குழந்தையை உலுக்கும் விளையாட்டு-Shaken Baby Syndrome – SBS

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தையை உலுக்கும் விளையாட்டு… உயிருக்கே ஆபத்தாகும் விபரீதம்!


சமீபத்தில் பெங்களூருவில் நடந்திருக்கும் ஒரு சம்பவம், இளம் அம்மாக்களை கதிகலங்க வைத்திருக்கிறது. நிகழ்ந்த சோகம் இதுதான்..வழக்கம்போல தங்களுடைய ஒன்றரை வயது பெண் குழந்தையை ஒரு சிறுமியின் பாதுகாப்பில் விட்டு விட்டு, வேலைக்குச் சென்றனர் அந்தத் தம்பதி. அடுத்த சில மணி நேரத்திலேயே அவர்கள் குழந்தை இறந்து விட்டதாக செய்தி வர, அலறியடித்து ஓடி வந்திருக்கிறார்கள்.

குழந்தை இறந்ததன் காரணம் என்ன தெரியுமா? குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்க, அதன் அழுகையை நிறுத்துவதற்காக, அதைத் தூக்கி உலுக்கி இருக்கிறாள் அந்தச் சிறுமி. அந்த உலுக்கலில்தான் இறந்திருக்கிறது குழந்தை!

பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த இந்தச் செய்தியுடன் சென்னையைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் ஜனனி சங்கரனை சந்தித்தோம்..

“குழந்தை அழுதால் மட்டுமல்ல.. சும்மா அதன் பொக்கை வாய்ச் சிரிப்பை ரசிப்பதற்காகக்கூட அதைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பதும் உலுக்குவதும் நம் ஊரில் சகஜமான விஷயங்களாச்சே! இதுபோன்ற செயல்களும்கூட ஆபத்தானவையா டாக்டர்?” என்கிற நம் சந்தேகத்தை அவர் முன் வைக்க, அதை உறுதிப்படுத்தி நம் அதிர்ச்சியின் அளவைக் கூட்டினார் டாக்டர் ஜனனி.

“குழந்தைகளை குஷிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு நாம் செய்கிற செயல்கள் பலவும், அவர்களை மரண வாசல் வரை அழைத்துச் செல்லக் கூடியவைதான்.. சில வருடங்களுக்கு முன் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். தொடர்ச்சியாக வலிப்பு ஏற்பட்டதால், அவன் நினைவிழந்த நிலையில் இருந்தான். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவனுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.அவனுடைய பெற்றோரிடம் தொடர்ச்சியாக விசாரித்தபோதுதான், காரணத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. சிறுவன் கைக்குழந்தையாக இருந்தபோது, உறவுக்காரர் ஒருவர் அவனை அடிக்கடி மேலே தூக்கிப் போட்டு, பிடித்து விளையாடுவாராம். அதன் விளைவுதான் அப்போது ஏற்பட்ட ரத்தக் கசிவும் வலிப்பும்! நல்லவேளையாக, உடனே எங்களிடம் அழைத்து வந்ததால் அந்தச் சிறுவனைக் காப்பாற்ற முடிந்தது..” என்றவர்,

வெளிநாடுகளில் இந்தப் பிரச்னை மிக அதிகம் என்கிற தகவலையும் சொன்னார்.
“அமெரிக்காவில் குழந்தை வன்முறையால் இறக்கிற நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தையின் மரணத்துக்கு இப்படி உலுக்குவதுதான் காரணம். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதை ‘ஷேக்கன் பேபி சிண்ட்ரோம் எஸ்.பி.எஸ்.’ (Shaken Baby Syndrome – SBS) என்கிறார்கள். அங்கு நிகழ்கிற இதுபோன்ற குழந்தை மரணங்கள் பெரும்பாலும் விபத்துக்கள் அல்ல.. கோபத்தில் செய்யப்படுகிற கொலைகள் என்பதால், அந்த அரசாங்கம் இந்தக் குற்றத்துக்குக் கடும் தண்டனை தருகிறது!” என்றவர்,

அது பற்றியும் விவரித்தார்..
“அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலும் குழந்தைகளை ‘பேபி சிட்டர்’கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களோ, குழந்தையின் வளர்ப்புத் தந்தையோ அல்லது வளர்ப்புத் தாயோ, குழந்தையை விட சில வருடங்களே மூத்த சகோதரன், சகோதரியோ கூட இந்தக் குற்றத்தைச் செய்கிறார்கள்.தூங்க விடாமல் அழுது கொண்டே இருக்கிற குழந்தையின் மீது எரிச்சல்பட்டு அதை உலுக்குவது, மறுமணம் செய்து கொண்டவர்கள், தங்கள் துணையின் குழந்தை மீது எரிச்சல் கொண்டு உலுக்குவது, சிறு பிள்ளைகள், தங்கை அல்லது தம்பியின் மீது பொறாமைப்பட்டு உலுக்குவது.. இப்படியெல்லாம் சோகங்கள் அங்கு நிகழ்கின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரையில் எல்லாமே அறியாமையால் நிகழ்வதுதான்..” என்றவர்,

இப்படி உலுக்குவதால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் விளக்கினார்..
“ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.. அதிலும் குறிப்பாக, ஒன்று முதல் மூன்று மாதம் வரை உள்ள குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

உலுக்குதல் என்றால், அதிக நேரம் உலுக்க வேண்டும் என்பதுகூட இல்லை. ஐந்து முதல் இருபது நொடிகள் அதிர்வுகூட பாதிப்பை ஏற்படுத்தும்.
காரணம், இந்த வயதில் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது. இந்த சமயத்தில் குழந்தையைத் தூக்கிப் போடுவதாலும், உலுக்குவதாலும் ஏற்படும் அதிர்வால் ரத்தக் குழாய்கள் அறுபட்டு, ரத்தக் கசிவு ஏற்படும். இதனால் மூளை வளர்ச்சி குறைவதுடன், கண் பார்வை மற்றும் முதுகுத் தண்டும் பாதிக்கப்படக் கூடும்.

நம் ஊரில் பொதுவாக கழுத்து நிற்கும் பருவமான ஐந்து மாதம் வரை குழந்தையை மிகக் கவனமாகக் கையாள்வார்கள். அதன் பிறகும்கூட கவனம் தேவைதான். காரணம், அப்போதும் குழந்தையின் எலும்பு மற்றும் முதுகு தண்டுவடங்கள் மெல்லியதாகவும், முழுமையாக வளர்ச்சி பெறாமலும்தான் இருக்கும். திடீரென ஏற்படும் அதிர்வால் எலும்புகளில் கீறல் விழுவதுடன், எலும்பு உடைந்தும் விடும்.

இதுபோன்ற விளைவுகள் உடனடியாக வெளியே தெரியாது. குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதாகும்போதுதான் தெரிய ஆரம்பிக்கும்..” என்றவர், அப்படி பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை பற்றிச் சொன்னார்..
“பார்வைக் கோளாறால் அவதிப்பட்ட ஒரு சிறுமியை சமீபத்தில் என்னிடம் அழைத்து வந்தார்கள். அவளுக்கு எல்லா உருவமும் மங்கலாகத்தான் தெரிந்தது. அவளுடைய கண்ணை ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோதுதான், பார்வைப் படலத்தில் ரத்தம் உறைந் திருப்பது தெரிந்தது. இதுவும் கூட அவள் குழந்தையாக இருந்தபோது அவளை உலுக்கியதால் ஏற்பட்ட பிரச்னைதான்!குழந்தையை உலுக்குவதால் பார்வைக் கோளாறுதான் என்றில்லை..

இன்னும் இளம் வயதிலேயே வலிப்பு, வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைபாடு, பேசுவதிலும் புரிந்து கொள்வதிலும் பிரச்னை, கேட்கும் திறன் குறைபாடு போன்ற பல குறைபாடுகள் வரலாம்..” என்றவர், வேறு என்னென்ன காரணங்களால் இது ஏற்படலாம் என்பதையும் சொன்னார்..

“குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக, ஸ்பிரிங் பொருத்திய தூளியை பயன்படுத்தக் கூடாது. அதனால் ஏற்படும் அதிர்வு எஸ்.பி.எஸ்ஐ ஏற்படுத்தும். அதேபோல கிராமங்களில் சிலர், ‘குடல் ஏறிவிட்டது.. சரி செய்கிறேன்’ என்று சொல்லி, குழந்தையை துணியில் போட்டு உருட்டுவார்கள். இதுவும் அதிர்வை ஏற்படுத்தும். குழந்தைகள் மெல்லிய பூவைப் போன்றவர்கள். அவர்களை மென்மையாக மட்டுமேதான் கையாள வேண்டும். காரணம், உங்கள் கையில் இருப்பது ஒரு சிறிய குழந்தை மட்டுமல்ல.. அதன் பெரிய எதிர்காலமும்!” என்றார் ஜனனி முத்தாய்ப்பாக.

“குழந்தை எதற்காகவெல்லாம் தொடர்ச்சியாக அழும்? அப்போது என்ன செய்ய வேண்டும்?” இதற்கும் பதில் சொல்கிறார் ஜனனி..”பசித்தால், காய்ச்சல், சளி, ஜீரணமின்மை போன்ற உடல்நல கோளாறுகள் இருந்தால், சரியான காற்றோட்டம் இல்லையென்றால், அதிகமாகக் குளிரடித்தால் குழந்தை அழும். என்ன காரணம் என்பதை யூகித்து, அதைச் சரி செய்ய வேண்டும்.
அப்படி அழும் குழந்தையை கொஞ்ச நேரம் தூக்கிக் கொண்டு நடக்கலாம். சத்தமிடுகிற பொம்மைகளை அதன் அருகில் வைக்கலாம். குழந்தையை நம் முகத்துக்கு நேராகத் தூக்கிப் பிடித்து, அதன் பார்வையில் படும்படி ஏதாவது பேசலாம்.. மெல்லிய குரலில் வித்தியாசமாக சத்தமிடலாம்.”
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.