குழந்தைகளின் முடி வளர்ச்சி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தைகளின் முடி வளர்ச்சி

குழந்தைகளின் முடி வளர்ச்சி குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து வெளி உலகத்துக்கு வரும் முன்பே, அவர்களுக்கு முடி வளர்ச்சி ஆரம்பித்து விடும். 14 வாரக் கருவாக இருக்கும் போதே, கருவின் முகம் மற்றும் உடல் முழுவதும் மெல்லிய ரோமப் படலம் தென்பட ஆரம்பிக்கும். 30வது வாரத்தில் குழந்தையின் தலையில் முடி வளர்ச்சி ஆரம்பிக்கும். 32 வாரங்களில் அதன் கண் இமைகளும் புருவங்களும் வளர ஆரம்பிக்கும். குழந்தையின் உடலைப் போர்த்திய மெல்லிய ரோமப் படலமானது, அது தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்ததுமே உதிர்ந்து விடும்.

சில குழந்தைகள் பிறக்கும்போதே கருகருவென தலை நிறைய முடியுடன் இருப்பார்கள். இன்னும் சிலரோ மண்டையில் முடியே இல்லாமலும் பிறக்கலாம். இரண்டுமே சகஜம் தான். இந்த முடி உதிரப்போவது உறுதியான, இயற்கையான ஒரு நிகழ்வுதான் என்பதால் அது குறித்து பயப்படத் தேவையில்லை. அப்படி உதிர்கிற இடத்தில் புதிதாக முடி வளரத் தொடங்கும். குழந்தைக்கு 6 மாதமாகும் போது, அதன் மண்டையில் முதிர்ந்த முடிகள் வளர ஆரம்பிக்கும். குழந்தைப் பருவத்தில் காணப்படுகிற முடி வளர்ச்சியை வைத்து, அதன் எதிர்கால முடி வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். குழந்தைகளின் முடி வளர்ச்சியானது, ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தை சந்தித்தபடி இருக்கும்.

குழந்தையின் முடி வளர்ச்சி என்பது கருவிலிருக்கும் போதான நிலை, பிரசவத்துக்குப் பிறகான நிலை என 2 கட்டங்களைக் கொண்டது. பிரசவத்துக்குப் பிறகான குழந்தையின் முடி வளர்ச்சியானது 18 மாதங்களில்கூட ஆரம்பிக்கலாம். இரண்டாம் கட்ட வளர்ச்சியானது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம். ஒரு சில குழந்தைகளுக்கு முதல் கட்ட வளர்ச்சி முடிவதற்கு முன்பே, இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கும். அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இன்னும் சில குழந்தைகளுக்கு முதல் கட்ட முடி வளர்ச்சியானது முற்றிலும் உதிர்ந்து, அதையடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகே இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பமாகும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் சில மாதங்களுக்கோ, சில வருடங்களுக்கோ கூட குழந்தையின் மண்டையில் முடியே இல்லாமல் இருப்பதையும் பார்க்கலாம். முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளர்ச்சியில் காணப்படுகிற முடியின் தன்மையிலும் நிறத்திலும் கூட நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.குழந்தைகளுக்குக் கூட முடி உதிர்வு இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆமாம்... குழந்தை பிறப்பதற்கு முன்பே கூட இந்த முடி உதிர்வு இருக்கலாம். அதன் விளைவாக குழந்தை முடியில்லாமல் பிறக்கலாம். பிறந்து 6 மாதங்கள் கழித்தும் சில குழந்தைகளுக்கு முடி உதிரலாம். சில குழந்தைகளுக்கு இது திடீரென நிகழலாம். சிலருக்கு மெல்ல மெல்ல நிகழலாம். குழந்தையின் முடி உதிர்வின் பின்னணியில் மருத்துவக் காரணங்களும் இருக்கக் கூடும்.

குழந்தைகளின் முடி உதிர்வுக்கான காரணங்களில் முக்கியமான பிரச்னைகள்... Tinea capitis எனப்படுகிற ஒருவகையான பூஞ்சைத் தொற்று குழந்தைகளின் மண்டைப் பகுதியில் உள்ள சருமம், புருவங்கள், இமைகள் போன்றவற்றைத் தாக்கும். இது கூந்தல் தண்டையும், ஃபாலிக்கிள் பகுதிகளையும் பாதிக்கும். இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மண்டைப் பகுதியில் ஆங்காங்கே முடி உதிர்ந்து வட்ட வடிவிலும் ஓவல் வடிவிலும் திட்டுத்திட்டாகக் காணப்படும். முடி உடைந்து கரும்புள்ளிகள் போலவும் காணப்படும். அரிதாக சிலருக்கு சாம்பல் நிறச் செதில்கள் போன்றும் தென்படும்.

அடுத்தது Alopecia Areata என்கிற பிரச்னை. இந்தப் பாதிப்பால் முடி உதிர்ந்த இடங்களில் வீக்கமோ, கரும்புள்ளிகளோ, செதில்களோ இல்லாமல் வழுவழுப்பாகக் காணப்படும். குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவதால் உண்டாகிற இந்தப் பிரச்னை ஆயிரத்தில் ஒரு குழந்தையைத் தாக்குகிறது. இதன் அறிகுறி சில குழந்தைகளின் நகங்களிலும் தெரியும். இந்த வகையான முடி உதிர்வுப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 5 சதவிகிதம் பேர் alopecia totalis என்கிற நிலைக்கு - அதாவது, தலை முழுவதிலுமே முடியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். ஒரு சிறு பிரிவினருக்கு alopecia universalis என்கிற நிலைக்கு - அதாவது, உடல் முழுவதுமே முடியை இழக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம்.

மேற்சொன்ன இரண்டு பிரச்னைகளிலும் அறிகுறிகளைப் பார்த்த உடனேயே சரும மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சரியான சிகிச்சையின் மூலம் உதிர்ந்த இடத்தில் மறுபடி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை திரும்பச் செய்ய முடியும். குழந்தைகளின் முடி உதிர்வுக்கான மூன்றாவது முக்கிய காரணம் அதிர்ச்சி. எப்போதும் கூந்தலை இறுகக் கட்டி வைத்திருப்பது, இறுக்கமாகவே பின்னி வைத்திருப்பது போன்றவற்றாலும் முடி உதிரலாம். படுக்கையிலேயே இருக்க வேண்டிய குழந்தைகளுக்கும் வீல் சேரில் வாழும் குழந்தைகளுக்கும் மண்டைப் பகுதி தொடர்ந்து படுக்கையின் மீதும் நாற்காலியின் மீதும் உராய்ந்து கொண்டிருப்பதாலும் முடி உதிரலாம்.

குழந்தைகளின் தலைமுடி பாதுகாப்பு தொட்டிலில் படுப்பதால் பிறந்த குழந்தைகளுக்கு பொடுகுத் தொல்லை ஏற்படும். இதனைப் போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் ஊறவிட்டு பிறகு அலச வேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி அலச வேண்டும். ஒரே இடத்தில் தூங்கச் செய்யாமல், குழந்தையை சிறிது இடம் மாற்றி தூங்க வைக்க வேண்டும்.

கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிக எண்ணெய் வைக்கக் கூடாது. தினமும் எண்ணெய் தேய்த்தால்தான் கூந்தல் வளரும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. நம் கூந்தலுக்குத் தேவையான எண்ணெய் பசை இயற்கையிலேயே நம் தலையில் இருந்து சுரக்கிறது. கூந்தலை சுத்தமாக பாதுகாக்க முடியாதவர்கள் ஹேர் கட் செய்துவிடலாம்.

குழந்தைகளின் கூந்தலுக்கு எப்போதும் சுத்தமான தேங்காய் எண்ணெய் உபயோகிக்கவும். இந்த வயதில் பேன், பொடுகு பிரச்னை அதிகமாக வரும். அதைப் போக்க, வசம்பை ஊற வைத்து, அரைத்து, தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து தலையை அலசவும். வேப்பம்பூ, வெந்தயம் அரைத்து தயிரில் ஊறவைத்து தலைக்கு தடவி குளித்தால் பேன், பொடுகு பிரச்னை தீரும். இதற்கெல்லாம் நேரம் இல்லை என்பவர்கள் தலைக்கு குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, வேப்பிலை போட்டு குளிக்க வைக்கவும்.

சில குழந்தைகள் எப்போதும் அரிப்பினால் தலையைச் சொரிந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் தண்ணீர் கடினத் தன்மையுடன் இருக்கக் கூடாது. நல்ல தண்ணீர் கிடைக்காதவர்கள் படிகாரம் போட்டு பயன்படுத்தவும்.

குழந்தைகளுக்கு என தலையணை உறை, டவல், பெரிய பற்களை உடைய தனி சீப் உபயோகிக்கவும். 6 மாதங்களுக்கு ஒருமுறை சீப்பை மாற்றுவது நல்லது. புதினா இலைகளை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு ஷாம்புவோடு இதை ஒரு டீஸ்பூன் கலந்து உபயோகித்தால் ஷாம்புவின் ரசாயனத் தன்மை குறையும். வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஊற வைத்து குளிப்பாட்ட லாம்.

குழந்தைகளுக்கு சளித் தொல்லை ஏற்படும் என நினைத்தால் வாயகன்ற பாத்தி ரத்தில் நீரைக் கொதிக்க வைத்து சிறிய கிண்ணத்தில் எண்ணெய் விட்டு கொதிக்கும் பாத்திரத்தில் வைத்து சூடு செய்து எடுத்து உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து சத்தான உணவு கொடுத்து வந்தால் கூந்தல் பிரச்னைகள் இருக்காது. முளைகட்டிய கருப்புக் கொண்டைக் கடலை தினமும் ஒரு டீஸ்பூன், அடிக்கடி அரைக்கீரை கொடுக்கலாம்
.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.