சுக்கு - Dry Ginger

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சுக்கு​

கு.சிவராமன், சித்த மருத்துவர்


தமிழருடைய வீடுகளில் ஒரு மருத்துவ மரபு இருந்தது. தமிழ் குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் வரும் பிரச்னைகளுக்கான மருந்தை முதலில் சமையல் அறையில்தான் தேடினார்கள். அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சமையல் பொருட்கள், நறுமணப் பொருட்கள், தோட்டத்துக் கீரைகள், தொட்டியில் வளரும் சிறு மூலிகைச் செடிகள் ஆகியவையே முதலுதவியாகவும், தடுப்பு மருந்தாகவும் நலம் பேணும் பழக்கம் நம்மிடையே இருந்தது.

மூலிகைகள் என்றதுமே ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டிக் கிடைக்கிற ஏதோ ஓர்அதிசயப் பொருள் என்று எண்ண வேண்டாம். வயல்வெளிகளில் முளைக்கும் சாதாரண களைச்செடிகள் பெருநோய்களைத் தீர்த்துவிடும். வீட்டுத்தொட்டியில் வளர்கிற சிறுசிறு தாவரங்கள், நோய்த் தடுப்பு மருந்துகளாகச் செயல்பட்டு பல நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். உணவில் காட்டும் சிறு பக்குவங்கள் பெரும் பிரச்னைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிவிடும். நம்முடைய இந்த இயற்கை சார்ந்த வாழ்வினை மேற்கத்தியக் கலாசார ஈர்ப்பால் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

சாதாரணமாய் அஞ்சறைப் பெட்டியில் அடுப்பங்கறையில் குடுவைக்குள் வைத்திருக்கும் சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், பனங்கருப்பட்டி, சுக்கு, மிளகு, திப்பிலி, பெருஞ்சீரகம் போன்றவையும், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை தூள், அதிமதுரத் துண்டு போன்ற நாட்டு மருந்துச் சாமான்களும் பல நேரங்களில் ஒரு முதன்மை மருந்தாக நமக்குப் பயன்படும். இந்த வாரம் நாம் பார்க்கப்போவது, சுக்கின் பெருமையை.


''சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்பிரமணியனை மிஞ்சிய சாமி இல்லை'' என தென் தமிழகத்தில் ஒரு சொலவடை உண்டு. சித்தா, ஆயுர்வேதம் மட்டுமல்லாது சீன மருத்துவத்திலும், ஜப்பானின் கம்போ மருத்துவத்திலும், கொரியனின் சுஜோக் மருத்துவத்திலும் தலையாய இடம் சுக்குக்கு உண்டு. சிவப்பு இந்தியர்களும் தங்கள் மருத்துவத்தில் சுக்கை முதன்மைப் பொருளாக வைத்திருக்கின்றனர். இஞ்சியாக அலாதி மருத்துவப் பயன்களை கொடுப்பதோடு, காய்ந்து சுக்காகி வேறு பலன்களையும் கொடுப்பது இதன் தனிச் சிறப்பு.

'காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த'' என சித்த மருத்துவப் பாடலே உண்டு. காலை பல் துலக்கியதும் இஞ்சியையும் , மதியம் சுக்குத் தூளையும் உணவுக்கு முன் எடுத்துக்கொள்வதன் மூலம், நாள்பட்ட நோய்கள் பல அணுகாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறது இந்தப் பாடல்.

பித்தம் போக்கும் சுக்குசுக்கு பித்தத்தை சமன்படுத்தும். பித்தத்தை சீராக்காவிட்டால், குடல் புண்கள் ஏற்படும். மலச்சிக்கல் அவதிப்படுத்தும். வயிற்று உப்புசம், தலைவலி ஏற்பட்டு ரத்தக்கொதிப்பு ஏற்படும். உளவியல் சிக்கலுக்கும் பித்தம் அடித்தளம் இடும் என்பது பலருக்கும் தெரியாது. சுக்குத்தூள் இந்தப் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே வேரறுக்கும் ஒரு பொருள்.

சுக்கு, கொத்தமல்லி விதை சம அளவு எடுத்து, காப்பித்தூள் போல பயன்படுத்தி கஷாயம் செய்து, அதனுடன் பனைவெல்லம் சேர்த்து, வாரம் இருமுறை மாலை வேளைகளில் சாப்பிடலாம். அஜீரணம் வந்தவர்கள், வர இருப்பவர்கள் இதைச் சாப்பிட்டால், பிரச்னை ஓடிப்போகும்.

தலைவலிக்குநிவாரணியாகும் சுக்குபித்தத்தால் வரும் மைக்ரேன் தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர். அத்தோடு, தலைவலி மாத்திரைகள் இலவச இணைப்பாக வயிற்று வலியையும் தந்துவிடுகின்றன. சுக்குத்தூள் மைக்ரேன் தலைவலிக்கான மிகச் சிறந்த மருந்து. மூன்று சிட்டிகை சுக்குத்தூளைத் தேனில் குழைத்து, உணவுக்குப் பின் காலையும் மாலையும் என 45 நாட்கள் சாப்பிட, தலைவலி காணாமல் போய்விடும்.

இஞ்சியை மேல்தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறப்போட்டு, காலையில் அந்த தேனோடு சேர்த்து சாப்பிட, தலைவலி சரியாகும். பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களிலும், மாதவிடாய் துவங்கிய முதல் நாளிலும் பித்தத் தலைவலி வரும். வீட்டிலேயே செய்ய முடிகிற 'இஞ்சி ரசாயனம்’ இதற்கு நல்ல மருந்து.


கருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு, மிகச் சிறிய அளவு சுக்குத்தூளைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், பலன் கிடைக்கும். பயணத்தின்போது குறிப்பாக மலைப்பயணங்களின்போது ஏற்படக்கூடிய குமட்டலுக்கு, சுக்குத்தூள் சிறந்த மருந்து. சுக்குக் கஷாயத்தை நல்லெண்ணையில் காய்ச்சி, சுக்குத்தைலம் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் வேறு சில மூலிகைகளோடு கலந்தும் சுக்குத்தைலம் கிடைக்கும். இதைத் தலையில் தேய்த்தால், சைனஸால் வரும் தலைவலி சரியாகிவிடும்.

காதுக்குள் இரைச்சல் கேட்கும் பிரச்னை (Minears) காதில் சீழ் கோர்க்கும் நோய் (CSOM), காது இரைச்சலால் தடுமாற்றம் (வெர்டிகோ) பிரச்னைகளுக்கு சுக்குத்தைலம் தேய்த்துக் குளிப்பது நல்ல பலனைத் தரும்.

நியூயார்க் அகாடெமி ஆஃப் சயின்ஸஸ் 25 வருடங்களுக்கு முன்பே சுக்கு எப்போதும் பக்க விளைவு இல்லாத தலைவலி மருந்து என உறுதி செய்துள்ளது.

இஞ்சி ரசாயனம் எப்படிச் செய்வது?
இஞ்சி 50 கிராம், சீரகம் 50 கிராம் எடுத்துக்கொள்ளவும். இஞ்சியை மேல்தோல் நீக்கி சீவிவிட்டு, சிறு துண்டுகளாக்கி ஈரத்தன்மை போக மின்விசிறிக் காற்றில் உலர்த்தி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறு துளி நெய்விட்டு, இஞ்சியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதே போல் சீரகத்தையும் துளி நெய்யில் வறுக்கவும்.
வறுத்த இஞ்சி, சீரகம் இரண்டையும் பொடித்துக்கொள்ளவும். 100 கிராம் பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லத்தில் இந்தப் பொடியைக் கிளறி, ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால், இதுதான் இஞ்சி ரசாயனம்.

காய்ச்சல் போக்கும் சுக்கு
லேசான காய்ச்சல் தலைவலிக்கு சுக்குத்தூளை வெறும் தண்ணீரோடு கலந்து நெற்றியில் பற்றுப் போடலாம். சில சமயங்களில் சுக்கு, குழந்தைகளின் தோலைப் புண்ணாக்கிவிடும். எட்டு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.