கோடை காலப் பராமரிப்பு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கோடை காலப் பராமரிப்பு

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஸ்பெஷல்

கோடையை எதிர்கொள்வோம்

100 டிகிரிக்கும் மேலே கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல், ஆரோக்கியமானவர்களே தடுமாறும்போது, குழந்தைகளும் முதியவர்களும் எப்படி வெப்பத்தின் உக்கிரத்தைத் தாங்குவார்கள்? வெயிலின் கடுமை, குழந்தைகளையும் முதியவர்களையும் தாக்காத அளவுக்கு, அவர்களைப் பாதுகாக்க வேண்டும். உடை, தண்ணீர், உணவு என்று எல்லா விஷயங்களிலுமே, வழக்கத்தைவிடக் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வது, கோடை நோய்களிலிருந்து குழந்தைகளையும் முதியவர்களையும் பாதுகாக்க உதவும்.


கோடை காலத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான டிப்ஸ்களை, வயது வாரியாகத் தருகிறார், சென்னை குழந்தைகள் நல நிபுணர் ப்ரியா சந்திரசேகர். முதியோருக்கான கோடைகால டிப்ஸ்களைத் தருகிறார், முதியோர் நல மருத்துவர் என்.லக்ஷ்மிபதி ரமேஷ்.

[HR][/HR]


பச்சிளம் குழந்தை (0 - 5 மாதங்கள்)

கோடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, சீக்கிரமாகவே தொப்புள்கொடி விழுந்துவிடும். இதற்காகப் பயப்படத் தேவை இல்லை. இது இயல்பான நிகழ்வுதான்.

குழந்தையை அதிகத் துணிகள், துண்டுகள் போட்டுச் சுற்றிவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால், குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகமாகி, காய்ச்சல் அடிப்பது போல தோன்றும். மிக மிருதுவான ஒரு பருத்தித் துணியால் போர்த்தினால் போதும்.

குழந்தையைக் காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஏ.சி அறை என்றால், குளிர் 27 டிகிரி அளவில் இருப்பது போல் வைக்க வேண்டும். எப்போதும் ஏ.சி அறையிலேயே வைத்திருப்பதும் கூடாது.

தாய்ப்பாலிலேயே 80 சதவிகிதம் தண்ணீர் இருப்பதால், கோடையில் குழந்தைகளுக்குத் தனியாகத் தண்ணீர் தர வேண்டிய அவசியம் இல்லை.

உடலில் பலவகையான ‘ராஷஸ்’ உண்டாகும். துணியினால் வருகிறதா எனப் பார்த்து, குழந்தைக்கு உறுத்தாத, சௌகரியமான உடைகளை அணிவிக்க வேண்டும். உடைகள், படுக்கை எல்லாமே மிகத் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்.

குழந்தைக்கு வியர்க்குரு பவுடர், சாதாரண பவுடர் எதுவுமே தேவை இல்லை. சுத்தமாக வைத்துக்கொண்டாலே போதும்.

தேவைப்பட்டால், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு, கற்றாழை அல்லது காலமைன் லோஷன் தடவலாம்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
6 மாதங்கள் முதல் 2 வயது


குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, தாய்ப்பாலுடன் கூழ் உணவு (செமி சாலிட்) ஆரம்பிக்கலாம். அதில், பூசணி, பரங்கி போன்ற நீர்க்காய்களை வேகவைத்து, மசித்துச் சேர்க்கலாம். வெறும் கேரட், உருளைக்கிழங்கை மட்டும்தான் மசித்துத்தர வேண்டும் என்பது இல்லை.

குழந்தையின் உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் அளவு, தண்ணீர் குடிக்கவேண்டும் (பால், ஜூஸ், கூழ் உணவு எல்லாவற்றிலும் இருக்கும் நீரின் அளவைச் சேர்த்து).

நன்றாக சிறுநீர் கழிக்க வேண்டும். சரியான அளவு சிறுநீர் கழிகிறதா என்பதை அறிந்துகொள்ள, சில வழிகள் உள்ளன. குழந்தையின் சருமம் வறட்சியாக இல்லாமல், மிக மிருதுவாக இருக்க வேண்டும். சிறுநீர் மஞ்சளாக இல்லாமல், சாதாரணமாக இருக்கவேண்டும். நாக்கு வறண்டுபோய் இருக்கக் கூடாது.

குழந்தைகளுக்கு எல்லா தாய்மார்களும் ஜூஸ் கொடுத்தே பழக்கப்படுத்துகிறார்கள். பழச்சாறுகளில் சர்க்கரைதான் அதிகம் இருக்கும். சாறாகப் பிழிந்து கொடுப்பதைவிட, பழங்களாகக் கொடுப்பதே நல்லது.
கோடை காலத்தில் குழந்தைகள் அனுபவிக்கும் பெரிய பிரச்னையே வியர்க்குருதான். இது, பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, தினமும் இருமுறை குளிக்கவைக்கலாம். சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

வெளியில் போகும்போது, குழந்தைகளுக்குக் கொடுக்கும் குடிநீரில், மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மாசடைந்த குடிநீர் மூலமாக நோய்த்தொற்று வர வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகளுக்கு அதிகமான முடி இருந்தால், வியர்வை காரணமாக, சளி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. முடியை வெட்டிப் பராமரிக்க வேண்டும்.

டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் எனர்ஜி பானங்களைவிட, இயற்கையான பானங்கள் நல்லவை.

சிறு குழந்தைகள் விளையாடி முடித்து வந்ததும், குளிக்கவைக்க வேண்டும். தலையில் தண்ணீர் இன்றி நன்கு துவட்டிவிட வேண்டும். இதனால், சைனஸ் தொந்தரவு உள்ள குழந்தைகளுக்குப் பிரச்னை வராமல் இருக்கும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
2 முதல் 5 வயது


இந்த வயதில், வைரஸ் கிருமித் தொற்று அதிகமாக இருக்கும். எனவே, கோடை விடுமுறையில் அதிகக் கூட்டமான இடங்களுக்குச் சென்றால், கவனமாக இருக்க வேண்டும்.

பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில், குழந்தைகளை க்ரெச்சில் விடும் வழக்கம் உள்ளது. முடிந்த வரை ஏ.சி இல்லாத க்ரெச்சில் விடுவது நல்லது. ஏ.சி இருக்கும் சூழலில், ஒரு குழந்தைக்கு இருக்கும் நோய்த்தொற்று, மற்ற குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது.

குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்றால், க்ரெச்சுக்குக் கண்டிப்பாக அனுப்பக் கூடாது. வீட்டில்வைத்து கவனித்துக்கொள்வதே நல்லது.

கோடையில் ஏற்படும் ஒரு வகை வைரஸ் தொற்றால் குழந்தைகளின் விரல்கள், பாதங்கள் மற்றும் வாய் அருகில் சிவந்த படை அல்லது பொரிப் பொரியாகக் காணப்படும். இது பரவும் என்பதால், இந்த நோய்த்தொற்று ஒரு குழந்தைக்கு இருந்தால், மற்ற குழந்தைகளுடன் விளையாடவிடாமல் இருப்பது நல்லது.

குழந்தைகளின் கற்பனை மற்றும் படைப்புத்திறன் வெளிப்படுவது போல, பொழுதுபோக்குகள் இருப்பது நல்லது. எல்லா விளையாட்டுக்களையும் விளையாட அனுமதிக்க வேண்டும்.

பெற்றோர்கள் அவசியம் குழந்தைகளுடன் குறிப்பிட்ட நேரத்தைத் தரமான முறையில் செலவழிக்க வேண்டும்.

உணவில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்களைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.


குழந்தைகளின் துணிகளைத் துவைப்பதற்கு, மிகக் குறைவான டிடர்ஜென்ட் சேர்க்கப்பட்ட சோப்பைப் பயன்படுத்துவது நல்லது. அதிகக் காட்டமான டிடர்ஜென்ட், அரிப்பை ஏற்படுத்தலாம்.

அடர்த்தியான நிறங்களில் இருக்கும் குளிர்பானங்கள், கலரிங் ஏஜென்ட்ஸ் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

குழந்தைக்கு வாந்தி அல்லது பேதி ஏற்பட்டால், உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்க, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் ஒரு சிட்டிகை உப்பும் கலந்து, அடிக்கடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு முறை பேதியாகும்போதும் ஏற்படும் நீர் இழப்பைச் சரிசெய்ய, வெளியேறும் நீரின் அளவிற்கு, உப்பு, சர்க்கரை கரைசல் கொடுக்க வேண்டும். வயிற்றுப்போக்கு சமயத்தில், அரிசிக் கஞ்சி, அரோரூட் மாவுக் கஞ்சி, தயிர், இட்லி போன்ற உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் அதிக மசாலா, எண்ணெய், காரம் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

சிறுநீர்த் தொற்றால் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்னையைத் தவிர்க்க, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சாதாரணத் தண்ணீரைத் தவிர்த்து, பார்லி தண்ணீரும் அருந்தலாம். சிறுநீர் கழிக்கும் உறுப்பை, ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னரும், வெதுவெதுப்பான தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும்.

கோடை பயணங்களின் போது, போகும் இடங்களில் பொதுக்கழிப்பிடங்களை உபயோகிப்பதாலும், தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, கவனம் தேவை.
[HR][/HR]
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
6 முதல் 10 வயது

5 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கூறி இருக்கும் எல்லா குறிப்புகளுமே இந்த வயதுக் குழந்தைகளுக்கும் பொருந்தும். வைரஸ் தொற்று, சருமப் பிரச்னை, சிவந்த படை, நீர்க்கடுப்பு மற்றும் பேதி எல்லாமே வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

நோய்த் தொற்றுக்கு முக்கியமான காரணம் குடிநீர்தான். எனவே, குழந்தைகள் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா, மாசடையாமல் உள்ளதா எனப் பார்த்துக் குடிக்க வேண்டும். காய்ச்சி ஆறவைத்துக் குடிப்பது மிகவும் பாதுகாப்பானது.

கம்ப்யூட்டர், லேப் டாப், மொபைல் போன்ற மின்னணு சாதனங்களைத் தவிர்த்து, உடலுக்கு நல்ல வேலை கொடுப்பது மாதிரியான விளையாட்டுகளை விளையாடவிட வேண்டும். உடல் உழைப்பு அவசியம் வேண்டும்.


அவரவரின் திறமைகளை வெளிக்கொணர்வது போன்ற வகுப்புகளுக்குச் செல்லலாம். தனியே வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்காமல், எல்லா குழந்தைகளுடனும் கலந்து பழகி, விளையாடவிட வேண்டும்.

சில பெற்றோர், "என் குழந்தை காய் சாப்பிடாது... அவனுக்குப் பழமே பிடிக்காது" என்று சொல்வதை ஃபேஷனாகவோ பெருமையாகவோ நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போவதும் நோய்த்தொற்று ஏற்படுவதும் காய்கறி, பழங்களைத் தவிர்ப்பதால்தான். சிறு வயது முதலே காய்கறி, பழங்களை உண்ணப் பழக்கவேண்டும். காய்கறிகளை அவர்களுக்குப் பிடித்த விதத்தில் செய்து தர வேண்டும். சைவமோ அசைவமோ, அவர்களுக்குப் பிடித்த உணவை, அதிகக் காரம் இன்றி கோடையில் சாப்பிடச் சொல்லலாம்.

[HR][/HR]
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
10 வயதுக்கு மேல்:


இந்த வயதுக் குழந்தைகளுக்கு, கல்வி, விளையாட்டு என உடல் உழைப்பு அதிகம் இருக்கும் என்பதால், உணவில் அதிக அளவில் ஊட்டச்சத்துத் தேவை.
வெயிலில் சருமம் பாதிக்கப்படாமல் இருக்க, மைல்டு சன்ஸ்கிரீன் உபயோகிக்கலாம். நீச்சல் பயிற்சிக்குப் போகும்போது, சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்ளலாம்.

இந்த வயதினருக்குப் பூஞ்சைத் தொற்று மற்றும் உடலில் துர்வாடை இருக்கும். ஒரு நாளைக்கு இருமுறை குளிக்கலாம். வாசனை சேர்த்த சோப்புகளைத் தவிர்த்து, வாசனையற்ற சோப்பை உபயோகிப்பது நல்லது.

கோடை விடுமுறையில் பிற மொழிகளைக் கற்பது, புதிய இடங்களுக்குச் செல்வது, புது விஷயங்களைத் தெரிந்துகொள்வது என சுவாரஸ்யமான விஷயங்களில் ஈடுபட்டால், மனதும் உற்சாகமாக இருக்கும், உடலும் புத்துணர்வுடன் இருக்கும்.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6

முதியோர் பாதுகாப்புமுதியோர் பாதுகாப்பு

தண்ணீர்... தண்ணீர்...

பருவ வயதில் இருந்து 60 வயதுக்கு இடைபட்டவர்களுக்கு உடலில் 60 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். ஆனால், முதியவர்களுக்கு உடலின் சதைப்பகுதி, கொழுப்பாக மாறுவதால், 45-50 சதவிகிதம்தான் தண்ணீர் இருக்கும். வெயில் காலத்தில் தோல் வழியாகவும், மூச்சுவிடுவதன் வழியாகவும், மலம் வழியாகவும் கிட்டத்தட்ட 800 மி.லிக்கும் அதிகமான தண்ணீர் உடலை விட்டு வெளியே போய்விடும். மேலும், சிறுநீர் வழியாக 1500 மி.லி. நீர் வெளியேறும். முதியவர்களுக்கு ஐந்து சதவிகிதம் தண்ணீர் குறைந்தாலே, உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். நீர் வெளியேற்றத்தைச் சரிகட்ட, அதிக தண்ணீர் அருந்துவது அவசியம்.

முதியவர்களுக்குத் தாகம் குறைவாகவே இருக்கும். எனினும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். கல்லீரல், சிறுநீரகம், இதயம் நன்றாக இயங்கக்கூடிய முதியவர்கள் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். இதயக் கோளாறுகள், கல்லீரல், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தினால் போதுமானது.


சோடியம் அத்தியாவசியம்

உடலுக்கு சோடியம் உப்பு அவசியம். பொதுவாக, ரத்தத்தில் சோடியம் அளவு 135-145 இருக்க வேண்டும். வெயில் காலத்தில் வியர்வை வழியாக சோடியம் உப்பு அதிகளவு வெளியேறிவிடும். முதியவர்களில் பெரும்பான்மையினருக்கு ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் காரணமாக, மிகக் குறைந்த உப்பைச் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதால், சிறுநீர் வழியாக சோடியம் வெளியேறும். இதனால், முதியவர்களுக்கு சோடியம் அளவு குறைவாக இருக்கும்போது, ஹைப்போநட்ரீமியா (Hyponatremia) எனும் பாதிப்பு ஏற்படும்.

சோடியம் 125-க்கு கீழ் குறையும்போது, அன்றாட நடவடிக்கைகள் மாறும். மலச்சிக்கல் வரும், குறைவாகச் சாப்பிடுவார்கள். சோடியம் 115க்கு கீழ் குறைந்துவிட்டால் மனநிலை மாறுதல்கள் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால், மற்ற பரிசோதனைகள் எடுப்பதற்கு முன்னர், சோடியம் பரிசோதனை மூலமே, கண்டுபிடித்துவிட முடியும். வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு நான்கு கிராம் அளவுக்கு, உப்பு எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால், ஊறுகாய், அப்பளம் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.ஹீட் ஸ்ட்ரோக்

வெயில் காலங்களில் உடல் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் அல்லது 104 டிகிரி பாரன்ஹீட் அளவைவிட அதிகமானால், `ஹைபர்தெர்மியா' எனப்படும் `ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படும். இந்த நிலையில், முதியவர்களுக்கு மனநிலைக் குழப்பம் தடுமாற்றமான பேச்சு இருக்கும், தோல் வறட்சி ஏற்படும். வயிற்று வலி, வாந்தி போன்றவை வரும். தோலில் ஆங்காங்கே சிவப்பு நிறத்திட்டுகள் உருவாகும், மூச்சுவிடுதலில் சிரமம் இருக்கும். இதயத் துடிப்பு சீராக இருக்காது. தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, `ஹீட் ஸ்ட்ரோக்' வராமல் தடுக்க, வெயில் காலங்களில் வெளியில் செல்வதை மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டும். நிழலில் அல்லது குளிர்சாதன வசதி இருக்கும் அறையில் இருப்பது நல்லது. நீர் அதிக அளவு அருந்த வேண்டும். `ஹீட் ஸ்ட்ரோக்' அறிகுறிகள் இருந்தால், குடும்பத்தினர் முதியவர்களை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். படுக்கையாகவே இருக்கும் முதியவர்களை, வெயில் படும்படி ஜன்னல் அருகில் படுக்கவைக்க வேண்டாம்.

சிறுநீரகச் சிக்கல் தவிர்க்க

வெயில் காலத்தில் புற வெப்பத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க, வியர்வை வழியாகத் தண்ணீர் அதிக அளவு வெளியாகும் என்பதால், அடிக்கடி சிறுநீர் வராது. எனினும், பொதுவாகப் பெரியவர்கள் ஒரு நாளைக்கு நான்கைந்து முறையும், முதியவர்கள் ஆறு முதல் எட்டு முறையும் சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம்.

முதியவர்கள் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தாலும், திடீரென சிறுநீர் கழிப்பது குறைந்தாலும், சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் வெளிவந்தாலும், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. சிறுநீர் நன்றாக வெளியேற, தண்ணீர் அதிக அளவு அருந்த வேண்டும்
.


தோல் பராமரிப்பு

வெயில் நேரத்தில் வெளியே போகும்போது, சன்ஸ்கிரீன் லோஷன் தடவிக்கொண்டு செல்லுங்கள். முடிந்தவரை, காலை ஒன்பது முதல் மாலை ஆறு மணி வரையில், வெயில் நேரத்தில் வெளியே தலை காட்டாதீர்கள். வைட்டமின் - டி குறைபாடு உள்ளவர்கள், காலை ஆறு முதல் எட்டு மணிக்குள், மிதமான சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவிடுங்கள்.

படுக்கை, தலையணை, ஆடைகளை அடிக்கடித் துவைப்பது அவசியம். வங்கி முதலான இடத்துக்கு அவசியம் செல்ல நேர்ந்தால், தலையில் தொப்பி அணிந்து செல்லுங்கள்.

முழுக்கை சட்டை அணிந்து செல்லுங்கள். எப்போதும் கையில் 500 மி.லி அளவுகொண்ட தண்ணீர் பாட்டிலை வைத்திருங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளியுங்கள்.

பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. தடிமனான ஆடைகள் வேண்டாம். மஞ்சள், வெள்ளை, ஆகாய நீலம், பச்சை என வெளிர் நிறங்களில் ஆடை அணியுங்கள். இது, சூரியனிலிருந்து வெளிபடும் புற ஊதாக் கதிர்களால், சருமம் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்கும்.


கண்ணைக் கவனி

வெயில் நேரத்தில், விளையாடவோ உடற்பயிற்சி செய்யவோ வேண்டாம். பகல் வேளையில் தரமான கூலிங்கிளாஸ் அணிந்து செல்லுங்கள். வெப்பக் காற்றால் வரும் தூசுகள், கண்களைப் பாதிக்காமல் இருக்கும். ரோட்டோரக் கடைகளில் விற்கப்படும், மலிவான கண்ணாடிகளை அணிய வேண்டாம். வெயில் நேரத்தில் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பியவுடன், கண்களை நன்றாகத் தூய்மையான நீரால் கழுவுங்கள். கண்களுக்கு அடிக்கடி ஓய்வுகொடுங்கள்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
உணவே மருந்து

முதியவர்கள், கோடை காலத்தில் உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். சூடான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். பூசணிக்காய், வெள்ளரி, சுரைக்காய், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மணத்தக்காளி, வெந்தயக் கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை என தினமும் ஒரு கீரை உணவில் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


கொத்தமல்லி, புதினா போன்றவற்றைத் துவையலாகச் செய்து சாப்பிடுங்கள். காபி, டீ, குளிர்பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை அருந்துவதைவிட, ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை நீர்மோர் அருந்துங்கள்.

அதிக அளவு பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். தாகத்தைத் தணிப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்குத் தரும். ஒரே வகையான உணவையே தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்காமல், தினமும் விதவிதமான நிறத்தில் இருக்கும், பல்வேறு வகையான காய்கறிகளை, உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
குளிர்ச்சியைத் தரும் குளியல் முறைகள்

வெப்பம் தகிக்கும் போது, ஆறோ குளமோ இருந்தால் கொஞ்ச நேரம் குளிக்கலாம் எனத் தோன்றும். இந்த நீர் நிலைகள் தரும் புத்துணர்வை வீட்டிலேயே மேற்கொள்ளும் குளியல்முறைகளும் தரும். தகிக்கும் கோடை வெப்பத்தால், நா வறண்டு போவது போல், உடலில் சருமமும் வறட்சியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். தினமும் இரண்டு முறை குளிப்பது ஒன்றே, வறட்சியைப் போக்கும் வழி. கோடையை சமாளிப்பதற்கான ஆரோக்கியமான சிலவகைக் குளியல் முறைகளை சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா. ஆரோக்கியமான அனைவருக்கும் ஏற்ற குளியல் முறைகள் இவை...

குளிப்பதை ஒரு தியானம் போல செய்ய வேண்டும். குளியல் அறைக்குள் நுழைந்ததும், தண்ணீரை எடுத்து தலையில் விட்டுக் குளிக்கக்கூடாது. முதலில் கால் பகுதியில் தொடங்கவேண்டும். நீரை ஊற்றிக் குளிக்கும்போது, அந்த உணர்வு மூளைவரைப் பாயும். இதனால், கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பாகத்துக்கும் தண்ணீரை ஏற்க உடல் தயார் ஆகும். இப்படிக் குளிப்பதால், உடலில் இருக்கும், அதிகப்படியான வெப்பம் சீராக வெளியேற்றப்பட்டு, உடல் குளிர்ச்சிபெறும். சளி, மூக்கடைப்பு வராது. ஐஸ்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் குளிப்பதோ, அதிக சூடான நீரில் குளிப்பதோ கூடாது. வெதுவெதுப்பான நீரே குளியலுக்கு ஏற்றது. ப்யூமிக் ஸ்டோன், நார் பயன்படுத்திக் குளித்தால், சரும அழுக்கை எளிதில் அகற்றலாம்.

உடலின் வெளிப் பகுதியை இப்படிக் குளிர்விக்கிறோம். அதேபோல், உடலின் உள்உறுப்புகளின் அதிக வெப்பத்தை வெளியேற்ற, எண்ணெய் குளியல், வெந்தயக் குளியல், மூலிகைக் குளியல், மண் குளியல் உதவியாக இருக்கும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் போடுவது நல்லது.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
சுத்தப்படுத்தும் எண்ணெய் குளியல்

குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு, உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைத் தடவி, நன்றாக ஊறவைக்க வேண்டும். பிறகு, சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வீட்டிலேயே சீயக்காய் தயாரித்து, தேய்த்துக் குளிப்பதன் மூலம், சரும நோய்கள், முடி வளர்ச்சி, பேன் பொடுகு நீங்கும். நரை முடியைத் தடுக்கும்.

சோர்வைப் போக்கும் அருகம்புல் குளியல்
நாட்டு மருந்துக் கடைகளில் அருகம் புல் தைலம் கிடைக்கும். வீட்டிலேயே தயாரிக்க, அருகம்புல் சாறு 100 கிராம், தேங்காய் எண்ணெய் 200 கிராம், அதிமதுரம் 10 கிராம் சேர்த்து, நன்றாக நீர் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து, 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இதனால், பூஞ்சைத் தொற்றுப் பிரச்னை சரியாகும். சருமம் பளபளப்பையும் மிருதுத் தன்மையையும் பெறும்.

செல்களைப் புதுப்பிக்கும் சூரணக் குளியல்
கார்போக அரிசி, ஆவாரம் பூ, கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கசகசா, பூலான் கிழங்கு, சந்தனத் தூள், ரோஜா மொக்கு, இவற்றைத் தலா 20 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம் எடுத்து, வெயிலில் நன்றாகக் காயவைத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த பவுடரை தினமும் தண்ணீரில் குழைத்துப் பூசி, குளித்துவர இறந்த செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும். பூஞ்சைத் தொற்று உள்ளிட்ட, சரும நோய்கள் அண்டாது. குளிர்ச்சியாக இருக்கும்.

வியர்வை நாற்றத்தைப் போக்கும் நலங்கு மாவு

வெட்டிவேர், விளாமிச்சை வேர், கிச்சலிக் கிழங்கு, எலுமிச்சைத் தோல், கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், கார்போக அரிசி, பயத்தமாவு இவற்றை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும், சோப்புக்குப் பதிலாக, இந்தப் பொடியைத் தேய்த்துக் குளிக்கலாம். வியர்வை நாற்றத்தைப் போக்கும். மாசு, மரு இல்லாமல் சருமம் பொலிவு அடையும்.


பருமன் உள்ளவர்களுக்கான பளிச் குளியல்

பச்சைப் பயறு, கொள்ளு, கறுப்புக் கொத்துக் கடலையைச் சம அளவு எடுத்து, அதனுடன் வெந்தயம், துளசி தலா 100 கிராம் சேர்த்து, ஆரஞ்சுத் தோல், எலுமிச்சைத் தோல், கருஞ்சீரகம் சிறிது அளவு சேர்த்து, எல்லாவற்றையும் அரைத்து வைத்துக்கொண்டு, குளியல் போடலாம். சருமத்துக்கு நல்ல டோனிங் கிடைக்கும். தேவையற்ற தொங்கும் சதைகள் இறுகும். தொடைப் பகுதியில் அதிக வியர்வை வழிவது நிற்பதுடன், கொழுப்பும் கரையும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
தேங்காய், நுங்கு, இளநீர் குளியல்
இளநீர், சருமத்துக்கான போர்வையாக இருக்கிறது. பளிங்கு போன்ற பளபளப்பைத் தந்து, ஈரப்பதத்தைத் தக்கவைப்பதுடன், இளமையோடு இருக்கவைக்கும். தேங்காய் வழுகலுடன், நுங்கு சேர்த்து, இளநீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். நன்றாகக் குளித்தவுடன், அரைத்த விழுதை, உடல் முழுவதும் பூசி, 10 நிமிடங்களுக்குப் பிறகு அலசலாம். சருமத்தினுள் குளிர்ச்சி ஊடுருவி, புத்துணர்ச்சியைத் தரும். வெயிலில் போனாலும், சூரியக் கதிர்கள் பாதிக்காத அளவுக்குச் சருமத்தில் குளிர்ச்சித் தேங்கி நிற்கும்.

சுத்தமாக்கும் உப்புக் குளியல்
உடல் சோர்வு, வலி, அதிக நீரிழப்பு இருந்தால், உப்புக் குளியல் உடனடி தீர்வைத் தரும். கடைகளில் கிடைக்கும் எப்சம் உப்பு, சாதாரண உப்பு, பேக்கிங் சோடா மூன்றையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து அந்த நீரில் குளிக்கலாம். சருமத்தில் உள்ள அழுக்கு, பூஞ்சைத் தொற்று நீங்கி, உடல் சுத்தமாகும். கடைசியாக, எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீரில் கலந்து, தலையில் விட்டுக்கொள்ளலாம்.

புத்துணர்ச்சித் தரும் மூலிகை குளியல்
கொதிக்கும் நீரில், புதினா, துளசி, சிறுநீற்றுப் பச்சிலை, வெட்டிவேர், ரோஜா மொட்டு, சம்பங்கி, மல்லிகை, ஆவாரம் பூ இவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடிவிடவும். இந்த நீரில் குளித்தால், உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைத்து, உடல் நறுமணம் வீசும். பூக்களைப் போட்டு குளிப்பது போல், திராட்சை, மாதுளம் பழம், சாத்துக்குடி போன்ற பழங்களின் சாற்றைப் பயன்படுத்திக் குளிப்பதும், சருமத்துக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.


நெல்லிக் குளியல்

ஆறு நெல்லிக்காயை, விதை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். இதனுடன், இரண்டு டீஸ்பூன் வெந்தயம், கசகசா சேர்த்து, தயிரில் ஊறவைத்து, அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதைக் குளிக்கும்போது பயன்படுத்தலாம். ஏ.சி அறைக்குள் இருப்பது போன்று உடலை ஜில்லென்றுவைத்திருக்கும்.

ரத்த ஓட்டத்துக்குக் களிமண் குளியல்
நாட்டு மருந்துக் கடைகளில் குளியலுக்கான களி மண் கிடைக்கும். அதை வாங்கி, தண்ணீர் சேர்த்து, உடலில் பூசி, குறைந்தது அரை மணி நேரம் ஊற வேண்டும். பிறகு குளிக்கலாம். இதனால், ரத்த ஓட்டம் சீராகும். செல்கள் புதுப்பிக்கப்படும்.

குளிர்ச்சியான பானகங்கள்
கோடை வெப்பத்தினால் அடிக்கடி நா வறட்சி ஏற்படும். அடிக்கடித் தண்ணீர் குடிப்பதுடன், சில சத்தான பானகத்தைச் செய்து அருந்துவது, சோர்வை நீக்கி, சுறுசுறுப்பைத் தருவதுடன், உடலுக்குத் தெம்பையும் கூட்டும். உடலைக் குளிரவைக்கும் சில பானகங்களை, சமையல் நிபுணர் ஆர்.ராஜ்குமார் செய்து காட்டுகிறார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.