கேம் அடிக்ஷன் - Game Addiction

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
விளையாட்டு வினையாகுமா?
தேவை அதிக கவனம்
நல்ல பழக்கங்களுக்கு யாரும் அடிமை ஆவதில்லை. நம்மை அடிமையாக்கும் எந்தப் பழக்கமும் நல்ல பழக்கம் அல்ல. அப்படி இன்றைக்கு உலக அளவில் சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருடைய நேரத்தையும் தின்று தீர்க்கிறது கேம் அடிக் ஷன். குறிப்பாக ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் பலர் கேம் அடிமைகளாக இருக்கிறார்கள்.

ரத்தம் தெறிக்கும் வன்முறையும் ஆபாசமும் நிறைந்த விளையாட்டுகளை ஆடும்போது குழந்தைகளின் மனதில் வன்மம் துளிர்விடுகிறது. கேம் அடிக் ஷன் ஏற்படுத்தும் உடல் மற்றும்உளவியல் ரீதியான பிரச்னைகள் குறித்து அலசுவோம், வாருங்கள்...

மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதியிடம் இதுபற்றிப் பேசினோம்.“இங்கிலாந்தில் 4 வயது குழந்தை டேப்லெட் (மொபைல்)க்கு அடிமையாகிஉள்ளது. அக்குழந்தையால் ஒரு நிமிடம் கூட டேப்லெட் இல்லாமல் இருக்க முடியாது என்கிற அவலம். சீனாவில் கேம் விளையாட னுமதிக்காததால் பெற்றோரை கொலை செய்திருக்கிறான் ஒரு சிறுவன். கொரியாவில் தொடர்ந்து 50 மணிநேரம் கேம் விளையாடிமாரடைப்பில் ஒருவர் இறந்துள்ளார்.

இன்னொரு இடத்தில், கணவன்-மனைவி இருவரும் கேம் விளையாடுவதில் மும்முரமாக இருக்க, குழந்தை கவனிப்பின்றி இறந்து போனது. ஒரு விளையாட்டுக்குப் பின்னே இவ்வளவு பெரிய விபரீதங்களா என்று தோன்றலாம். அந்த வினையை உணர்ந்து கொள்ளாமல் நாம் விளையாடிக் கொண்டே இருக்கிறோம். தன்னையும் தன்னை சுற்றியிருப்பவர்களையும் முற்றிலுமாக மறந்து அதனுள் மூழ்கி விடுகிறோம். 7 வயது குழந்தை தொடங்கி ஐம்பது வயதைக் கடந்தவர்கள் கூட இதற்குஅடிமைகளாக உள்ளனர்.

மனநல மருத்துவர்களின் கையேடாக இருக்கும் டி.எஸ்.எம் (DSM) புத்தகத்தில் கேம் அடிக் ஷன் என்பது தனியான ஒரு உளவியல் கூறாகவே சேர்க்கப்பட்டுள்ளது. மது, புகை பழக்கங்களுக்கு அடிமையாவதற்கு இணையான அடிமைத்தனம் இது. உடனடியாக தன்னை திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை உடையவர்களே கேம் அடிமைகளாக மாறிவிடுகிறார்கள். விளையாட்டில் வெற்றிபெற்றதும் புளங்காங்கிதம் அடைந்து கொள்கின்றனர்.

நிஜ வாழ்க்கையில் கிடைக்காத வெற்றி, பெருமையை இதனுள் தேடிக்கொள்ள விழைகின்றனர். பழக்கங்கள் மீதான அடிமைத்தனத்துக்கு மரபணு முக்கியக் காரணமாக இருக்கும். மரபின் வழியில் யாரோ, எதற்கோ அடிமையாகி இருப்பார்கள். அடிமையாகுதல் என்பது withdrawal symptoms என்று சொல்லக்கூடிய, தான் எதற்கு அடிமையாகி இருக்கிறோமோ, அந்தப் பொருள் கிடைக்காத நிலையில் ஏற்படும் உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தவல்லது. கேம் விளையாட எந்த ஒன்று தடையாக இருக்கிறதோ, அதன் மீது வெறித்தனமான கோபம் வரும். வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் அந்த ஒன்றின் மீதே மனம் நிலைகொண்டிருக்கும்.

‘ஓடி விளையாடு பாப்பா’ என்று பாரதி சொன்னதெல்லாம் இன்றைக்கு நடைமுறையிலேயே இல்லை. குழந்தை தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்கிற காரணத்துக்காக பெற்றவர்கள் கேம் விளையாட அனுமதிக்கிறார்கள். இன்றைக்கு குழந்தைகள் விளையாடும் கேம்கள் எப்படி இருக்கின்றன தெரியுமா? கத்தி, கோடாரியுடன் எதிரியை வீழ்த்துவதும் ரத்தம் தெறிப்பதுமாகவும் ஆபாசமானதாகவும் இருக்கிறது.

இதை விளையாடுகிற குழந்தைகள் எப்படியான மனநிலைக்குத் தயாராவார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். பசுமரத்தாணி போல அனைத்தும்பதியும் பருவத்தில் இந்த முரட்டு கேம்கள் வக்கிர சிந்தனையைத்தான் விதைக்கும். பள்ளி மாணவன் சகமாணவனை அல்லது ஆசிரியரைக் கொன்ற சம்பவத்தை படிக்கிறோமல்லவா?

பிஞ்சின் மனதில் நஞ்சை விதைக்கின்றன இந்த கேம்கள். ஒரு பிரபல தொலைக்காட்சித் தொடர் வந்த போது அந்தத் தொடரின் கார்ட்டூன் நாயகன் காப்பாற்றுவார் என மாடியிலிருந்து குதித்து இறந்து போன குழந்தைகள் உண்டு. குழந்தைகள் விளையாட்டைக் கூட தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

வீடியோ கேம் மூலம் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது? கபடி,கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து போன்றவற்றை விளையாடும்போது நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது. நமது பாரம்பரிய சிறுவர் விளையாட்டுகள் ஒற்றுமையைப் போதித்தன. ‘கொலகொலயா முந்திரிக்கா’வை எடுத்துக் கொள்வோம்... அதில் நரியிடமிருந்து ஆட்டைக் காப்பாற்றுவோம். வலியவர்களிடமிருந்து எளியவர்களை காப்பாற்ற வேண்டும் என்கிற அறநெறி அந்த விளையாட்டின் ஊடாகப் புகட்டப்பட்டது.

அப்படியானவிளையாட்டுகளை விளையாடும்போதுதான் ஒற்றுமை உணர்வுடனும் மனிதநேயத்துடனுமான இளந்தலைமுறை உருவாகும். இந்த விளையாட்டுகளுக்கு யாரும் அடிமையாகவில்லையே? ஏனெனில், அவை உண்மையான உலகில், உண்மையான மனிதர்களுடன் விளையாடும் ஆரோக்கியமான விளையாட்டுகள்.

திரையில் மாயக் கதாபாத்திரங்களுடன் விளையாடும் போலி விளையாட்டுகளே நம்மை அடிமையாக்கும். வீடியோ கேம்கள் கூடிவிளையாடும் கலாசாரத்தை தகர்த்தெறிந்து விட்டன. தனிமையில் வீடியோ கேமையும், கார்ட்டூன் சேனல்களையும்தான் தனது நண்பர்களாக பாவித்துக் கொண்டிருக்கும் நிலை உள்ளது.

கேம் விளையாடுவதற்கு தான் அடிமையாகி விட்டதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். கொஞ்சம் கொஞ்சமாக விளையாடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். உங்களது நேரத்தை நேர்மறையாக செலவிட முயற்சிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு... புத்தகம் வாசித்தல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும். பொழுதுபோக்குக்காக வீடியோ கேம் விளையாடுவதில் எந்தத் தவறும் இல்லை. அதே பிழைப்பாக மாறுவதுதான் ஆபத்து. மெய்நிகர்(virtual) உலகத்தின் மீதான மோகத்தைக் களைந்து மெய்யான உலகத்தின் மீதும் சக மனிதர்களுடன் நட்பு பாராட்ட வேண்டும்’’ என்கிறார் மோகன் வெங்கடாசலபதி. இது போன்ற கேம்ஸ் காரணமாக உடல்ரீதியில் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்குகிறார் நரம்பியல் நிபுணர் முருகன்.

‘‘கேம்களில் காட்சிகள் அதிவேகமாக நகரும். தீ பற்றி எரிகிற காட்சி, குண்டு வெடிக்கிற காட்சியின் போது திரையிலிருந்து ஒளிக்குறிப்புகள் (flickers) அதிக அளவில் வெளிப்படும். இதனால் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு வலிப்பு வரலாம். அதிகமாக விளையாடினால் வலிப்பு இல்லாதவர்களுக்கும் கூட வலிப்பு வரும். மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலி வரும்.

தூங்காமல் கூட விளையாடிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். தூக்கம் என்பது மனித வாழ்வில் இன்றியமையாதது. தூக்கமின்மையால் உடல் மற்றும் மனதளவில் எண்ணற்ற பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். கேம் விளையாடும்போது மூளை கொதிநிலையிலேயே இருக்கும். இதனால் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு மனஅழுத்தம் ஏற்படக் காரணமாகிறது’’ என்கிறார் டாக்டர் முருகன்.விளையாட்டு வினையாகிவிடும் என்கிற பழமொழிக்கு தற்கால உவமை வீடியோ கேம்கள்தான்!

அதிகமாக கேம்

விளையாடினால் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு வலிப்பு வரலாம். வலிப்பு இல்லாதவர்களுக்கும் கூட வலிப்பு வரும். மைக்ரேன் என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவலி வரும்...

மனநல மருத்துவர்களின் கையேட்டில் கூட கேம் அடிக் ஷன் என்பது தனியான ஒரு உளவியல் கூறாகவே சேர்க்கப்பட்டுள்ளது. மது, புகை பழக்கங்களுக்கு அடிமையாவதற்கு இணையானஅடிமைத்தனம் இது...
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
re: கேம் அடிக்ஷன் - Game Addiction

கேண்டி க்ரஷ் விபரீதம்
அதிர்ச்சி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர் வீடியோ கேம் விளையாடி தன் கட்டை விரல் தசைநாரைக் கிழித்துக் கொண்டுள்ளாராம். வேடிக்கையாக இருந்தாலும் உண்மையில் வேதனை கொள்ள வேண்டிய இந்தச் செய்தி, நம் மீதும் பல கேள்விகளை எழுப்புகிறது. நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களை ஆண்டு கொண்டிருப்பதன், மனிதர்கள் அதற்கு இரையாகிக் கொண்டிருப்பதன் மற்றுமொரு சாட்சியம் இது.இதே அமெரிக்காவில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகி ரத்தம் சிந்திக் கொண்டி ருந்த சூழலில், செல்போனை எடுத்து ஆம்புலன்ஸை அழைப்பதற்கு பதிலாக தன்னை செல்ஃபி எடுத்து முகநூலில் பதிவேற்றிய சம்பவமும் சமீபத்தில்தான் நடைபெற்றது.

உலக அளவில் பெரும்பாலானோர் விளையாடும் கேண்டி க்ரஷ் என்கிற வீடியோ கேமை வெறித்தனமாக விளையாடியதன் விளைவாகத்தான் அவரது
தசை நார் கிழிந்திருக்கிறது என்று மருத்துவர் ஆண்ட்ரூ டோன் தெரிவித்துள்ளார்.

‘‘தனது கட்டை விரலில் அடிபட்டிருப்பதாகவும் அசைக்கவே முடியவில்லை எனவும் கூறி சிகிச்சைக்காக அந்த இளைஞர் வந்தார். அவரைப் பரிசோதித்த போது, விரலை எலும்புடன் இணைக்கும் தசைநார்கள் கிழிந்திருப்பது தெரிய வந்தது. பொதுவாக தசைநார்களின் மெல்லிய பகுதி கிழிவது இயல்பான ஒன்றுதான். இவருக்கோ தசைநார்களின் தடித்த பகுதியே கிழிந்திருக்கிறது. அப்படியானால், அவர் எந்த அளவு கட்டை விரலைப் பயன்படுத்தி விளையாடியிருப்பார் என்று யோசிக்கத் தூண்டுகிறது.

தசைநார் கிழிந்தால் துடிதுடித்துப் போகும் அளவுக்கு வலி இருக்கும். இவரோ வீடியோ கேமில் மூழ்கிப் போய், ‘வலி’ என்கிற உணர்வே இல்லாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார். விளையாடி முடித்து, அதிலிருந்து வெளியே வந்த பிறகுதான், தனது விரலை அசைக்க முடியவில்லை என்பதை உணர்ந்து மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருந்தது’’ என்கிறார் ஆண்ட்ரூ டோன்.

தசை நார்கள் கிழிந்த வலியைக்கூட உணராமல் விளையாடியதைப் பார்க்கும்போது, வீடியோ கேம்கள் வலி நிவாரணிகளாகச் செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது. வலி கூட உணராது விளையாடுகிறவர்கள் எப்படி பசி உணர்ந்து சாப்பிடுவார்கள்? தூக்கம் அறிந்து தூங்குவார்கள்? இப்படி அபாயகரமான இந்தச் சூழல் குறித்தான கேள்வியும் இச்சம்பவம் மூலம் எழுந்திருக்கிறது. இந்த ஸ்மார்ட் போன் யுகம் இன்னும் எத்தனை எத்தனை அதிர்ச்சிகளையும் விசித்திரங்களையும் தரவிருக்கிறதோ?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.