சீரகம் - Cumin Seeds

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சீரகம்!​
உணவுக்கு மணமூட்டியாக அடுப்பங்கரையில் இருப்பது சீரகம். மருந்தாக இருக்கும் பல மூலிகைகளை விருந்து படைக்கும் பொருளாக்கி, ‘உணவே மருந்து! மருந்தே உணவு!’ எனும் சூத்திரத்தைச் சோற்றுக்குள் புதைத்த மேதைகள் நம் சித்தர்கள். பார்க்க அவ்வளவு வசீகரம் இல்லாமல், கொஞ்சம் அழுக்காக, அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாக, உலர்வாக இருக்கும் சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்து. அகத்தைச் சீர்படுத்துவதால் இதற்குச் சீரகம் (சீர்+அகம்) எனப் பெயர் வந்தது.

“போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லாமருங் காசமிராதக் காரத்திலுண்டிட” என, சித்த மருத்துவ இலக்கியமான தேரன் வெண்பாவில், சீரனா நோயெல்லாம் வாராது காக்கும் போசனகுடோரி எனப் போற்றப்பட்டது சீரகம். பித்த நோய்களுக்கெல்லாம் முதல் மருந்தாகப் போற்றப்பட்ட சீரகம், அஜீரணம், கண் எரிச்சல், சைனசிடிஸ், வாந்தி, விக்கல், கல்லடைப்பு எனப் பல நோய்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

‘எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்’ என, விடாதிருக்கும் விக்கலுக்கு, 8 திப்பிலியும் 10 சீரகமும் பொடித்துத் தேனில் கலந்து கொடுத்தால் போதும் என்கிறது சித்த மருத்துவம்.

உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக் கொண்டுவரும் நிலையில் (GERD), சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரக நீர் அருந்துங்கள். “சாப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வயிறு ஆறு மாதக் கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக்கொள்கிறது” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இள வறுப்பாக வறுத்துப் பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, இந்தப் பிரச்னை தீரும்.

சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். சீரகத்தை தனித்தனியே கரும்புச்சாறு, எலுமிச்சைச்சாறு, இஞ்சி சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும்.

நன்கு ஊறிய சீரகத்தை, மிக்ஸியில் அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேனுக்கு, பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிறந்த துணை மருந்து. “எங்க போயி டாக்டர், இவ்வளவு சடங்கு சாங்கியமெல்லாம் பண்றது?” எனக் கேட்கும் நபர்களுக்கு, ‘சீரகச் சூரணம்’ என்றே சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. அந்தச் சூரணத்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் மட்டும் உலரவைத்து, அதே அளவுக்குச் சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் சமமாக, நாட்டுச் சர்க்கரை கலக்க வேண்டும். இந்தக் கலவையை அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, மைக்ரேன் படிப்படியாகக் குறையும்.

சீரகத்தையும் வில்வவேர்க் கஷாயத்தையும் சேர்த்து சித்த மருத்துவர்கள் செய்யும் சீரக வில்வாதி லேகியம் பித்த நோய்கள் பலவும் போக்கும் மிக முக்கிய மருந்து. சீரகம், பித்தத்தைச் சீர்படுத்தும் மருந்து.

எனவே, உளவியல் நோய்க்கும்கூட ஒரு துணை மருந்தாக இதைப் பயன்படுத்த முடியும். நவீன ஆய்வுகளில் சர்க்கரை நோய் உருவாக்கப்பட்ட எலிக்கு சீரகத்தைத் தொடர்ந்து கொடுக்கையில், சர்க்கரை நோயின் முக்கிய பின் விளைவான கண்புரை நோய் (காட்ராக்ட்) வருவது தாமதப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீரகத்திலுள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது.

ஆதலால், பொங்கலோ, பொரியலோ, இனி சீரகம் இல்லாமல் இருக்க வேண்டாம். ஏனென்றால் கிடைப்பது மணம் மட்டுமல்ல... மருத்துவமும்கூட!

உலகை ஆளும் சீரகம்!
உலகின் மூத்த மணமூட்டியான சீரகம், கிரேக்கத்திலிருந்து உலகெங்கும் பரவியது. சீரகத்தின் பிரத்யேக மணத்தின் காரணமாக, கிரேக்கத்தில் வரிக்குப் பதிலாக சீரகம் செலுத்தலாம் எனும் அரசாணை அந்தக் காலத்தில் இருந்ததாம். இன்று, சீரகம் மணமூட்டி மட்டும் அல்ல. உலகை ஆளும் ஒரு மருத்துவ உணவு (Functional food). நம்ம ஊர் ரசம், வடக்கின் மலாய் கோஃப்தா, டச்சு நாட்டின் சீஸ் உணவு, மெக்ஸிகோவின் பரிட்டோஸ், மொரோக்கோவின் ரஸ்-எல்-ஹேனோ என உலகின் அத்தனை கண்டங்களின் சிறப்பு உணவுகளிலும் சீரகம் மணம் தந்து நோய் ஓட்டும் மருந்தாக இருக்கிறது.

பஞ்ச தீபாக்னி சூரணம்
குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றைச் சம பங்கு எடுத்து, நன்கு மையாகப் பொடிசெய்து, சம அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து, பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர், இரண்டு முதல் நான்கு சிட்டிகை தேனில் குழைத்துக் கொடுக்க, நேரத்துக்கு பசியைத் தூண்டி, ஆரோக்கியமும் பேணும் இந்த அற்புத சூரணம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.