குழந்தைகளை சூழும் `இருள்’

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#1
Child-pic3.jpg

குழந்தைகள் என்றாலே குறும்புத்தனம் தான் நினைவுக்கு வரும். பெரும்பாலும் அந்த குறும்புத் தனங்கள் ரசிக்கப்படும் என்றாலும், சில நேரங்களில் பெற்றோர்களுக்கும்- மற்றவர்களுக்கும் அது எரிச்சல் ஆகிவிடும். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரையில் குறும்புத்தனம் இயல்பானது. அவைகளின் அமைதிதான் கவனிக்கத்தகுந்தது. குழந்தைகள் குறும்புத்தனம் செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டால் உடனே கவனித்து அதற்கான காரணங்கள் ஆராயப்படவேண்டும்.

child-playing-with-bubbles.jpg


குடும்பசூழல்:


குழந்தைகள் வாழும் குடும்ப சூழல் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடிதான் குழந்தைகளின் மன நிலையும் இருக்கும். குழந்தைகளுக்கு எதுவும் புரியாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு வயது முதல் குழந்தையின் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் வளர்கிறது. ஒரு வயது குழந்தைக்கு சுற்றுச்சூழல் எல்லாமே புரியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். குழந்தையை எதிரில் வைத்துக் கொண்டு பெற்றோர் வாக்கு வாதம் செய்வது, சண்டை போடுவது இவையெல்லாம் குழந்தையின் மன நிலையை பாதித்து, குழந்தையை இயல்புக்கு மாறாக அமைதியாக்கிவிடும். குழந்தைகள் குறும்புத்தனங்கள் செய்து, மகிழ்ச்சியாக வளர அவைகளின் குடும்பசூழல் நன்றாக இருக்கவேண்டும்.

உடல் உபாதைகள்:


தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை குழந்தைகளால் விளக்கிச் சொல்ல முடியாது. ஏதோ ஒரு அசவுகரியம் என்பது மட்டுமே குழந்தைகளுக்கு புரியும். அதை வெளிப்படுத்த முடியாமல் இயல்புக்கு மாறாக அவை அமைதிகாக்கும். அந்த மவுனத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ளாமல் அவர்களை வெளியே அழைத்துச் செல்வது, உற்சாகப்படுத்த முயற்சி செய்வது எல்லாம் வீண். குழந்தைகளிடம் அன்பாக விசாரித்து அமைதிக்கான காரணத்தை கண்டறிந்து, அந்த உபாதைகள் நீக்க முயற்சி செய்ய வேண்டும்.

நண்பர்களுடன் சண்டை:


வெளியே ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் குழந்தைகளின் மனதை பாதிக்கும் தன்மை கொண்டது. அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள தெரியாமல் குழந்தைகள் அமைதிகாக்கும். குழந்தைகள் தங்கள் நண்பர்களோடு ஆர்வமாக விளையாடுவார்கள். அவர்களுக்குள் அவ்வப்போது சண்டையும் ஏற்படும். சண்டையில் மனதளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் அதை பெற்றோரிடம் சொன்னால் மீண்டும் விளையாட அனுப்பமாட்டார்கள் என்று பயந்தும் அமைதியாகிவிடுவதுண்டு. விளையாட்டில் ஏற்படும் தோல்வி, பின்னடைவு, மற்ற குழந்தைகளின் கேலி, கிண்டல் போன்றவைகளும் குழந்தைகளை மவுனமாக்கிவிடும்.

பயம்:


ஏதேனும் துயரச் சம்பவமோ, பயப்படும்படியான விஷயமோ குழந்தைகள் கண்முன்னே நடந்தால், குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து பயத்தில் அமைதியாகிவிடுவார்கள். எத்தனை குறும்புத் தனமான குழந்தையாக இருந்தாலும் அதன் மனது மென்மையானதுதான். அந்த பூவின் மனதிற்குள், அதிர்ச்சிகள் ஏதேனும் அரங்கேறி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தனிமை:


அளவு கடந்த தனிமை குழந்தைகளை அமைதியாக்கி விடும். குழந்தைகள் பேசவும், பழகவும், சிந்திக்கவும் கற்றுக் கொள்வது மற்றவர்களை பார்த்துதான். யாருமே இல்லாத தனிமையில் அவர்கள் வெறுமையை உணர்வார்கள். அந்த வெறுமையின் அழுத்தம் அவர்களை மவுனமாக்கிவிடும். இந்த வகை அமைதி அவைகளின் அறிவு வளர்ச்சி, செயல்திறனை பாதிக்கும்.

அவமரியாதை:


குழந்தைகளை கண்டிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு மற்ற குழந்தைகள் முன் அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.

அலட்சியம்:


ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டியது குழந்தைகளுக்குதான். தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப்போய்விடுவார்கள். தேவையான முக்கியத்துவம் கிடைக்காதபோது தங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று குழந்தைகள் நினைக்கத் தொடங்கிவிடும். அப்படி நினைக்கும் குழந்தைகள் யாரிடமும் பேசாமல் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மவுனமாகிவிடும்.

குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசை களை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத் தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக் கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவை யற்ற ஆயுதமாகும்.

அமைதி:

பக்குவப்பட்ட மனிதர்கள் அமைதியாக இருப்பது ஒரு அற்புதமான விஷயம். அமைதி என்பது மனிதனை பண்படுத்தும் ஞானம். ஆனால் அறியாப்பருவ குழந்தைகளுக்கு அமைதி என்பது பல்வேறு மனப் போராட்டங்களால் ஏற்படும் அவஸ்தை. ஒவ்வொரு அமைதிக்கு பின்னும் பல ஆழ்ந்த காரணம் அடங்கி இருக்கும். அவை அனைத்துமே அவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதனால் குழந்தைகளின் அமைதியை அலட்சியப்படுத்தாமல், அவர்களுடன் பேசி, தெளிவுப்படுத்தி அமைதி என்ற இருளில் இருந்து அவர்களை கலகலப்பான வெளிச்சத்திற்குள் கொண்டு வந்துவிடவேண்டும்.

- Senthilvayal
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.