சேதி தெரியுமா? -

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#11
[h=1]சிரியாவில் தொடரும் போர்[/h]

சிரியாவின் கிழக்கு கவுடா பகுதியில் பிப்ரவரி 18 முதல் நடந்துவரும் போர் கடந்த வாரம் தீவிரமடைந்தது. சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் 2014-ம் ஆண்டு முதல் போராடிவருகிறார்கள். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரியப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன. தற்போது கிளர்ச்சியாளர்களின் கைவசம் உள்ள கடைசி பகுதியான கிழக்கு கவுடாவில் கடந்த ஒரு வாரமாக சிரிய - ரஷ்யக் கூட்டுப் படைகள் கடும் வான்வழித் தாக்குதலை நடத்திவருகின்றன. இந்த ஒரு வாரப் போரில் 120 குழந்தைகள் உட்பட 580 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கிறது ஐ.நா.
ரத்னவேல் பாண்டியன் மறைவுஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ரத்னவேல் பாண்டியன் 89 வயதில் சென்னையில் பிப்ரவரி 28 அன்று காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1988-ம் ஆண்டிலிருந்து 1994-ம் ஆண்டுவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். இவர் ஓய்வுபெற்ற பிறகு, தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக 2006-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டுவரை பதவிவகித்தார். ‘மண்டல் கமிஷன்’ பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசுப் பணியிடங்களின் 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற இவர் வழங்கிய தீர்ப்பு இந்தியச் சமகால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

21-வது தேசிய இ-கவர்னன்ஸ் மாநாடு

ஹைதராபாத்தில் பிப்ரவரி 26, 27 ஆகிய தினங்களில் 21-வது தேசிய இ-கவர்னன்ஸ் மாநாடு நடைபெற்றது. ‘வளர்ச்சியைத் தூண்டும் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. மத்திய மக்கள் குறைதீர்ப்பு அமைச்சகமும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் தெலங்கானா மாநில அரசுடன் இணைந்து மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தன. மத்திய நுகர்வோர் விவகாரத் துறை இணை அமைச்சர் சி.ஆர். சவுத்ரி, தெலங்கானா மாநில நகர் வளர்ச்சித் துறை அமைச்சர் கல்வாகுண்டல தாரக ராம ராவ், யு.ஐ.டி.ஐ. தலைவர் அஜய் பூஷண் பாண்டே போன்றோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

2018: உலக அரிய நோய் தினம்

உலகின் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிப்ரவரி 28 அன்று 11-வது உலக அரிய நோய் தினம், அனுசரிக்கப்பட்டது. உலகில் உள்ள அரிய நோய்கள், அவற்றின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசி நாள் இந்த ‘உலக அரிய நோய் தினம்’ அனுசரிக்கப்படும். 2017-ம் ஆண்டின் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் கருப்பொருளாகவும் ‘ஆராய்ச்சி’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ‘அரிய நோய்களுக்கான ஐரோப்பிய அமைப்பு’ (EURORDIS) இந்த உலக அரிய நோய் தினத்தை ஒருங்கிணைத்தது.

காவிரி மேலாண்மை வாரியம்: உடனடி சாத்தியமல்ல
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பது சாத்தியமல்ல என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிப்ரவரி 26 அன்று தெரிவித்தார். காவிரி நதிநீர்ப் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதாகவும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவின் தண்ணீர் பிரச்சினையைக் கவனமாகக் கையாள அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோதாவரியிலிருந்து கடலுக்குச் செல்லும் 3,000 டி.எம்.சி. நீரில், 700 டி.எம்.சி. நீரை இரண்டு அணைகள் மூலம் காவிரிக்குத் திருப்பிவிடுவதற்கு ரூ. 1 லட்சம் கோடி செலவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அத்துடன், ரூ. 60,000 கோடி போலாவரம் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போதைக்கு அமைப்பது கடினம் என்றார்.

பாதியாகக் குறைக்கப்படும் பாடத்திட்டம்!
என்.சி.இ.ஆர்.டி. பள்ளிப் பாடத்திட்டம் 2019-ம் கல்வியாண்டில் பாதியாகக் குறைக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேடகர் பிப்ரவரி 24 அன்று தெரிவித்தார். பி.ஏ, பி.காம். படிப்புகளின் பாடத்திட்டத்தைவிடப் பள்ளிப் பாடத்திட்டம் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார் அவர். பள்ளி மாணவர்களுக்கு மற்ற அறிவாற்றல் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு நேரம் கிடைக்கும்படி என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும், பள்ளித் தேர்வுகள், ஒரே வகுப்பில் மாணவர்களை நிறுத்திவைத்தல் தொடர்பான மசோதா அடுத்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரம் கைது
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு உரிமையைப் பெற்றுத் தருவதற்கு 2007-ம் ஆண்டு, ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சி.பி.ஐ.யால் பிப்ரவரி 28 அன்று கைதுசெய்யப்பட்டார். அவரை, ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ-க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியாவின் முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த இணைய வசதி: இந்தியாவுக்கு 47-வது இடம்
2018-ம் ஆண்டுக்கான ‘ஒட்டுமொத்த இணைய வசதி’ பட்டியலில் இடம்பெற்ற 86 நாடுகளில் இந்தியா 47-வது இடத்தில் இருப்பதாக ஃபேஸ்புக் பிப்ரவரி 26 அன்று அறிக்கை வெளியிட்டது. ‘எகனாமிக் இன்ட்டெலிஜென்ஸ் யூனிட்’ என்ற அமைப்புடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த ஒட்டுமொத்த இணைய வசதிப் பட்டியலில் 91 சதவீத உலக மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். 2017-ம் ஆண்டில் 36-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு குறைவான இணையப் பயன்பாடு, மோசமான தரம் காரணமாக 11 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#12
[h=1]காவிரி மேலாண்மை வாரியம் ஆலோசனைக் கூட்டம்[/h]

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மார்ச் 9 அன்று நடைபெற்றது. மத்திய நீர் வள அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலர்களும் உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய நீர் வளத் துறைச் செயலர் யு.பி. சிங் தலைமைதாங்கினார்.வசதிகளற்ற அங்கன்வாடி மையங்கள்

இந்தியாவில் மொத்தம் உள்ள 13.6 லட்சம் அங்கன்வாடி மையங்களில் 4.5 லட்சம் மையங்களில் கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லை என்ற தகவலை நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையாக மார்ச் 9 அன்று தாக்கல் செய்தது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நாட்டிலுள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வுசெய்தது.
இந்த ஆய்வில் 36 சதவீத அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை வசதி இல்லை என்பதும் 25 சதவீத மையங்களில் குடிநீர் வசதி இல்லை என்பதும் தெரியவந்திருக்கிறது. அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ. 54.14 கோடி, குடிநீர் வசதிகளுக்காக ரூ. 13.24 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருணைக் கொலை உச்ச நீதிமன்றம் அனுமதி
கருணைக் கொலை தொடர்பான வழக்கில், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியமாக இறக்கும் வகையில், அவர்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதித்து உச்ச நீதிமன்றம் மார்ச் 9 அன்று தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. தீராத நோயால் துன்புறும் நோயாளிகளை, அவர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ள உயிர் காக்கும் சாதனங்களை அகற்றுவதன் மூலம் அவர்கள் கண்ணியமாக இறக்க அனுமதிக்கலாம் என்று இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபரின் இந்தியப் பயணம்

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு மார்ச் 9 அன்று வந்தார். பிரதமர் நரேந்திர மோடி – எம்மானுவேல் மக்ரோன் இருவருக்கும் இடையேயான சந்திப்பு மார்ச் 10 அன்று டெல்லியில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு நாடுகளுக்கிடையேயான கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றன. அத்துடன், பிரான்ஸ்-இந்தியா கூட்டு முயற்சியில் நடைபெறும் சர்வதேசச் சூரிய மின்சக்தி கூட்டணி தொடர்பான மாநாட்டிலும் எம்மானுவல் பங்குகொள்கிறார்.

இந்தியா – சீனா வர்த்தகத்தில் புதிய மைல்கல்

2017-ம் ஆண்டு, இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ரூ. 8,440 கோடி அமெரிக்க டாலரை எட்டியிருப்பதாகச் சமீபத்தில் வெளியான சீனச் சுங்கப் பொது நிர்வாகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஓராண்டில் இந்தியா-சீனா வர்த்தகம் 18.63 சதவீதம் உயர்ந்திருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை. சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை, டோக்லாம் பிரச்சினை, அணு விநியோகக் குழுவில் இந்தியாவின் நுழைவை பெய்ஜிங் தடுத்தது போன்ற பிரச்சினைகள் இரண்டு நாடுகளுக்கு இடையே இருந்தபோதிலும் இந்த வர்த்தக வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது.

புதிய முதல்வர்கள்

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. திரிபுராவின் புதிய முதல்வராகப் பாஜகவின் விப்லப் குமார் தேப் மார்ச் 9 அன்று பதவியேற்றார். நாகாலாந்தின் புதிய முதல்வராகத் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் நெபியு ரியோ மார்ச் 8 அன்று பதவியேற்றார். மேகாலயாவின் புதிய முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா மார்ச் 6 அன்று பதவியேற்றார். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணியே ஆட்சி அமைத்திருக்கிறது.

பாலகிருஷ்ண தோஷிக்கு பிரிட்ஸ்கர் விருது

புகழ்பெற்ற இந்தியக் கட்டிடக் கலைஞர் பாலகிருஷ்ண தோஷிக்கு மார்ச் 7 அன்று ‘பிரிட்ஸ்கர்’ (Pritzker Prize) விருது அறிவிக்கப்பட்டது. கட்டிடக் கலைக்கான நோபல் பரிசாகக் கருதப்படும் இந்த ‘பிரிட்ஸ்கர்’ பரிசை பெறும் முதல் இந்தியர் இவர்.

அவருக்கு வயது 90. புனேவைச் சேர்ந்த இவர், குறைந்த செலவிலான குடியிருப்புகளை வடிவமைப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பிரான்ஸ்-சுவிஸைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான லெ கொர்புசியேவிடம் (Le Corbusier) இவர் பணியாற்றியிருக்கிறார்.
ஐ.ஐ.எம். - அகமதாபாத், பெங்களூரு, லக்னோ கல்வி நிறுவனங்கள், தாகூர் நினைவரங்கம் போன்றவற்றை வடிவமைத்தவர் இவரே.
‘ஹெலி-டேக்ஸி’ சேவை தொடங்கியது

இந்தியாவின் முதல் ‘ஹெலி-டேக்ஸி’ சேவை பெங்களூருவில் மார்ச் 6 அன்று தொடங்கியது. இந்த முதல் ஹெலி-டேக்ஸி பயணம் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிவரை அமைந்திருந்தது.
கொச்சியைச் சேர்ந்த ‘தும்பி ஏவியஷன்’ என்ற நிறுவனம் இந்த ஹெலி-டேக்ஸி சேவையை வழங்கி யிருக்கிறது. ஒரு பயணத்தில் ஆறு பேர் பயணிக்கும்படி ஹெலி-டேக்ஸி சேவை திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து இந்தப் பயணக் கட்டணத்தின் விலை ரூ. 4,130 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு சாலை வழியாகப் பயணித்தால் இரண்டு மணி நேரமாகும். இந்தப் பயண நேரத்தை ஹெலி-டேக்ஸி 15 நிமிடங்களாகக் குறைத்திருக்கிறது.

 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#13
[h=1]பத்ம விருது விழா[/h]

இசையமைப்பாளர் இளையராஜா, இந்துஸ்தானி பாடகர் குலாம் முஸ்தபா கான் உள்பட 43 பேருக்கு மார்ச் 21 அன்று டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இந்த விழாவில் 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா உட்பட 3 பேர் பத்ம விபூஷண் விருதும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் நாகசாமி உட்பட 9 பேர் பத்ம பூஷண் விருதும் தமிழக நாட்டுப்புறப் பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேர் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும் யோகா ஆசிரியர் நானம்மாள் சக்கர நாற்காலியில் வந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டார்.முறைப்படுத்தப்படும் மருத்துவமனைகள்

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்டவிதிமுறைகள் வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மார்ச் 23-ல் தெரிவித்தார். இதன்படி ஒரு மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் உள்ளன, எத்தனை டாக்டர்கள் உள்ளனர், எத்தனை படுக்கைகள் உள்ளன என்பது போன்ற தகவல்களை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து பதிவுசெய்ய வேண்டும். தரமான சிகிச்சை அளிக்கும் அடிப்படை வசதிகளைக் கண்டிப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா - உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் ஊழல் ஒழிப்பு அமைப்பான லோக் ஆயுக்தா, லோக்பால் நீதிமன்றங்களை ஏன் அமைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் மார்ச் 23 அன்று கேள்வி எழுப்பியது. . அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், எம்.பி.க்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினாலோ ஊழல் செய்தாலோ அவற்றை விசாரிக்க லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு 2014-ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். ஆனால், இதுவரை 12 மாநிலங்கள் இந்தச் சட்டத்தை இயற்றவில்லை, நீதிமன்றங்களையும் அமைக்கவில்லை.

இந்தியா வசமானது நிதாஷ் கோப்பை

இலங்கையின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நிதாஷ் கோப்பையை இந்திய அணி மார்ச் 18 அன்று தட்டிச் சென்றது. கொழும்புவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வங்க தேச அணி நிர்ணயித்த 166 ரன்களை இந்திய அணி விரட்டியது. கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டது. 7-வது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் வங்க தேசத்தை வீழ்த்தி கோப்பையை இந்திய அணி வென்றது. தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார். தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியைத் தனது அநாயாச ஆட்டத்தின் மூலம் வெற்றி பெறச் செய்த தினேஷ் கார்த்திக்கை தேசமே கொண்டாடியது.

பலாப் பழத்துக்கு அங்கீகாரம்

பலாப் பழத்தை மாநிலப் பழமாக கேரள அரசு மார்ச் 21 அன்று அறிவித்தது. இதற்கான அரசாணையை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். முக்கனிகளில் ஒன்றான பலா, சுவையிலும் மணத்திலும் அனைவரையும் ஈர்க்கக்கூடியது. கேரளத்தில் மட்டும் லட்சக்கணக்கான பலா மரங்களும் பல வகையான பலாப் பழங்களும் விளைவிக்கப்படுகின்றன. பலாப் பழத்துக்கு மாநிலத்தின் அடையாள அங்கீகாரத்தை வழங்கி, அதனுடைய உற்பத்தியையும் மதிப்புக்கூட்டு பொருட்களின் விற்பனையையும் உயர்த்த கேரள அரசு திட்டமிட்டுவந்தது. அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை வெளியிட்டது.

விளாடிமிர் புதினுக்கு வெற்றி

ரஷ்யாவில் மார்ச் 18 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதின் உட்பட 8 பேர் களத்தில் இருந்தனர். தேர்தலில் 67.49 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தல் முடிந்தவுடனே வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் அதிபர் விளாடிமிர் புதின் 76.66 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் வேட்பாளர் பவெல் குருடினின் 11.80 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் புதின் 4-வது முறையாக ரஷ்ய அதிபராகியிருக்கிறார். ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார்.

புதிய மதமாகிறது லிங்காயத்

கர்நாடக மாநிலத்தில் லிங்காயத் சமூகத்தைத் தனி மதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை மார்ச் 18 அன்று ஒப்புதல் அளித்தது. இதற்கான பரிந்துரையையும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பிவைத்தது. கர்நாடகாவில் 17 சதவீத மக்கள் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவரின் தனி சித்தாந்தங்களைப் பின்பற்றி, தனியான வழிபாட்டு முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். தங்களைத் தனி மதத்தினராக அங்கீகரிக்கக் கோரி பல வருடங்களாக இவர்கள் போராடிவந்தனர். இக்கோரிக்கையைப் பரிசீலிக்க கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக் திருட்டு

ஃபேஸ்புக்கிலிருந்து 5 கோடி பயனாளர்களின் தகவல்களை லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் திருடியதாக மார்ச் 20 அன்று குற்றச்சாட்டு எழுந்தது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது கிட்டத்தட்ட 5 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டின் சாராம்சம். தன் பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்த ஃபேஸ்புக்கின் இந்தச் செயல் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் இந்தியாவிலும் பாஜக - காங்கிரஸ் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#14
[h=1]தீவிரமடைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்[/h]


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 24 அன்று தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. தூத்துக்குடி சிப்காட்டில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் குவிந்து போராட்டக் களத்தைத் தீவிரமாக்கினர்.முழு கடையடைப்புப் போராட்டமும் நடைபெற்றது. பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதல் சிறிய காய்கறிக் கடைகள்வரை அடைக்கப்பட்டிருந்தன. மினி பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. போராட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சேலத்திலிருந்து விமான சேவை

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை மார்ச் 25 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. சேலத்தில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சேவையைத் தொடங்கிவைத்தார். பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட விமான சேவை 2009-ல் தொடங்கப்பட்டது. ஆனால், போதிய அளவில் பயணிகள் வராததால் 2010-ம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. மத்திய அரசு சார்பில் சிறு நகரங்களை விமான சேவை மூலம் இணைக்கும் ‘உடான்’ திட்டம் மூலம் தற்போது இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சாதிப் பஞ்சாயத்து சட்ட விரோதம்

திருமணத்துக்கு உரிய வயதில் இருக்கும் ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்தால், அதைத் தடுப்பதற்கோ அதில் தலையிடுவதற்கோ பிரித்து வைப்பதற்கோ கட்டப்பஞ்சாயத்து அல்லது சாதிப் பஞ்சாயத்துக்கு உரிமை இல்லை. அது சட்ட விரோதம் என்று மார்ச் 27 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

சக்தி வாகினி என்ற தனியார் தொண்டு நிறுவனம் 2010-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் செயல்படும் சாதிப் பஞ்சாயத்துக்கள், கட்டப் பஞ்சாயத்துக்கள் காதலித்துத் திருமணம் செய்யும் ஆண்களையும் பெண்களையும் பிரித்துவைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பில் வழிகாட்டு நெறிமுறைகளையும் நீதிமன்றம் அறிவித்தது.
ரஷீத் கான் புதிய சாதனை

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 44 ஒரு நாள் போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளைக் கடந்த வீரர் என்ற பெருமைக்கு உரியவரானார். மார்ச் 25 அன்று ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்தார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கடந்ததே சாதனையாக இருந்தது. அதை ரஷீத்கான் முறியடித்துள்ளார்.

பாஜக எண்ணிக்கை அதிகரிப்பு
மாநிலங்களவையில் 58 எம்.பி.களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. புதிய எம்.பி.களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 24-ம் தேதி நடைபெற்றது. இதில் 33 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய பதவிகளுக்கே தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்தத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 28 பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேரும் வெற்றி பெற்றனர்.
திரிணாமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, இடதுசாரி முன்னணி உள்ளிட்ட கட்சிகள் பிற இடங்களை வென்றன. இந்தத் தேர்தலின் மூலம் பாஜகவுக்குக் கூடுதலாக 11 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு 4 இடங்கள் குறைந்துவிட்டன. தற்போதைய நிலவரப்படி 58 ஆக உள்ள பாஜகவின் பலம் 69 ஆக அதிகரிக்க உள்ளது. 54 ஆக உள்ள காங்கிரஸின் பலம் 50 ஆகக் குறைகிறது.

கேம்பிரிட்ஜ் அனலட்டிகாவுக்கு நோட்டீஸ்
ஃபேஸ்புக்கில் இந்தியர்களின் தகவல்களைத் திருடி முறைகேட்டில் ஈடுபட்ட, கேம்பிரிட்ஜ் அனலட்டிகா நிறுவனத்துக்கு மத்திய அரசு மார்ச் 25 அன்று நோட்டீஸ் அனுப்பியது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது கேம்பிரிட்ஜ் அனலட்டிகா என்ற அரசியல் பிரச்சார நிறுவனம்.
ஃபேஸ்புக்கிலிருந்து 5 கோடி பயனாளிகளின் தகவல்களை இந்த நிறுவனம் திருடி அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவாக மக்களிடம் பொய்யான செய்திகள், விளம்பரங்களை வெளியிட்டுத் தாக்கத்தை ஏற்படுத்தியதாகப் புகார் எழுந்தது.
இதேபோல இந்தியர்களின் தகவல்களைத் திருடி, அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, கேம்பிரிட்ஜ் அனலட்டிகா நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 6 கேள்விகள் கேட்டு அவற்றுக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் இணைப்புக்குக் கெடு நீட்டிப்பு
பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் மார்ச் 27 அன்று உத்தரவு பிறப்பித்தது. மார்ச் 31-ம் தேதியுடன் பான் கார்டு, ஆதார் எண் இணைப்புக்கு இறுதி கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4-வது முறையாக காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கறுப்புப் பணம், ஊழல் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் வருமானவரி செலுத்துவோர் அனைவரும் வருமானவரி ரிட்டன் தாக்கலின்போது, பான் கார்டுடன், ஆதார் எண்ணையும் இணைத்து தாக்கல்செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் 4 கட்டங்களாக ஆதார் எண், பான் கார்டு இணைப்பு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 65 கோடி பான் கார்டுகள் இருக்கும் நிலையில், அதில் 33 கோடி பான் கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.


கர்நாடகத் தேர்தல் அறிவிப்பு
கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைக்கு மே 12-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று மார்ச் 27 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் டெல்லியில் அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 15-ம் தேதி நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸைச் சேர்ந்த சித்தராமையாவின் பதவிக் காலம் மே மாதம் 28-ம் தேதி முடிவடையும் நிலையில், புதிய அரசைத் தேர்வு செய்வதற்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 17-ம் தேதி தொடங்க உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் சீட்டும் வழங்கப்பட உள்ளது.

 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#15
[h=1]இரட்டைப் பாதையில் ரயில் ஓட்டம்[/h]

செங்கோட்டை, புனலூர் வழித்தடத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தாம்பரம்- கொல்லம் சிறப்பு ரயில் மார்ச் 31 அன்று இயக்கப்பட்டது. தமிழக - கேரள எல்லையான திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாகப் பல்வேறு ரயில்கள் மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டுவந்தன. இந்த வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக, 2010 செப்டம்பர் 20-ம் தேதி முதல் ரயில்கள் நிறுத்தப்பட்டன. அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்த நிலையில், செங்கோட்டை, புனலூர் வழித்தடத்தில் தாம்பரம் - கொல்லம் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்துவந்த சென்னை - மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து, சென்னை - மதுரை இரட்டை பாதையில் 2-வது வழித்தடத்தில் மார்ச் 30 முதல் ரயில்கள் ஓடத் தொடங்கின.
காவிரி: விளக்கம் கோரி மத்திய அரசு மனுபிப்ரவரி 16 அன்று வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவை என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மார்ச் 31 அன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையும் ஒரு காரணமாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்துத் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களும் மாறுபட்ட கருத்துகளைக் கூறுவதாகவும் மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதேபோல தீர்ப்பை அமல்படுத்தாததைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தது.
துணைவேந்தர் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைப் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் ஏப்ரல் 5 அன்று பிறப்பித்தார். இந்தப் பதவியில் சூரப்பா துணைவேந்தராகப் பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார். எம்.கே.சூரப்பா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகக் கடந்த 2009 முதல் 2015 வரை 6 ஆண்டுகள் பணியாற்றியவர். உலோகப் பொறியியல் துறையில் பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ள அவர், 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகார்களில் உடனடியாகக் கைதுசெய்யக் கூடாது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு ஏப்ரல் 2 அன்று சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்தச் சட்டம் பல நேரம் அப்பாவி மக்கள் மீது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனத் தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக வட இந்தியாவின் சில பகுதிகளில் வன்முறைச் சம்பங்கள் நடந்தன. மத்தியப் பிரதேசத்தில் நடந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. வழக்கையும் ஒத்திவைத்தது.

டோனிக்குப் பத்ம விருது

இரண்டாம் கட்டமாகப் பத்ம விருது வழங்கும் விழா டெல்லியில் ஏப்ரல் 2 அன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது, பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி உள்பட 38 பேருக்குப் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கும் பத்மபூஷண் விருதை அளித்துக் குடியரசுத் தலைவர் கவுரவப்படுத்தினார். விருதைப் பெற ராணுவ உடையில் மிடுக்குடன் வந்து டோனி கவனம் ஈர்த்தார்.

ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்பு

ஜப்பானில் 2020-ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும், 2022-ல் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் வட கொரியா பங்கேற்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தாமஸ் பாக் மார்ச் 31 அன்று அறிவித்தார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்புக்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதால், ஐ.நா. சபையில் அமெரிக்கா தலைமையில் வட கொரியாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதன் பின்னர் தென்கொரியாவில் அண்மையில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா பங்கேற்றது. இந்தச் சூழ்நிலையில் ஜப்பான், சீனாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்க வட கொரியா சம்மதித்துள்ளது.

ரணில் ஆட்சி தப்பியது

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஏப்ரல் 5 அன்று எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்திவருகின்றன. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், இந்த இரு கட்சிகளும் தோல்வி அடைந்தன. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக 122 எம்.பி.க்கள் வாக்களித்தனர். 76 எம்.பி.க்கள் மட்டுமே தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவால் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தப்பியது.

சல்மானுக்குச் சிறை தண்டனை

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஏப்ரல் 5 அன்று தீர்ப்பளித்தது. ராஜஸ்தானில் 1998-ல் படப்பிடிப்புக்குச் சென்றபோது பகாவாத் வனப் பகுதியில் சிங்காரா, வெளிமான் போன்ற அரிய வகை மான்களை சல்மான் வேட்டையாடியதாகப் புகார் எழுந்தது. 2007-ல் சல்மான்கான் உள்பட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சல்மான் கானை விடுதலை செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி தேவ்குமார் காத்ரி, சல்மானுக்குத் தண்டனை விதித்து தீர்ப்புக் கூறினார்.

 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#16


ராணுவக் கண்காட்சி
காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டிபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாடக் கண்காட்சி ஏப்ரல் 12 அன்று தொடங்கியது. ஏப்ரல் 14 வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்தக் கண்காட்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்பட 47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களுடைய ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தினர்.
காவிரிப் போராட்டங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் உச்சம்மடைந்தன. தி.மு.க. சார்பில் காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் நடத்தினார். ஏப்ரல் 7-ல் தொடங்கிய இந்த நடைபயணப் போராட்டம் ஏப்ரல் 12-ல் நிறைவுற்றது. பா.ம.க. சார்பில் ஏப்ரல் 11 அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. உச்சகட்டமாக ஏப்ரல் 12 அன்று ராணுவக் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. மோடிக்கு எதிராகக் கறுப்புச் சட்டை அணிந்தும், கறுப்புக் கொடியுடனும் பலர் போராட்டத்தில் பங்கேற்றனர். வான் வழியாக மோடி பயணித்ததால், கறுப்பு வண்ண பலூன்களைப் பறக்கவிட்டுப் போராட்டக்காரர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
ஐ.பி.எல். இடமாற்றம்
சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் புனே நகருக்கு மாற்றப்படுவதாக ஐ.பி.எல். தலைவர் ராஜிவ் சுக்லா ஏப்ரல் 11 அன்று தெரிவித்தார். காவிரிப் போராட்டத்தை ஐ.பி.எல். போட்டிகள் நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று கூறி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஏப்ரல் 10 அன்று கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த ஐ.பி.எல். போட்டியை எதிர்த்து சென்னை அண்ணா சாலையில் போராட்டமும் நடைபெற்றது. போட்டி நடைபெற்றபோது காலணிகளை மைதானத்தில் வீசியும் எதிர்ப்பு காட்டப்பட்டது. இதற்கிடையே தொடர்ந்து ஐ.பி.எல். போட்டிகளை நடத்த சென்னை போலீஸார் பாதுகாப்பு வழங்க கைவிரித்துவிட்டதாக கூறி, ஐ.பி.எல். போட்டிகளைப் புனே நகருக்கு மாற்றுவதாக ராஜிவ் சுக்லா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஒரே தேர்தலுக்குத் தயாரா?
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயார் எனத் தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் ஏப்ரல் 11 அன்று இந்தூரில் தெரிவித்தார். “ஆனால், இதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ல் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இவற்றைப் பூர்த்தி செய்தால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பல்வேறு நாடுகளில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. எனினும் இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும்” என்று ராவத் தெரிவித்தார். மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது.
பணக்கார கட்சி பாஜக
கடந்த 2016-17ம் நிதிஆண்டில் ரூ.1,034 கோடி வருமானம் ஈட்டி நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார கட்சியாக பாஜக வலம் வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தேசிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வருமானவரி தாக்கலை ஆய்வு செய்து ஏப்ரல் 10 அன்று அறிக்கை வெளியிட்டது. இதன்படி நாட்டில் உள்ள 7 தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.1,559 கோடி. இதில் பாஜக மட்டும் 1,000 கோடியைத் தாண்டியிருக்கிறது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.225.36 கோடி. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வருமானம் ரூ.2.08 கோடி. 7 தேசிய கட்சிகளும் கடந்த கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.1,288.26 கோடி செலவு செய்துள்ளன. இதில் அதிகபட்சமாக பாஜக ரூ.710.05 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.321.66 கோடியும் செலவு செய்துள்ளன. பிற தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ரூ.173.58 கோடி வருமானம் ஈட்டியுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு 3-வது இடம்
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஏப்ரல் 4-ல் தொடங்கி 15 வரை நடைபெற்ற இந்தத் தொடரில் 19 விளையாட்டுகள் 275 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. 71 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்தது. ஒட்டுமொத்தமாக ........ பதக்கங்களை ஆஸ்திரேலியா வென்றது. ஒட்டுமொத்தமாக ....... பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது இங்கிலாந்து. இந்தியா .... தங்கம், ..... வெள்ளி, ..... வெண்கலம் என ஒட்டுமொத்தமாக ..... பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த முறை பளு தூக்குதல், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா அதிகப் பதக்கங்களைப் பெற்றது. 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியா 5-வது இடம் பிடித்திருந்த நிலையில், இந்த முறை மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
மறு ஆய்வுக் கோரி மனு
எஸ்டி, எஸ்டி சட்டத்தின் மீது சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அந்த சட்டத்தின் விதிகளை நீர்த்துப்போகச் செய்துவிடும், நாட்டின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய குந்தகத்தை விளைவிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 11 அன்று மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. எஸ்சி, எஸ்டி சட்டத்தின் மீது மார்ச் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி இதை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதில், ‘உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கிறது. இந்த தீர்ப்பினால், எஸ்சி,எஸ்டி சட்டத்தில் ஏற்பட்ட இடைவெளிகளை எந்தவிதத்திலும் நிரப்ப முடியாது. நீதித்துறை, சட்டம் இயற்றுபவர்கள் ஆகியோருக்கு இடையே எந்தவிதமான மீறலும் இருக்கக் கூடாது, ஒவ்வொருருக்கும் தனித்தனி அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதில் மற்றொருவர் தலையிடக்கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரிப்புக்கு வாழ்நாள் தடை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏப்ரல் 13 அன்று தடை விதித்தது. பனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிப் சிக்கியதை அடுத்து அவரை பிரதமர் பதவியிலிருந்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. மேலும் நவாஸ் ஷெரிப் வெளிநாட்டில் கோடிக்கணக்கான சொத்துகள் சேர்த்து வைத்ததாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதற்கிடையே குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தலில் தடை விதிக்க கோரிய வழக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிவில், நவாஸ் ஷெரிப், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த ஜஹாங்கீர் தாரீன் உள்பட பலருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#17
தமிழகத்தின் நிதியைக் குறைக்கக் கூடாது


தமிழ்நாட்டின் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஏப்ரல் 19 அன்று டெல்லியில், மத்திய நிதிக் குழு தலைவர், என்.கே.சிங்கை சந்தித்து தமிழ்நாட்டின் நிதியைக் குறைக்கக் கூடாது என்று மனு அளித்தார். 15-வது நிதிக் குழுவில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கும்போது 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கை கருத்தில் கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1971-ம் ஆண்டு, மக்கள்தொகை கணக்கிலேயே நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அத்துடன், தமிழ்நாடு பெற்றுள்ள முதலீடுகளைக் காரணம் காட்டி நிதி அளவைக் குறைக்கக்கூடாது என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கூடாது!

பள்ளிகளில் இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய பள்ளிக்கல்வித் துறை ஏப்ரல் 19 அன்று தெரிவித்தது. வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தைப் பின்பற்றாமல் பல பாடங்களை சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நடத்தப்படுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி. தாக்கல் செய்த பதில் மனுவில், இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கூடாது, மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை வாரத்துக்கு இரண்டு மணி நேரம், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


ஆறாவது பெரிய பொருளாதார நாடு
இந்தியா, உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ‘வேர்ல்ட் எகானாமிக் அவுட்லுக் - ஏப்ரல் 2018’ ஆய்வு தெரிவிக்கிறது. 2 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் இந்தியா ஆறாவது இடதுக்கு முன்னேறி, பிரான்ஸை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் இருக்கின்றன. 2018-ல் இந்தியா 7.4 சதவீதத்திலும், 2019-ல் 7.8 சதவீதத்திலும் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


வடகொரியா: அணு ஆயுத சோதனை இனி இல்லை
அணு ஆயுத சோதனைகளை நிறுத்தப்போவதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்உன் ஏப்ரல் 21 அன்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அமெரிக்காவும் தென் கொரியாவும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தொடர் ஆணுஆயுத சோதனை காரணமாக தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் கடந்த இரண்டாண்டுகளாக மோதல் வலுத்து வந்தது. இரு நாட்டு அதிபர்களுக்கு இடையில் இன்னும் ஆறு நாட்களில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அத்துடன், ஜூன் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்திக்கவிருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜோங்.
வெளிநாட்டு மாணவருக்கு வரவேற்பு
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும்விதமாக மத்திய அரசு ஏப்ரல் 18 அன்று ‘இந்தியாவில் படிக்கலாம்’ (Study in India) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முயற்சி தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களின் வருகை அதிகரிக்கும்போது சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் மதிப்பு உயர வாய்ப்பிருக்கிறது.
தற்போது இந்தியாவில் சர்வதேச மாணவர்கள் 45,000 பேர் படிக்கின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் சர்வதேச மாணவர்களை ஈர்க்க அரசு திட்டமிட்டிருக்கிறது. நேபாளம், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, எகிப்து, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் திட்டத்தின் இலக்காக இருக்கிறார்கள்.


தாமதமாகும் சந்திரயான்-2
ஏப்ரல் 2018-ல் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான்-2 திட்டம், இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஏப்ரல் 18 அன்று தெரிவித்தார். தேசிய அளவிலான குழு, சந்திரயான்-2-ல் மதிப்பாய்வுக்காகக் கூடுதல் சோதனைகளை மேற்கொள்ளவிருப்பது இந்தத் தாமதத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் 2- இந்தியா சந்திரனுக்கு அனுப்பும் இரண்டாவது திட்டம். சந்திரயான்-1 திட்டம் 2008-ம் ஆண்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. தற்போது சந்திரயான்-2, ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்10’ மூலம் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 800 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


நீதிபதி லோயா மரணம்: விசாரணை மனு தள்ளுபடி
நீதிபதி லோயாவின் மரணம் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்திரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 19 அன்று தள்ளுபடிசெய்தது.
பாஜக தலைவர் அமித் ஷாவுக்குத் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்படும் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி லோயா 2014 டிசம்பர் 1 அன்று நாக்பூரில் மரணமடைந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால், சிறப்பு விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, லோயாவின் மரணம் இயற்கையானது என்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த வழக்கு நீதிபதிகளையும் நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.


கியூபாவின் புதிய அதிபர்
கியூபா நாட்டின் புதிய அதிபராக மிக்வேல் டியாஸ்-கானெல் (Miguel Diaz-Canel) ஏப்ரல் 19 அன்று அறிவிக்கப்பட்டார். அந்நாட்டின் தேசியச் சட்டப்பேரவையில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்புக்குப் பிறகு அவர் அதிபராக அறிவிக்கப்பட்டார். கியூபாவில் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, காஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராத ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார். அதிபராக இல்லாவிட்டாலும் தேசியச் சட்டப்பேரவையின் உறுப்பினராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் ரவுல் காஸ்ட்ரோ தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டுடன் தன் பதவிக்காலம் முடிந்தவுடன் கட்சியின் தலைமைப் பொறுப்பை மிக்வேல் டியாஸ் வகிப்பார் என்று ரவுல் காஸ்ட்ரோ தெரிவித்திருக்கிறார்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#18
நீட் தேர்வு: அடுத்த நெருக்கடிநீட் தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்த சிபிஎஸ்இ உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 27 அன்று ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை மே 3 அன்று விசாரித்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் மே 6 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வைத் தமிழ்நாட்டு மாணவர்கள் ராஜஸ்தான், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குச் சென்று எழுதினர்.
காவிரி வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
மத்திய அமைச்சர்களும் பிரதமரும் கர்நாடகத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இருப்பதால், காவிரி வரைவு அறிக்கையைத் தயாரித்து ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மே 3 அன்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு உடனடியாக கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை மே 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்திவருவதால் விவசாயச் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் போராட்டங்களைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.


புதிய பாடத்திட்டம் வெளியீடு
தமிழ்நாட்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பாடப் புத்தகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 4 அன்று வெளியிட்டார். வரும் கல்வியாண்டு முதல் இந்தப் பாடத்திட்டம் தமிழகப் பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது. இந்தப் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பற்றி ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. இதைத் தொடர்ந்து 2, 7,10,12 –ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 2019-20 கல்வியாண்டில் மாற்றப்படவுள்ளன. தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை மாநிலவழிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும்படி இந்தப் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலக்கியத்துக்கு நோபல் பரிசு இல்லை
இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2018-ம் ஆண்டில் யாருக்கும் வழங்கப்படாது என்று அப்பரிசை வழங்கும் தி சுவீடன் அகாடெமி மே 4 அன்று அறிவித்துள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசை முடிவுசெய்யும் சுவீடிஷ் அகாடெமி உறுப்பினர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளதால் இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு யாரையும் தேர்வு செய்யப்போவதில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2018-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019-ம் ஆண்டு பரிசுக்குரியவரோடு சேர்த்து அடுத்த ஆண்டு தேர்வு செய்யப்போவதாகவும் அகாடெமி அறிவித்துள்ளது.
நீண்டகாலமாகப் பதவியிலிருக்கும் முதல்வர்
இந்தியாவில் நீண்ட காலமாகப் பதவியிலிருக்கும் மாநில முதல்வர் என்ற சாதனையை சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் படைத்திருக்கிறார். தற்போது 63 வயதாகும் பவன் குமார், 32 வயதில் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். 1993-ம் ஆண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணி என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.
1994-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று சிக்கிம் மாநில முதல்வராகப் பதவியில் அமர்ந்தார். அன்று முதல் தொடர்ந்து ஐந்து முறை தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியில் நீடித்துவருகிறார்.
அவர் ஏப்ரல் 29 அன்று, 23 ஆண்டுகள், நான்கு மாதங்கள், 17 நாட்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசுவின் சாதனையை முறியடித்திருக்கிறார்.20 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள்
பிரதமரின் மருத்துவப் பாதுகாப்புத் திட்டம் 2020-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மே 2 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டிலுள்ள 73 மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ.14,832 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருகிறது. இதில் ஆறு மருத்துவமனைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளில் 3,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீர்கெட்ட 14 இந்திய நகரங்கள்
உலக சுகாதார மையம், உலகளாவிய நகர்ப்புறக் காற்று மாசுத் தரவுகளை மே 2 அன்று வெளியிட்டது. இதில் காற்று மாசால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் உலகின் 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன. டெல்லி, வாராணசி, கான்பூர், ஃபரிதாபாத், கயா, பாட்னா, ஆக்ரா, ஸ்ரீநகர், குருகிராம், ஜெய்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசின் அளவு பி.எம். (Particulate Matter) 2.5-க்கும் அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த 20 நகரங்களில் குவைத்தில் உள்ள அல்-சலீம், சீனா, மங்கோலியாவில் உள்ள சில நகரங்கள் மட்டுமே வெளிநாட்டு நகரங்களாகும். இந்த ஆய்வுக்காக 108 நாடுகளின் 4,300 நகரங்களின் காற்று மாசு அளவிடப்பட்டிருக்கிறது.


ராணுவச் செலவில் 5-வது இடம்
உலக அளவில் ராணுவத்துக்கு அதிகமாகச் செலவிடும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (SIPRI) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் ராணுவச் செலவு 2017-ம் ஆண்டில் 5.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்திய அரசு ராணுவத்தின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 4,28,130 கோடி ரூபாயைச் செலவழித்துள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ராணுவச் செலவுகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்திருக்கின்றன.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#19
25 வயதுவரைதான் நீட்


CHENNAI, TAMIL NADU, 06/05/2018: Students along with their parents are waiting in front of NEET exam center. A scene at Asan Memorial Senior Secondary School in Chennai on Sunday. Photo: G_SRIBHARATH
நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வை எழுதுவதற்கான சி.பி.எஸ்.இ. குறிப்பிட்டிருந்த வயது வரம்பை டெல்லி உயர்நீதிமன்றம் மே 11 அன்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதன்படி, பொதுப் பிரிவில் 25 வயது வரையிலும், இட ஒதுக்கீடு பிரிவில் 30 வயது வரையிலும் நீட் தேர்வு எழுதலாம் என்ற இந்திய மருத்துவ கவுன்சில், சி.பி.எஸ்.இ.யின் பரிந்துரையை ஏற்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதே நேரம், திறந்தவெளிப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்ற சி.பி.எஸ்.இ.-ன் விதிக்குத் தடைவிதித்தது டெல்லி உயர்நீதிமன்றம். திறந்த வெளிப் பள்ளியில் படித்த மாணவர்களும் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜி.எஸ்.டி.யால் உற்பத்திக் குறைவு
இந்தியாவில் சென்ற ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.யாலும், வங்கி தொடர்பான பிரச்சினைகளாலும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) குறைந்திருப்பதாக மே 8 அன்று வெளியான ஐ.நா.வின் 2018 ஆசிய பசிபிக் பொருளாதாரச் சமூக ஆணையத்தின் ஆய்வு (ESCAP) தெரிவித்தது. இந்த இரண்டு பிரச்சினைகளாலும் 2016-ம் ஆண்டு 7.1 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி, 2017-ம் ஆண்டில் 6.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்த அறிக்கையில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 2018-ம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.4 சதவீதம் என்று படிப்படியாக முன்னேறும் என்று கூறப்பட்டிருக்கிறது.


உலகின் இரண்டாவது பழமையான பாறை
உலகின் இரண்டாவது பழமையான பாறையாக ஒடிசாவின் சம்புவா பகுதியில் எட்டு ஆண்டுகளுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஸிர்கோன்’ ( ) பாறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் ‘சயின்டிஃபிக் ரிபோர்ட்ஸ்’ இதழில் இது தொடர்பாக வெளியான கட்டுரையில், 420 கோடி ஆண்டுகள் பழமையான ஸிர்கான் பாறை உலகின் இரண்டாவது பழமையான பாறை என்ற தகவல் வெளியானது.
கொல்கத்தாப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் கர்டின் (‘Curtin’) பல்கலைக்கழகம், மலேசியா, சீனாவைச் சேர்ந்த புவியியல் வல்லுநர்கள் இணைந்து ஆராய்ச்சி செய்து இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி அறிவித்திருக்கின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் ஜாக் ஹில்ஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஸிர்கான் பாறைதான் உலகில் 440 கோடி ஆண்டுகள் பழமையான பாறையாகத் தற்போதுவரை அறியப்பட்டிருக்கிறது.


கூகுள் அசிஸ்டெண்ட்டின் புதிய அறிமுகம்
கூகுள் அசிஸ்டெண்ட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு ‘டிஜிட்டல் ஏ.ஐ.’ உதவியாளர் அம்சமான ‘டூப்லெக்ஸ்’ தொழில்நுட்பத்தை அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மே 8 அன்று அறிமுகம் செய்திருக்கிறார். கூகுள் அசிஸ்டெண்ட்டின் இந்த ‘டிஜிட்டல் ஏ.ஐ.’ உதவியாளர் அம்சம் மனிதக் குரலில் பேசும் திறனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி ஒரு சிகை அழகு கலைஞரிடம் எப்படி ‘அப்பாய்ண்மெண்ட்’ வாங்கலாம் என்பதைச் சுந்தர் பிச்சை இந்த ‘டூப்லெக்ஸ்’ தொழில்நுட்பத்தின் அறிமுக மாநாட்டில் விளக்கினார்.


நாலாவது சக்திவாய்ந்த நாடு
ஆசிய-பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘லோவி இன்ஸ்டிடியூட்’ மே 8 அன்று வெளியிட்ட இந்த ‘ஆசிய பவர் இண்டக்ஸ்’ அறிக்கையில் 25 நாடுகள் இடம்பெற்றிருந்தன. பொருளாதார வளங்கள், ராணுவத் திறன், தூதரகத் தாக்கம், பொருளாதார உறவுகள், தாங்குதிறன், வருங்காலப் போக்குகள், பாதுகாப்பு அமைப்புகள், கலாச்சாரத் தாக்கம் ஆகிய எட்டு அம்சங்களை அடிப்படையாகவைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பசிபிக் பகுதியின் முதல் பெரிய சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் ஜப்பானும் இருக்கின்றன.


ஈரான் அணு ஒப்பந்தம்: வெளியேறிய அமெரிக்கா
ஈரானுடன் 2015-ல் ஏற்படுத்திக் கொண்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக மே 8 அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா வெளியேறினாலும், ஈரான் அணு ஒப்பந்தம் அல்லது JCPOA என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினாலும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த ஒப்பந்தம் முற்றிலும் உடையாமல் பாதுகாக்கின்றன. ஈரான் அணு குண்டைத் தயாரிக்கப்படுவதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது டிரம்ப் நிர்வாகம். அத்துடன், இந்த ஒப்பந்தம் ஈரானின் ஏவுகணை திட்டத்தை உள்ளடக்கியதாக இல்லை என்று குற்றம்சுமத்தியிருக்கிறது. ஏமன், சிரியா பிரச்சினைகளில் ஈரானின் செயல்பாடுகளையும் அமெரிக்கா கேள்விக்குட்படுத்தி இருக்கிறது.


மலேசியா: மீண்டும் பிரதமரானார் மஹாதீர்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் பின் முஹமது 15 ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று மே 10 அன்று பிரதமராகப் பொறுப்பேற்றார். 60 ஆண்டுகளாக மலேசியாவில் ஆட்சி புரிந்த ‘பாரிசன் நேஷனல்’ கூட்டணியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார் மஹாதீர். 92 வயதில் இந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அவரது ‘பாகட்டன் ஹராப்பன்’ கட்சி இந்தத் தேர்தலில் 115 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.


‘டிஜிட்டல் இந்தியா இன்டர்ன்ஷிப்’ திட்டம்
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), தொழில்நுட்ப மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக ‘டிஜிட்டல் இந்தியா இன்டர்ன்ஷிப்’ என்ற திட்டத்தை மே 9 அன்று அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்கீழ், இன்டர்ன்ஷிப்புக்குத் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 10, 000 ஊதியமாக வழங்கப்படும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மின்னணு, தகவல் தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, ‘சைபர்’ சட்டம், ‘ஐடி’ சட்டம், டிஜிட்டல் தடயஅறிவியல், ‘க்ளவுட் கம்ப்யூட்டிங்’, ‘டிஜிட்டல் பேமேண்ட்’ உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள் பயிற்சிபெற முடியும். இந்தத் திட்டத்துக்கு இளங்கலை, முதுகலைப் பொறியியல், தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#20
அமைகிறது காவிரி மேலாண்மை ஆணையம்காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் மத்திய அரசு மாற்றியமைத்த வரைவு செயல்திட்ட அறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மே 18 அன்று ஒப்புதல் வழங்கியது. தென்மேற்கு பருவ மழைக் காலம் தொடங்கும் முன், பத்து பேர் கொண்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பது பற்றி அரசிதழில் மத்திய அரசு வெளியிடவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கும் வரைவு செயல்திட்டத்தின்படி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் இனி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ‘காவிரி மேலாண்மை ஆணையத்தை’தான் அணுக வேண்டும். இறுதி முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இந்த ஆணையம் டெல்லியில் அமைக்கப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.


கர்நாடகா: எடியூரப்பா ராஜினாமா
தேர்தல் ஆணையம் மே 15 அன்று கர்நாடக தேர்தல் முடிவுகளை வெளியிட்டது. இதில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆளுநரிடம் உரிமை கோரியது.
ஆனால், இந்த முயற்சியை முறியடித்து பாஜகவின் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக மே 17 அன்று பதவியேற்றுகொண்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மே 19 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்குமுன் எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்தார்.


நாட்டின் தூய்மையான நகரங்கள்
மத்திய குடியிருப்பு, நகர விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, ‘ஸ்வச் சர்வேக்ஷ்ன் 2018’ முடிவுகளை மே 16 அன்று வெளியிட்டார். இதில் இரண்டாவது ஆண்டாகத் தொடர்ந்து இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தூரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை போபாலும், மூன்றாவது இடத்தை சண்டிகரும் பிடித்திருக்கின்றன.
இந்தத் தூய்மையான நகரங்களுக்கான ஆய்வில், சென்ற ஆண்டு 11-வது இடத்திலிருந்த சண்டிகர் இந்த ஆண்டு மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. மாநிலங்களில் தூய்மை தொடர்பான செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் சிறந்த மாநிலமாக ஜார்கண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.


2,39,000 பெண் குழந்தைகள் இறப்பு
இந்தியாவில் பாலினப் பாகுபாட்டால் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 39 ஆயிரம் பெண் குழந்தைகள் இறப்பதாக மே 14 அன்று லான்செட் மருத்துவ இதழில் அறிக்கை வெளியானது. நாட்டிலுள்ள 29 மாநிலங்களிலும் இத்தகைய பாலினப் பாகுபாட்டு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. பிரசவத்துக்கு முன் இறந்த குழந்தைகளின் தரவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. இந்த ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் வட இந்தியாவின் உத்திர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் அதிகமாக இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.


3-வது பெரிய சூரிய ஆற்றல் சந்தை
உலகின் மூன்றாவது பெரிய சூரிய ஆற்றல் சந்தையாக இந்தியா 2017-ம் ஆண்டில் உருவெடுத்திருக்கிறது. சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தைச் சென்ற ஆண்டு பிடித்திருப்பதாக ‘மெர்காம் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டில் இந்தியா 9.6 GW சூரிய ஆற்றல் நிறுவல்களைச் செய்திருக்கிறது.
2016-ம் ஆண்டில் நிறுவப்பட்ட 4.3 GW சூரிய ஆற்றலுடன் ஒப்பிடும்போது, சென்ற ஆண்டு சூரிய ஆற்றல் வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இதனால், இந்தியாவின் ஒட்டுமொத்த சூரிய ஆற்றல் திறன் டிசம்பர் 2017-ம் 19.6 GW ஆக அதிகரித்திருக்கிறது.


இஸ்ரோ: சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள்
இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்கலன்களையும் செயற்கைக்கோள்களையும் செலுத்துவதற்குச் சூழலுக்கு உகந்த எரிபொருளை ‘ஹைட்ரோக்ஸில் அமோனியம் நைட்ரேட்’டைப் (HAN) பயன்படுத்தி தயாரித்திருக்கின்றனர். இஸ்ரோவால் இதுவரை வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த ஹைட்ராஸைன் எரிபொருளுக்குப் பதிலாக இனி ஹைட்ரோக்ஸில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரோவின் ‘எல்பிஎஸ்சி’ (Liquid Propulsion Systems Centre) மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிபொருளை ஆறு மாத சோதனைக்குப் பிறகு வெளியிட்டிருக்கின்றனர். ஹைட்ராஸைன் எரிபொருளைவிட ஹைட்ரோக்ஸில் அமோனியம் நைட்ரேட் குறைவான நச்சுத்தன்மையுடனும் பாதுகாப்பு அம்சங்களுடனும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
ஷிவாங்கி பதக்: சிகரம் தொட்ட இளம்பெண்
ஹரியாணாவைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஷிவாங்கி பதக், எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் மீது நேபாளம் வழியாக ஏறிய இளம்பெண் என்ற சாதனையை மே 17 அன்று நிகழ்த்தியிருக்கிறார். எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் மீது ஏறிய மாற்றுத்திறனாளி அருணிமா சின்ஹாவால் ஈர்க்கப்பட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியதாகத் தெரிவித்திருக்கிறார் ஷிவாங்கி.

இவருக்குமுன், 2014-ம் ஆண்டு, திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி 13 வயது மாளவத் பூர்ணா சாதனையைப் படைத்திருக்கிறார்.
அமெரிக்கா: பள்ளி துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சாண்டே ஃபே மேல்நிலைப் பள்ளியில் மே 18 அன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பத்துப் பேர் பலியாகியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான டிமிட்ரியோஸ் பாகார்ட்ஸ் என்ற 17வயது மாணவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் தொடர்ந்து பள்ளிகளில் நடைபெற்றுவரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.