சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டு&#

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் ஏற்படும் வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநில கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும், 200 பேர் வரை ஊடுருவி இருப்பதாகவும் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற இணையதங்களில் தகவல் பரவியது.

இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது நடமாடினால் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் அப்பாவிகள் பலியாகி வருவதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் தீவிர நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து கமல் தெரிவித்திருப்பதாவது,`வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்'

இவ்வாறு கூறியிருக்கிறார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி, வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

மேலும் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா? குழுவா? அல்லது முகமையா? என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு விளக்கம் கேட்டது. இதையடுத்து மாநிலங்களுடன் வரைவு செயல் திட்டத்தை பகிர்ந்து கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் வழக்கை வருகிற புதன்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது,காவிரி விவகாரத்தில் மே 19-ஆம் தேதி சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். காவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம். இது மக்கள் பிரச்சனை என்பதால் கட்சிகளை தாண்டி நாம் ஒன்றாக நிற்கவேண்டும். தமிழக விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம். காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், முதலமைச்சரை சந்திக்க தயாராக உள்ளோம் என்று கமல்ஹாசன் கூறினார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
கமல்ஹாசன் கூட்டத்தில் நானா? - ஆதங்கப்பட்ட ஆர்.நல்லகண்ணு

விவசாயச் சங்கங்கள் கூட்டத்துக்கு நான் தலைமையேற்கப்போகிறேன்’ என்ற கமல்ஹாசன் அறிவிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தொடர்ச்சியாகக் காலம் தாழ்த்தி வந்தநிலையில், அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதுதொடர்பான வழக்கில், மே 14-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவுத் திட்டத்தை சீல் செய்யப்பட்ட கவரில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதுகுறித்த வழக்கு இன்று (16.5.2018) விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைக்கும் விவசாயச் சங்கங்கள் கூட்டம் 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்குவார் என்று கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்தநிலையில், கமல்ஹாசன் அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறுப்பு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், 'கடந்த 13-ம் தேதி விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் சிலர் நல்லகண்ணுவை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளைத் தெரிவித்தனர். அவற்றைக் கேட்ட நல்லகண்ணு, இந்த விவகாரம் தொடர்பாகத் தி.மு.க தலைமையில் 9 கட்சிகள் ஒருங்கிணைந்து போராடுவதாகத் தெரிவித்தார்.


அந்தச் சந்திப்பின்போது மாநாட்டில் பங்கேற்க அவர் ஒப்புதல் அளிக்கவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நல்லகண்ணுவைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, "விவசாயச் சங்கங்கள் கூட்டத்துக்கு நான் தலைமையேற்கப்போகிறேன் என்ற கமல்ஹாசன் அறிவிப்புக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முதலில் விவசாயச் சங்கத்தினர்தான் தனிப்பட்ட முறையில் என்னை சந்தித்துப் பேசியிருந்தனர். கமல்ஹாசனின் அறிவிப்புக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதுபற்றி எனக்குத் தெரியாது" என்று தெரிவித்தார்.


காவிரி விவகாரம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க-வுடன் இணைந்தே போராடிவருகிறது. மேலும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வுடன் இணக்கமாக இருந்து வருகிறது. இந்த இணக்கம் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் ஒருங்கிணைக்கும் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பங்கேற்கிறார் என்ற விவகாரம் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சி மறுப்பு அறிக்கை வெளியிட்டு பரபரப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்கிறது- கமல்ஹாசன்

1526539550419.png

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். நேற்று அவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். இரவு கன்னியாகுமரியில் தங்கினார்.

இன்று (வியாழக்கிழமை) காலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பணகுடியில் அவருக்கு நெல்லை மாவட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் செந்தில்குமார் தலைமையில் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பணகுடி பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்று பேசினார்.

உங்களை நான் அறிந்து கொள்ள மேற்கொண்டுள்ள பயணம் இது. மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்கிறது. அதற்கு வழிகாட்டி நீங்கள்தான். உங்கள் ஆசி இல்லாமல் அந்த பயணத்தை தொடர முடியாது. உங்கள் தேவைகளை தெரிந்து கொள்வதற்கான புனித பயணம் இது. கண்ணோடு கண் பார்த்து உங்கள் அன்பை அறியும் இந்த சுகம் வேறு எங்கும் கிடைக்காது.

திரைப்படம், டி.வி. மீடியா மூலமாக உங்களை ஏற்கனவே சந்தித்து வந்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கு மேலாக என்னை நீங்கள் பார்த்துள்ளீர்கள். பக்தர்கள் தரிசனம் என்பது போல உங்களை தரிசிக்க வந்துள்ளேன். மக்களின் தேவைகளுக்காகவே நான் உங்களிடம் வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் திசையன்விளை, உவரி ஆகிய பகுதிக்கு சென்றார். அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார். கமல்ஹாசன் வருவதை அறிந்ததும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கூடி நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். கமல்ஹாசன் பேசும் போது அவர்கள் கை தட்டி ஆரவாரம் எழுப்பினார்கள்.

வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்க
பகுதியில் மக்கள் திரண்டு நின்ற காட்சி.

இதன் பிறகு அவர் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு மாவட்ட எல்லையான மணப்பாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் மணப்பாட்டில் மீனவர்களை சந்தித்து உரையாடினார். அப்போது மீனவர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். பின்பு அவர் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து கமல்ஹாசன் இன்று மாலை 4மணிக்கு காயல்பட்டணத்திலும், 4.15 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 4.45 மணிக்கு புன்னக்காயலிலும், 5.10 மணிக்கு ஏரலிலும், 5.30 மணிக்கு பண்டாரவிளையிலும் மக்களை சந்தித்து உரையாடுகிறார்.

மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பு பகுதியில் நடைபெறும் மக்கள் நீதிமய்யம் பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு, இன்று இரவே நடிகர் கமல்ஹாசன் நெல்லை வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

பின்னர் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். நாளை பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க.வுக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?.

பதில்:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும் பயன்படுத்தி, எந்தளவுக்கு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே நாடறிந்த உண்மை. அதேநிலையை, இப்போது கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அரங்கேற்றி இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பிரதமராக இருக்கும் மோடி இப்படி தொடர்ந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.கேள்வி:-திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், 19-ந் தேதி (நாளை) கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா?.

பதில்:-தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநில கவர்னர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது- திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் தற்போது நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை. இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல. பிரதமர் மோடிதான் முழு பொறுப்பு. மணிப்பூர், மேகாலயா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை கட்சியாக இருந்தபோதும் காங்கிரசை அழைக்காமல் பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது.

குறிப்பாக மேகாலயாவில் 2 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க கால அவகாசம் தரப்பட்டது. கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது என்றால், இந்த நடைமுறையை கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை?.

இதில் மத்திய அரசு மற்றும் பிரதமரின் தலையீடு உள்ளது. கவர்னர்கள் மத்திய அரசின் கைப்பாவைகள் என்பதை இந்த சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன.

யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றி இருப்பது ஏன்? எதனால்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அவ்வப்போது நிலைபாடுகளை மாற்றி வருகிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டால் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நடிகர் கமல்ஹாசன் காவிரி தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தார். நேரிலும் கடிதம் வழங்கப்பட்டது. இதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


ஆனால் அந்த கூட்டத்தில் தோழமை கட்சிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என்ற முடிவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்து உள்ளார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க வாய்ப்பு அமையவில்லை. அதற்காக வருந்துகிறேன்.

அமைச்சர் ஜெயக்குமார் கச்சத்தீவை மீட்டால் அது தமிழர்களுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. பெரிய சாதனை. ஜெயக்குமார் வரலாற்றில் சிறப்பு இடத்தை பிடிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
கர்நாடக அரசியல் களம் ரணகளம் - நடிகர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை மீனம்பாக்கத்தில் மக்கள் மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தான் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்தேன். எங்களை முன்நிறுத்தி அல்ல. புதிய கட்சி தங்களை முன்னிறுத்திக் கொள்ள இந்த கூட்டத்தை நடத்துவதாக அவர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.

எங்களுடைய எண்ணம் நாளை தமிழக விவசாயிகளின் நல்வாழ்வுக்கான திட்டங்களை தீட்டுவதில், முயற்சியில் நாங்களும் பங்கு பெற்றோம் என்ற பெருமையை தேடிக்கொள்ள தானே தவிர நாங்களே இதை முன் நடத்தினோம் என்ற பெருமையை தேடிக்கொள்ள அல்ல. 40 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு கிடைத்துள்ள இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பாகி விடாது.

கர்நாடகா-தமிழகத்திற்கு இருக்கும் பிரச்சினை மட்டுமல்ல. விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் இருக்கிறது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிரச்சினைகளுக்கு குரல் எழுப்ப அவர்களும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கமல்ஹாசனிடம், கர்நாடக அரசியல் களத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டதற்கு ‘கர்நாடக அரசியல் களம் ரணகளம்’ என்று பதில் அளித்தார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் கமல்ஹாசன் சந்திப்பு

1526839115022.png

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் கொச்சி சென்றார்.

அங்கு பிற்பகலில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசினர்.

ஏற்கனவே, நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

மேலும், கட்சி தொடங்கும் முன்பு பினராயி விஜயனை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து கட்சி தொடங்கி நடத்துவதற்கான ஆலோசனைகளை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
`கேரள முதல்வர் பினராயி விஜயனை இதற்காகத்தான் சந்தித்தேன்!’ - கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கொச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று சந்தித்துப் பேசினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல், நட்பில் இருந்து வருகிறார். மதுரையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடக்க விழாவுக்கு நேரில் வர முடியாத சூழலிலும், வீடியோ ஒன்றின் மூலம் பினராயி விஜயன், வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், கொச்சியில் உள்ள போல்காட்டி பேலஸில் பினராயி விஜயனைச் சந்தித்து கமல் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பி.ராஜூவ் உடனிருந்தார்.
கர்நாடக தேர்தல் நிலவரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் மதிய உணவை ஒன்றாகவே எடுத்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது கர்நாடக அரசியல் நிலவரங்கள் குறித்தே இருவரும் அதிகம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ``மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக ஜூன் மாத மத்தியில் கோவை மாநகரத்தில் நடத்தப்பட உள்ள கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் நோக்கிலேயே பினராயி விஜயனைச் சந்தித்தேன். அவரது தேதிகளைப் பொறுத்தே, கோவை கூட்டத்தின் தேதிகள் முடிவு செய்யப்படும்’ என்றார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
தூத்துக்குடியில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர். 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.