சிறுநீரகம் காப்போம்! - Keep Your Kidneys Healthy

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சிறுநீரகம் காப்போம்!


மார்ச் 12 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம்
உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிற சிறுநீரகங்கள், நம் வயிற்றின் பின்பக்கம், கீழ் முதுகுப் பகுதியில், முதுகுத்தண்டின் இருபுறமும், அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. சிறுநீரகம் ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும், 150 கிராம் எடையும் உடையது.ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் (Nephrons) உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். அதாவது, சிறுநீரகத்தின் உயிர்மூச்சுகள்! வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ, அதுமாதிரி நம் உடலுக்கு சிறுநீரகம் முக்கியம்.

சிறுநீரகத்தின் பணிகள்

இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் சுமார் 25 சதவிகிதம் வரை சிறுநீரகம் பெறுகிறது. அதிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு, தேவையற்ற யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருட்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது. அதேவேளையில் சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது.

‘ரெனின்‘ எனும் ஹார்மோனை சுரந்து ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது. ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற ‘எரித்ரோபாய்ட்டின்’ Erythropoietin) எனும் ஹார்மோனை சுரக்கிறது. வைட்டமின் டியை பதப்படுத்தி ‘கால்சிட்ரியால்’ (Calcitriol) எனும் ஹார்மோனாக மாற்றித் தருகிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச்சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவுகிறது.

உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருட்களையும் வெளியேற்றுகிறது. நாம் சாப்பிடுகிற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்று கிறது. நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான். தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150 - 180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றன. நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.

சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி?

கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் பிரச்னைகள் குறையும். தவறினால், நாளடைவில் சிறுநீரகம் செயலிழந்து விடும். சிறுநீரகம் செயல் இழந்தால்?சிறுநீரகம் செயலிழக்கும் நிலைமையை இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.

1. திடீர் சிறுநீரகச் செயலிழப்பு (Acute renal failure).

2. நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு (Chronic renal failure).


வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்துபோய், நோய்த்தொற்று உண்டானாலோ, மருந்து அலர்ஜி ஆகிவிட்டாலோ திடீரென சிறுநீரகம் செயலிழக்கும். அப்போது சிறுநீர் பிரிவது குறைவது, முகம் வீங்குவது, உடலில் நீர்க்கோத்து பருமன் ஆவது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

பல நாட்களாக சிறிது சிறிதாக சிறுநீர் பிரிவதில் சிரமம் ஏற்படுவது, குறைந்த அளவில் சிறுநீர் பிரிவது, பசியின்மை, வாந்தி, தூக்கமின்மை, சோர்வு, உடலில் அரிப்பு, முகம் மற்றும் கைகால்களில் வீக்கம் தோன்றுவது, மூச்சிறைப்பு போன்றவை நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள்.

சிறுநீரகத் தொற்று

உடலில் சுத்தம் குறைவது மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரக் குறைவால் நோய்க்கிருமிகள் சிறுநீர்ப் பாதையைத் தொற்றும்போது ‘சிறுநீரக அழற்சி’ ஏற்பட்டு குளிர்க்காய்ச்சல் வரும். சிறுநீர் செல்லும்போது எரிச்சல், வலி ஏற்படும். சிறுநீர் கலங்கலாகப் போகும். முக்கியமாக, புதுமணத் தம்பதிகளுக்கு ‘ஹனிமூன் நெப்ரைட்டிஸ்’ (Honeymoon nephritis) என்று ஒரு நோய்த்தொற்று ஏற்படும். இது சிறுநீர்ப் புறவழி சுத்தமாக இல்லாத காரணத்தால் வருகிறது.

சிறுநீரில் ரத்தம்

சிறுநீரில் ரத்தம் வரவே கூடாது. அப்படி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம். காசநோய், புற்றுநோய் போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பாதித்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே, சிறுநீரில் ரத்தம் வெளியேறினால் உடனடியாக காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கல் தொல்லை

நாம் குடிக்கின்ற தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் என்று பல தாது உப்புகள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில், இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். ஒரு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும்.

இதுதான் சிறுநீரகக் கல். இதன் அறிகுறிகள் இவை: முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி துவங்கி, சிறுநீர் வெளியேறுகின்ற புறவழித் துவாரம் வரை பரவும். இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளலாம்.

பரிசோதனைகள்

ஒருவருக்கு சிறுநீரக நோய் வருமா, வராதா என்று முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்கு எந்தத் தொழில்நுட்பமும் இதுவரை இல்லை. இதுபோல் சிறுநீரகப் பிரச்னைகள் ஆரம்பத்தில் தெரியாது. பிரச்னைகள் பெரிதாகி ஆபத்தான கட்டத்துக்கு வந்தபிறகுதான் அறிகுறிகள் வெளியில் தெரியும்.

எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பரம்பரை ரீதியாக சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், சிறுநீரில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உள்ளவர்கள், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள், அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறவர்கள் போன்றோர் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பான ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்து கொள்வது நல்லது.

முக்கியமாக, ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை, வயிற்று எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஐவிபி பரிசோதனை (Intravenous pyelogram IVP), சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவை சிறுநீரகச் செயல்பாட்டை அறிய உதவும். சிறுநீரில் மைக்ரோ அல்புமின் அல்லது அல்புமின் வெளியேறினால், ரத்த யூரியா அளவு 40 மில்லி கிராம்/டெசி லிட்டருக்கு மேல், ரத்தக் கிரியேட்டினின் அளவு 1.2 மில்லி கிராம்/டெசி லிட்டருக்கு மேல் இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

சிகிச்சை முறைகள்

சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால், நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். உதாரணத்துக்கு, வாந்தி, பேதி காரணமாக உடலில் நீர்க்குறைவு ஏற்பட்டவர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் உப்பு கலந்த நீரை ஊசி மூலம் உடலுக்குச் செலுத்தினால் சரியாகிவிடும். இதுபோல், நோய்த்தொற்று காரணமாக சிறுநீரகம் பழுதாகியிருந்தால், அதற்குரிய ஆன்டிபயாடிக்கை செலுத்தினால் பாதிப்பு சரியாகிவிடும்.

ஆனால், சிறுநீரகம் செயலிழந்து விட்டால் மருத்துவ சிகிச்சை மட்டும் போதாது. ‘டயாலிசிஸ்’ (Dialysis) என்கிற சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை ( Kidney Transplantation) செய்ய வேண்டியதும் வரும். ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்!

30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மாதா மாதம் தங்கள் ரத்த அழுத்தத்தை அளந்துகொள்ள வேண்டும். காரணம், உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு வருவதைப் பெருமளவு குறைக்கலாம். சரியான ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் பாதரச அளவு.

அது 129/89 என்று இருந்தால் உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று பொருள். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கைமுறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கும் மேலே இருந்தால் மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெற்று ரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

ரத்தச் சர்க்கரை அளவோடு இருக்கட்டும்!சர்க்கரை நோய் உள்ளவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் இருக்கிறது. இவர்களில் 30 சதவிகிதம் பேருக்குச் சிறுநீரகம் முழுமையாகச் செயல்படாமல் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஆகவே, இப்போது சர்க்கரை நோயுள்ளவர்களும் பரம்பரை வழியாகச் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்களும் 30 வயதுக்கு மேல் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய சரியான சர்க்கரை அளவு 120 மில்லி கிராம்/டெசி லிட்டர்.

உப்பைக் குறையுங்கள்!

சத்தான, சமச்சீரான உணவைச் சாப்பிட்டு உடல் எடையைக் கட்டுப்படுத்தினால் ஆரோக்கியம் கைகூடும். இது சிறுநீரகத்துக்கும் நன்மை செய்யும். முக்கியமாக, உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். இது சிறுநீரகப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பை எடுத்துக்கொள்வதும் நல்லதுதான்.

தென்னிந்தியாவில்தான் தினமும் 20 கிராம் வரை உப்பை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். உப்பு நிறைந்த உணவுப் பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், சமையல் சோடா, வடாம், வத்தல், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், பாலாடைக்கட்டி, புளித்த மோர், சேவு, சீவல், சாக்லெட், பிஸ்கெட் போன்ற நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

‘ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவு கள், செயற்கை வண்ண உணவுகளில் உப்பு கூடுதலாகவே இருக்கும். இவற்றையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.

குடிநீர் அளவும் முக்கியம்!

வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் சிறுநீரகத்திலிருந்து யூரியா உள்ளிட்ட நச்சுப்பொருட்களின் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

அதேவேளையில் சிறுநீரகம் பாதிக்கத் தொடங்கி விட்டால், இந்த அளவுக்குத் தண்ணீர் குடிக்கக்கூடாது. மருத்துவர் கூறும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும். இதையும் ஒரே மூச்சில் குடித்துவிடக்கூடாது. அவ்வப்போது சிறிய அளவில் தண்ணீர் குடிப்பதுதான் சரியான முறை.புகை சிறுநீரகத்துக்குப் பகைசிகரெட், பீடி, சுருட்டு போன்ற புகைக்கும் பழக்கத்தால் உடலுக்குள் நுழையும் ‘நிகோட்டின்’ ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடும்.

இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து விடும். இவ்வாறு அதிகரித்த ரத்த அழுத்தம் சிறுநீரகத்தையும் பாதிக்கும். புகைப்பிடிப்பதால் சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களும் சுருங்கும். அப்போது குறைந்த அளவிலான ரத்தம்தான் சிறுநீரகத்துக்குச் செல்லும். இது சிறுநீரகத்தின் செயல்பாட்டையே பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் புகைப்பழக்கம் அதிகரிக்கும்.

சுய மருத்துவம் வேண்டாம்!மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் மற்றும் வீரியமுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகளை அளவுக்கு மேல் சாப்பிட்டால் அல்லது அடிக்கடி சாப்பிட்டால் அவை சிறுநீரகத்தை பாதிக்கும். ஆகவே, அவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்துக்கடைகளில் வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

அடுத்து, மாற்று மருத்துவம் என்கிற பெயரில் தகுதியில்லாத மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதைத் தவிருங்கள். காரணம், இந்தத் தகுதியில்லாத மாற்று மருத்துவர்கள் தயாரிக்கின்ற லேகிய மருந்துகளில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக் கூடியவை. எனவே, எச்சரிக்கை தேவை!

இவற்றையும் கவனியுங்கள்!

1. சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விடுவது நல்லது.

2. தினமும் குளிக்கும்போது ஆண், பெண் இனப்பெருக்க வெளி உறுப்புகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் நோய்க்கிருமிகள் சிறுநீர்ப் பாதையை பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

3. சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் காபி, தேநீர், பிளாக் டீ போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோலா பானங்கள், இதர மென்பானங்கள், பால் பொருட்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்றவை ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு,
முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையும் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது. கேழ்வரகு, கீரைகள், மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவுகளைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம்.

4. மது அருந்தாதீர்கள்.

5.தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் முக்கியம்.


பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளில் உப்பு கூடுதலாகவே இருக்கும். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
புகைப்பிடிப்பதால் சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களும் சுருங்கும். அப்போது குறைந்த அளவிலான ரத்தம்தான் சிறுநீரகத்துக்குச் செல்லும். இது சிறுநீரகத்தின் செயல்பாட்டையே பாதிக்கும். தகுதியில்லாத மாற்று மருத்துவர்கள் தயாரிக்கின்ற லேகிய மருந்துகளில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்
கூடியவை.
 
Last edited:

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
re: சிறுநீரகம் காப்போம்! - Keep Your Kidneys Healthy

சிறுநீரகத்தின் பணிகள்!* சிறுநீரகத்தின் முக்கியப் பணி, கழிவுப் பொருட்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றுவதே. ரத்தத்திலுள்ள கழிவுப்பொருட்களான, யூரிக் அமிலம், யூரியா, கிரியேட்டினைன் சல்பேட்டுகள் போன்றவை வெளியேறுகின்றன.

* அளவுக்கதிகமான தாதுப் பொருட்களான, சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பேட் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றையும், சிறுநீரின் வழியாக வெளியேற்றுகின்றன.

* சிறுநீரகம் பழுதடைந்துவிட்டால், யூரியாவின் அளவு அதிகமாகிவிடும். இந்த நிலைக்கு யூரேமியா என்று பெயர்.

* சிறுநீரகம், பழுதடையும் போது, உடலில் தாதுப் பொருட்களின் சமச்சீர் குறைகிறது. இதனால் அசிடோசிஸ், ரத்தக் கொதிப்பு மற்றும் அதிக அளவு கால்சியமும் வெளியேறுவதால், 'ஹைப்பர் கேமெல்லியா ஏற்படுகிறது.

* சிறுநீரகப் பணியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், கால்சியம் சத்தினை உடலில் சேர, தேவைப்படும் சத்தான, 'வைட்டமின் - டி' உருவாக்கப்படுவது கடினமாகிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ளவருக்கு எலும்பு தேய்மானமடைந்து எலும்பு நோய் உருவாகிறது.

* ஹார்மோன்களான இன்சுலின், கேஸ்டிரின், பெரா தைராய்டு மற்றும் கால்சிடோனின் போன்றவற்றை படிப்படியாகச் சிதையச் செய்கின்றது.

* மரபணுக்கள் உருவாக்கத் தேவைப்படும் 'எரித்ரோபையோடின்' சிறுநீரகத்தில் உருவாக்கப்படுகிறது.

* சிறுநீரக வீக்கம் வெளியுறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தை வைத்து தான் இதையறிய முடியும்.

* சிறுநீரக வீக்கம் பெரும்பாலும், 3 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு, 50 வயதை தாண்டியவுடன் ஏற்படுகிறது.

* சிறுநீரகம் செயலிழக்க முக்கிய காரணம், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது.


- எம்.ரவி,
சிறுநீரகவியல் நிபுணர், சென்னை.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
re: சிறுநீரகம் காப்போம்! - Keep Your Kidneys Healthy

[h=2]சிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!![/h]


உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம்.

பொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம். உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான். நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள்.

எனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம்…

மந்தமாக

உங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அணுக்கள் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் தான் இந்த மாதிரி சிறுநீர் வெளிப்படும்.

இரத்தம் கசிதல்

சிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

நுரை போன்று வெளிபடுதல்

சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.

பழுப்பு நிறத்தில

் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.

எச்சரிக்கை

இவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். (வரும் முன் காப்பது மிக மிக முக்கியம் அமைச்சரே!!!)
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
ஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல்


சென்னையில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்ப்பானங்களையும், இளநீர், நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கை பானங்களையும், குளிர்ச்சியான உணவுகளையும் தேடி செல்கிறோம்.
அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு 850க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள்.

சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள் ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

பால் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடை யாது. உண்மையில் பால் அளவுக்கு ஏற்ப குடித்தால் கிட்னியில் கல் உருவாகுவதை தவிர்க்க முடியும்.

உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மக்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி வாய்க்குள் நுழையாத பல நோய்களை பரிசாக அளித்து வருகின்றன. ஆண்டுதோறும் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் யுரோலாஜிஸ்ட் டாக்டர் சேகர் கூறுகையில், "சிறுநீரகத்தில் கல் உருவாகுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகத்தில் கல் உருவாகும். அதை ஆரம்பக்கட்டத் திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்தி விட லாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறை களில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.

முன்பெல்லாம் சிறுநீரக கல் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிகம் ஏற்படும். ஆனால் இப்பொழுது ஆண் களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

ஒரு முறை கல் உருவாகிவிட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகை யவர்கள் கோடைக்காலத்தில் ஸ்கேன் எடுத்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. தண்ணீர் பருகும் அளவை அதிகப்படுத்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்க முடியும். தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பி லிருந்து தப்பிக்கலாம்.

இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கள் ஏற்படுவதை தடுக்க முடியும். தமிழகத்தை விட வடஇந்தியா பகுதிகளில் சிறுநீரக கல் பாதிப்பு அதிக மாக இருக்கிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இந்த பாதிப்பு இருக்கிறது" என்றார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.