குழந்தையின் அழுகை

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
டயபரை மாற்ற வேண்டுமா என்று பாருங்கள். டயபர் உராய்வினால் குழந்தையின் இடுப்பு, தொடை இடுக்குகளில் தோல் தடித்து சிவந்து இருந்தால் பேபி லோஷன் தடவி விட்டு பிறகு புது டயபர் போடுங்கள். இல்லையென்றால் சிறிது நேரம் குழந்தை காற்றாட இருக்கட்டும்.

குழந்தையின் பின்பக்கக் கழுத்தைத் தொட்டுப் பாருங்கள். அதிக உஷ்ணமோ, அதிக சில்லிப்போ இருக்கிறதா என்று சோதியுங்கள். உஷ்ணம் அதிகமாக இருந்தால் உடைகளை களைந்து விடுங்கள். சில்லென்றிருந்தால் மேலே ஸ்வட்டர் அல்லது வேறு உடை அணிவியுங்கள். உங்கள் கைக்கு வித்தியாசம் தெரியவில்லைஎன்றால் தர்மாமீட்டரை வைத்து பாருங்கள்.

குழந்தையின் கவனத்தை திசை திருப்புங்கள். வெளியில் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். மிதமான காற்று, சிறிது சூரிய ஒளி இவை குழந்தைக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும்.

சிலசமயம் உங்கள் கவனத்தை கவர வேண்டும் என்பதற்காகவும் அழலாம். கொஞ்ச நேரம் கொஞ்சுங்கள். உச்சி குளிர்ந்து அழுகை நிற்கலாம்! சில குழந்தைகள் தோளில் சாத்திக் கொண்டால் பேசாமல் இருக்கும்.

இடுப்பில் உட்கார்த்தி வைத்துக் கொண்டால் பிடிக்காது. குழந்தையின் விருப்பப்படி நடப்பது நமக்கு இரத்த அழுத்தம் ஏறாமல் பார்த்துக் கொள்ளும்.

பாட்டுப் பாடுங்கள். அல்லது மெல்ல ‘ஹம்’ செய்யுங்கள். அழுகை நின்றால் உங்கள் பாட்டுத் திறமையை மெச்சிக் கொள்ளுங்கள். அழுகை அதிகமானால் பாடுவதை நிறுத்திவிடுங்கள். ‘அழுகையை நிறுத்தறயா, பாடட்டுமா?’ என்று அடுத்தமுறை குழந்தை அழும்போது கேட்கலாம். குழந்தை கப்சிப் என்றாகிவிடும்.

குழந்தையை கையில் வைத்துக் கொண்டு மெல்ல ஆட்டலாம். நிதானமான, ஒரே சீரான ஆட்டலில் குழந்தை அமைதியாகி விடும். தொடையில் போட்டுக் கொண்டு தட்டலாம்.

மிகவும் புழுக்கமான நாளாக இருந்தால் மாலைவேளைகளிலும் குழந்தையை குளித்துவிடலாம். புழுக்கம் காரணமாகவும் குழந்தை எரிச்சல் அடைந்து அழலாம். குழந்தையை உங்கள் மார்பின் மேல் விட்டுக் கொண்டு கொஞ்சுங்கள். எல்லாக் குழந்தைகளும் இதை விரும்புவார்கள். அழுகை நிற்கும்.

குழந்தையின் வயிறு கீழே இருக்கும்படி படுக்க வைத்து குழந்தையின் பின்புறத்தை லேசாக கீழ் முதுகு நோக்கித் தடவிக் கொடுங்கள். ஒரு சின்ன ‘மசாஜ்’ கொடுத்தால் சமத்தாகி விடும்.

நிறைய சத்தம், நிறைய வெளிச்சம் இவைகூட ஒரு சில குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை. எல்லாவற்றையும் குறைத்து விடுங்கள். அழுகையும் குறையலாம்.

ஒரே இடத்தில் படுத்துக் கொண்டிருந்தாலும், குழந்தையின் கை, கால்கள் ஆடிக் கொண்டேதான் இருக்கும். அதனால்கூட குழந்தை களைத்து விடும். குழந்தையை ஒரு பெரிய டவலில் விட்டு நன்றாக சுற்றி (Swaddle) விடுங்கள். குழந்தை அமைதியாகி தூங்கிவிடும்.

சில சமயங்களில் குழந்தையின் அழுகையை ‘கண்டு கொள்ளாமல்’ இருப்பது கூட பலனளிக்கும். குழந்தை அழ ஆரம்பித்தவுடன் பதறிப் போய் அதை எடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். ‘ஓ! அம்மாவின் பலவீனம் இதுவா?’ என்று தெரிந்து கொண்டு உங்களை எமோஷனல் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்துவிடும் குழந்தை.

எப்படியாயினும் மூன்று மாதங்களில் குழந்தையின் அழுகை குறைந்து விடும். நமக்கு எப்படி குழந்தை புதுசோ, அதேபோலத்தான் குழந்தைக்கும் இந்த உலகம் புதிது. புதிய உலகத்திற்கு வந்து அதற்கு தகுந்தாற்போல மாற குழந்தைக்கும் சிறிது நாட்கள், மாதங்கள் ஆகும், இல்லையா?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.