குழந்தைகளுக்கு சோப்பு , பவுடர் , மேக்கப் த&#30

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தைகளுக்கு மேக்கப் தேவையா?

டாக்டர் என். கங்கா


பனியில் நனைந்த வாசமிகு மலர்கள் போன்ற அழகும் மென்மையும் நிறைந்தவர்கள் குழந்தைகள்! கண்கள் பளிச்சிட, அழகே உருவாக, கள்ளமில்லா பொக்கை வாய் சிரிப்பினை நமக்குப் பரிசாகத் தரும் குழந்தை செல்வங்களுக்கு மேக்கப் தேவையா? தேவையில்லை என்கிறது தற்போதைய மருத்துவ அறிவியல்! அழகுக்கு அழகு சேர்த்துப் பார்ப்பது ஒரு ரசனை! தாய்மையின் பாசத்தின் வெளிப்பாடு! ஆனால் அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சாகி விடுமல்லவா! கவனத்துடன் செயல்படுவது நல்லது!

முற்காலத்தில் குழந்தை பிறந்தவுடன் குழந்தையைக் குளிக்க வைப்பார்கள்! தற்போது, தொப்புள் கொடி விழுந்த பிறகுதான் நீர் ஊற்றிக் குளிக்க வைக்க வேண்டும் என்பது அறிவுரை. அதாவது ஒரு வாரம் வரை, டவல் அல்லது ஸ்பான்ச் குளியல்தான்! பிறந்தவுடன் குழந்தையின் தோலில் படிந்திருக்கும் மாவு போன்ற பிசுபிசுப்பான படிவம் முழுவதும் களையப்படக் கூடாது.

இந்தப் படிவம் குழந்தையின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. பிறந்தவுடன் குழந்தையின் தோலின் மேல் இருக்கும் ரத்தம், பிறப்புப் பாதை திரவங்கள் போன்றவற்றை வெதுவெதுப்பான நீரில் நனைத்த மென்மையான துணியால் துடைக்கலாம்.மிகவும் மிருதுவாகத் துடைக்க வேண்டும். தோலில் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்புப் படலத்தை முழுவதும் எடுக்கக் கூடாது. தொப்புளுக்கும் எந்த மருந்தும் தேவையில்லை.

குழந்தையின் தலைக்கும், உடம்புக்கும் சுத்தமான தாவர எண்ணெய் தடவலாம். அவரவர் இருக்கும் இடத்தின் தட்ப வெப்ப நிலை, குடும்பப் பழக்கம், பண வசதி ஆகியவற்றைப் பொறுத்து ஏதாவது ஒரு எண்ணெயைப் பயன்படுத்தலாம். வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட பேபி ஹேர் ஆயில் தேவையில்லை. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை விளக்கெண்ணை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஆலிவ் ஆயில் விலை அதிகம்.

முடிந்தால் பயன்படுத்தலாம். ஆனால் இதனால் தோலின் நிறம் மாறுவதில்லை. எனவே ஆலிவ் ஆயில் கட்டாயம் இல்லை. வட மாநிலங்களில் குளிர் அதிகம் இருப்பதால் கடுகு எண்ணெய் தடவுவார்கள். அதன் வாசனை தென்னகத்து மக்களுக்குப் பிடிப்பதில்லை. விளக்கெண்ணைக் கெட்டியாக இருப்பதால் லேசாகத் தடவினால் போதும்.

குழந்தைக்குத் தலையில் எண்ணெய் தடவி கடலை மாவு / பயத்தம் மாவு / சீயக்காய் போன்றவை உபயோகித்துத் தேய்க்கக் கூடாது. சோப் அல்லது ஷாம்பு கொண்டு தலையைச் சுத்தம் செய்வது நல்லது. தினமும் காலை அல்லது மாலை தலையில் எண்ணெய் தடவலாம்.

குழந்தைக்கு சாம்பிராணி புகை கட்டாயம் போடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து சாம்பிராணி போடுவதால் பலவிதமான மூச்சுப்பாதை நோய்கள் ஏற்படுகின்றன. நிமோனியா பிராங்கியோலைட்டிஸ் போன்ற சளி நோய்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.

குளிக்க வைக்கும் போது குழந்தைகள் அழும்! அப்போது தலையில் உள்ள அழுக்கு, எண்ணெய், நீர்,கடலை மாவு அல்லது சோப்பு போன்றவற்றை குழந்தை புறைக்கு ஏற்றிக் கொள்கின்றன! தலையிலிருந்து முகத்தில் வடியும் அசுத்த குளியல் நீர் குழந்தை அழும் போது நாசித் துவாரத்தில் சென்றுவிடுகிறது. சாம்பிராணிப் புகையும் அப்படித்தான்! எனவே இவை தவிர்க்கப்பட வேண்டும்.


குழந்தைகளுக்குப் பவுடர் போடலாமா?
தேவையில்லை என்கிறது தற்கால அறிவியல்! எந்தப் பவுடரிலும் டால்க் என்ற ஒரு வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அது தோலில் அலர்ஜி ஏற்படுத்தலாம்.

பவுடரில் வாசனைக்குச் சேர்க்கபடும் வேதிப் பொருட்களும் அலர்ஜி உண்டாக்கலாம். குழந்தையின் தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் எண்ணெய்ச் சுரப்பிகள், முடிக்காம்புகள் ஆகியவை திறந்து இருந்தால் தான் நல்லது. பவுடர் போடுவதால் இந்த துவாரங்கள் அடைபடுகின்றன. உள்பக்கம் சுரக்கும் வியர்வை, எண்ணெய் (சீபம்) போன்றவை வெளியில் வராமல் அடைபட்டு தோலில் அழற்சி, கிருமித் தொற்று ஏற்படலாம்.

கோடை காலத்தில் வியர்க்குரு பவுடர்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் டாக்டர்கள் அவற்றை சிபாரிசு செய்வதில்லை. பவுடர், வியர்வை துவாரங்களை அடைத்து உள் வெப்பத்தை அதிகப்படுத்துகின்றன. அதே போல்தான் சிறு குழந்தைக்கும்! மேலும் கிராமப்புறங்களில் பவுடர் அடிப்பது என்று ஒரு சிறு புகை மண்டலத்தை குழந்தையின் முகத்துக்கு அருகில் ஏற்படுத்துகின்றனர். பவுடரின் துகள்கள் மற்றும் புகை, புரையேறி சளி நோய்கள் ஏற்படலாம். பெண் குழந்தையின் பிறப்பு உறுப்பு பகுதியில் அதிகமாக பவுடர் தங்குவதால் இயற்கையான திரவங்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மேலும் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.


தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313


 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
குழந்தைக்கு என்ன சோப்?

குழந்தைக்கு என்ன சோப்?

By டாக்டர் என். கங்கா


சிறு குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. அதில் உள்ள எண்ணெய்ப் பசையை அதிகமாக எடுத்துவிடக் கூடாது. சிறிது அமிலத்தன்மை உள்ள சோப் குழந்தைகளுக்கு நல்லது. அதிகமாக நுரை இல்லாமலும் இருக்க வேண்டும். நிறம் இல்லாமலும் இருக்க வேண்டும். நிறம் மற்றும் வாசனைக்காக அதிக வேதிப்பொருட்கள் சேர்த்து இருக்கக் கூடாது. பாசிப்பயிறு,மாவு கடலை மாவு போன்றவை உபயோகித்தால் தோல் கடினத் தன்மையை அடைகிறது. அதிக மஞ்சள் பூசினாலும் தோல் உலர்ந்து கெட்டிப்படுகிறது. சீயக்காய் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

சிறு குழந்தைக்கு பொட்டு வைக்கலாமா?
நெற்றிப் போட்டு தவிர, முகத்தில் பல இடங்களில், நெஞ்சில், உள்ளங்கை, உள்ளங்கால்களில் என்று பல இடங்களில் பல சைஸ்களில் திருஷ்டிப் பொட்டுக்கள்! முக்கூட்டுப் புள்ளி, ஐந்து புள்ளி, நாமம், திலகம், ஸ்டிக்கர் பொட்டு, இந்த லிஸ்டுக்கு முடிவே இல்லை.

கடைகளில் கிடைக்கும் கண் மையில் (lead supplied) வேதிப் பொருள் காரீய சல்பைடு சேர்க்கப்படுகிறது. இதனால் தான் கறுப்பு நிறம் கிடைக்கிறது. மையின் பசை போன்ற மிருதுத் தன்மைக்காக ஒரு எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இவை இரண்டும் குழந்தையின் மென்மையான தோலுக்குப் பொருந்தாது. தோலில் அழற்சியை (contact dermatitis, chemical dermatitis) ஏற்படுத்தலாம். பொட்டு வைக்கும் இடம் முதலில் சிவந்து, வெளுத்து, அரிப்பு ஏற்பட்டு பிறகு தடித்து கறுப்பு நிறமாக நிரந்தரமாக மாற வாய்ப்புள்ளது. சில பெண்களுக்கு நெற்றியில் பொட்டு வைக்கும் இடம் கறுத்து விடுகிறதல்லவா? அதே போல் தான்! பெரிய பெரிய பொட்டாக பல இடங்களில் வைப்பதைக்கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிறு பொட்டாக ஒரு இடத்தில் மட்டும் வைக்கலாம்.

குழந்தையின் கண்களுக்கு மை தீட்டலாமா?
நிச்சயம் கூடாது! வளைவாக மை தடவினால் புருவத்தில் அதே போல வளைவாக முடி வளரும் என்று பெற்றோர்கள் நம்புகின்றனர். இது தவறு. முடியின் காம்பு, மற்றும் தோலின் எண்னெய் சுரப்பியின் (Pilo sebaceous unit) துவாரங்கள் மை தடவினால் அடைபடும். அதனால் கிருமித்தொற்று ஏற்பட ஏதுவாகிறது. முடி வளருவதும் குறையும். தோலில் அழற்சி ஏற்படுவதால் முளைத்த முடியானது கொட்டவும் வாய்ப்பு உண்டு.

காரீயம் கலந்த மை தோலுக்கு பொருந்தாது என்றால் தோலை விட மென்மையுள்ள கண்களுக்கு அது எப்படி பொருந்தும்? மை தடவும் போது தாய் தன் நகங்களால் குழந்தையின் கண்களில் சிறு காயங்களை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. நுண்ணிய நோய்க் கிருமிகள் கண்களுக்கு உள்ளே செல்லலாம். மூக்கிற்கு அருகில் இருக்கும் பகுதியில் கண்களின் கண்ணீர்ப் பை, சுரப்பிகள், நாளங்கள் உள்ளன. இவை அடைபட்டு அழற்சி ஏற்படலாம். காரீயம் கலந்த மை நெடுநாட்கள் தோலில் தங்கி மெதுவாக அது உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தில் கலந்து நச்சுத் தன்மை (chronic lead poisoning) ஏற்படுத்தக் கூடும்.

ஆனால் கண்களில் மையும், நெற்றியில் பொட்டுமாக சுருட்டைத் தலைமுடி நெற்றியில் விழ நமது செல்லம் பொக்கை வாயைத் கூட்டி சிரிக்கும் அழகை ரசிப்பது என்ன சுகம்! எல்லா அம்மாக்களும் அனுபவித்த விஷயம் தானே!

மை போடாமல் எப்படி?
வேதிப் பொருட்கள் கலக்காமல் வீட்டிலேயே கண் மை தயாரிக்கலாம். அடி கனமான பித்தளை அல்லது வெங்கலம் அல்லது சொம்பு அல்லது பானை ஒன்றை எடுத்துக் கொள்ளவும். சந்தனக் கல்லில் சந்தனக் கட்டையால் அரைத்துத் தயாரிக்கப்பட்ட சந்தனத்தை பாத்திரத்தின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக லேசாக அப்பிவிடவும். செங்கற்களை அடுப்பு மாதிரி அமைக்கவும். கெட்டியான நூல் அல்லது பஞ்சுத் திரிபோட்டு நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணை ஊற்றி ஒரு அகண்ட விளக்கை ஏற்றி வைக்கவும். 2-3 நாட்கள் நிதானமாக கொழுந்துவிட்டு தீபம் எரிய வேண்டும். அதற்குத் தகுந்தவாறு விளக்கு தயார் படுத்திக் கொள்ளவும்.

சந்தனம் அப்பிய பாத்திரத்தில் முக்கால் பாகம் சாதாரண தண்ணீர் நிரப்பி இந்த செங்கல் அடுப்பில் வைக்கவும். தீபம் அடுப்பு போல் பயன்படும். 2-3 நாட்கள் எண்ணெய் தீராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எரியும் தீ பட்டு சந்தனம் நன்கு கறுத்து உதிர ஆரம்பிக்கும். அப்போது முழுதும் கரிந்து போன அந்த சந்தனத்தை சுத்தமாக சேகரித்து கலப்படமில்லாத விளக்கெண்ணை சிறிது சேர்த்து சுத்தமான பாத்திரத்தில் சுத்தமான விரல்களால் கை பதத்திற்கு இழைத்து வைத்துக் கொள்ளலாம். இதில் அதிக வேதிப் பொருட்கள் இல்லை. நெற்றி பொட்டுக்கும் பயன்படுத்தலாம். சுத்தமான விரல்களால் நகம் படாமல் கொஞ்சமாக கண்களுக்குத் தீட்டலாம்.

குழந்தைக்கு அணி மணிகள் தேவையா?
கழுத்தில் பிளாஸ்டிக் இழையில் கோர்த்த வெள்ளைப் பாசி, கறுப்பு சிவப்பு கயிறுகள், அதில் ஏதாவது ஒரு உலோகத் தாயத்து, பலவகை தங்கம், வெள்ளி, செம்பு அல்லது பிளாஸ்டிக் டாலர்கள் கைகளில் கறுப்பு அல்லது சிவப்புக் கயிறு, கறுப்பு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் வளையல் அது நழுவாமல் இருக்க ஒரு நூல் முடிச்சு அல்லது பின், மூக்குத்தி பிரேஸ்லெட், மோதிரம், நூல் சுற்றப் பட்ட மோதிரம், வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி அல்லது கறுப்பு சிவப்பு மணிக்கயிற்றால் அரைஞான், அதில் வாதாங்காய், தாயத்து, நாய்க்காசு, கூர்மையான நீளமான, சில அலங்காரப் பொருட்கள், கால்களில் தண்டை, கொலுசு, முப்பிரி காப்பு அவை நழுவி விடாமல் இருக்க ஒரு இணைப்பு – இந்தப் பட்டியல் இன்னும் முடியவில்லை என்று நினைக்கிறேன்.

மத, சமுதாய, கலாச்சார, குடும்ப பின்னனிக்கு தகுந்தாற்போல் இவை அணிவிக்கப்படுகின்றன. தவறு என்று ஒரு வார்த்தையால் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட முடியாது. வளையலும் கொலுசும் இறுகினால் குழந்தை நன்கு வளர்கிறது என்று புரிந்து கொண்டனர் நமது முன்னோர்கள். தொப்புள் கொடியை தாயத்தில் சேர்த்து வைப்பது என்பது தற்போதைய ஸ்டெம் செல் ஸ்ட்ரோரேஜ் தானே!

அணிகலன்களால் குழந்தைக்கு சிறு சிறு காயங்கள் ஏற்படலாம். சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால் நோய்த் தொற்று ஏற்படலாம். கழுத்து மணியில் உள்ள பிளாஸ்டிக் இழையின் முடிச்சு சிறுகுழந்தையின் கழுத்தை குத்திக் கிழித்து விடக்கூடும். கழுத்தில் இருக்கும் முடிக்கயிறுகள் டாலர்களைப் பல குழந்தைகள் வாயில் வைத்துக் கொள்ளும். இவை நோய்த் தொற்றை ஏற்படுத்தலாம். இந்த டாலர், மணி முதலியவற்றை குழந்தை முழுங்கி விடலாம். குழந்தைக்கு ஆபத்தாக முடியலாம். சிறு குழதைகள் சாதாரணமாக கைகளை வாயில் வைப்பார்கள். வளையல், முடிகயிறு, பிரேஸ்லெட், மோதிரம், போன்றவை குழந்தையின் மிருதுவான வாய்ப்பகுதியை காயப்படுத்தலாம். இந்த ஆபரணங்களில் உள்ள சிறு துகள்கள் உதிர்ந்து குழந்தையின் வாய்க்குள் சென்று மூச்சுப் பாதையை அடைத்துக் கொள்ளும் அபாயம் உண்டு!

இடுப்பில் அரைஞான் கயிறு சுத்தமாக பராமரிக்காவிட்டால் பூசணத்தொற்று ஏற்படும். அதில் தொங்கும் பொருட்கள் குழந்தையின் பிறப்பு உறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைக் காயப்படுத்தும். இவற்றைக் கூடியவரைத் தவிர்க்க வேண்டும். கொலுசும் இதே போலத்தான்.

இன்றியமையாதக் காலக்கட்டத்தில் பயன்படுத்தும்போது மிகவும் சுத்தமாக, ஒவ்வாமை, காயங்கள், கிருமித் தொற்று ஏற்படாத வகையில் அணிவிக்கலாம். மோதிரம், அதுவும் நூல் சுற்றிய மோதிரம் ஒரு நாளும் அணிவிக்கக் கூடாது. போட்டு அழகு பார்த்து சிறிது நேரத்தில் கழற்றிவிட வேண்டும்.

குழந்தையின் கள்ளச்சிரிப்பை விட வேறு அணிமணிகள் வேண்டுமா என்ன?


தங்கம் வெள்ளி ஆபரணங்கள் அணிவிப்பதால் குழந்தைகள் திருடர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டுமே!

கட்டாயத் தேவை என்றால் ஆறு மாதங்களுக்குப் பிறகு காது குத்துவது நல்லது! காதோடு பதிந்து இருக்குமாறு கூரிய முனைகள், கற்கள் ஏதுமில்லாத தோடு அணியலாம். தொங்கல் வகைகளைத் தவிர்ப்பது நல்லது. தங்கம் அல்லது வெள்ளித் தோடுகளுக்கு ஒவ்வாமை குறைவு. மற்ற உலோகங்கள் அல்லது பிளாஸ்டிக் தோடுகளைத் தவிர்க்கவும்.
குழந்தையின் பாதுகாப்பு தான் முக்கியமே தவிர செயற்கையான அணிமணி அலங்காரங்களால் குழந்தைக்கு தொந்தரவுதான்.

தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313


 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5
Re: குழந்தைகளுக்கு சோப்பு , பவுடர் , மேக்கப் த

இந்த உபயோகமான பகிர்வுகளுக்கு மிக்க நன்றி .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.