கொழுப்பு படிதல் - உடலும் உணவும்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கொழுப்பு படிதல் - உடலும் உணவும்
குழந்தை கருவில் வளரும்போது, சுமார் ஆறு மாதத்துக்குப் பிறகு, குழந்தையின் உடலில் 'கொழுப்பு செல்கள்' உருவாக ஆரம்பிக்கிறது. அதன்பின், பருவம் அடையும் வயதில்தான், அதாவது 'பாலின ஹார்மோன்கள்' ( Sex Hormones) உடலில் சுரக்க ஆரம்பிக்கும் நேரத்தில்தான் மறுபடியும் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாகிறது.

இந்த பாலின ஹார்மோனின் தூண்டுதலினால்தான், ஆண்-பெண் உடல் அமைப்புக்கு ஏற்ப உடலில் கொழுப்பு படிகிறது.

சுமார் 15 வயதிற்கு மேல் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாவதில்லை. ஏற்கனவே உருவான செல்கள் அப்படியேதான் இருக்கும். அந்த செல்களில் கொழுப்பு மட்டும் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

பருவ வயதைத் தாண்டியபிறகு சிலருக்கு புதிதாக, மிக அரிதாக, புது கொழுப்பு செல்கள் உருவாகும். இது எப்பொழுது தெரியுமா? 25 வயது வாலிபருக்கு, உடல் எடை கட்டுக்கு அடங்காமல், அதிக பருமனானால், புது கொழுப்பு செல்கள் அவரது உடலில் உருவாகும். அதேபோல், சிலரின் உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பு செல்கள் முழுவதும் சுரண்டி எடுக்கப்பட்டு விட்டாலும் (Liposuction Surgery), புது கொழுப்பு செல்கள் அவர்களது உடலில் உருவாகும்.

இடுப்பு பகுதி, தொடைப்பகுதியைக் காட்டிலும் உங்கள் வயிற்றிலும், வயிற்றைச் சுற்றியும், அதிகமான கொழுப்பை நீங்கள் நிரந்தரமாக சுமந்து கொண்டிருந்தால், அது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. இப்படி வயிற்றில் சேரும் கொழுப்புதான், ஆபத்தான நோய்களை உண்டாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

தினமும் வேளாவேளைக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு, தூங்கித் தூங்கி எழுந்துகொண்டிருந்தால், வயிற்றில் கொழுப்பு படியத்தான் ஆரம்பிக்கும். 'கை எலும்பு முறிவு, கால் எலும்பு முறிவு, ஆபரேஷன் முடிந்துவிட்டது, ஒரு மாதம் நடக்கக் கூடாது, படுக்கையிலேயே தான் இருக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டார். நன்றாக சாப்பிட்டுவிட்டு நடக்காமல் இருந்தேன், இப்பொழுது வயிற்றில் கொழுப்பு படிந்து புதிய தொப்பை வந்துவிட்டது' என்று நிறைய பேர் சொல்வதை நாம் கேட்டிருப்போம்.

தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்குள் வைத்திருக்கும் நிறைய பேர், சில காரணங்களினால் உடற்பயிற்சியை சில மாதங்களுக்கு செய்ய முடியாமல் போனால் அவர்கள் வயிற்றில் கொழுப்பு படிந்து, வயிறு பெரிதாக வாய்ப்பிருக்கிறது. கட்டுப்பாடான உணவும், உடற்பயிற்சியும், உடலுழைப்பும் தினமும் இருந்தால் வயிறு பெரிதாகாது.

உடலுழைப்பு இல்லாமல் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தினமும் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தால், வயிறு மட்டுமல்ல, உடல் முழுவதுமே பருமனாக ஆரம்பிக்கும்.

நாம் தினமும் சாப்பிடும் உணவில், நல்ல கொழுப்புள்ள உணவு எது?, கெட்ட கொழுப்புள்ள உணவு எது? என்று தேடிப்பார்த்து சாப்பிட முடியாது. ஆனால் முடிந்தவரை, நல்ல கொழுப்புள்ள உணவுகளை அதிகமாகவும், கெட்ட கொழுப்புள்ள உணவுகளை குறைவாகவும் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

கடைகளில் கொழுப்பில்லாத உணவு (Fat Free Diet) என்று சில உணவுப்பொருட்களின் கவர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால் அதில் கொழுப்பு இருக்காது என்று நினைத்து, அதை இஷ்டத்துக்கு சாப்பிடக்கூடாது. 'கொழுப்பில்லாத உணவு' என்று குறிப்பிடப்பட்ட நிறைய உணவுப்பொருட்களில், அதிக சர்க்கரை, அதிக கலோரி இருக்கும். அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சத்தும் இருக்கும். அவையாவும் உடலுக்கு நல்லதல்ல.

ஒரு மனிதனுடைய உடலில் கொழுப்பு சேரச்சேர, அவனுடைய உடல் எடை, தானாகவே அதிகரிக்கும். உடலின் எல்லா இடத்திலேயுமே கொழுப்பு இருக்கிறது. மனித உடலில் கொழுப்பு இரண்டு விதமாக பிரிக்கப்படுகிறது. 1) வெள்ளைக்கொழுப்பு (White Fat) 2) பழுப்புக் கொழுப்பு (Brown Fat).

உடலுக்கு சக்தியைக் கொடுக்கவும், உடல் எந்த நேரமும் சூடாக இருக்கவும், உடலில் காயம், எதுவும் படாமல் உடலை மெத்தைபோன்று வைத்திருக்கவும் வெள்ளைக்கொழுப்பு உதவுகிறது.

பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பழுப்புக்கொழுப்பு அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு பழுப்புக்கொழுப்பு மிக, மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். நாம் சாப்பிடும் கொழுப்புச்சத்துள்ள உணவில் 'ட்ரை கிளிசரைடு' (Triglyceride) என்று சொல்லக்கூடிய ஒருவகை ரத்தக்கொழுப்புதான் அதிகமாக இருக்கும்.

சில உணவுப்பொருட்கள், வயிற்றில் அதாவது இரைப்பையிலும், குடலிலும் அதிகமாக வாயுத்தொல்லையை (Gas) ஏற்படுத்தி விடுகிறது. அதிக அளவில் குளிர்பானங்களைக் குடித்தாலும், வயிறு பருமனாகிவிடும். அதிலும் அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரித்து விடும். இதனால் ரத்தத்தில் இன்சுலின் அளவும் கூடும். இதன் காரணமாக உடலில் அதிகமாக உள்ள சர்க்கரை, சின்னச் சின்ன கொழுப்புக் கட்டிகளாக மாறுகிறது.

இக்கட்டிகள், வயிற்றில் படிய ஆரம்பித்து நிரந்தரமான தொப்பையை உண்டாக்கி விடுகிறது.

அசைவ உணவுப்பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் சமோசா, பக்கோடா, பர்கர், பப்ஸ், நக்கட்ஸ், கட்லெட் போன்றவைகளில் அநேகமாக கரையக்கூடியக்கொழுப்பு (Saturated Fat) அதிகமாக இருக்கும். இந்த கரையக்கூடியக் கொழுப்பு, சிறிய ரத்தக் குழாய்களை அடைப்பதோடல்லாமல், வயிற்றில் கொழுப்பு படிவதையும் அதிகப்படுத்துகிறது. இதுபோக இந்த மாதிரி வறுத்தெடுத்த, பொரித்தெடுத்த அசைவப் பண்டங்களில் உப்பு அதிகமாகப் போடப்பட்டிருக்கும். உப்பு அதிகமாக உள்ள உணவுகள், உடலில் தண்ணீரை அதிகமாக சேர்த்து வைக்க தூண்டிவிடும். இதனால் உடல் முழுவதுமே லேசான தண்ணீர் தேங்கி, உடல் வீங்கி பெரிதாகக் காணப்படும்.

சூயிங்கம் வாயில்போட்டு மெல்லும்போது, வாய்வழியாக காற்றை நாம் குடிக்கிறோம். சாதாரணமாக வாய்வழியாக காற்று உள்ளே போகும்போது எந்த பிரச்சினையையும் உண்டு பண்ணாது. ஆனால் அதிக அளவில் தொடர்ந்து மென்றுகொண்டே காற்றைக் குடிக்கும்போது, கண்டிப்பாக வயிற்றில் வாயு சேர்ந்து பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இதனாலும் வயிறு பெரிதாகும்.

முட்டைக்கோஸ் உடலுக்கு மிக நல்லது என்றாலும், நிறைய பேருக்கு வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். அதிலும் முட்டைக்கோஸை நிறைய பேர் சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதுண்டு. இது சரியல்ல. வேகவைத்துத்தான் சாப்பிட வேண்டும். நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் மிகக் குறைவான அளவே வாயுத்தொல்லை உண்டாகும். பொதுவாக காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க நல்லதொரு வழியாகும். இதன் மூலம் வயிற்றிலுள்ள கொழுப்பும் குறையும். ஆனால் இந்த காய்கறிகளை எந்தமாதிரி நாம் சமைத்து சாப்பிடப்போகிறோம் என்பது மிக முக்கியம்.

வேகவைத்து சாப்பிடும் காய்கறிகளும், ஜூஸ், சூப் போன்றவைகள் செய்து சாப்பிடும் காய்கறிகளும், பச்சையாக சாப்பிடும் சில காய்கறிகளும் உடல் எடையைக் குறைக்கும். தொப்பையையும் குறைக்கும். இதற்கு மாறாக அதிக எண்ணெய்யில் பொறிக்கப்படும், வறுக்கப்படும் (Deep Fry) காய்கறி பதார்த்தங்கள் உடல் எடையைக் கூட்டி வயிற்றைப் பெரிதாக்கி விடும். மேலும் காய்கறிகளை அதிக நேரம் அதிக எண்ணெய்யில் வறுத்தெடுக்கும்போது, கெட்டக்கொழுப்பாகிய இடைக்கொழுப்பு (Transfat) நிறைய உடலில் சேர்ந்துவிடுகிறது. இந்த இடைக்கொழுப்பு, உடலில் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் எடையைக் கூட்டி, வயிற்றையும் பெரிதாக்கி விடுகிறது.

கட்டுப்பாடான உணவும், கொழுப்பு குறைந்த உணவும், வயிற்றிலும், உடலிலும் கொழுப்பை சேரவிடாது. அதோடு உடற்பயிற்சியும், உடலுழைப்பும் தினமும் இருந்தால், வயிற்றில் கொழுப்பு அறவே சேராது. ஒரு மாதம் தொடர்ந்து நடக்காமல் விட்டுவிட்டாலோ, தொடர்ந்து கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலோ வயிறு பெரிதாகி விடும். ஆகவே உடலுழைப்பும், உணவுக்கட்டுப்பாடும் மிக முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
-சத்துக்கள் தொடரும்..

"கட்டுப்பாடான உணவும், கொழுப்பு குறைந்த உணவும், வயிற்றிலும், உடலிலும் கொழுப்பை சேரவிடாது. அதோடு உடற்பயிற்சியும், உடலுழைப்பும் தினமும் இருந்தால், வயிற்றில் கொழுப்பு அறவே சேராது."
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.