தசைநார் வலிக்கு என்ன தீர்வு?

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
நன்றி குங்குமம் டாக்டர்

வாழ்நாளில் வலியை உணராத மனிதரைப் பார்ப்பது அரிது. உடல்வலி, தலைவலி, பல்வலி, கைவலி, கால்வலி, முதுகுவலி, முழங்கால் வலி, மூட்டுவலி என ஏதேனும் ஒரு வலியால் வேதனைப்படுவதைப் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் காரணம் கண்டு பிடிக்க முடியும். அதற்கேற்ப சிகிச்சையும் தர முடியும். ஆனால், இன்ன காரணம் என்று குறிப்பிட்டுக் கூற முடியாத தசைவலி ஒன்று உண்டு. ‘ஃபைப்ரோமயால்ஜியா’ (Fibromyalgia) என்று அதற்குப் பெயர். முன்பெல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்த நோய் இப்போது இளம் வயதினருக்கும் ஏற்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இதைக் குணப்படுத்த முடியும்; தடுக்க முடியும்.

ஃபைப்ரோமயால்ஜியா

பரவலான உடல்வலியைக் குறிக்கும் மருத்துவ வார்த்தை இது. ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிற நோய் இது. குறிப்பாகச் சொன்னால் 25லிருந்து 60 வயதுக்கு உட்பட்ட பெண்களைத்தான் இது பெரும்பாலும் பாதிக்கிறது. உடல்வலியோடு உடல் களைப்பு, உறக்கமின்மை, ஞாபக மறதி போன்றவையும் தொல்லை கொடுக்கும். முதுகுவலி, இடுப்பு வலி, தலைவலி மட்டுமல்லாமல் உடலின் பல இடங்களில் வலி ஏற்படும். கை, கால் குடைச்சல் அதிகம் தொல்லை கொடுக்கும். ஒரே நேரத்தில் உடலின் இரண்டு பக்கமும் வலி ஏற்படுவது இதன் சிறப்பு. உதாரணமாக, இடது கை வலித்தால் அதே வேளையில் வலது கையும் வலிக்கும். வீட்டிலோ, அலுவலகத்திலோ, அன்றாடப் பணிகளைச் செய்ய விடாது. உற்சாகத்தைக் குறைக்கும். மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும். உலக அளவில் கோடிக்கணக்கான பெண்கள் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள் என்றால், இந்த நோயின் கொடுமையைப் புரிந்துகொள்ளுங்கள்.

காரணம் என்ன?

இதற்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். சில சமயங்களில் பல காரணங்கள் ஒன்று சேர்ந்துகொள்ளும். என்றாலும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் முடிவுப்படி சிலவற்றை இங்குக் குறிப்பிடலாம். ஹார்மோன்களின் சமச்சீர்த்தன்மை பாதிக்கப்படுவதுதான் இந்த நோய் வர முக்கியக் காரணம். நமக்கு உடலில் வலி ஏற்படும்போது ‘செரட்டோனின்’ ஹார்மோன் சுரக்கும். நாம் வலியால் பாதிக்கப்படாத அளவுக்கு அந்த வலியை இது கட்டுப்படுத்தும். ஃபைப்ரோமயால்ஜியா ஏற்படுபவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும் அல்லது முற்றிலும் சுரக்காமல் போய்விடும். இதனால் லேசான வலியைக்கூட இவர்களால் தாங்க முடியாது.

அடுத்து, சிலருக்கு நரம்பு மண்டலத்தில் வலியை உணரச்செய்கிற வேதிப்பொருட்களின் அளவு அதிகரித்துவிடும். அப்போது அவர்களுக்கு ஃபைப்ரோமயால்ஜியா வரும். அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுபவர்களுக்கும் நீண்ட காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது ஏற்படுவதை அனுபவத்தில் காண்கிறோம். குடும்பத்தில் திடீரென ஏற்படும் அதிர்ச்சிகள், இழப்புகள், விபத்துகள், சோக நிகழ்வுகள் இந்த வலியைத் தூண்டுகின்றன என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.இது ஒரு பரம்பரை நோயாகவும் வருகிறது. புகைபிடிப்போர், உடல் பருமன் உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், வேறு ஏதேனும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. சரியான தூக்கமின்மையும் அதீத குளிரும் இந்த வலியை அதிகப்படுத்தும்.

வலி வரும் இடங்கள்

இந்த வலியானது உடலில் குறிப்பிட்ட இடங்களில் ஆரம்பித்து, சிறிது சிறிதாக வலி அதிகரித்து, பிறகு பிற இடங்களுக்குப் பரவும். இந்த இடங்களை அழுத்தினால் வலியை உணர முடியும். அந்த இடங்கள் இவை:

தலையின் பின்பகுதி.

கழுத்தின் மேற்பகுதி.

தோள்பட்டை.

நடு நெஞ்சின் மேற்பகுதி.

முழங்கை.

இடுப்பு உட்காரும் இடம்.

முழங்காலின் பின்பகுதி.

மேற்கண்ட இடங்களில் உள்ள தசைகளை இயக்கும்போது வலியோடு, தசை இறுக்கமாக இருப்பதையும் உணரமுடியும்.

கவலை தரும் களைப்பு

இந்த நோய் உள்ளவர்கள் எளிதில் களைப்படைந்து விடுவார்கள். முக்கியமாக காலையில் கண் விழிப்பது சிரமமாக இருக்கும். இன்னும் உறங்க வேண்டும்போல் இருக்கும். உடலில் சக்தி இல்லாதது போல் உணர்வார்கள்.

பரிசோதனைகள் என்னென்ன?

இந்த நோய்க்கென தனியாக எந்தப் பரிசோதனையும் இல்லை. நோயின் தன்மையைப் பொறுத்து மருத்துவர்தான் தீர்மானிக்க முடியும். ஒருவருக்கு ஃபைப்ரோமயால்ஜியா இருக்கிறது என்று உறுதி செய்வதற்கு முன்பு உடலின் பொது ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள பொதுவான ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படும். அடுத்து, எலும்பு மூட்டு சார்ந்த நோய்கள் இல்லை என்பதை சில ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். தைராய்டு பரிசோதனைகளும் ஓரளவுக்கு நோயைக் கணிக்க உதவும்.

சிகிச்சைகள் என்னென்ன?

இந்த நோய்க்கு முதலில் குடும்ப மருத்துவரைப் பார்க்க வேண்டும். அவரது ஆலோசனைப்படி நரம்பு நோய் நிபுணர், மனநல நிபுணர், எலும்பு நோய் நிபுணர் ஆகியோரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். வலியைக் குறைக்க மருந்து, மாத்திரை மட்டும் போதாது. மன அழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றுக்கு மாத்திரைகளோடு மனநலத்துக்குக் கவுன்சிலிங் (Cognitive behavioral therapy (CBT) தேவைப்படும். செரட்டோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க மாத்திரைகள் தரப்படும். இப்போது பெருநகரங்களில் வலி மருத்துவத்துக்கெனத் தனிப் பிரிவுகள் (Pain management clinics) தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிலும் ஆலோசனை பெறலாம். இவற்றோடு சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் வரும். தியானம், யோகா போன்றவையும் உதவும். அக்குபங்சர் மற்றும் ஆயுர்வேத மசாஜ் நல்ல பலனைத் தருகிறது.

தடுப்பது எப்படி?

மன அழுத்தம் குறைக்கின்ற வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடியுங்கள்.

வாரம் ஒருநாளாவது குடும்பத்துடன் நேரத்தைச் செலவழியுங்கள்.

பகலில் உறங்குவதைத் தவிர்த்து, இரவில் சீக்கிரமே உறங்கப் பழகுங்கள்.

இரவில் தொலைக்காட்சி, மொபைல் போன் போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

நடைப்பயிற்சி மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்வதையும் தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.

காபி அதிகமாகக் குடிக்க வேண்டாம்.

மது, புகை ஆகவே ஆகாது.

பழச்சாறுகள் அருந்துவதை அதிகப்படுத்துங்கள்.

காய்கறி, பழங்கள் போன்ற நல்ல ஊட்டசத்துள்ள உணவுகளை உண்டு உடலின் பொது ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுங்கள்.

ஓய்வு நேரங்களில் புத்தகம் படிப்பது, இசை கேட்பது, தோட்ட வேலை பார்ப்பது என உங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்து வாழும் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழப்பழகிக் கொள்ளுங்கள்.

தசைப்பிடிப்பு ஏற்படுவது ஏன்?

தசைவலி, தசை இறுக்கம் இந்த இரு அறிகுறிகளும் ஃபைப்ரோமயால்ஜியாவிலும் காணப்படும்; தசைப்பிடிப்பிலும் (Muscle Cramps) காணப்படும். எனவே, ஒரு சிலர் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் காண இயலாமல் குழப்பிக்கொள்வார்கள். இரண்டுமே வெவ்வேறு நோய்கள். தசைப்பிடிப்பு என்பது ஒரு தசையின் இயல்பான இயக்கத்துக்குத் தடை போடும் தன்மை. இது பெரும்பாலும் கெண்டைக்கால் தசையில் ஏற்படுகிறது. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கலாம். வலி மிகவும் கடுமையாக இருக்கும். ஒரே இடத்தில்தான் இந்த வலி இருக்கும் மற்ற பகுதிகளுக்கு இது பரவாது. இரவில் அதிகமாக உணரப்
படும். ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படும். ஆண்களில் விளையாட்டு வீரர்களுக்கு இது ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். சரியான சிகிச்சையை எடுத்துக்கொண்டால், சில நாட்களில் இது குணமாகிவிடும்.

காரணங்கள்

தண்ணீர் குடிப்பது குறைந்துவிட்டால் போதிய நீர்ச்சத்து உடலுக்குக் கிடைக்காமல் தசைப்பிடிப்பு ஏற்படும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிக அளவில் சிறுநீர் கழித்தல் போன்ற காரணங்களால் நீர்ச்சத்து குறைந்துவிடும்போதும் இது ஏற்படுகிறது.

வெயிலில் அதிகமாக அலைந்துவிட்டு வரும்போது அதிக வியர்வை காரணமாக நீரிழப்பு ஏற்படுவதும் தசைப்பிடிப்புக்கு வழி அமைக்கும்.

தசைகளின் இயக்கத்துக்குக் கால்சியம் தாது ரத்தத்தில் சரியான அளவில் இருக்க வேண்டும். கால்சியம் குறைந்துவிட்டால், தசைப்பிடிப்பு ஏற்படுவது வழக்கம்.

இதுபோல் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் தசைகள் சுருங்கி விரிவதற்குத் தேவைப்படுகின்றன. இவற்றின் அளவுகள் குறைந்தாலும் தசைப்பிடிப்பு உண்டாகும்.

வைட்டமின் பி1, பி6, பி12 மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் குறையும்போதும் இதே நிலைமைதான்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரெனச் செய்யப்படும் கடுமையான உடற்பயிற்சிகளாலும், போதிய ‘வார்ம் அப்’ இல்லாமல் உடற்பயிற்சிகளைச் செய்தாலும் தசைப்பிடிப்பு ஏற்படும்.

விளையாட்டு வீரர்கள் கடுமையாகப் பயிற்சி செய்யும்போது, தசைகளில் லேக்டிக் அமிலம் உற்பத்தியாகும். இது தசைப்பிடிப்புக்குப் பாதை போடும்.

கர்ப்பிணிகளுக்கு ஆரம்ப கர்ப்ப மாதங்களில் வாந்தி கடுமையாக இருக்கும். அப்போது தசைப்பிடிப்பு உண்டாக அதிக வாய்ப்பு உண்டு.

தீர்வுகள் என்னென்ன?

தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சாதாரண நாட்களில் தினமும் 2 லிட்டருக்கு குறையாமலும், கோடையில் 3 லிட்டருக்கு குறையாமலும் தண்ணீர் பருக வேண்டும்.

தசைப்பிடிப்பு உள்ளபோது எலுமிச்சை, ஆரஞ்சு, நன்னாரி பழச்சாறு போன்றவற்றைக் குடிக்க வேண்டும்.

நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

முளைகட்டிய பயறுகள் சாப்பிடுவது தசைப்பிடிப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

கால்சியம் மிகுந்த பால் மற்றும் பால் பொருட்கள், கேழ்வரகு, பாசிப்பயறு, வெந்தயக்கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

அதிக வெயிலில் அலையக்கூடாது.

எந்த ஒரு உடற்பயிற்சிக்கும் ‘வார்ம் அப்’ பயிற்சி மிகவும் அவசியம்.

வெயிலில் உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்கவும்.

தசைப்பிடிப்பு உள்ள தசைகளில் இளஞ்சூடான வெந்நீர் கொண்டு ஒத்தடம் தரலாம்.

வலியைப் போக்கும் களிம்புகளைத் தடவலாம்.

தசைக்கு இளக்கம் தருகின்ற களிம்புகளையும் தடவலாம்.

மருத்துவரின் யோசனைப்படி வலியைக் குறைக்க ஊசிகள் போட்டுக் கொள்ளலாம். வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் தசை இளக்க மாத்திரைகள் சாப்பிடலாம்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் மென்மையான மசாஜ் செய்யலாம்.

பாத நுனி விரல்களிலும் பின்னங்கால்களிலும் மாறி மாறி நிற்கும் பயிற்சிகளைச் செய்யலாம். இதை தினமும் 10 முறை செய்யவும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.