டே கேர் சர்ஜரி - Day Care Surgery

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
காலையில் ஆபரேஷன் மாலையில் வீடு!

சில நாட்களுக்கு முன்பே அட்மிட் ஆக வேண்டும்... சிகிச்சை முடிந்த முதல் சில நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி... பிறகு சாதாரணப் பிரிவில் சில நாட்கள்...

வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகும், ‘நிற்கக்கூடாது, நடக்கக் கூடாது, படி ஏறக் கூடாது’ என ஏகப்பட்ட கண்டிஷன்கள்... மறுபடி மறுபடி மருத்துவமனை விசிட்... சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு ஓய்வு... சிறியதாக ஒரு ஆபரேஷன் என்றாலும், மனதும் உடலும் ஆடிப் போகும் அந்தக் காலத்தில். இன்று?

அலுவலகம் செல்கிற மாதிரி காலையில் கிளம்பிப் போய் அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு, அன்று மாலையே வீட்டுக்குத் திரும்பலாம்... உடனே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். எல்லாம் நவீன மருத்துவத்தின் முன்னேற்றமான ‘டே கேர்’ அறுவை சிகிச்சை களின் உபயம்!

எந்த வகையான நோய்களுக்கு ‘டே கேர்’ அறுவை சிகிச்சைகள் பலனளிக்கின்றன? இந்தத் துறையில் வெற்றிகரமாக இயங்கிவரும் மூன்று நிபுணர்களிடம் கேட்டோம்...டாக்டர் சுகுமார் (குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர்)‘‘டே கேர் சர்ஜரி என்பது ஒரு மணி நேரத்துக்குள் செய்யக்கூடிய நவீனமுறை அறுவை சிகிச்சை. குடல் மற்றும் இரைப்பை தொடர்பான அறுவை சிகிச்சைகளுக்குப் பெரிதும் பயன்படுகிறது.

டே கேர் யூனிட் மருத்துவர்களும் செவிலியர்களும் இதற்கென்றே பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர்கள் கூட நவீன முறையில் பயிற்சி எடுத்திருப்பார்கள். பருமன் பிரச்னை, இதயநோய், நுரையீரலில் நோய்த் தொற்று, ரத்தக்கசிவு ஆகிய பிரச்னைகள் இருப்பவர்களுக்கு டே கேர் சர்ஜரி செய்ய முடியாது.லேப்ரோஸ்கோப் மூலம் நிறைய டே கேர் சர்ஜரிகள் செய்கிறோம். லேப்ரோஸ்கோபிக் கொலிசிஸ்டக்டமி (laparoscopic cholecystectomy) மூலம் பித்தப்பையை அகற்றும் சிகிச்சையை எளிதாக நிகழ்த்தலாம்.

அப்பெண்டிக்ஸ் எனப்படும் குடல்வால் அகற்றும் சிகிச்சை, ஹெர்னியா(குடல் இறக்கம்) சம்பந்தப்பட்ட பிரச்னைகள், பைல்ஸ்(மூலம்), ஆசனவாயில் வரும் பிஸ்டுலா(fistula) போன்றவற்றுக்கும் டே கேர் முறையில் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. உணவுக்குழாயும் உணவுப்பையும் சேர்கிற இடத்தில் ஸ்பின்டர் (sphincter) தசை பலவீனம் அடைந்தால், அதையும் லேப்ரோஸ்கோபிக் மூலம், 4 சிறிய துளைகள் இட்டு அறுவை செய்து விட முடியும். குடல் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சில நேரம் சிறுகுடல் ஒட்டிக்கொண்டு பிரச்னையை ஏற்படுத்தும்.

இதற்கு ‘அடிசன் கோலிக்’ (adhesion colic) என்று பெயர். இதையும் ஒரு மணி நேரத்துக்குள் எளிதாக சர்ஜரி மூலம் சரி செய்து விட முடிகிறது. டயக்னோஸ்டிக் லேப்ரோஸ்கோபிக் முறையில் கல்லீரல், கணையம், குடல் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் எளிதில் கண்டறியலாம். கணையத்தில் நீர் சேர்ந்து ஏற்படும் ‘சூடோஸிஸ்’ பிரச்னையையும் லேப்ரோஸ்கோப் மூலம் அகற்றலாம்.

‘ரீஜினல் அனஸ்தீசியா’ என்ற மயக்க முறையில், குறிப்பிட்ட இடத்தில் உள்ள நரம்பை ப்ளாக் செய்து மரத்துப் போகச் செய்வதால் நோயாளி அறுவை சிகிச்சையின் போது பேசிய படி ரிலாக்ஸ் ஆக இருக்கலாம்.

அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு நோயாளி செல்லும் போது சிகிச்சை செய்த டாக்டரின் மொபைல் எண்ணை அவரிடம் கொடுத்து அனுப்ப வேண்டும். அவருக்கு எதுவும் பிரச்னை என்றால் டாக்டர் உடனடியாக சிகிச்சை அளிக்க தயாராக இருக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்து அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் வந்துவிடக்கூடிய தொலைவில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் டே கேர் செய்ய வேண்டும். அப்போது தான் ஏதேனும் பிரச்னை என்றால் அவசர கால சிகிச்சை அளிக்க முடியும்.

அறுவைசிகிச்சைக்கு பிறகு ஏதாவது ரத்தக்கசிவு இருந்தாலும் அட்மிட் செய்து விடுவோம். பொதுவாக, காலையில் மருத்துவமனைக்கு வந்து மாலைக்குள் அல்லது இரவில் வந்து காலையில் டிஸ்சார்ஜ் ஆகலாம். 24 மணி நேரத்துக்குள் ஒருவர் சர்ஜரி முடிந்து வீட்டுக்கு நலத்துடன் திரும்புவதே டே கேர் சர்ஜரி!’’டாக்டர் அருண்குமார் (எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்)‘‘ஒரு காலத்தில் லண்டனில் லிவர்பூல் சென்று செய்து கொண்ட சிகிச்சைகள் எல்லாம், இப்போது சென்னையில் செய்யப்படுகின்றன.

டே கேர் முறைப்படி பல அறுவை சிகிச்சை களை ஆர்த்தரோஸ்கோபி எனப்படும் கருவியின் துணையுடன் கீஹோல் (key hole) சர்ஜரி களாக எளிதில் செய்ய முடிகிறது. மூட்டில் தேய்மானம் இருந்தால் சிறுதுளை இட்டு அதன் மூலம் எளிதாக சரி செய்து விடலாம்.

மூட்டில் உள்ள சவ்வு கிழிந்து இருந்தால் கூட ஆர்த்தரோஸ்கோபி வழியாக பார்த்து சிகிச்சை செய்துவிடுகிறோம். விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கு டே கேர் சர்ஜரிகள் மூலம் எளிதில் தீர்வு கிடைக்கிறது. தோள்பட்டை எலும்பு விலகுவது, தோள்பட்டையை சுற்றியுள்ள தசைகள் வலுவிழுந்து போதல் போன்ற தோள்பட்டை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் இதன் மூலம் சரி செய்ய முடியும்.

‘ஃப்ரோசன் ஷோல்டர்’ என்கிற பிரச்னை, தோள்பட்டைக்கு மேல் கைகளை தூக்க முடியாதபடி செய்துவிடும். நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்நோய் வருவதற்கு அதிக சாத்தியம் உண்டு. இதை டே கேரில் வைத்தே சரி செய்யலாம். கை, பாதம் ஆகியவற்றில் வரும் எலும்பு முறிவுகளையும் டே கேரில் சரி செய்து விடலாம். மூட்டுகளில் வரும் தேய்மானத்தையும், முழங்கால் மூட்டு மற்றும் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகளையும், இப்போது டே கேரில் செய்து, 2 நாட்களுக்குள் வீட்டுக்கு அனுப்பி விடுகிறோம்.

ஆர்த்தரோஸ்கோபி மூலம் செய்வதால் நோயாளிகளுக்குத் தழும்பு ஏற்படுவது இல்லை. விரைவில் குணம் அடைந்து விடுகிறார்கள். வலி குறைவாக இருப்பதால் வேலைக்குச் செல்ல முடிகிறது. மூட்டு மாற்று அறுவைசிகிச்சை விரைவாக முடிந்துவிடுவதால் பிசியோதெரபி பயிற்சிகளை கொடுத்து விரைவாக நடக்க வைக்க முடிகிறது. மருத்துவமனையில் இருக்கும் நாட்கள் குறைவாக இருப்பதால் செலவும் நோயாளிகளுக்கு மட்டுப்படுகிறது’’ என்கிறார் டாக்டர் அருண்குமார்.

டாக்டர் ஹரிகிருஷ்ணன் (இதய நோய் நிபுணர்)‘‘டே கேரில் முக்கியமான இதய நோய்களுக்கும் ஒரே நாளில் சிகிச்சை அளிக்க முடிகிறது. இதயத்தில் 3 வகை பிரச்னைகள் முக்கியமாக வரும்.

இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, இதயத்தின் தசைகள் பலவீனமடைந்து சுருங்கி விரியும் தன்மை குறைதல், இதயத்தின் மின் அதிர்வில் ஏற்படும் பிரச்னை போன்றவை முக்கியமானவை.ஆஞ்சியோகிராம் மூலம் மணிக்கட்டு பகுதியில் இருக்கும் ரேடியல் தமனி மூலம் ஒருவித ‘டை’யை செலுத்தி இதயத்தில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கலாம். ரேடியல் ஆஞ்சியோகிராம் எனப்படும் இந்த முறை மிக எளிதானது.

காலை7 மணிக்கு ஒருவர் வந்தால் 11 மணிக்குள் சிகிச்சை முடிந்துவிடும். அவரது இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால், இதே வழியில் ஒரு சிறிய பலூனை அனுப்பி அடைப்பை நீக்கி விடுவோம்.

இந்த முறைக்கு ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ என்று பெயர். ரீஜினல் அல்லது லோக்கல் அனஸ்தீசியாவே மயக்கத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. சிகிச்சைக்கு வருபவர் மாலைக்குள் வீடு திரும்பி விடலாம். இதயத்தின் வால்வுகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் Balloon Mitral Valvuloplasty முறை மூலம் பலூனை அனுப்பி வால்வுகளில் உள்ள அடைப்பை எளிதாக நீக்கலாம்.

இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதால் வரும் டேக்கிகார்டியா பிரச்னை, புகைப்பழக்கம், மது, பருமன், மன உளைச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுகிறது. பேஸ் மேக்கர் பொருத்துவதன் மூலம் இந்த பிரச்னையை நிரந்தரமாக சரி செய்ய முடியும். இதயத்தைச் சுற்றியுள்ள தசைகள் வலுவிழந்து போனாலும், இரண்டு பக்கமும் பேஸ் மேக்கர் பொருத்தி இதயத்துக்குத் தேவையான மின்அதிர்வை கொடுத்து சீராக இயங்க வைக்கலாம்.

இவற்றை எல்லாம் டே கேர் சர்ஜரியில்தான் செய்கிறோம். எக்கோகார்டியோகிராம் கருவியின் துணை கொண்டு செய்யப்படுபவை அனைத்துமே ஒரு நாள் சிகிச்சைகள்தான். ஆஞ்சியோ சிகிச்சை எடுத்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ‘டை’யினால் எதுவும் அலர்ஜி ஏற்பட்டால், உடனே மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.

2 நாட்களுக்கு மாடிப்படி ஏறுவது, பைக் ஓட்டுவது, கை கொடுப்பது போன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்... அவ்வளவுதான்’’ என்கிறார் டாக்டர் ஹரிகிருஷ்ணன். நோயாளி அறுவை சிகிச்சையின் போது பேசிய படி ரிலாக்ஸ் ஆக இருக்கலாம்!ஒரு காலத்தில் லண்டன் சென்று செய்து கொண்ட சிகிச்சைகள் எல்லாம், இப்போது சென்னையில் செய்யப்படுகின்றன!
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.