் இல்லை” என்கிறார் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் வீணா ஜெகராம். “கர்ப்பம் தரித்த முதல் மூணு மாதங்களும் கடைசி மாதமும் கணவன் - மனைவி உறவைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமா முதல் மூணு மாதங்களில் கருக்கலையும் ஆபத்து இருப்பதால் அப்போது கட்டாயம் உறவைத் தவிர்க்கணும். அதிலும் அடிக்கடி கருக்கலைந்த பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கணும். மேலும், ஆணின் உயிரணுவில் இருக்கும் Prostaglandins என்ற வேதிப்பொருள் கருப்பையைச் சுருங்கத் தூண்டும். அதனால் உறவைத் தவிர்ப்பது நல்லது” என்கிறார்.
இவற்றுடன் மருத்துவர் குறித்துக் கொடுத்த உத்தேச பிரசவ நாளுக்கு முந்தைய ஒரு மாதத்திலும் உறவைத் தவிர்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் நிறைமாத கர்ப்பத்தின் காரணமாக உடல், மனம் சார்ந்த அசௌகரியங்களும் சிரமங்களும் பிரசவம் குறித்த அச்சங்களும் களைப்பும் அதிகமாக இருக்கும்.
சுத்தம் சுகம் தரும்

மற்ற மாதங்களிலும் கணவருக்கு ஏதேனும் சிறுநீர்த் தொற்று இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்வதும் கர்ப்ப கால உறவில் முக்கியம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, வலி, எரிச்சல், உறுப்பில் புண் ஆகியவை ஆணுக்கு இருந்தால், மருத்துவரைச் சந்தித்து அந்தத் தொற்றுகளிலிருந்து விடுபட வேண்டும். இவற்றில் கவனக்குறைவாக இருந்தால், கணவரது தொற்று கர்ப்பவதியான மனைவிக்கும் தொற்றிக்கொள்ளும். அதனால், பனிக்குடம் முன்கூட்டியே உடைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
தடையேதும் இல்லை

மற்றபடி கணவன் - மனைவிக்குள் இயல்பான உறவு எப்போதும்போல இருக்கலாம். பல இளம் தம்பதியர் தங்களது உறவால் வயிற்றிலிருக்கும் சிசுவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று பயப்படுவார்கள். கருப்பையின் இரட்டை உறைக்குள், தண்ணீர் நிரம்பிய பலூன் போன்ற தகவமைப்பின் பாதுகாப்புடன் சிசு இருக்குமென்பதால் கணவன் - மனைவியின் கட்டுப்பாடான நெருக்கம் வயிற்றுப் பிள்ளையை எந்த வகையிலும் பாதிக்காது.
இந்தக் காலகட்டத்தில் கணவனும் மனைவியும் தங்களது தேவை, சிரமங்கள், மாற்று உபாயங்கள், ஏற்பாடுகள், நிலைகள் ஆகியவற்றைப் பரிசீலித்து எப்போதும்போல அந்தரங்க உறவைத் தொடரலாம். அவற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
கட்டுக்கதைகள் ஏராளம்

நிறைமாதத்தில் உறவு கொண்டால் சுகப்பிரசவமாகும் என்ற நம்பிக்கையைப் போன்றே கர்ப்பவதியை அலைக்கழிக்கும் பல கட்டுக்கதைகள் உண்டு. கர்ப்ப காலத்தில் கணவர் அருகில் இல்லையென்றால் சுகப்பிரசவம் வாய்க்காது என்பது அவற்றில் ஒன்று. கணவர் பக்கத்திலிருந்து உணர்வுரீதியிலான அரவணைப்பைக் கொடுக்கும்போது, மனைவியால் பிரசவத்தைத் தெம்புடன் எதிர்கொள்ள முடியும் என்பதற்காகச் சொல்லப்பட்ட கருத்தே இப்படித் திரிந்திருக்கிறது. கணவன் வெளியூரில் தங்கியிருந்தாலும் இன்றைய தொலைத்தொடர்பு கருவிகள் இந்த இடைவெளியை இல்லாமல் செய்யும். அதேநேரம் பிரசவத்தின்போது கணவர் அருகிலிருப்பது நல்லது.
உணர்வு அரவணைப்பே அடிப்படை

“கர்ப்பவதிகளுக்குக் கணவரிடம் உடல் சார்ந்தவற்றைவிட உணர்வுரீதியிலான தேவைகளே அவசியம்” என்கிறார் உளவியல் நிபுணர் எம்.கிருஷ்ணமூர்த்தி. மேலும், “கர்ப்பம் உறுதியானதிலிருந்து பிரசவம்வரை, குழந்தைப்பேறுக்காகப் பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களும் இன்னபிற வேதிப்பொருட்களும் அவரை உடல் மற்றும் மனரீதியாக அலைக்கழிப்புகளுக்கு ஆளாக்கும்.
எனவே, இருவீட்டாரை உள்ளடக்கிய குடும்பத்தினர் அனைவரும் கர்ப்ப வதிக்கு உணர்வுரீதியான அரவணைப்பைக் கொடுக்க வேண்டும். முக்கியமாகக் கணவரிடமிருந்து இந்த அரவணைப்பு மனைவிக்கு அவசியம். அது உடல் சார்ந்த அரவணைப்பாகவும் இருக்கலாம்.
அதிலும் முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண்ணுக்குக் கணவரது அரவணைப்பு குறைவின்றிக் கிடைப்பது முக்கியம். இத்தகைய அரவணைப்பு குறைந்தால், மனைவிக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும்.
இதனால் அவர் சத்தான உணவைச் சாப்பிடுவதில் வெறுப்பு ஏற்பட்டு, பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே, தேவையான உணவூட்டம், நடைப்பயிற்சி, முறையான மருத்துவப் பரிசோதனைகள் என அனைத்து நிலைகளிலும், கணவரது உணர்வுரீதியிலான அரவணைப்பு தொடர வேண்டும்” என்றார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.