குழந்தைகளிடம் கனவுகளைத் திணிக்காதீர்க&#2

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கனவுகளைத் திணிக்காதீர்கள்..!​
''இன்றைய மீடியா, குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் என்கிற பெயரில், நம் குழந்தைகளிடமிருந்து அவர்களின் குழந்தைத் தன்மையைப் பறிக்கிறார்கள், காயப்படுத்துகிறார்கள். சொல்லப் போனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அவர்களுக்கும் பங்கு உண்டு!''

- கோபமும், நியாயமுமாகப் பேசுகிறார், இந்தியக் குழந்தைகள் நல சங்கத்தின் கௌரவ இணைச்செயலாளர் கிரிஜா குமார்.

பாட்டு, நடனம் என்று குழந்தைகளுக்காக சேனல்கள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகள் குறித்த விமர்சனங்கள் பெருகி வரும் சூழலில், அதுகுறித்த விவாதத்தை இங்கு முன்னெடுத்த கிரிஜா குமார்,

''குழந்தைகள் வளர வளர, அவர்களுக்குள் தங்களைப் பற்றிய ஒரு பாஸிட்டிவ் சுயபிம்பமும் சேர்ந்தே வளரும். 'கேரம் போர்ட் கேமில் நான் கில்லி’, 'எனக்கு மேத்ஸில் அதிக ஆர்வமுண்டு’, 'ஓட்டப்பந்தயத்தில் நான்தான் எப்போதும் ஃபர்ஸ்ட்’ என்று தன் மீது ஒரு குழந்தை கொண்டிருக்கும் சுயபிம்பம் வளரும். இதற்கு அந்தக் குழந்தை தன்னை திறமை மிக்கவனாக உணரக்கூடிய துறை சார்ந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டியது அவசியம். உதாரணமாக, 'நான் நன்றாக ஓவியம் வரைவேன்’ என்று உணரும் குழந்தை, தொடர்ந்து ஓவியப் போட்டிகளில் பங்கெடுக்கும்போது, ஓவியம் குறித்த அதன் திறமையும், தன்னம்பிக்கையும் மெருகேறும்.போட்டிகள் என்பது சிறந்த படிக்கட்டுகள். தோல்விகள் என்பது சிறந்த அனுபவங்கள். ஆனால், அந்தத் தோல்வியை சம்பந்தப்பட்ட குழந்தைக்கு உணர்த்தும்விதம் பக்குவமானதாக இருக்க வேண்டும். அந்தக் குழந்தையின் தோல்வியை மற்றவர்கள் முன் வெளிச்சமிடாமல், 'சில மார்க்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றியை நழுவவிட்டிருக்கிறாய். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்தால் பரிசு உனக்குத்தான்’ என்று அதன் கை பிடித்து, முகம் பார்த்து பெற்றோரோ, ஆசிரியரோ பேசினால்... அந்தக் குழந்தையை தோல்வி பாதிக்காது.

ஆனால், நம் சேனல்களில் நடப்பது என்ன? தொலைக்காட்சிப் போட்டிகளில் ஒரு பாடலைப் பாடுவதிலோ, நடன அசைவுகளிலோ ஓர் குழந்தை சிறிது பிசகினால், கேமரா முன்பாக அவர்களை நடுவர்கள் கடிந்து கொள்ளும் கண்டிப்பு... அநியாயம். அப்போது அந்தக் குழந்தையின் கண்கள் கூனிக் குறுகுவதை உலகமே பார்க்கிறது. தங்கள் நிகழ்ச்சியை உணர்ச்சிமிக்கதாகக் காட்ட, அந்தப் பிஞ்சு கண்ணீர் சிந்தும் காட்சிகளை 'க்ளோஸ்-அப் ஷாட்'களில் ஒளிபரப்புவது, வன்முறை அல்லாமல் வேறென்ன?'' என்று கேள்வியை எழுப்பிய கிரிஜா, தொடர்ந்தார்...

''பொதுவாக எந்தக் குழந்தைக்குமே தோல்வி பிடிக்காது. அப்படி இருக்க, 'நீ தோற்று விட்டாய்’ என்பதை அத்தனை அழுத்தமாகக் கூறி, அந்தக் குழந்தை அதுவரை தன்னைப் பற்றி வளர்த்து வந்த சுயபிம்பத்தையும், தன்னம்பிக்கையையும் கேமராவின் காலடியில் போட்டு நசுக்குகின்றனர்.
போட்டியில்


டைட்டில் வெல்லும் குழந்தையை உலகமே கொண்டாடும். ஆனால், முதல் சுற்றிலேயே நெகட்டிவ் கமென்ட்களுடன் வெளியேற்றப்பட்ட குழந்தையின் மன ரணத்தைப் பற்றி யாரும் அக்கறைப்படுவதுஇல்லை.

போட்டியில் சில இடங்களில் தடுமாறும் குழந்தைகளிடம் திட்டாமல், அவர்கள் அழுவதை புரொமோவாகக் காட்டாமல், தோல்வியைக்கூட தோள்பிடித்து அன்பாகச் சொல்லி உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிகளும் உள்ளன. அந்த ஆரோக்கிய அணுகுமுறை எல்லா சேனல்களுக்கும் வர வேண்டும்'' என்று முடித்தார் கிரிஜா குமார்.

''இப்போதெல்லாம் சேனல் போட்டிகளை மனதில் வைத்தே குழந்தைகளை பாட்டு, டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பும் பெற்றோர் அதிகரித்துவிட்டனர்''
- நிதர்சனத்துடன் ஆரம்பித்தார் கீழ்மட்ட மக்களின் எழுச்சிக்காக சென்னையில் செயல்படும் 'புரோ சிகா அனிமேஷன் சென்டர்' எனப்படும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சண்முகம்.

''பெற்றோர்கள் தங்களின் கனவு களுக்காக குழந்தைகளை வளர்க்கக் கூடாது. குழந்தைகளின் கனவுகளுக்கு ஏற்ப குழந்தைகளை வளர்க்க வேண்டும். வீட்டில் துள்ளி விளையாடும் குழந் தையை அழைத்துச் சென்று, சேனல் நிகழ்ச்சிகளுக்காக நீளமாக நெளிந்து நிற்கும் வரிசையில் நிற்க வைப்பதில் ஆரம்பிக்கிறது பிரச்னை.

போட்டிகள் வேண்டும்தான். ஆனால், 'ஆடிஷன்ல செலக்ட் ஆயிடணும்’, 'ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல ஜெயிச்சுடணும்’, 'செமி ஃபைனல்ல ஜெயிச்சே ஆகணும்’, 'ஃபைனல்ல மிஸ் பண்ணிட்டா எல்லாமே வேஸ்ட்’ என்று ஒரு குழந்தை யின் மென் மனநிலைக்கும் மீறிய அழுத்தத்தை பெற்றோர்கள் திணிப்பது பெருங்குற்றம். 'ஜஸ்ட் ட்ரை பண்ணு. எதுனாலும் ஓ.கே’ என்று இந்தப் போட்டிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் குறைவு. காரணம், டி.வி-யில் தோன்றும் வாய்ப்பு, நடுவர்களாக வரும் பிரபலங்களிடம் அறிமுகமாகும் ஆசை... இவையெல்லாம் தன் குழந்தை குறித்த பெற்றோரின் எதிர்பார்ப்பை எகிற வைக்க, அதை அவர்கள் தங்கள் பிள்ளையிடம் திணிக்கிறார்கள்.

சந்தோஷமாக விளையாட வேண்டிய அவர்களின் குழந்தைப் பருவத்தை, 'பயிற்சி’, 'எலிமினேஷன்’, 'வைல்ட் கார்டு’ போன்ற வார்த்தைகள் பறிக் கின்றன. குழந்தைகள் பாவம். அவர்களை ஸ்போர்ட்டிவ்வான, ஜாலியான மனநிலையுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வது பெற்றோரின் பொறுப்பு''
- வழிகள் சொல்லி முடித்தார் சண்முகம்.

குழந்தைகளை குழந்தைகளாகவே கொண்டாடுவோம்!
''எங்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை!''கலா மாஸ்டர் (நடன இயக்குநர் - கலைஞர் டி.வி): ''குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகளின் மனதைப் புண்படுத்தும்விதமாக அல்ல. என்னுடைய நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை எந்த குழந்தையையும் அழ வைக்க மாட்டேன். நடுவர்களும் அப்படியே! 'பாடினவரை அவ்வளவு அழகா பாடினேடா கண்ணா... இன்னும் கொஞ்சம் ஸ்ருதி சேர்ந்திருந்தா அவ்வளவு பிரமாதமா வந்திருக்கும்.. அடுத்தமுறை இன்னும் நல்லா பாடு?'' என்றுதான் தட்டிக்கொடுப்பார்கள்.

பெற்றோர்தான் குழந்தைகள் வருத்தப்படுவதற்கு காரணமாக இருக்கிறார்கள். எப்படியாவது தங்களுடைய குழந்தைகள் டி.வி-யில் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். விருப்பம் இல்லாத குழந்தைகளை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் திணிப்பது மிகத்தவறு.''

மாலா மணியன் : ''பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் எல்லாமே கமர்ஷியல் நோக்கத்தில் நடத்தப்படுகின்றன. அவர்கள் குழந்தைகளை ஹேண்டில் செய்யும்விதம் மிகவும் கொடுமையானது. உனக்கு பாடத் தெரியலயா... நீ வாழ்றது வேஸ்ட். உனக்கு ஆடத் தகுதியில்லை நீ வாழ்றது வேஸ்ட்... இந்த மாதிரியான எண்ணங்களை குழந்தை வயதிலேயே திணிப்பதைப் போன்ற கொடுமையான விஷயம், வேறு எதுவும் இருக்க முடியாது.

ஒரு சேனல் இப்படி செய்வதால், மற்ற சேனல்களும் தங்களுடைய டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்துவதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது மிகமிகத் தவறு.''
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: குழந்தைகளிடம் கனவுகளைத் திணிக்காதீர்&#2965

எல்லாப் பெற்றோர்களும் இவற்றை உணர வேண்டும் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.