கோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு
டாக்டர் எஸ்.ஆர். யாழினி
தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பருவ மாற்றமும், அதற்கேற்ப உடல் மாற்றங்களும் நிகழ்வது இயல்புதான். கோடை காலத்தில் இது போன்ற மாற்றங்கள் அதிகம் ஏற்படுகின்றன. வெப்பநிலை அதிகரிப்பதால் உடலில் பல்வேறு உபாதைகள் உண்டாகின்றன.

ஆயுர்வேத மருத்துவத்தில் ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ற வகையிலான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதன் மூலம் நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும். இவற்றில் பெரும்பாலானவை உணவு முறைகளே. இத்துடன் நமது வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்களைச் செய்தால்போதும். பொதுவாகக் கோடை காலத்தில் சில நோய்கள் மிகவும் தீவிரமடையும். இவற்றை ஆயுர்வேத மருத்துவ முறைகள், சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும்.

எந்த வெப்பம் பாதிக்கும்?
கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையால் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் உடல் வலுவிழக்கும். இந்தத் தட்பவெப்பநிலை மாற்றம் உடலில் வாயு, பித்தம், கப அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் உடலின் சமநிலை மாறி நோய்கள், உபாதைகள் ஏற்படுகின்றன.
குளிர்காலத்தில் அதிகரித்த கபம், இப்போது உலர்ந்து போகும். அந்த இடத்தை வாதத் தோஷம் ஆக்கிரமிக்கும். கோடை காலத்தில் பெரும்பாலானவர்களுக்குப் பித்தத் தோஷம் அதிகரிக்கும். பொதுவாகப் பசியைத் தூண்டிச் செரிமானத்தைச் சீராக்குவதில் பித்தம் நேரடியாகத் தொடர்புடையது.

கோடை காலத்தில் சீரான செரிமானமே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆயுர்வேத மருத்துவத்தில் செரிமானத்துக்குக் காரணமாக இருக்கும் அக்னி, ஆரோக்கியமான உடலுக்கு முதன்மையானது எனக் கூறப்படுகிறது.

வெப்பநிலை அதிகரிக்கும்போது செரிமானச் சக்தி குறையும். இதனால் பல நேரங்களில் மந்தமாக இருக்கும். இதனாலேயே பித்தத்தைச் சமச்சீராக வைத்திருக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஓரளவு உணவு, அதிக அளவில் தண்ணீர் அருந்துவதன் மூலம் நீரிழப்பு ஏற்படாமல் பராமரிக்கலாம்.

பரிந்துரைக்கப்படும் உணவு
நாள் முழுவதும் அதிகத் தண்ணீர் அருந்துங்கள். அது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும். ரத்தத்தில் சிவப்பணுகள் சத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைவிட, பானையில் கிடைக்கும் குளிர்ந்த நீரைக் குடிப்பது நல்லது. உடனடியாகத் தயாரிக்கப்படும் பழச்சாறுகளான தர்பூசணி, திராட்சை, பழங்களின் சாறுகளை ஐஸ் சேர்க்காமல் அருந்தலாம். இளநீர் குடிப்பதன் மூலம் வயிற்றுப் பொருமல் பிரச்சினையைச் சமாளிக்கலாம்.

காய்கறிகளில் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, முட்டைகோஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடலாம். இதேபோல நெய், பால், தயிர், மோர், புழுங்கல் அரிசி சாதம், சோள மாவு போன்றவையும் கோடைக்கேற்ற உணவு வகைகள்தான்.

நோய்களும் சிகிச்சையும்
கோடைகாலத்தில் உடலில் பித்தம் அதிகரிப்பதால், தலைவலி வரலாம். இதற்கு வெளியில் செய்யப்படும் சிரோதரா எனப்படும் எண்ணெய் சிகிச்சையால் ரத்த ஓட்டம் சீர்படுவதுடன் உடலின் வெப்பமும் தணியும். இதன்மூலம் தலைவலி குணமாகும். சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் இந்த எண்ணெய் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

கண் நோய், கண்ணில் எரிச்சல், கண்ணில் நீர் வருவது, கண் உலர்ந்து போதல் போன்ற பிரச்சினைகள் கோடை காலத்தில் ஏற்படுவது சகஜம். அலோசக பித்தம் என்னும் ஒரு வகை பித்தம் கண் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடியது. பித்தத் தோஷம் அதிகரிக்கும்போது அலோசக பித்தம் பாதிக்கப்படுவதால், இதுபோன்ற உபாதைகள் ஏற்படலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தில் கண் பாதுகாப்புக்குச் சில சிகிச்சை முறைகள் உள்ளன. அக்ஷி தர்ப்பணம் என்னும் சிகிச்சை உடலில் வாத, பித்தத் தோஷங்கள் சம அளவில் இருக்க உதவுகிறது. இந்தச் சிகிச்சை நமது கண்ணைச் சுற்றியுள்ள நரம்பு, தசைகளை வலுப்படுத்தும். இதனால் கண்ணின் சுமை குறைந்து பார்வைத் திறன் மேம்படும்

வேனல் கட்டி, பொடுகு:
உடலில் வெப்பம் அதிகரிப்பதால் பொதுவாகத் தலையில் கட்டி அல்லது பொடுகு ஏற்படும். ஆயுர்வேதக் கூந்தல் தைலங்கள், மருத்துவக் குணம் கொண்ட சூரணங்கள் (பொடி) ஆகியவை இதற்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

சிறுநீர் பாதை தொற்று
பொதுவாகச் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், குளிர்ச்சி, லேசான காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாவது, அடிவயிறு மற்றும் அதைச் சுற்றிலும் லேசான வலி போன்றவை ஏற்படலாம். ஆயுர்வேத மருத்துவம், சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்குப் பித்தத் தோஷமே காரணம் என்றும், கோடை காலத்தில் அது அதிகமாக ஏற்படும் என்றும் கூறுகிறது.

பித்தத் தோஷத்தில் ஏற்படும் சீரற்ற தன்மையைப் போக்குவதற்கு ஏராளமான வேர்கள் உள்ளன. இவை சிறுநீரைச் சீராக்க உதவும். இவற்றில் சில ஆயுர்வேத மருத்துவ முறையில் தயாரிக்கப்படுகின்றன. இதில் சேர்க்கப்படும் வேர்கள் கரிமுள்ளி, முக்குரட்டை இலை, நெருஞ்சி, தண்ணீர்விட்டான் கிழங்கு.

மூலம், பிளவு
மூல நோய்க்கு ஆயுர்வேத மருத்துவம் பித்தத் தோஷம், ரத்தத் தாதுகளே காரணம் என்கிறது. கோடைகாலத்தில் உடல் வெப்ப அதிகரிப்பால் இது ஏற்படும். நீர் இழப்பு, குறைவாகத் தண்ணீர் குடிப்பது, மூளை, உடல் உளைச்சல் ஆகியவற்றால் இந்நோய் ஏற்படுகிறது.

இதற்கு உரிய கஷாயம், சூரணம் மற்றும் குளிகைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பித்தத் தோஷம் தணிந்து குணமாகும். வெளி மருந்தாகத் திரிபலா கஷாயம், ஆசன வாய்ப் பகுதியில் போடுவதற்குச் சந்தனப் பசை ஆகியவை பயன்படுத்துவதன் மூலம் எரிச்சல், நமைச்சல் குறையும்.

தோல் நோய்கள்
மனித உடலில் மிகவும் பெரிய உறுப்பாகக் கருதப்படுவது தோல்தான். ஆயுர்வேத மருத்துவம் தோலை 7 அடுக்குகள் கொண்டதாகப் பிரிக்கிறது. கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பம் நிலவுவதால் பித்தம் அதிகரிக்கும். இதனால் அமா (உடலில் உள்ள நச்சு) வெளியேறுவதால் தோலின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும். மேல் பகுதி தோல் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும்போது, அதை அடுத்துள்ள தோல் அடுக்குக்கு அதைக் கடத்தும். இதனால் எரிச்சல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். மூன்றாம் அடுக்கு தோல் பாதிக்கப்படும்போது ஒவ்வாமை ஏற்பட்டுப் பொரிப் பொரியான கட்டிகள் ஏற்படும். ரத்தச் சுத்திகரிப்பு ஆயுர்வேத மருந்துகள் சருமத்தில் ஏற்படும் நச்சுகளை அகற்றித் தோலுக்குப் புத்துணர்வு அளிக்கும்.

மற்ற நோய்கள்
உடலில் அதிக வெப்பம், வேனல் கட்டி, அதிக அமிலம் சுரப்பது, பெப்டிக் அல்சர், தோல் எரிச்சல், வேர்க்குரு, பேதி ஆகியன கோடை காலத்தில் பொதுவாக ஏற்படுபவை. ஆயுர்வேத மருத்துவ முறையில் இத்தகைய தோஷங்களைக் குணப்படுத்த மருந்துகள் உள்ளன.

தவிர்க்க வேண்டியவை
தட்பவெப்ப நிலை மாறியவுடனேயே உடலின் செயல்பாடுகளுக்கு ஏற்ப உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உப்பு, புளிப்பு, மசாலா உணவு வகைகள்.எண்ணெயில் பொரித்த உணவு வகைகள்.
ஐஸ், குளிர்பானங்கள்.
குளிர்ந்த நீர்கூடச் செரிமானத்தைப் பாதிக்கும்.
சமைத்த உணவை இரண்டு மணி நேரத்துக்குள் சாப்பிடவும். ஆறிய, பழைய உணவைச் சாப்பிடக் கூடாது.
மதுபானத்தை அறவே தவிர்க்கவும்.
உடலில் அதிக வெப்பம் படுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கடுமையாக வெயில் அடிக்கும்போது வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.
மிகக் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது.

சிறப்பு உணவுகள்
ஆயுர்வேத உணவு வகைகள் உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன் நீரிழப்பையும் தடுக்கும்.
சிறந்த மருத்துவப் பானம், பானகம். இது உடலுக்குச் சுறுசுறுப்பை அளிப்பதுடன் நீர் இழப்பையும் தடுக்கும். இது வெல்லம், பட்டை, ஏலக்காய், இஞ்சி சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இதைப் பானையில் வைத்துக் குளிர்ச்சியாக அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
ரசாலா: தயிரை நன்றாகக் கடைந்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.
பானகப் பஞ்சாசரா: உலர் திராட்சை, பேரீச்சம்பழங்களைச் சம அளவில் எடுத்துக்கொண்டு அவற்றைக் குளிரவைத்து, ஏலக்காய், வாழை இலை ஆகியவற்றை ஒரு புதிய மண் பானையில் போட்டுப் புளிக்க வைக்கவும். இதைக் கோப்பையில் எடுத்துச் சாப்பிடவும்.- கட்டுரையாளர், சென்னை சஞ்ஜீவனம் ஆயுர்வேதச் சிகிச்சை மையத்தின் முதுநிலை மருத்துவ அதிகாரி
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.