ஜூஸ் குடிக்கும் முன் கவனியுங்கள்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஜூஸ் குடிக்கும் முன் கவனியுங்கள்!


கோடை உணவு

வசதி படைத்தவர்கள் தண்ணீரைக் கூடத் தரம் பார்த்துக் குடிக்கலாம். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கொளுத்தும் கோடையை சமாளிக்க, தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற ஜூஸ், கூழ், பழங்கள்தான் அவர்களுக்கு ஆறுதல்.

இவை உடனடியாக அவர்களது தாகத்தையும் களைப்பையும் போக்கினாலும், பின்னணியில் உள்ள ஆபத்தை யாரும் உணர்வது இல்லை. வெயிலில் நீண்ட நேரம் வைக்கப்படும் எந்த உணவுப் பொருளிலும் கெட்டுப்போகும் தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார் பொதுநல
மருத்துவர் அரசு மோகன்.

``கோடைக்காலம் தொடங்கிவிட்டால் சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் ஃபுரூட் ஜூஸ், லஸ்ஸி, ஃபுரூட் சாலட், கரும்பு ஜூஸ், சர்பத், பனஞ்சாறு, கேழ்வரகுக் கூழ், தர்பூசணி, ஐஸ்கிரீம் போன்றவற்றின் வியாபாரம் அதிக அளவில் நடைபெறும்.

இவற்றை நோயைப் பரப்பும் ஈக்கள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றிடம் இருந்து பாதுகாக்கும் விதத்தில் சுகாதாரமான முறையில் மூடி வைப்பது கிடையாது. ஏதோ பெயரளவுக்கு கம்பி வலையால் மூடி வைக்கின்றனர். சிலர் பேப்பரால் மூடி வைக்கின்றனர். பெரும்பாலும் இவை திறந்த நிலையிலேயே விற்கப்படுகின்றன.

தள்ளுவண்டியில் ஜூஸ், லஸ்ஸி, ஐஸ்கிரீம் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் அதிக விலை கொடுத்து சுகாதாரமான முறையில் நன்றாக சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரை வாங்க முடியாது. இவர்கள் தரமான தண்ணீர் பயன்படுத்துவது கிடையாது. தெருக்குழாய் மற்றும் லாரிகளில் விநியோகிக்கப்படும் தண்ணீரை உபயோகப்படுத்துகின்றனர். ஒரு சிலர் சாலையோரம் பெரிய பெரிய பிளாஸ்டிக் தொட்டிகளில் பல நாட்களாக அடைத்து வைக்கப்பட்ட நீரை பயன்படுத்துகின்றனர்.

ஜூஸ், லஸ்ஸி தயாரிக்க பயன்படுத்துகின்ற மிக்ஸி, பழங்களை அறுக்கிற கத்தி போன்றவற்றை ஒவ்வொரு தடவையும் நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை மிக்ஸியில் போட்டு அரைக்கும் முன் சுத்தமான நீரில் நன்றாக கழுவ வேண்டும்.

கேழ்வரகுக் கூழ், ஜூஸ் ஆகியவற்றை ஊற்றி கொடுக்கும் டம்ளர் போன்ற பாத்திரங்களை சுத்தமாக கழுவிய பின்னரே, அடுத்த முறை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானோர் அவ்வாறு செய்வது கிடையாது. மிக்ஸி, டம்ளர் போன்றவற்றை திறந்தவெளியில் வைப்பதால், அவற்றில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை, தூசு, நோயைப் பரப்புகின்ற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் நிரந்தரமாக தங்கவும் கூடும்.

பழங்கள், லஸ்ஸி தயாரிக்க பயன்படுத்துகின்ற தயிர், நுங்கு போன்றவற்றை அவற்றின் இயல்பு தன்மை மாறாதவாறு ஐஸ் பெட்டியில் வைத்திருக்க வேண்டும். அவற்றை நீண்ட நேரம் வெயிலில் வைத்திருப்பதால் அவை வாடி வதங்கி சுவை இழந்து விடுகின்றன. எந்த பழமாக இருந்தாலும் அறுத்த உடனே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது.

நுங்கையும் உடனே சாப்பிடுவது பயன் தரும். ஆனால், ஃபுரூட் சாலட் என்ற பெயரில் விற்கப்படும் பழவகைகள், நுங்கு போன்றவை பல மணி நேரத்துக்கு முன்பாகவே வெட்டப்பட்டு சரியாக சுத்தம் செய்யப்படாத கிண்ணங்களிலோ, கூடைகளிலோ சரியாக மூடப்படாமல் வைக்கப்படுகின்றன.

ஜூஸ், லஸ்ஸி, ஃபுரூட் மிக்சர் போன்றவற்றைத் தயாரிக்க தனித்தனியே மிக்ஸி ஜார் கிடையாது. அதோடு, கூட்டத்தை சமாளிக்க சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் மிக்ஸி ஜார், டம்ளர் போன்றவற்றை சரியாக சுத்தப்படுத்தாமல் உபயோகப்படுத்துகின்றனர். டம்ளர்களை நன்கு சுத்தம் செய்து கொடுப்பது இல்லை.

அதனால் அவற்றில் தங்கியுள்ள கண்ணுக்குத் தெரியாத தூசு, கிருமிகள் நேரடியாக வயிற்றுக்குள் செல்லும் ஆபத்து இருக்கிறது. வெயிலில் நீண்ட நேரம் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்படுகின்ற பழங்கள், நுங்கு, கேழ்வரகுக் கூழ் முதலானவற்றில் சீக்கிரமாக கெட்டுப்போகின்ற தன்மை அதிகமாக காணப்படும்.

இந்த உணவுப்பண்டங்களில் நோயைப் பரப்பு கின்ற வைரஸ், பாக்டீரியா விரைவில் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.கோடைக்காலத்தில் சுகாதாரமற்ற முறையில் சாலையோரங்களில் மற்றும் திறந்தவெளிகளில் தயாரித்து விற்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் வயிற்றுப்போக்கு, அதன் காரணமாக ஏற்படும் நீர்ச்சத்து குறைதல், களைப்பு, மயக்கம் அடைதல் என பலவிதமான பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

குழந்தைகள் இந்த உணவுகளை உண்டதும் தலைசுற்றல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டால், அருகில் உள்ள குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். முதியவர்கள் மயக்கம் அடைந்தால் தாமதிக்காமல் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் செலுத்த வேண்டும். ஒரு சிலர் நினைவுடன் இருப்பார்கள். அவர்களுக்கும் நிறைய தண்ணீரில் எலக்ட்ரால் பவுடர் கலந்து குடிக்க கொடுக்க வேண்டும். வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து அவதிப்படுபவர்கள் ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், புட்டு சாப்பிடுவது பயன்தரும்.

கோடையில் நீண்ட தூரம் பயணம் செய்யும் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்பவர்கள், சிறுவர், சிறுமியருடன் கடற்கரை, உயிரியல் பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள் தண்ணீர், ஜூஸ், பழங்கள் போன்றவற்றை கையுடன் எடுத்துச் செல்வதே நல்லது. குடிக்கிற தண்ணீரை நன்றாகக் காய்ச்சி எடுத்து செல்ல வேண்டும். வெளியே செல்லும்போது எடுத்துச் செல்லும் பழங்கள், தண்ணீர் தீர்ந்துவிட்டால், தரமான கடைகளில், தரமான பழங்கள், நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றை வாங்கி உபயோகிப்பது நல்லது’’ என்கிறார் டாக்டர் அரசு மோகன்.

கோடையில் நீண்ட தூரம் பயணம் செய்யும் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்பவர்கள், சிறுவர், சிறுமியருடன் கடற்கரை, உயிரியல் பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள் தண்ணீர், ஜூஸ், பழங்கள் போன்றவற்றை கையுடன் எடுத்துச் செல்வதே நல்லது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.