கேப்சூல் பேபி!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கேப்சூல் பேபி!

செயற்கைக் கருவூட்டலில் புதிய தொழில்நுட்பம்!


லூயிஸ் ஜாய் பிரவுன். இந்தப் பெயரை நினை விருக்கிறதா? இங்கிலாந்தில் 1978ம் ஆண்டு ஜூலை 25ம் நாள் உலகிலேயே முதன்முறையாக பிறந்த ‘சோதனைக்குழாய் குழந்தை’ (ஜிமீst ஜிuதீமீ ஙிணீதீஹ்). லண்டன் விஞ்ஞானிகளான பேட்ரிக் ஸ்டெப்டோ, ராபர்ட் எட்வர்ட்ஸ் எனும் இருவர் கண்டுபிடித்த மகத்தான தொழில்நுட்பம் இது.

நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியது. மருத்துவ உலகம் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சையின் (Assisted reproductive technology) ஆரம்பக்கட்டத்தில் இருந்தபோது இந்தச் சாதனை பெரிதாகப் பேசப்பட்டது.ஆனால் இன்றைக்கோ இது ஐவிஎஃப் (In vitro fertilization IVF), கிஃப்ட் (Zygote Intra fallopian transfer ZIFT) என்று பல வளர்ச்சிநிலைகளைத் தாண்டிவிட்டது. இவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சமீபத்தில் கேப்சூலில் குழந்தையை வளர்க்கிற புதிய தொழில்நுட்பம் புகுந்துள்ளது.

இதுபற்றிய புதுமைகளைப் பற்றிப் பேசுவதற்குமுன் செயற்கைக் கருவூட்டல் குறித்த சிலசெய்திகளைப் பகிர்ந்துகொள்வோம்.இன்றைய தினம் இந்தியத் தம்பதிகளில் ஏழு பேரில் ஒருவருக்கு இயற்கை முறையில் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

தாமதமான திருமணம், வாழ்க்கைமுறை மாற்றம், மேற்கத்திய உணவுமுறை, உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், வாழ்க்கையும் வேலையும் தருகிற நெருக்கடிகள், மன அழுத்தம், காய்கறி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள், கதிர்வீச்சு, உணவுகளில் கலக்கப்படும் வேதிப்பொருள்கள், புகைபிடித்தல், மது அருந்துதல், காசநோய் போன்ற தொற்றுநோய்கள்... இப்படிப் பல காரணங்களால் இன்றைய பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு இயற்கையிலேயே கருத்தரிப்பது என்பது கடினமாகி வருகிறது.

சினைமுட்டை உருவாவதில் சிக்கல், அடர்த்தி குறைந்த சினைமுட்டை, தரம் குறைந்த சினைமுட்டை போன்றவை பெண்களுக்கு மலட்டுத்தன்மையை அதிகரிக்கிற அடிப்படைக் காரணங்கள், விந்துகளில் டி.என்.ஏ. சிதைவு, குறைபாடுள்ள உருவம், குறைந்த எண்ணிக்கை, அசைவு குறைதல் போன்றவை ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள்.

இந்தக் காரணங்களால் கருத்தரிக்க முடியாத பெண்களுக்குக் கைகொடுக்க வந்ததுதான் ஐ.வி.எஃப். எனும் சோதனைக்குழாய்க் குழந்தை வளர்ப்பு சிகிச்சைமுறை. இதில் பல படிகள் உள்ளன. முதல் படியில் ஹார்மோன் ஊசிகளைப் போட்டு சினைப்பையில் சினைமுட்டை வளர்வதைத் தூண்டுகிறார்கள். இதில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இந்தச் சிகிச்சை தரப்படுகிறது. அல்லது மாதவிடாயின் 22ம் நாளிலும் இது தொடங்கப்படுவது உண்டு.

இவ்வாறு தூண்டப்பட்டு உருவான சினைமுட்டைகளை வெளியில் எடுப்பது அடுத்த கட்டம். பெண்ணுக்கு மயக்கம் கொடுத்து அல்ட்ரா சவுண்ட் கருவியில் கண்காணித்துக்கொண்டே சினைப்பையில் இருந்து ஊசிமுனை கொண்ட சிரிஞ்ச் ஊசி மூலம் 8லிருந்து 15 சினைமுட்டைகள் வரை உறிஞ்சி எடுக்கிறார்கள்.

இந்த சினைமுட்டைகளை சோதனைச்சாலையில் இதற்கென்றே உள்ள இன்குபேட்டரில் பாதுகாப்பாக வைத்துவிடுகிறார்கள். அடுத்த 4 மணி நேரத்துக்குள் இந்த சினைமுட்டைகளுடன் ஆணின் உயிரணுவைக் கலந்துவிட வேண்டும். இதற்கு உதவுகிறது, ‘இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இஞ்ஜெக்ஷன் (Intracytoplasmic sperm injection ICSI).

சினைமுட்டையின் சைட்டோபிளாஸத்தில் ஆணின் விந்தணுவை ஊசி மூலம் செலுத்தி ஒரு வளர் ஊடகத் தட்டில் (Petri dish) வைத்து வளர்க்கிறார்கள். சினைமுட்டையும் விந்தணுவும் கலந்து அடுத்த 24 மணி நேரத்தில் கரு உருவாகிறது.

(இங்கே ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். சோதனைக் குழாய்க் குழந்தை என்று சொல்லப்பட்டாலும் இது சோதனைக்குழாயில் வளர்க்கப்படுவதில்லை. வளர் ஊடகத் தட்டில் வைத்துத்தான் வளர்க்கிறார்கள்.) இப்படி வளர்க்கப்பட்ட கருவை அடுத்த 5 நாட்களுக்குள் பெண்ணின் கருப்பைக்கு இடம் மாற்றிவிடுகிறார்கள். இரண்டு வாரங்கள் கழித்து ரத்தப் பரிசோதனை செய்து கரு வளர்கிறதா என்பதை உறுதி செய்கிறார்கள்.

ரத்தத்தில் ஹியூமன் கோரியானிக் கொனடோட்ராபிக் ஹார்மோன் இருந்தால் கர்ப்பம் உறுதி. பொதுவாக ஒரு பெண் கர்ப்பம் அடைந்துள்ளதை சிறுநீர்ப் பரிசோதனை செய்து பார்த்து முடிவு செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் ஐவிஎஃப் முறையில் கரு வளர்க்கப்படும்போது சிறுநீர் பரிசோதனையை நம்புவதில்லை. ரத்தப்பரிசோதனைதான் மிகவும் நம்பகமானது. இப்படி கர்ப்பம் உறுதியானதும் தொடர் கவனிப்பு சிகிச்சையில் கருப்பையில் குழந்தை வளர்ந்து வருவது கண்காணிக்கப் படுகிறது. வழக்கம்போல் ஒன்பது மாதங்கள் முடிந்ததும் குழந்தை பிரசவமாகிறது.

சோதனைக் குழாய்க் குழந்தை வளர்ப்பு சிகிச்சைக்கு விலையுயர்ந்த மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. இன்குபேட்டர் உள்ளிட்ட விலை உயர்ந்த பல கருவிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தக் காரணங்களால் இதற்கான சிகிச்சை செலவு லட்சங்களில். இந்தச் செலவைக் குறைக்கும் வகையில் இப்போது புதிதாக புகுந்துள்ளது ‘கேப்சூல் ஐவிஎஃப்’ (Capsule in vitro fertilization) எனும் நவீன சிகிச்சை.

இதில் என்ன புதுமை? இதனால் என்ன நன்மை?

இதில் சினைமுட்டை மிகவும் குறைந்த அளவில்தான் தூண்டப்படுகிறது. ஆகவே ஹார்மோன் ஊசிகளின் அளவும் செலவும் குறைகிறது. அடுத்து, சினைமுட்டையை வெளியில் எடுத்து விந்தணுவுடன் கலந்து ஒரு கேப்சூலில் உயிர்ச்சத்து திரவத்துடன் சேர்த்து, இன்குபேட்டரில் வைத்து வளர்க்காமல், பெண்ணின் ஜனனப்பாதையின் உட்பகுதியில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இதனால் இயற்கையான சூழலில் கருவளர்வதற்கான தட்பவெப்பநிலை கிடைக்கிறது.

கரு வளர்ந்ததும் அதை கருப்பைக்கு மாற்றிவிடுகிறார்கள். பிறகு அது முழு குழந்தையாக வளர்ந்து பிரசவமாகிறது. அதிக ஆற்றல் மிக்க ஊசி மருந்துகளின் பயன்பாட்டை இதில் குறைத்துவிடுவதாலும், இன்குபேட்டரைப் பயன்படுத்துவதில்லை என்பதாலும் இந்தச் சிகிச்சைக்கான செலவு குறைந்து விடுகிறது. உயிர்ச்சத்து நிறைந்த இந்த கேப்சூல் இப்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இதை இந்தியாவிலேயே தயாரித்துவிட்டால் ஐவிஎஃப் சிகிச்சைக்கான கட்டணம் நான்கில் ஒரு பங்காக குறைந்துவிடும். பணம் அதிகம் செலவழித்து சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தான். 2011ல் அமெரிக்காவில் அறிமுகமான இந்தச் சிகிச்சை இப்போது தமிழகத்தில் ஈரோட்டில் செய்யப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.