செயற்கை கருவூட்டல் - மரபணு சாதனை

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
செயற்கை கருவூட்டல் சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி...

முட்டையில் இருந்து முட்டைக்கு! மரபணு சாதனை

baby.jpg

பெண்ணின் கரு முட்டை போதிய தரமாக இல்லை என்றால், வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கரு முட்டையைத் தானமாகப் பெற்று குழந்தைப்பேறு அடையவைப்பதுதான் ஒரே தீர்வாக இதுவரை இருந்தது. இதில் குழந்தையின் மரபணுவில் தாயின் மரபணுவுக்குப் பதில் ‘அந்த வேறு ஒருவரின் மரபணுதான் இருக்கும். தன் வயிற்றில் வளர்த்துப் பெற்றாலும், அது வேறு ஒருவரின் குழந்தை என்ற மனநிலை பெண்களிடம் இருந்தது. அந்தக் குறைபாட்டை நீக்குவதற்காக, சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்ஃபர் என்ற புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது.

இது குறித்து சென்னை மிராக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரின் மருத்துவர் டாக்டர் பி.எஸ்.ஆர்.மூர்த்தியிடம் பேசினாம். ‘‘ஒரு பெண்ணின் சினைப் பையில் 15 வயதில் தொடங்கி கிட்டத்தட்ட 50 வயது வரை கரு முட்டைகள் உற்பத்தியாகின்றன. பெண் குழந்தை பிறக்கும்-போதே, அதன் சினைப்பையில் 10 லட்சத்துக்கும் அதிகமான சினைத் துகள்கள் இருக்கும். அந்தக் குழந்தை, பருவம் அடைந்ததும் ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் நான்கு சினை துகள்கள் முட்டையாக வளரத் தேர்ந்து எடுக்கப்படும். இதில் ஒன்று மட்டும் முழுமையான வளர்ச்சி பெறும். மற்றவை வெளியேற்றப்படும். மாதந்தோறும் ஒரே ஒரு கரு முட்டை எனும்போது, ஒரு பெண்ணின் கருத்தரிப்பு காலம் முழுவதற்கும் சேர்த்தே 500 சினைத் துகள்கள் போதுமானது. ஆனால் அளவுக்கு அதிகமான சினைத் துளைகள் இருந்தும், அவை பயன்படுவது இல்லை. வயது கூடினாலும் முட்டையின் தரம் குறைந்துகொண்டே போகும். 40 வயதான பெண்ணுக்கும் 20 வயதான பெண்ணுக்கும் உற்பத்தியாகும் முட்டைகள் ஒரே தரத்தில் இருப்பது இல்லை.

சில பெண்களுக்கு இயற்கையாகவே கரு முட்டை தரமாக இருப்பது இல்லை. என்ன சிகிச்சை அளித்தாலும் அவர்களால் தரமான முட்டையை உற்பத்தி செய்ய முடியாது. தரம் குறைவான முட்டைகளை உற்பத்தி செய்யும் பெண்களுக்கு, கருத்தரிப்பது மிக மிகச் சிரமம். அப்படியே கருத்தரித்தாலும், கர்ப்பத்தின் தரமும் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில்தான், தானமாகப் பெறப்படும் முட்டைகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படி பெண்களுக்கு ஆலோசனை வழங்குவோம். தானமாக பெறப்பட்ட முட்டையைக் கருத்தரிக்கச் செய்து, குழந்தைப்பேறு அடையச் செய்தாலும், அந்தக் குழந்தைக்கு பெற்றோரின் மரபணு இருக்காது. இவர்களுக்கு ஆறுதலாக வந்திருப்பதுதான் சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்ஃபர்.

சமீபத்தில் பல கருத்தரிப்பு முறைகளை மேற்கொண்டு தோல்வி அடைந்த பெண் ஒருவர் எங்கள் மையத்துக்கு வந்தார். அவரது சினைப் பையில் இருந்து ஐந்து முட்டைகளை எடுத்தோம். அதில் ஒன்றைப் பலி கொடுத்து, அதில் இருந்த சைட்டோபிளாசத்தை நான்கு முட்டைகளுக்கு மாற்றினோம். இந்த நான்கு முட்டைகளையும் ஐ.சி.எஸ்.ஐ. வாயிலாக கருத்தரிக்கவைத்தோம். இதில் மூன்று முட்டைகள் கருக்களாக மாறின. பின்னர் நடந்த பரிசோதனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் வளர்வது உறுதி செய்யப்பட்டது. 35&வது நாள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, இரண்டு கருக்கள் வளர்வதைக் கண்டறிந்தோம். மிகவும் கவனத்துடன் அவரது கர்ப்பத்தை வளர்த்துவந்தோம். அவரது முந்தைய சிகிச்சை முறை வரலாறு தெரியும் என்பதால், முன்கூட்டியே பிரசவம் நடப்பதைத் தவிர்க்க, 18&வது வாரத்தில் அவருக்கு ஒரு சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதனால் எந்தவித சிக்கலும் இன்றி கரு வளர்ந்தது. கடைசியில் கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்தப் பெண் ஓரளவுக்குத் தரமான முட்டையை உற்பத்தி செய்ததால், அதில் ஒன்றைப் பலியிட்டு மற்ற கருக்கள் உருவாக்கப்பட்டன. இதுவே அந்தப் பெண்ணின் அனைத்து முட்டைகளும் தரம் குறைந்ததாக இருந்தால், அவரது சகோதரியிடம் இருந்து நல்ல தரமான முட்டையை எடுத்து குழந்தைப்பேறு அடையச் செய்யலாம். இதன்படி, தானமாகப் பெறப்பட்ட முட்டையில் இருந்து 5 முதல் 8 சதவீதம் வரையிலான சைட்டோபிளாசத்தைப் பிரித்து எடுத்து, குழந்தைப்பேறு பெற வேண்டிய பெண்ணின் தரம் குறைந்த முட்டையில் துல்லியமான அளவு சேர்த்து முட்டையின் தரத்தை உயர்த்துவோம். இப்படிப் பிறக்கும் குழந்தை பெற்றோரின் மரபணுவையே கொண்டிருக்கும்.

சம்பந்தப்பட்ட பெண் உற்பத்தி செய்யும் முட்டையின் தரம் அனைத்தும் குறைவாக இருந்தும், அவரது உடன்பிறந்த சகோதரிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முட்டையும் தரமானதாக இல்லை என்றால், வேறு ஒருவரிடம் இருந்து முட்டையைத் தானமாக பெற்றும் இந்த முறையில் குழந்தைப்பேறு அடையச் செய்யலாம். அப்படி சைட்டோபிளாஸ்மிக் இடமாற்றத்துக்கு வேறு ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட முட்டையை இந்தத் தொழில்நுட்பத்தின்படி பயன்படுத்தினாலும், அந்தக் குழந்தைக்கு பெற்றோரின் மரபணுக்கள் இருக்கும். மரபணு முட்டையின் மையப் பகுதியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். தற்போதுதான் இந்தியாவில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. இனி இந்தியாவிலும் இந்த சிகிச்சை பிரபலமாகும் என்றார்.

மரபணு மகத்துவம் தொடரட்டும்!

பா.பிரவீன்குமார்
நன்றி : டாக்டர் விகடன்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.