சைனஸ்- sinus

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,628
Location
chennai
#1
[h=1]சைனஸ்- SINUS[/h]
சைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது?

1. சளி மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி)யால் ஏற்படும் மூக்கடைப்பு தொடர்ந்து இருக்குமானால் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

2. மதுப் பழக்கம், புகைப் பழக்கத்தைக் கைவிடவும். இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து, வீங்கச் செய்யும்.

3. ஒவ்வாமை இருக்குமானால், எதனால் ஏற்படுகிறது என்று கவனிக்கவும்.

யோகா எவ்வாறு உதவுகிறது

1) ‘ஓம்’ மந்திர உட்சாடனை சைனஸ் பிரச்சனைகள் தீர உதவுவதுடன், வராமலும் தடுக்கிறது. உட்சாடனையின்போது ஏற்படும் அதிர்வுகள் சைனஸ்களில் கிருமிகள் சேராவண்ணம் தடுத்து, சைனஸ்களை ஆரோக்கியமாக்குகின்றன. இதனால் மூக்குக்கும் சைனஸ்களுக்கும் எவ்விதத் தடையும் இல்லாமல் காற்று சென்று வருகிறது. காற்று தடையில்லாமல் செல்வதால் சுரக்கப்படும் திரவங்கள் சைனஸ்களில் இருந்து எளிதாக அகற்றப்படுகின்றன.

2) ஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்:

இவை அனைத்துமே உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், தளர்வு நிலையையும் அளிக்கின்றன. அது மட்டுமில்லாமல் உடலின் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிப்பதாக ஆரம்ப நிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உடற்பயிற்சிபோல் செய்யாமல், தகுந்த விழிப்பு உணர்வுடன் மூச்சு, உடல் மற்றும் மனம் ஒருங்கிணைந்தாற்போல் இருக்குமாறு செய்ய வேண்டும். இவை மேற்கூறியது போல் சைனஸ்களின் காற்றோட்டத்தைப் பாதுகாக்கின்றன.

3) யோகா,
ரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதால் சைனஸ்களால் ஏற்படும் தலைபாரம், முகத்தில், கண்களில் வலி போன்றவற்றுக்கு உதவுகின்றன.

4) ஹடயோகாவில் உள்ள ஹடகிரியைகளில் ஒன்றாகக் கருதப்படும் நேத்திக் கிரியைகள் சைனஸ் வியாதிகள் வராமல் தடுப்பதற்கும், அதில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

நேத்தி என்பது மூக்கு, தொண்டைப் பகுதியை, திரவம் அல்லது நூல்கொண்டு சுத்தம் செய்வது. இது சளியை அகற்றுவதுடன் சவ்வுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, மூக்குக்கும் சைனஸ்களுக்கும் உள்ள தடையை அகற்றுகிறது. நேத்திக் கிரியைகளை சரியான முறையில் பயின்று பின்பற்றவும்!

மிளகு, மஞ்சள், தேன்
சளிப் பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள 10 முதல் 12 முழு மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை உடைத்துக்கொள்ள வேண்டும், பவுடராக்கக் கூடாது. அதை 2 ஸ்பூன் தேனில் ஓர் இரவு அல்லது எட்டரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். காலையில் அதை எடுத்து மென்று தின்றால் சளி கரைந்துவிடும்.

அல்லது மஞ்சளை இரண்டு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம். அனைத்துப் பால் பொருட்களையும் விட்டாலே சளி மிகவும் குறைந்துவிடும்.
எந்தவித அலர்ஜியாக இருந்தாலும், தோல் அலர்ஜி என்று மட்டுமல்ல, வேப்பிலையை உருண்டை செய்து தேனில் நனைத்து முழுங்கிவர ஒவ்வாமை சரியாகும்.

தினமும் தேன் சாப்பிடுவது சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் உதவி செய்யும். 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,628
Location
chennai
#6
re: சைனஸ் - Symptoms of Sinus

சைனஸ் உடலுக்கு மைனஸ்!

''காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா!'' என்கிறார் பட்டினத்தார். ஒருகணம் சுவாசம் நின்றாலும் உயிர் தடுமாறிவிடும். சுவாசத்தில் பிரச்னையை ஏற்படுத்தி நம்மை மூச்சுத் திணறவைக்கும் ஒரு பிரச்னை சைனஸ்! நாளடைவில் ஆஸ்துமாவாக மாறவும் வாய்ப்பு உள்ள சைனஸ் குறைபாடுகுறித்து 'காது மூக்கு தொண்டை’ மருத்துவர் எம்.குமரேசன் விரிவாகப் பேசினார்.

''சைனஸ் என்பது என்ன?''
''நம் தலையில் நிறைய எலும்புகள் இருக்கின்றன. இந்த எலும்புகளில் இருக்கும் வெற்று அறைகளைத்தான் சைனஸ் என்று சொல்கிறோம். இந்த சைனஸ் அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இந்த சைனஸ் அறைகளை, பொட்டு எலும்புக் காற்று அறை (நெற்றியில் இருப்பது), மெத்தை எலும்புக் காற்று அறை (இரு கண்களுக்கு இடையில் இருப்பது), கன்ன எலும்புக் காற்று அறை (இரண்டு கன்னங்களிலும் இருப்பது), ஆப்பு எலும்புக் காற்று அறை (பின்னந்தலையில் இருப்பது) என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இந்த நான்கு காற்று அறைகளில் உருவாகும் அனைத்துத் திரவங்களும் மூக்குக்குத்தான் வருகிறது.''''சைனஸ் குறைபாடு எப்போது வருகிறது?''

''சாதாரணமாக சைனஸ் அறைகளில் இருந்து திரவம் சுரந்துகொண்டே இருக்க வேண்டும். இந்தக் காற்று அறைகளின் வடிகால்கள் அடைபடும்போது, சைனஸ் தொல்லை (Sinusitis)ஏற்படுகிறது. நீண்ட நாட்கள் அடைபட்டால், சீழ்பிடித்துவிடும். சைனஸ் பிரச்னையாக மாறும்போது 'சைனஸைட்டிஸ்’ என்று சொல்கிறோம். மூக்கின் உள்ளே இருக்கும் 'மியூகஸ் மெம்ப்ரேன் (Mucous membrane) என்ற நுண்ணிய இழைகள்தான் வெளியில் உள்ள மாசு எதுவும் மூக்கினுள் நுழைந்துவிட முடியாதபடி வடிகாலாகச் செயல்படுகின்றன. சைனஸ்


அறைகளைச் சூழ்ந்திருக்கும் இந்த சளிச் சவ்வினால்தான்
சுவாசம் ஈரத்தன்மையுடன் இருக்கிறது. வெளியில் இருந்துவரும் வறண்ட காற்றை இந்த 'மியூகஸ் மெம்ப்ரேன்’தான் வடிகட்டி ஈரத்தன்மையுடன் நுரையீரலுக்குள் அனுப்புகிறது.

இந்த சைனஸ் அறைகளுக்குள் அடைப்பு ஏற்படும்போது, சைனஸைட்டிஸ் என்ற பிரச்னையாக மாறுகிறது.''

''சைனஸைட்டிஸ் வருவதற்கு என்ன காரணம்?''
''மூக்கு அடைப்பதால்தான் சைனஸ் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், சளி. ஒவ்வாமை காரணமாகச் சளி ஏற்படுகிறது. உணவால் ஏற்படும் ஒவ்வாமை, காற்று மாசு காரணமாக ஏற்படும் ஒவ்வாமை என இரண்டு வகைகள் இருக்கின்றன.

சளியைத் தவிர 'சைனஸைட்டிஸ்’ வர இன்னொரு காரணம் மூக்கின் அமைப்பு. மூக்கு எல்லோருக்கும் நேராக இருப்பது இல்லை. சிலருக்கு வளைவாக இருக்கும். மூக்கை வலது பாகம், இடது பாகம் என்று இரண்டாகப் பிரித்தால், இதன் இடையில் இருக்கும் நடுச்சுவர் சிலருக்கு வளைந்து இருக்கும். மூக்கின் நடுச்சுவர் வளைந்து இருக்கும்போது, உள்ளுக்குள் இருக்கும் கழிவுப் பொருட்கள் வெளியேறாமல் பாதையை அடைத்துக்கொள்ளும். இதனாலும் சைனஸைட்டிஸ் வரும்.''

''சைனஸில் வேறு வகைகள் இருக்கின்றனவா?''
''சாதாரணமாக எல்லோருக்குமே ஜலதோஷப் பிரச்னை வந்திருக்கும். அதிகபட்சமாக ஒருவாரத்தில் சரியாகிவிடும். ஒரு வாரத்துக்கும் மேல் இருந்தால் அது சைனஸைட்டிஸாக இருக்கலாம்.

இந்தப் பாதிப்பு வரும் காலகட்டத்தை வைத்து மூன்று வகைகளாகச் சொல்லலாம். சளித் தொல்லை நான்கு வாரம் தொடர்ந்து இருந்தால் அதை துரித நோய்(Acute sinusitis) என்றும், நான்கு வாரங்களுக்கு மேல் 12 வாரங்கள் வரை இருந்தால் நோயுடைய துரித நோய் (Sub acute sinusitis)என்றும், மூன்று மாதங்களுக்கு மேல் இருந்தால் அது நீண்ட நாள் நோய் ( Chronic sinusitis) என்றும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.''

''சைனஸைட்டிஸ் அறிகுறிகள் என்னென்ன?''
''மூக்கு அடைத்திருப்பதை நாமே தெரிந்துகொள்ள முடியும். இருமல், தொண்டையில் வலி, காய்ச்சல், மூக்கில் இருந்து ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். வாசனை தெரியாது, சைனஸ் எலும்புகளின் மேல் தொட்டுப் பார்த்தால், வலி இருக்கும். மூக்குக்குள் தொற்று ஏற்பட்டால், கெட்ட நாற்றம் அடிக்கும். சாதாரண சளித் தொல்லையோடு இந்த அறிகுறிகளும் இருந்தால், அது சைனஸைட்டிஸாக இருக்கலாம்.''

''சைனஸ் வராமல் இருப்பதற்கான வழிமுறைகள்பற்றிச் சொல்லுங்கள் டாக்டர்...''
'' 'சிலர் ஏ.சி. அறையில் இருப்பது உடம்புக்குச் சேரவில்லை’ என்று சொல்வார்கள். நம் சுற்றுப்புறச்சூழல் அசுத்தமாக இருக்கிறது என்பார்கள். ஆனால், நாம் இன்று ஏ.சி. அறையிலும், மாசுபட்ட சூழலிலும்தான் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொள்வதே நல்லது.

இதற்குச் சுய அக்கறைதான் முதல் சிகிச்சை. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, சத்தான ஆகாரங்கள் உண்பது, உடற்பயிற்சி செய்வது, ஆவி பிடிப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக மூச்சுப் பயிற்சி (பிராணயாமா) செய்துவந்தால், சைனஸ் தொந்தரவோ, ஆஸ்துமாவோ நம்மை எளிதில் நெருங்க முடியாது.''

''சைனஸ்தான் ஆஸ்துமாவாக மாறுகிறதா?''
''சைனஸ் மூக்கில் இருக்கும் பிரச்னை. ஆஸ்துமா என்பது நுரையீரல் பிரச்னை. இரண்டுக்கும் அடிப்படைக் காரணம் ஒவ்வாமை. ஆனால், இரண்டும் வெவ்வேறானவை. நுரையீரலில் வரும் சுவாசப் பிரச்னை என்பது நுரையீரலுக்குக் காற்று செல்லும் வழி சுருங்கி, சுவாசிக்க முடியாமல் சிரமமப்படுவது. இந்தக் கட்டத்தில் ஸ்டீராய்டு, ஆன்டிபயாடிக் மருந்து வகைகள் கொடுப்பார்கள்.

எல்லா சைனஸும் ஆஸ்துமாவாக மாறும் என்று சொல்ல முடியாது. நுரை யீரலுக்குக் காற்று செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள சுருக்கம் காரணமாக, மூக்கில் சைனஸ் குறைபாடு ஆரம்பிக்கும். ஆஸ்துமாவின் ஆரம்பக் கட்ட அறிகுறியாகவும் சைனஸ் இருக்கலாம். ஆனால், எல்லா சைனஸ் குறைபாடும் ஆஸ்துமாவாக மாறுவது இல்லை.''

''சைனஸ் பிரச்னைக்கு என்ன சிகிச்சை?''
''மூக்குக்குள் சதை வளர்ந்திருந்தால் அடைப்பை நீக்குவதற்கோ, மூக்குக்குள் இருக்கும் நடு எலும்பு வளைந்து இருந்தால் அதைச் சரிசெய்வதற்கோ, அறுவைச் சிகிச்சை செய்ய நேரும். இதன் பிறகு சளி அடைப்புத் தொல்லை இல்லாமல் போய்விடும். மாசு ஒவ்வாமை காரணமாக சிலர் தும்மிக்கொண்டு இருப்பார்கள். இதனால் மூக்குக்குள் வீங்கிப்போயும் அடைப்பு ஏற்படும். பொதுவாக, ஒவ்வாமையால் வருவதுதான் சைனஸ் குறைபாடு. இந்தக் குறைபாட்டை மருந்து மாத்திரைகள் மூலமே குணப்படுத்திவிடலாம். ஆனால், நாள்பட்ட 'சைனஸைட்டிஸ்’ என்று மாறிவிட்டால், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும்.''
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.