கூழ் குடிக்க வெட்கமா?

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
தமிழ் மாதங்கள், 12க்கும், ஒவ்வொரு சிறப்பை, நம் முன்னோர் வகுத்து வைத்துள்ளனர். அதனால் தான், பல மாதங்களையும் குறிப்பிட்டு, பல பழமொழிகளும் பவனி வருகின்றன. முக்கியமாய் இந்த ஆடி மாதம், மிக சிறப்பானதாக, பல கூறுகளிலிருந்து கூறப்படுகிறது.
எதனால், இந்த ஆடி மாதம் சிறப்பானது என்று தெரிந்து கொள்ள ஆராய்ச்சி செய்தால், பல சுவையான, அறிவியல் பூர்வமான, ஆரோக்கியம், உணவு, உறவு தொடர்பான பல சங்கதிகள், ஆன்மிக
விஷயங்களோடு வரிசைக் கட்டி நிற்கின்றன.
அறிவியல் தொடர்பானவை
ஆடி மாதத்தில் தான், சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணத்தை துவங்குகிறது. ஆடியில் துவங்கும் தட்சிணாயனம் காலத்தில், சூரியனிடம் இருந்து வெளிப்படும் கதிர்கள், விவசாயத்திற்கு உகந்ததாகும். பகல் பொழுது குறைந்தும், இரவு நீண்டும் இருக்கும். காற்றும், மழையும், ஈரப் பசையும் அதிகமாக காணப்படும். சூரியனிடமிருந்து சூட்சும சக்திகள் அதிகமாய் வெளிப்படும். பிராண வாயு அதிகமாய் கிடைப்பதும், ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ளதும், இந்த மாதத்தில் தான். சூரியனின் தாக்கம் குறைவாக உள்ள, இந்த மாதத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வருகின்றன. சந்திரனின் குளிர்ச்சி சூரியனை
குளிர்விக்கிறது; வெய்யில் தாக்கம் குறைகிறது.
சூரியனை விட, சந்திரனுக்கே ஆதிக்க நிலை வந்து விடுவதால், நம்மை குளிர்விக்கிறது.
ஆரோக்கியம் தொடர்பானவைநிறைய இயற்கை மாற்றங்கள் அதிகமாக நடப்பது
ஆடி மாதத்தில் தான். அறிவியல் காரணங்களால் காற்றும், அதன் மூலம் ஈரப் பசையும் அதிகம்
என்பதால், காற்றில் விதைகள் பரவுவது போல, நோய் கிருமிகளும் அதிகமாய் உற்பத்தியாகி பரவும்.
அதனாலேயே சளி, இருமல் அதிகமாய் தொற்றும்.
மருத்துவமனைகளில் இந்த மாதம் சிகிச்சைக்கு போவோர் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும்.
வீட்டு பெரியவர்களிடம் கேளுங்கள். அவர்கள் காலத்திலெல்லாம் அம்மை வியாதி எப்படி, எந்த காலக் கட்டத்தில் அதிகமாய் இருந்தது என்று!
கண்டிப்பாக, இந்த ஆடி மாதத்தில் தான், அம்மை கண்டவர்கள் அதிகம் இருந்திருப்பர். சூரிய கதிர்களின் திசை மாற்றத்தினால் உடல் சூடு அதிகரித்து, பெருகி வரும் வைரஸ் கிருமிகள், சூடேறிய உடலைத் தாக்கி, அம்மை நோயை உருவாக்குகிறது. காற்று மிக வேகமாய் இருப்பதனால், அம்மைக்கு காரணமான வைரஸ் கிருமிகள் எளிதாகவே பரவி, ஒரு உயிர் கொல்லி நோயாகவே இருந்தது. மருத்துவ தொழில்நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுவிட்ட இந்தக் காலத்திலும், அம்மை நோய்க்கு மருந்து என்று ஒன்றும், தனியாக கண்டுபிடிக்க முடியவில்லை. வரும் முன் காக்கும் நடவடிக்கைகளே பின்பற்றப்படுகிறது.
பொருளாதார ரீதியானவை
ஆடி மாதத்தில் விதை விதைத்தால், அமோகமான விளைச்சல் இருக்கும் என்பதும், நம் நம்பிக்கை. இதுவும் சும்மா சொல்லப்படவில்லை. அனுபவ ரீதியாக பெற்ற அறிவின் மூலமே கூறப்பட்டுள்ளது. தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில், தமிழக ஆறுகளில் நீர் வரத்து அதிகமாய் இருக்கும். இப்போது விதைத்தால் தை மாதம் அறுவடை செய்யலாம்.
தொடர்ந்து பண்டிகைகளும் வர ஆரம்பித்துவிடும். மக்கள் கைகளில் வசதி இருக்கும் இந்த சமயத்தில் நகை, நிலம், வீடு என்று எது வாங்கினாலும் பெருகும் என்பதற்கான
காரணமும் இதுதான். உறவு ரீதியானவை
ஊரில் மக்கள் எல்லாரும் மகிழ்ந்தாலும், புதுமண தம்பதியை பிரித்து, பெண் வீட்டார் பெண்ணை மட்டும் அழைத்துப் போய் விடுவதால், அவர்கள் மட்டும் இந்த ஆடி மாதம் வந்தாலே சுணக்கமாகி விடுவர். இதற்கும் எல்லாருக்கும் தெரிந்த காரணம் தான்.ஆடியில் இணைந்த தம்பதியருக்கு மருத்துவக் கணக்குபடி சித்திரையில் பிரசவம் ஆகும். கடுமையான வெயில் காலம் என்பதால் தாய்க்கும், சேய்க்கும் பல நோய்கள் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத காலத்தில், நம்
பெரியவர்களுக்குத் தோன்றிய முன் யோசனை இது.
உணவு ரீதியானவை
அறிவியல் படி, நம் உடல் சூடு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியப் படி வைரஸ் அதிகமாய் பரவி நோய் தொற்று அதிகமாகக்கூடும். உறவு ரீதியாக தனிமை என்ற வெறுமையும் சேர்ந்துக் கொள்ளும். ஆனால், பொருளாதார ரீதியாக வளமாய் இருப்போம்.
இத்தனை தொல்லைகளிலிருந்து தப்பிக்கதான், ஆடி மாத சிறப்பான கேழ்வரகு கூழ் செய்து
சாப்பிடும் பழக்கத்தை, நம் முன்னோர் ஏற்படுத்தினர். நம் ஆரோக்கியத்திற்காகவும், நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட விஷயங்களை மட்டும், நாம் பழமை, மூடத்தனம் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம். அதில் இந்த கூழ் குடிக்கும் பழக்கமும் ஒன்று.
கூழ் குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சக்தியை தரக்கூடிய ஈஸ்ட் நுண்ணுயிர், கூழில் அதிகம். கூடவே கொடுக்கப்படும் முருங்கைக் கீரையும் சேர்ந்து, நமக்கு இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவற்றை தாராளமாகவே தருகிறது.
ஆன்மிக ரீதியானவை
இப்படி ஆடி மாத சிறப்பை சொல்லி, நம் நல்லதுக்கு தான் என்றும் எடுத்துச் சொல்லி கேழ்வரகு கூழ் சாப்பிடச் சொன்னால், கண்டிப்பாய் நாம் குடிப்போமா? மாட்டோம்! அதனால், கண்டுபிடித்தஒரு சடங்கு, வழக்கம் தான் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது.
அதில் கட்டும் வேப்பிலையும், மஞ்சளும் கிருமிநாசினியாக செயல்படும்.
இவ்வளவு சிறப்பான ஆடி மாதத்தில், பின் ஏன் வீட்டு விசேஷங்கள் எதுவும் செய்வது இல்லை?
கோவில் விழா, சடங்கு, ஆரோக்கியம் என, பொது நல வேலைகளே அதிகம் இருப்பதால், அதற்கு வீட்டு விசேஷங்கள் தடையாக, இடையூறாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக தான், ஆடி மாதம் வீட்டில் விழா எடுப்பதை தவிர்த்தனர், நம் பெரியோர்!
ஆடி பதினெட்டு, ஆடிப்பூரம், அவ்வை நோன்பு, ஆடி பவுர்ணமி, ஆடி வெள்ளி இப்போது ஆடித்தள்ளுபடி என, தமிழகமே விழாக் கோலம் கொண்டிருக்கும் இந்த நாட்களில், கண்டிப்பாய் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம், கேழ்வரகு கூழ் குடிப்போம்.'பழக்கமில்லையே...' என்று நாகரிகம் காட்டி ஒதுக்கி விடாமல் இரும்புச் சத்து, கால்சியம் நிறைந்த கேழ்வரகு, முருங்கைக் கீரை போன்றவற்றை, அன்றாட உணவிலாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆடியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதை, வெறும் சடங்காக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அம்மனுக்கு கூழ்தான் ஊற்றணுமா... பெப்சி, கோக் ஊத்துனா அம்மன் குடிக்காதா என்று, சினிமா வசனம் பேசாமல், உடனே கிளம்புங்கள் கூழ் குடிக்க!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.