கொஞ்சம் கொத்தமல்லி... நிறைய பலன் !

chan

Well-Known Member
#1
கொஞ்சம் கொத்தமல்லி... நிறைய பலன் !


நமது உணவில் தவிர்க்க முடியாத ஒரு சேர்மான பொருள் கொத்தமல்லி. கொத்தமல்லியின் தழை, மல்லி எனப்படும் அதன் விதை இரண்டுமே நறுமணத்துக்காகவும், அழகுபடுத்தவும் சேர்ப்பதுண்டு.

சிலர் அந்த கொத்தமல்லி தழையை பொறுக்கி எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுவதைப் பார்த்திருப்போம். அவர்கள் அதிலுள்ள சத்துக்கள், பலன்கள் என்ன என்பதை தெரிந்தால் அப்படி செய்ய மாட்டார்கள். வாருங்கள்... கொத்தமல்லியின் பெருமையை சித்த மருத்துவர் திருநாராயணனின் வார்த்தைகளில் அறிந்துகொள்வோம்.

‘‘நமது பாரம்பரிய உணவில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் கொத்தமல்லி. தினசரி நமது உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று என சொல்லும் அளவு அதில் சத்துக்கள் நிரம்பியுள்ளன. நறுமண எண்ணெய்கள், லாக்டோன்கள், ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், குளோரோபில் போன்றவற்றோடு நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது.

நறுமண எண்ணெய் சளி, காய்ச்சல், வயிற்று குமட்டல், அஜீரணக் கோளாறு, மூட்டுவலி போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணி. இதில் இருக்கும் லாக்டோன்கள் சிறுநீர் சரியாக வெளியேற உறுதுணையாக இருக்கிறது. ஆன்டி ஆக்சிடென்டுகள் உடலின் நோய்த் தடுப்பாற்றலை அதிகரிப்பதால்முதுமையைத் தள்ளிப்போட உதவுகிறது.

கொத்தமல்லி விதைகளில்(தனியா) அதிக அளவு நறுமண எண்ணெய் உள்ளது. தனியாவை பொடி செய்து சாம்பார், ரசம் என சைவ உணவுகள் மற்றும் அசைவ உணவு களில் கார சுவைக்காக பயன்படுத்தும்போது இந்த பலன் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும்.கொத்தமல்லி தழைகளை துவையலாக அரைத்து பச்சையாகவோ, கடுகு எண்ணெய் சேர்த்து தாளித்தோ உணவோடு சேர்த்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பு உள்ளவர்கள் மல்லி தழைகளை அரைத்து 30 முதல் 60 மில்லி அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்’’ என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன்.

கொத்தமல்லியின் ஊட்டச்சத்துக்கள் பற்றி உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணனிடம் கேட்டோம்...‘‘கொத்தமல்லி தழை, விதை இரண்டிலும் எண்ணற்ற சத்துக்கள் இருக்கிறது. A,B மற்றும் K போன்ற வைட்டமின்கள், மாங்கனீசு, மெக்னீசியம், அயர்ன், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் Linoleic acid, Oleic acid, Traumatic acid, Cyanuric acid, Ascorbic acid போன்ற Essential oil-கள் உள்ளன.

வைட்டமின் ஏ, சி மற்றும் அயர்ன் போன்றவை ரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் ஏ கண்பார்வைக்கு சிறந்தது. கால்சியம், பாஸ்பரஸ் உடல் எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது. மேலும், எலும்புகள் வலுவிழப்பதால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயைக் கட்டுப்படுத்துகிறது. எசன்ஸியல் ஆயில்கள் உடலிலுள்ள தேவையற்ற நீர் வெளியேற உதவுவதோடு, மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் எக்சீமா என்ற தோல் நோயைக் கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள LDL என்ற கெட்ட கொழுப்பைக் குறைத்து, HDL என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. பூஞ்சைகள் போன்ற நுண்கிருமிகளால் ஏற்படும் வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

கொத்தமல்லியின் விதை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இன்சுலின் அளவும் அதிகரிக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. இருமல், சளி, அதிகதும்மல் மற்றும் அஜீரணம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதோடு பசியைத் தூண்டுகிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்று வலியைக் குறைப்பதோடு, மாதவிடாய் சீராக இருக்கவும் உதவுகிறது.

6 கிராம் தனியா அல்லது மல்லி தழை ஒரு கொத்து அரை லிட்டர் நீரில் போட்டு நீர் பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிப்பதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திலுள்ள உடலுக்கு கெடுதல் உண்டாக்கும் ஈயம், கேட்மியம், பாதரசம் போன்ற கன உலோக நச்சுக்களை வெளியேற்ற முடியும்’’ என்கிறார் வினிதா கிருஷ்ணன்.கொத்தமல்லியின் விதை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இன்சுலின் அளவும் அதிகரிக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது.

மணக்கும் மல்லி காபி !

தென்தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகமானோர் பருகும் பானம் சுக்குமல்லி பானம். கொத்தமல்லி, சுக்கு, பனங்கற்கண்டோடு பால் சேர்த்தோ, சேர்க்காமலோ சூடான பானமாக சுக்குமல்லி பானம் தயார் செய்யப்படுகிறது. இந்த பானம் அஜீரணம், தலைவலி, உடல் சோர்வு, தசைவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணி. தனியாவை சூரணமாகவோ, கசாயமாகவோ பயன்படுத்தும் போது ஒரு வேளை 2 கிராமுக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது. அதிக அளவு பயன்படுத்தினால் வயிற்று எரிச்சல் உண்டாகும் என்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
 
Last edited: