சாப்பிடும் போது குழந்தைகளுக்கு மூச்சுத&a

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#1
[h=2]சாப்பிடும் போது குழந்தைகளுக்கு மூச்சுத்திணறினால்…பெற்றோருக்கு டாக்டர் ஆலோசனை[/h]

“”மூச்சுக்குழாயில் உணவு பொருட்கள் சிக்குவதை தடுக்கும் வகையில் முறையான பயிற்சி அளிக்க வேண்டும்,” என்று டாக்டர் பத்மசினி கூறினார். பல்லாவரம் வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளியில் எல்.கே.ஜி., படித்த ஹரிஸ்சாய்நாதன் என்ற மூன்றரை வயது குழந்தை பள்ளி வகுப்பறையில் வாழைப்பழம் சாப்பிட்ட போது, தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தது. இது போன்ற சோக நிகழ்வு மீண்டும் ஏற்படாமல் தடுப்பது பற்றி போரூர், ராமச்சந்திரா பல்கலைக் கழக குழந்தைகள் நல பிரிவு தலைவர் டாக்டர் பத்மசினி கூறியதாவது: சுவாசக் குழாய்க்கும், உணவு குழாய்க்கும் இணைப்பு உள்ளது. பொதுவாக ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் சாப்பிடும் போது, உணவு பொருள், சுவாச குழாயில் சிக்காத வகையில் பார்க்க வேண்டும். சிரித்துக் கொண்டே சாப்பிடுவது; படுத்த நிலையில் சாப்பிடுவது, சாப்பிட்டுக் கொண்டே விளையாடுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் அருகில் பேனா மூடி, பட்டன், காசு போன்ற பொருட்களை வைக்க கூடாது. பள்ளி வகுப்பறையில் சாப்பிடும் வகையில் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டை பொருட்களை குழந்தைகளுக்குத் தரக்கூடாது. எளிதில் கரையும் வகையிலான பிஸ்கட், கேக் போன்ற பொருட்களை கொடுக்க வேண்டும்.


பழங்களையும் கொடுக்கலாம். ஆனால், அவர்கள் சாப்பிட ஏதுவாக சிறிய துண்டுகளாக நறுக்கி தர வேண்டும். பழங்கள் கெடாமல் இருக்க எலுமிச்சைபழ சாறை அதன் மீது தெளிக்கலாம். இதையும் மீறி ஒரு குழந்தை சாப்பிடும் போது, பொறை ஏறி மூச்சுக்குழாயில் உணவு அடைத்துக் கொண்டால், டாக்டரை தேடி ஓடி நேரத்தை செலவிடுவதை காட்டிலும், “ஹெம்பிலிக் மேனர்’ என்று சொல்லக்கூடிய முறையை கையாள வேண்டும். குழந்தையின் பின்பக்கமாக இருந்து மேல் வயிற்றை நன்கு அழுத்த வேண்டும். அப்போது சுவாச குழாயில் மேல் நோக்கி காற்று அழுத்தம் இருக்கும். உணவுக் குழாயில் அடைத்த பொருள், உடனடியாக வெளியேறும். இதன் மூலம் மூச்சுத்திணறலை தவிர்க்கலாம். பின்னர் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யலாம்.

இந்த முறையை அனைத்து பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கும், குழந்தைகளை பராமரிக்கும் ஆயாக்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இதைத்தவிர பெற்றோரும் இந்த முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அமெரிக்காவில் உணவு பொருள் அடைத்து மூச்சுத்திணறி ஐந்து தினங்களுக்கு ஒரு குழந்தை இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் இதுபோன்ற உயிரிழப்புக்கள் அதிகமாகவே நடக்கிறது. ஆனால், இங்கு எந்த கணக்கெடுப்பும் இல்லை. இந்த விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் தான் உஷாராக செயல்பட வேண்டும். இவ்வாறு டாக்டர் பத்மசினி கூறினார்.இது போதாது

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மாநிலத்தில், 6,700 நர்சரி, பிரைமரி பள்ளிகளும், 4,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில், 100 பெரிய பள்ளிகளைத் தவிர, மற்ற பள்ளிகளில், போதிய மருத்துவ வசதிகளோ, முறையாக பயிற்சி பெற்றவர்களோ கிடையாது. ஒரு சில பள்ளிகளில், டாக்டர்கள், நர்சுகள், ஆம்புலன்ஸ் என, அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், முதலுதவி பெட்டிகள் பெரும்பாலும் இருக்கின்றன. ஆனால், அவற்றில், பஞ்சு, டிஞ்சர், காயத்திற்கான களிம்பு மற்றும் காய்ச்சல் மாத்திரைகள் மட்டுமே இருக்கும். இவ்வாறு, நந்தகுமார் கூறினார். பயிற்சி அளிக்கப்படும் பள்ளிக் கல்வி இயக்குனர் மணி கூறும்போது, “”அவசர நேரத்தில், குழந்தைகளை காப்பாற்ற எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுகாதாரத் துறையுடன் இணைந்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைஜீரண மண்டல மருத்துவ நிபுணர் டாக்டர் சந்திரசேகர் கூறியதாவது:

* குழந்தைகளுக்கு, பெரிய அளவிலான தின்பண்டங்களை ஒருபோதும் கொடுக்கக் கூடாது.

* அசைவ தின்பண்டங்களை கொடுக்கும்போது, எலும்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* கூர்மையான முனைகளைக் கொண்ட தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம்.

* கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிட கற்றுக் கொடுக்க வேண்டும். அவசர, அவசரமாக சாப்பிட, ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

* சாப்பிடும்போது, அவ்வப்போது தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும்.

முதலுதவி:

* ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை என்றால், தலைகீழாக பிடித்து, முதுகு, பிடறியில் தட்டினால், தொண்டையில் இருக்கும் பொருட்கள் வெளியே வந்து விடும்.

* 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தை என்றால், நம் கைகளை கொண்டு, குழந்தையின் பின்புற வயிற்றுப் பகுதியை, மேல் நோக்கி அழுத்த வேண்டும். அப்போது, நுரையீரலில் உள்ள காற்று, உணவுக் குழாய் வழியாக வெளியேற முயற்சிக்கும். இதனால், இருமல் ஏற்பட்டு, தொண்டையில் உள்ள பொருள் வெளியே வந்துவிடும்.

சில நிமிடங்கள் தாமதித்தால் கூட, மூச்சு அடைப்பட்டு, குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், உடனே செயல்பட வேண்டும். இவ்வாறு, டாக்டர் சந்திரசேகர் கூறினார்.

நன்றி-தினமலர்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.