குழந்தைகளைப் பறவைகளாக வளருங்கள்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தைகளைப் பறவைகளாக வளருங்கள்!

சுயமாகச் சிந்திக்கும் திறனை நமது கல்வித் திட்டம் வளர்ப்பதில்லை என்பது கசப்பான உண்மை. மனம் விரும்பிப் பாடத்தைப் படிக்கும் நிலை இங்கே நிச்சயம் இல்லை. மனனம் செய்து காகிதத்தில் கொட்டும் ரோேபாக்களாகத்தான் பெரும்பான்மையான மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சிந்தனைத்திறன் குறைவான மாணவர்களே இந்தியாவின் எதிர்கால நம்பிக்கைகள் என்பதை நினைத்தாலே பகீர் என்று இருக்கிறது.

சற்றே வெளியில் இருந்து யோசித்துப் பார்ப்போம். கல்வியும் பாடத்திட்டமும் மட்டும்தான் ஒரு மாணவனின் சிந்தனைத் திறனை, அறிவாற்றலை வளர்க்க வேண்டுமா என்ன? அதையும் தாண்டி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனவல்லவா..? எனில், சிந்தனைத் திறன்மிக்க வளமான புதிய தலைமுறையினரை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு படைப்பாளி. அவர்களைப் படைப்பாளிகளாகவே வளர்க்கிறோமா என்பது தான் பிரச்னையே!’ - இது உன்னத ஓவியர் பிகாசோவின் வாசகம். எவ்வளவு உண்மையான வாசகம்.கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். வெகு இயல்பாகக் குழந்தைகள் நடந்து கொள்ளும் விதம், பேசும் விதம் எல்லாவற்றிலும் கிரியேட்டிவிட்டி கிலோகணக்கில் தென்படும்.

அனுபவ அறிவு மிகுந்த நமக்கே தோன்றாத பல விஷயங்களுக்குக் குழந்தைகள் வெகு எளிதாகத் தீர்வைச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். பிகாசோ சொன்னது போல், அந்தப் படைப்பாளிகளை எப்படி நாம் படைப்பாளிகளாகவே வளர்க்கப்போகிறோம்? புதிய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம், சிந்திக்கும் திறன், வேகம் எல்லாம் குழந்தைப் பருவத்துக்கு ஈடாக வேறெப்போதும் கிடைக்காது என்பது நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய நிஜம்.

ஒரு நிஜக் குழந்தையின் கதையைப் பேசுவோம்.அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்றால் கொச்சியைச் சேர்ந்த எம்.டி. ஜோசப்புக்கு அவ்வளவு பிடிக்கும். ஆகவே, தனக்கு ஒரு மகன் பிறந்தபோது, ஆசையுடனும், மனைவி சின்னம்மாவின் சம்மதத்துடனும் ஜோசப் வைத்த பெயர் - எட்மண்ட் தாமஸ் கிளிண்ட்.

ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும்போது, தவழ்ந்து கொண்டிருந்த கிளிண்ட் கையில் ஒரு கல் கிடைத்திருக்கிறது. அதை வைத்துத் தரையில் அங்குமிங்கும் கிறுக்கியிருக்கிறான். ஒரு வயதிற்குள்ளாகவே அவனது விருப்பத்திற்குரிய விளையாட்டுப் பொருளாக சாக்பீஸ் மாறியிருந்தது. பிஞ்சு விரல்களின் செல்லக் கிறுக்கல்களில் தேவ ஓவியங்கள் உயிர்பெற்றன.

இரண்டு வயதிலேயே கிரையான்ஸை லாகவமாகக் கையாளும் திறன் பெற்றிருந்தான் கிளிண்ட். கலர் சாக்பீஸ்கள், கிரையான்ஸ், கலர் பென்சில்கள், வாட்டர் கலர், பிரஷ் இவைமட்டுமே அவனது விருப்பத்திற்குரிய உலகமாகிப் போனது. கிளிண்டின் பெற்றோரும் அவனது படைப்புத் திறனை ஊக்குவித்துக் கொண்டாடினார்கள்.

அப்பாவும் அம்மாவும் சொல்லும் புராணக் கதைகள் கேட்பதில் கிளிண்டுக்கு அவ்வளவு ஆர்வம். தன் ஊரைச் சுற்றியிருக்கும் கோயில்களில் நடக்கும் திருவிழாக்களைக் காண்பதென்றால் கொள்ளை உற்சாகம். தான் கண்ட திருவிழாக் காட்சிகளை அப்படியே வண்ண ஓவியமாக வரைய ஆரம்பித்தான் கிளிண்ட்.

பிறகு புராணக் கதை மாந்தர்கள் ஒவ்வொருவருமே குழந்தை கிளிண்டின் ஓவியங்களில் உயிர் பெற ஆரம்பித்தனர். குறிப்பாகக் குருஷேத்ரக் காட்சிகள் ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு, அதைத் தன் கற்பனை உலகத்தில் காட்சியாக மாற்றி, ஆச்சரியமூட்டும் ஓவியங்களாக உலவ விட்டான் கிளிண்ட்.

எங்கே என்ன ஓவியப்போட்டி நடந்தாலும் சொல்லி அடிக்கும் கில்லியாகப் பரிசுகளை, கோப்பை களைக் குவித்தான். பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கான ஓவியப் போட்டியில்கூட ஆறு வயது கிளிண்ட் சுலபமாக வென்று காட்டி னான். தன் ஏழாவது வயதிற்குள்ளாகவே கிளிண்ட் தன் பிஞ்சு விரல்களால் வரைந்து முடித்திருந்த ஓவியங்களின் எண்ணிக்கை சுமார் 25,000 இருக்கும்.

1987. திருவனந்தபுரத்தில் ஓர் அரண்மனையில் கிளிண்டின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வந்து பார்த்த கலைஞர்கள், மூத்த ஓவியர்கள் ஒவ்வொருவருமே அதிசயத்து, அசந்து நின்றனர். ‘அந்த இளம் படைப்பாளி எங்கே? சந்திக்க முடியுமா?’ ஆர்வமுடன் கேட்டனர். கிளிண்ட்டின் பெற்றோர் கனத்த இதயத்துடன் சொன்ன பதில், “அவன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன...”

ஆம். கிளிண்டின் மூன்றாவது வயதிற்குள்ளாகவே சிறுநீரகங்கள் இரண்டும் செயல் இழந்தன. அவன் அதிக காலம் உயிர் வாழ்வது கடினம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். “மரணம் என்னை நெருங்கும்போது ரொம்ப வலிக்குமா?” என்ற கிளிண்டின் கேள்விக்குப் பெற்றோரால் கண்ணீரைத் தவிர வேறு பதில் சொல்ல முடியவில்லை. தான் அதிக காலம் வாழ மாட்டோம் என்பதைத் தெளிவாக உணர்ந்ததாலோ என்னவோ, அந்த ‘தெய்வ மகன்’ தன் ஓவியங்களால் உலகத்துக்கு ஏதேதோ அழுத்தமான செய்திகள் சொல்லிவிட்டு மறைந்துவிட்டான்.

கிளிண்ட் இறந்தபோது அவனுடைய வயது 6 வருடங்கள் 11 மாதங்கள். (1976 - 1983). அவன் இறந்து 33 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றைக்கும் கிளிண்டின் ஓவியங்கள் பேசுபொருளாக உயிர்ப்புடன் உலவிக்கொண்டிருக்கின்றன. கொச்சியில் ஒரு சாலைக்கு கிளிண்டின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

செபாஸ்டியன் என்ற மலையாள எழுத்தாளர் ‘நிறங்களோட ராஜகுமாரன்’ என்ற கிளிண்டின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். A Brief Hour of Beauty என்று ஆங்கிலத்திலும் கிளிண்டின் வாழ்க்கை புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘ஆனந்தபைரவி’ என்றொரு மலையாளப் படம் கிளிண்டின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2007ல் வெளிவந்தது.

தவிர ஓர் ஆவணப் படமும் வெளியாகியிருக்கிறது (https://www.youtube.com/watch?v=nNmEMz0D5JY). கிளிண்டின் நினைவாகக் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள் வருடந்தோறும் நடத்தப்படுகின்றன. இன்றைக்கு கிளிண்ட் வாழ்ந்துகொண்டிருந்தால் நிச்சயம் உலகப் புகழ்பெற்ற ஓவியனாக, இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாகத் தொடர்ந்து மிளிர்ந்துகொண்டிருப்பான்.

குழந்தைகளின் கற்பனா சக்திக்கு எல்லையே கிடையாது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப் பட்டு நடந்துகொள்வதும் கிடையாது. ஒரு நதிபோலத் தன் பாதையில் ஓடும் மனம் அவர்களுடையது. கட்டுப்பாடற்றது. சுதந்தரத்தை மட்டுமே விரும்புவது. ஆனால், ‘அதைச் செய், இதை மட்டும் செய், இப்படிச் செய்யாதே.

இவ்விதம் செய்யவில்லையென்றால் கொன்றுவிடுவேன்’ என்றெல்லாம் கட்டுப்பாட்டு அணைகளை வலுவாகக் கட்டி, அந்த நதியை, குழந்தைகளின் சிந்தனைத் திறனை ஓரிடத்தில் தேக்கி, அவர்களைக் குட்டையாக மாற்றும் வேலையைத்தான் நாம் முனைப்புடன் செய்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் இயற்கையான படைப்பாற்றலை, சுயமாகச் சிந்திக்கும் திறனை ‘கல்விக்கூடம்தான் எல்லாம். பாடப்புத்தகம் மட்டுமே வாழ்க்கை’ என்ற அழுத்தம் கொடுத்து முடக்கும் பாவச்செயலைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்கள் குழந்தை சொன்னதை மட்டுமே செய்யும் சுயபுத்தி யற்ற ரோபோவாக வளர வேண்டுமா? இல்லை,
எல்லையற்று விரியும் சிந்தனைகளுடன், சுதந்தரச் சிறகு களால் வானை அளக்கும் உயிர்ப்பான பறவையாக உயரப் பறக்க வேண்டுமா?
முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் கற்பனா சக்திக்கு எல்லையே கிடையாது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்பட்டு நடந்துகொள்வதும் கிடையாது. ஒரு நதிபோலத் தன் பாதையில் ஓடும் மனம் அவர்களுடையது. கட்டுப்பாடற்றது. சுதந்தரத்தை மட்டுமே விரும்புவது.

(வளர்வோம்)
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.