குழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை!

சைல்ட் சேஃப்டி

காசை விழுங்குவதில் இருந்து வெந்நீரை ஊற்றிக் கொள்வதுவரை, குழந்தைகளுக்கு நேரும் விபரீதங்களுக்கு பெற்றோரே பொறுப்பு. அதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, குழந்தை வளர்ப்பில் கவனம் கொடுக்கவேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரேம்குமார்.

‘‘குழந்தை வளர்ப்பில் எப்போதும் 100 சதவிகித கவனம் இருக்க வேண்டும். நிமிடங்கள், நொடிகள் கவனம் சிதறினாலும், அது அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வலியுறுத்தல்கள், பாதுகாப்பான பேரன்ட்டிங்க்கு வழிகாட்டும்.

தவழ ஆரம்பிக்கும்போது...

தவழ, நடக்க ஆரம்பிக்கும்போது குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வாயில் எடுத்து வைத்துக்கொள்வார்கள். அது சுகாதாரக்கேடான பொருளாகவோ அல்லது கூர்மையான பொருளாகவோ இருக்கும் பட்சத்தில், விளைவுகள் மோசமாகும். மேலும், நாணயம், சிறிய மூடிகள், பேட்டரிகள் என்று சின்னப் பொருட்களை அவர்கள் விழுங்கிவிட நேரலாம். எனவே, குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தரையில் எந்தப் பொருளும் சிதறியிருக்காதவாறு பார்த்துக்கொள்ளவும்.

அவர்களுக்கு விளையாடக் கொடுக்கும் பொருட்களைத் தண்ணீரில் கழுவி அவ்வப் போது நன்கு சுத்தம் செய்து கொடுக்கவும். பொருட்களில் உள்ள அழுக்கு வாய்க்குள் சென்றால், வாந்தி, பேதி போன்றவை ஏற்படும். ஃபர் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்க வேண்டாம். அது சுவாசப் பாதையில் ஒவ்வாமை ஏற்படுத்தலாம்.

சூடான பால், தண்ணீர் போன்றவற்றை குழந்தைகள் முன்னிலையிலோ, குழந்தைக்கு எட்டும் உயரத்திலோ வைக்கக்கூடாது. மிக்ஸி, கிரைண்டர் என்று பொருட்களை ஸ்டாண்டில் வைக்கும்போது, அந்த ஸ்டாண்ட் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகள் பிடித்து இழுத்து மேலே சாய்த்துக் கொண்டால், ஆபத்துதான்.

கரன்ட்டில் கவனம்!

சில வீடுகளில் ஸ்விட்ச் போர்டை குறைந்த உயரத்தில் வைக்கிறார்கள். அதைத் தவிர்க்கவும். யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகள் அதில் தங்கள் விரல்களைவிட்டு விளையாடுவது, ஊக்கு, ஹேர்பின் போன்ற பொருட்களை விட்டு விளையாடுவது என்று விபரீதத்தை நெருங்குவார்கள். டேபிள் ஃபேன், அயர்ன் பாக்ஸ், எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் வைக்க வேண்டாம். எந்த எலெக்ட்ரிக் பொருளையும் பயன்படுத்தியபின் போர்டில் இருக்கும் ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிடவும். மிக முக்கியமாக, சார்ஜ் செய்துகொண்டே மொபைலில் பேச, மொபைல் கேம் விளையாட அனுமதிக்க வேண்டாம். சமீபத்தில், சார்ஜ் செய்துகொண்டே செல்லில் பேசிய சிறுவனுக்கு, அப்போது செல்போன் வெடித்ததால் பார்வையே பறிபோன விபத்து, அனைத்து வீடுகளுக்குமான எச்சரிக்கை.

ஆசிட், ஃபினாயில் பாட்டில்கள்...கீப் அவே!
நிறைய வீடுகளில் ஜூஸ் பாட்டிலில் கெரசின், ஃபினாயில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகள் அவற்றின் நிறத்தில் ஈர்க்கப்பட்டு, ஜூஸ் என்று நினைத்து அவற்றை எடுத்துக் குடித்துவிடும் விபரீதங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இதனால் ஏற்படும் குடல் பாதிப்பு.... உயிரிழப்பு வரை செல்லலாம். மேலும் அவற்றை எடுத்து விளையாடும்போது, அவர்களின் உடல், கண்களில் தெறித்து... பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, இவ்வகையான பொருட்களையும், முக்கியமாக ஆசிட் பாட்டில்களையும் குழந்தைகளின் பார்வைக்கே படாத இடத்தில், உயரத்தில் வைக்கவும்.

கதவை மூடவும்!

மாடி வீட்டில் வசிப்பவர்கள் மாடிப்படி, பால்கனியின் கதவுகளை எப்போதும் மூடியே வைக்கவும். அதேபோல வீட்டுக்குள்ளும் பாத்ரூம் கதவுகள் எப்போதும் மூடியே இருக்கட்டும். அங்கிருக்கும் அசுத்த தண்ணீரை அவர்கள் குடித்தாலோ, அதில் விளையாடினாலோ டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். மேலும், அந்த ஈரப்பதமான இடத்தில் வழுக்கிவிழ, தண்ணீர் நிரம்பியிருக்கும் பெரிய டப்பில் இடறிவிழ என... மொத்தத்தில் பாத்ரூம் குழந்தைகளுக்கு மிக ஆபத்தான ஓர் இடம்.

மருந்து, மாத்திரை... ஜாக்கிரதை!

பொதுவாக, குழந்தைகளுக்குப் பலவித வண்ணங்கள், வடிவங்களில் இருக்கும் மாத்திரைகளின் மீதும், இனிப்புச் சுவையுடைய டானிக்கின் மீதும் ஈர்ப்பு இருக்கும். யாரும் கவனிக்காத நேரம் அவற்றை எடுத்துச் சாப்பிட்டு விடு வார்கள் என்பதால், மருந்து, மாத்தி ரைகள் எப்போதும் அவர்களின் கண் களுக்கும், கைகளுக்கும் எட்டாமலேயே இருக்கட்டும்.

க்ரயான்ஸ்... உஷார்!

க்ரயான்ஸ், பல்பம், சாக்பீஸ் போன்ற பொருட் களை, பெற்றோர்களின் கண்காணிப்பிலேயே குழந்தைகளைப் பயன்படுத்த அனுமதியுங்கள். இவை எல்லாம் குழந்தைகள் வாயில் வைக்க விரும்பும் பொருட்கள். ஆனால், அது வயிற்றில் இருந்து சிறுநீரகம் வரை தீங்கு ஏற்படுத்தும்... கவனம்.

ஊக்கு, பட்ஸ் பழக்கங்கள்... டேஞ்சர்!

பெற்றோர்களைப் பார்த்தே எல்லாச் செயல்களையும் செய்யும் குழந்தைகள், ஊக்கு, ஹேர்பின், பட்ஸ் என்று காதுக்குள் விடுவதையும் அவர்களைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். தொடர்ந்து இப்படிச் செய்துகொண்டே இருப்பதாலோ அல்லது அவற்றை வைத்து விபரீதமாக விளையாடுவதாலோ காது நரம்புகள் பாதிக்கப்பட்டு செவித்திறன் குறைபாடுவரை ஏற்படலாம்.

குழந்தைகளின் இயல்பு... குறும்பு. எனவே, அதைக் குறை சொல்வதையோ, பழிசொல்வதையோ நிறுத்தி, எல்லா வகையிலும் பாது காப்பான ஒரு சுற்றுப்புறத்தை அவர்களுக்கு எப்போதும் தருவது, பெற்றோரின் பொறுப்பே!’’

- வலியுறுத்திச் சொன்னார், டாக்டர் பிரேம்குமார்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: குழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய&a

Very useful suggestions.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.