சுட்டெரிக்கும் வெயிலும் நம் உணவு தட்டும&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சுட்டெரிக்கும் வெயிலும் நம் உணவு தட்டும்!
சுட்டெரிக்கும் வெயிலுக்கும், பெரும் மழைக்கும், நம் உணவு தட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா...? ஆம். மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அனைத்து சூழலியல் கேடுகளும் நம் உணவு தட்டிலிருந்தே துவங்கி விடுகிறது. ‘உணவெனப்படுவது நிலத்தோடு நீரே...’ என்கிறது சங்க இலக்கியம். ஆனால், நாம் ‘உணவெனப்படுவது நஞ்சும் அமிலமும்’ என வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உணவை தனி மனித விஷயம் என புறந்தள்ளி விட முடியாது. உணவுக்கும் சூழலியலுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. உணவு சிதைகிறது என்றால் சூழலியல் சிதைகிறது என்று அர்த்தம். இப்போது உணவின் மூலம் சூழலியலை சிதைத்துக் கொண்டிருக்கிறோம். இது ஏதோ எதேச்சையாக நடந்தது அல்ல, திட்டமிட்டு நடந்தது. நாம் உண்ணும் உணவிற்கு பின்னால் மிகப் பெரிய வணிக அரசியல் இருக்கிறது. அந்த அரசியல், நம் மரபை பரிகாசம் செய்தது. நம் உணவு குறித்து ஒரு தாழ்வு மனப்பான்மையை நமக்கு உண்டாக்கியது.

மரபு உணவு:இங்கு எப்படி திணைக்கு திணை சீதோஷ்ண நிலை மாறுகிறதோ, அது போல் உணவும் இருந்தது. தமிழகத்திற்கே பொதுவான ஒற்றை உணவு என்று நம் வரலாற்றில் எப்போதும் இருந்தது இல்லை. முல்லை நிலத்து மக்கள் சாமைச் சோற்றுக்கு ரசமும், வரகு சோறு, குதிரைவாலிச் சோற்றுக்கு பருப்பு கூட்டும் வைத்து உண்டார்கள் என்றால், மருத நிலத்து மக்கள் மாப்பிள்ளை சம்பா சோறும் மீன் குழம்பும், கருவாடும் ருசித்தார்கள். இந்த உணவு வகைகளின் ருசியும் இடத்திற்கு இடம் மாறுபடும். தஞ்சையில் காவிரி ஆற்றை ஒட்டி வாழும் பூதலூர் மக்கள், குழம்பை கெட்டியாக வைப்பார்கள் என்றால், மானவாரி பகுதியான தச்சன்குறிச்சி பகுதியில் வாழும் மக்கள் குழம்பை தண்ணீராக வைப்பார்கள். அதாவது, உணவு என்பது பன்முகத் தன்மை கொண்டது. அவர்கள் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டது. ஆனால், நாம் என்று பெருநிறுவனங்களை நம் வீட்டு அடுப்பங்கரை வர அனுமதித்தோமோ, அன்றே எல்லாம் சிதைந்துவிட்டது. உணவில் பன்முகத்தன்மை அழிந்து, ஒற்றை தன்மை வந்து விட்டது. பீட்சாவும், பர்கரும் நம் தேசிய உணவு ஆகிவிட்டது. நம் வீட்டு உணவு அலமாரிகள் ‘Packaged Food' வகைகளால் நிரம்பி வழிகிறது. செயற்கை நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகளால் நமது கைமணம் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது.
உணவு சூழலியலோடு சம்பந்தப்பட்டது எப்படி?

“என்ன செய்வது நம் வாழ்க்கை சூழல். நின்று நிதானமாக சமைக்கவெல்லாம் எங்களுக்கு நேரமில்லாத போது... எங்களுக்கு வேறென்ன வழி? இது எப்படி சூழலியலோடு சம்பந்தப்பட்டதாகும்...? இது எப்படி வெயிலுக்கும், மழைக்கும் தொடர்புடையதாகும்...?” என்கிறீர்களா... இல்லை, நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நம் உடல் அந்தந்த பகுதிக்கு ஏற்றார் போல் தகவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பகுதியில் மக்கள் கருப்பாக இருப்பதும், இன்னொரு பகுதியில் மக்கள் மாநிறமாக இருப்பதும் ஏதோ எதேச்சையானது இல்லை. அவர்கள் பகுதியின் வெப்பத்தையும் குளிரையும் தாங்குவதற்கு ஏற்றார் போல் அவர்கள் உடல்வாகு இருக்கும். அது போல்தான், அங்கு விளையும் உணவு வகைகளும். அந்த தட்பவெப்ப நிலைக்கு என்ன தேவையோ அதுதான் அங்கு விளையும். வேறுப்பட்ட சீதோஷ்ண பகுதியில் வாழும் மக்கள், தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அந்த பகுதியில் என்ன உணவு விளைகிறதோ. அதை உண்பதுதான் சரியான ஒன்றாக இருக்கும்.

மானாவாரி பகுதியில் அதிகம் நீர் தேவைப்படாத சிறு தானியங்கள் விளையும், தண்ணீர் கட்டி விவசாயம் செய்யும் அளவிற்கு நீர் வளம் உள்ள பகுதியில் கரும்பும், நெல் வகைகளும் விளையும். இதுதான் இயற்கை சங்கிலி. நாம் அந்தந்த பகுதியில் என்ன விளைகிறதோ, அது உண்டு வாழும் வரை எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால், இந்த சங்கிலி மாறும் போதுதான் அனைத்து பிரச்னைகளும். அதிகம் தண்ணீர் தேவைப்படும் கரும்பை, தருமபுரியின் வறட்சியான பகுதியில் நட்டால், நாம் பாசனத்திற்காக பூமியிலிருந்து தண்ணீரை அதிக அளவில் உறிஞ்சுவோம். இது மோசமான சீரழிவிற்கு நம்மை அழைத்து செல்லும்.


தனி மனிதன் செய்ய வேண்டியது என்ன?

ஒரு பர்கர் செய்ய 2500 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு லிட்டர் குளிர்பானம் செய்ய 20 லிட்டர் மறை நீர் தேவை. நாம் இது போன்ற உணவு வகைகளை தவிர்க்கும் போது அல்லது குறைத்துக் கொள்ளும் போது இந்த நீர் சேமிக்கப்படுகிறது. அதாவது, நாம் இயற்கையை சுரண்டாமல் இருக்கிறோம். அதற்கு மாற்றாக நாம் தங்கி இருக்கும் பகுதியில் என்ன விளைகிறதோ, அதை உண்பதன் மூலம் இரண்டு அற்புதமான விஷயங்கள் நடக்கிறது. ஒன்று அந்தந்த பகுதி பொருளாதாரம் வளர்கிறது. இன்னொன்று தேவையற்ற போக்குவரத்து குறைகிறது. இதனால் சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது.

சூழலை சுரண்டாமல் இருப்பது என்பது அனைத்து தளங்களிலும் இருக்க வேண்டும். அதை நாம் உணவு தட்டிலிருந்து துவங்க வேண்டும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.