தடம் மாறலாம்? தடம் புரளலாமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தடம் மாறலாம்? தடம் புரளலாமா?

டாக்டர் ஆ.காட்சன்


ஓவியம்: முத்து

‘என்னை அவன் அடிச்சிட்டான்மா...' என்று பெற்றோர்களிடம் புகார் பத்திரம் வாசித்த காலம் எல்லாம் மலையேறி, ‘மச்சி, அவன் என்னை அடிச்சிட்டான்டா. பதிலுக்கு நாம அவனுக்குச் செமத்தியா திருப்பிக் குடுக்கணும்டா' என்று நண்பர்களைப் பக்கபலமாகச் சேர்த்துக்கொண்டு அடிதடியில் இறங்கும் காலம் வளர்இளம் பருவம்.

சமீபகாலமாகப் பள்ளிகளில் வன்முறைச் சம்பவங்கள் பெருகிவருவது வளர்இளம் பருவத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய சவால்தான். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி ஏற்படும் கைகலப்புகளில் தொடங்கிக் கொலைச் சம்பவங்கள்வரை அடிக்கடி வன்முறை அரங்கேறி வருகிறது. சில நேரம் ஆசிரியர்களையே தாக்கும் அளவுக்குப் பிரச்சினை உருவாகிறது. மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கும்போதும் விபரீதங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

குற்ற உணர்ச்சியற்ற நிலை
எல்லா வளர்இளம் பருவத்தினரும், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது கிடையாது. அதேநேரம், இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் அவ்வப்போது சில முன்னெச்சரிக்கை அறிகுறிகள் காணப்படும். இவர்களுடைய குடும்பச் சூழல் பெரும்பாலும் திருப்திகரமாக இருக்காது.
சிறிய பிரச்சினைகளுக்குக்கூட வெறித்தனமான செயல்களில் ஈடுபடுவது, ஆயுதங்களைப் பயன்படுத்துவது, மற்றவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பது, பழிவாங்கும் செயல்கள், தன் கையைக் கிழித்துக்கொள்வது அல்லது அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற தன்மைகள் காணப்பட்டால் நிச்சயம் அவர்கள் கவனத்துக்கு உரியவர்கள்.

சின்ன வயதில் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதுதான், தற்போது நடக்கும் பல்வேறு ஆக்ரோஷமான சம்பவங்களுக்கு முக்கியக் காரணம். இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது, தான் செய்யும் தவறான செயல்கள் மற்றவர்களைப் பாதிக்கும் என்ற குற்றவுணர்ச்சி அற்ற மனநிலைதான். இது இளைஞர்களைக் கூலிப்படையினராக மாற்றும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது.

விதிமீறல்கள்
வளர்இளம் பருவத்தினர் அவ்வப்போது சில விதிமீறல்களில் ஈடுபடுவது சகஜம்தான். அது அவர்களுடைய வளர்ச்சியின் ஒரு பாகமாகவே காணப்படும். ‘இளம் கன்று பயம் அறியாது' என்று சொல்வது இதனால்தான்.
எதையும் பரீட்சித்துப் பார்க்கும் எண்ணம், புதிய விஷயங்களில் நாட்டம், விபரீதங்கள் மற்றும் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத தன்மை போன்றவை இவர்களைச் சில நேரம் சேட்டைகளில் ஈடுபடவைக்கிறது.

அதிலும் பலர் தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்தச் சேட்டைகள் அதிகரிக்கும். எதிர்பாலினத்தைக் கவர்வதற்கு இவர்கள் எடுக்கும் சில முயற்சிகள், மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கலாம். அவர்களே சில வருடங்கள் கழித்து யோசித்துப் பார்த்தால், எத்தனை கோமாளித்தனமான செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்று புரியும்.

சமூகவிரோதச் செயல்பாடு
அதேநேரம் சில வளர்இளம் பருவத்தினரிடம், இந்த விதிமீறல்கள் எல்லை மீறிச் செல்லும்போது, அவர்களுடைய குணாதிசய உருவாக்கத்திலும் மாற்றம் காணப்படும். சமூகவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள் எல்லோரும் திடீரென்று ஒரே நாளில் உருவாகிவிடுவதில்லை. அதற்கான ஆரம்ப அறிகுறிகள், வளர்இளம் பருவத்திலேயே காணப்படும்.

பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இவர்கள் சிம்மசொப்பனமாகவே இருப்பார்கள். சின்ன வயதில் இவர்களுக்கு எத்தனை தண்டனைகள் கொடுத்தாலும், தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மாறாகப் பிரச்சினை தீவிரமடையும். இவர்கள் பின்னாட்களில் சமூகவிரோதிகளாக (Antisocial) உருவாக வாய்ப்பு இருக்கிறது.

ஓடிப்போவது
ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, சில வளர்இளம் பருவத்தினருக்கு வீட்டை விட்டு ஓடிப்போவது வாடிக்கையான விஷயமாக மாறிவிடும். அப்பா அடித்தாலோ, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலோ சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயாவது ஓடிப்போவது நடக்கும். இது ‘குணரீதியாக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்' எனப் பெற்றோருக்கு மறைமுகமாகச் சொல்லும் எச்சரிக்கை.

அதற்கு முன்னரே இரவில் அடிக்கடி வெளியில் தங்குவது, நண்பர்களுடன் குறிப்பாக வயதில் மூத்தவர்களுடன் ஊர் சுற்றிவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவது வழக்கமாக இருக்கும். பள்ளிக்குச் செல்லாமல் அடிக்கடி படத்துக்குச் செல்வதும் கவனிக்கத்தக்க மாற்றம்தான்.

கும்பல் சேருதல்
உணவு இடைவேளையின்போது பள்ளிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையிலோ, ஒதுக்குப்புறமான இடங்களிலோ இப்படிப்பட்டவர்கள் கூடுவார்கள். இதுதான் இளம் சமூகவிரோதிகள் உருவாகும் மையம். பல புதிய நட்புகளுடன் போதைப்பொருட்களின் அறிமுகமும் இங்குதான் கிடைக்கும். ஒன்றாகச் சேர்ந்து புகைப்பது முதல் கஞ்சா பயன்படுத்துவதுவரை கற்றுக்கொள்வார்கள். தன்பாலின உறவு ஏற்படவும் வாய்ப்புண்டு.

சில நேரம் இளம்வயதிலேயே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது, பிறரைக் காயப்படுத்திப் பார்ப்பதில் அலாதி இன்பம் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளும் காணப்படலாம். மனசாட்சி மரத்துப்போவது சில நேரம் குரூரச் செயல்களாக வெளிப்படும். அதற்காக இவர்கள் வருத்தப்படுவதும் இல்லை.

பொய் மூட்டை
அதேபோலச் சிலரிடம் அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய் திருடுவதில் ஆரம்பிக்கும் பழக்கம், பூட்டை உடைத்துத் திருடுவதுவரை போகக்கூடும். அவர்களின் புத்தகங்களுக்குள் ரூபாய் நோட்டை வைத்தால் பத்திரமாக இருக்கும் அளவுக்கு, படிப்பில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. பொய் சொல்வதில் போட்டி வைத்தால், இவர்களுக்குத்தான் முதலிடம் கிடைக்கும்.

அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக எத்தனை பெரிய பொய்யையும் சாதாரணமாகச் சொல்லப் பழகிவிடுவார்கள். அதேநேரம் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ள, எந்த நிலைக்கும் இறங்கிவருவார்கள்.

காரணங்கள்
‘தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை' என்ற சொலவடையின்படி பெற்றோருடைய நன்னடத்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் குழந்தைகளைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் போதைப்பழக்கம் (அது சார்ந்த மற்றப் பழக்கங்கள்) உள்ள பெற்றோருக்கும் வளர்இளம் பருவத்தினரின் சமூகவிரோதக் குணமாற்றங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற சமூகவிரோத நடவடிக்கைகளில் சில நேரம் ஈடுபடலாம். போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது, அதனால் ஏற்படும் மனநோய்களும்கூட இதுபோன்ற அறிகுறிகளாக வெளிப்படும்.
கூடுதல் காரணங்கள்
குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் கார்ட்டூன் படங்கள் மற்றும் வீடியோ கேம்களில் ஈடுபடுவது பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் வரும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் அதிகத் துறுதுறுப்பை ஏற்படுத்துவதுடன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனையும் பாதிக்கும். மனிதர்களை உயிராகப் பாவிக்காமல், பொருட்களாகப் பாவிக்கும் மனநிலை ஏற்படும்.

மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையை இது பாதிக்கும். வளர்இளம் பருவத்தில் பல உறவுரீதியான சிக்கல்களையும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளையும் இது ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்டவை எல்லாம், இந்தக் குணநல மாற்றம் கொண்டவர்களைக் கொடூரர்களாக சித்தரிப்பதற்கு அல்ல. வளர்இளம் பருவத்தில்தான் இந்த மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சாதகமற்ற குடும்பச் சூழல், சமுதாயச் சூழல் மற்றும் அவர்களுடைய மனரீதியான பிரச்சினைகளை ஆரம்பக் கட்டத்திலேயே சரிசெய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
காளையை அடக்க என்ன செய்யலாம்?


டாக்டர் ஆ.காட்சன்
ஓவியம்: முத்து
இளம் வயதில் சமூகவிரோதச் செயல்களைச் சார்ந்து இளைஞர்கள் தடம் புரள்வது பற்றி பார்த்தோம். இந்தப் பிரச்சினைகளுக்கான காரணத்தைப் புரிந்துகொண்டு, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இளைஞர்களிடம் எப்படி மாற்றத்தைக் கொண்டுவரலாம்?:

* வகுப்புகளில் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, ஒருவர் மாற்றி ஒருவரை தலைமைப் பொறுப்பை ஏற்கவைத்துப் பள்ளி சார்ந்த பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்கலாம். சிறுவயதில் தலைமைப் பண்பு வளரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

* பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகளைப் பாடமாக நடத்துவதைவிட சிறு குழு விவாதங்களாகவோ, நாடகங்களாகவோ (Role play) நடத்தலாம்.

* பள்ளிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை வேறுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அது அவர்களுடைய தனித்தன்மையைப் பாதிப்பதுடன் காழ்ப்புணர்ச்சியையும், தாழ்வுமனப்பான்மையையும் அதிகப்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டும்.

* மற்றவர்களிடம் பேசிப் பழகும் திறன் (Interpersonal skills), இதுபோன்ற வளர்இளம் பருவத்தினரிடம் பெரும்பாலும் குறைவாகக் காணப்படும். சிறுவயதிலேயே, மனதில் தோன்றும் பிரச்சினைகளை ஆரோக்கியமான வார்த்தை வடிவில் வெளிப்படுத்தும் திறனை வளர்க்க உதவ வேண்டும். மேலும் பிரச்சினைகளை விட்டு விலகிச் செல்வதைவிட, அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

* பொழுதுபோக்குக்காகச் சினிமா தியேட்டர்களை நாடி செல்வதைவிட ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு வளர்இளம் பருவத்தினரை அவ்வப்போது அழைத்துச் சென்று, மற்றவர்களுக்கு உதவக் கற்றுக்கொடுக்க வேண்டும். மனித உயிரின் முக்கியத்துவத்தை இது அவர்களிடம் உணர்த்தும்.

* Attention defecit and hyperkinetic disorder (ADHD) என்று அழைக்கப்படும் அதீதத் துருதுருப்பு, கவனக்குறைவு மற்றும் அதிக எழுச்சிக்கு ஆளாகும் குழந்தைகள் வளர்இளம் பருவத்தில் அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், இப்படிப்பட்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகளை மனநல மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை பெறுவது நல்லது.

* இது போன்றவர்களிடம் தீவிரக் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே போதைப்பொருள் பழக்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி இருக்கும்பட்சத்தில் ஆரம்ப நிலையிலேயே மனநலச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது, நிலைமை கைமீறிச் செல்வதைத் தடுக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.