தலைக்காயம்: உடனடியாக கவனிக்க வேண்டியவை!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#1
url.jpg

தலை, மனித உடலின் சிகரம். மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில்தான் அமைந்துள்ளது. மனிதனை இயக்கும் மூளையும் தலையில்தான் இருக்கிறது. மூளையை பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வதும் தலையில் இருக்கும் மண்டை ஓடுதான். இப்படி பல சிகரமான பணிகளைச் செய்யும் நம் சிரத்தை (தலை) நாமும் சிரமம் பாராமல் பாதுகாப்பது அவசியம். “தலைக்காயங்கள் பல வழிகளில் ஏற்படுகிறது. அவைகளில் குறிப்பிடத்தக்கது, சாலை விபத்துகள். அடிதடி சண்டைகளாலும், உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழும்போது தலை தரையில் மோதுவதாலும் தலைக்காயம் ஏற்படும்.
தலை காயம் ஏற்படும்போது, தோல் கிழியும். மண்டை ஓட்டு எலும்பு உடைந்து போகும். மண்டை ஓட்டிற்கும்- மூளைக்கும் நடுவில் இருக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்துபோகும். மூளையின் உள்ளே உள்ள திரவம் போன்ற பொருள் காது வழியாக வெளியேறும். கண்ணிற்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு கண் பார்வை பறிபோகக்கூடும். மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் வெடித்து மூளையின் உள்ளேயும் ரத்தம் உறையலாம்.

தலைக்காயம் ஏற்பட்ட நபரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பார்கள். முதலில் அவருக்கு மூச்சு திணறல் உள்ளதா? என்று பார்ப்பார்கள். சில நேரங்களில், தலைக்காயம் அடைந்த நபரின் எச்சில், ரத்தம் முதலியவை மூச்சு குழாயில் அடைப்பை ஏற்படுத்தி மூச்சுவிட சிரமத்தை உண்டாக்கும். அப்படியானால் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கவேண்டியதிருக்கும்.


பின்பு காயமடைந்த நபரின் ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு அவை சீரடைவதற்கான சிகிச்சை அளிக்கப்படும். தலைக்கு வெளியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டு ரத்தம் வெளியேறுவதும் தடுக்கப்படும். கிளாஸ்கோவ் கோமா ஸ்கேல் என்னும் கருவியால், காயமடைந்த நபரின் சுயநினைவு திறனும் அளவிடப்படும். சுவாசம், ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு போன்றவைகள் சீரமைக்கப்பட்டு, காயத்திற்கும் தையல் போட்ட பின்புதான் அந்த நபர் ஸ்திர நிலையை அடைவார்.


இந்த சிகிச்சைகள் தொடரும்போது, தலைக்காயம் ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தவர்கள் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை தெளிவாக மருத்துவரிடம் விளக்க வேண்டும். இதன் பிறகு அந்த நபர் அடுத்தகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.


முதலில் மண்டை ஓடு எந்த அளவிற்கு உடைந்துள்ளது என்பதை அறிவதற்கு எக்ஸ்ரே எடுக்கப்படும். பின்பு மூளையின் எந்த பகுதியில்- எந்த அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது? என்பதை தெளிவாக அறிவதற்கு மூளை சி.டி.ஸ்கேன் எடுக்கப்படும். அந்த ஸ்கேனை வைத்துதான் அடிபட்டவருக்கு, எந்த மாதிரியான சிகிச்சை தேவை என்று முடிவு செய்யப்படுகிறது.


அறுவை சிகிச்சை தேவை எனில் அந்த நபர் உடனடியாக அறுவை சிகிச்சை கூடத்திற்கு மாற்றப்படுவார். சுவாசத்தில் தடை இருந்தாலோ, அல்லது காயமடைந்த நபர் நினைவு இழந்த நிலையில் இருந்தாலோ, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடருவார். சிறு காயமாக இருந்தால் அந்த நபர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்படும்.


இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதனை அணிந்தால் தலைவலி உண்டாகும், தலைமுடி உதிரும், தலை மிகவும் கனமாக இருக்கும் என்பதெல்லாம் தவறு.


சாலை விபத்து ஏற்படும்போது தலை மீது விழும் அழுத்தம் நமது மூளையையும், மண்டை ஓட்டினையும் தாக்கும். தலைக்கவசம் அணிந்திருந்தால், அந்த அழுத்தத்தை தலைக்கவசம் தாங்கிக்கொண்டு மூளைக்கும், மண்டை ஓட்டிற்கும் ஏற்படும் காயத்தை வெகுவாக குறைக்கும்.


தலைக்காயம் ஏற்படும்போது உருவாகும் அழுத்தம், மேலும் மூளையை பாதித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் விபத்தால், சில நரம்புகள் சீர் செய்ய முடியாத அளவிற்கு பழுதாகிவிடும். அப்போது உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்காவிட்டால், பழுது அடையும் நரம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.

பொதுவாக மூளை காயத்தின்போது மூளையின் உள்ளே இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடும். ரத்த அழுத்தம் உயரும். இதனால் மூளை செல்கள் இறக்கும். அத்துடன் ரத்த இழப்பு, உடலில் தாதுப் பொருட்களின் தட்டுப்பாடு, சிறுநீரக கோளாறு, மூச்சு திணறல் முதலியனவும் காயமடைந்த மூளையை மேலும் பாதிக்கும். இத்தகைய பாதிப்புகளை தடுக்க முதல் உதவி சிகிச்சையை விபத்து நடந்த இடத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.


விபத்தில் காயம் அடைந்த நபரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். விபத்து நடந்த இடத்தில் இருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேரத்தை நாம் `பொன்னான நேரம்` என்று கூறுகின்றோம். ஏனெனில் அந்த நேரத்தில் காயம் அடைந்த நபருக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி மூச்சுக்குழாய் அடைப்பாலோ, குறைந்த ரத்த அழுத்தத்தினாலோ, காயம் ஏற்பட்ட மூளை மேலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. மூச்சுக் குழாயில் திரவங்களாலோ, மற்ற பொருட்களாலோ அடைப்பு ஏற்படும்போது மூச்சுத்திணறல் உண்டாகும். அந்த நேரத்தில் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து அது காயமடைந்த மூளையின் செல்களை பாதிக்கும்.


அதைப்போன்று ரத்தக் கசிவு உடம்பில் உள்ளேயோ, வெளியேவோ ஏற்பட்டால் அது ரத்த அழுத்தத்தை குறைக்கும். அதனால் காயம் அடைந்த மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மேலும் குறைந்து காயத்தின் அளவு அதிகமாகும். ஆகவே விபத்தின் பொன்னான நேரத்தின்போது காயம் அடைந்த மூளை மேலும் பாதிக்கப்படாமல் காப்பது மிக முக்கியம்.’


(எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் நடந்த `சாலை பாதுகாப்பு, தலைக்காயம்’ பற்றிய கருத்தரங்கில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.கிரீஷ் பேசிய தகவல்கள் மேலே தரப்பட்டுள்ளது. இவர் அந்த மருத்துவக் கல்லூரியின் உதவி முதல்வர்)


***

[h=1]காயமடைந்தவருக்கு செய்ய வேண்டியவை:[/h] * காயமடைந்த நபரை உடனே மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டும். மருத்துவமனையில் சுவாசத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும், ரத்தக் கசிவிற்கும் முதல் உதவி செய்த பின்பு, காயமடைந்த நபர் பெரிய மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவேண்டும்.


* விபத்து நடந்த உடனே முதலுதவி அவசியம் என்பதால், விபத்தில் காயமடைந்த நபருக்கு எவ்வாறு முதலுதவி அளிக்கப்பட வேண்டும் என்பதை போக்குவரத்து காவலர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


* விபத்தின் பொன்னான நேரம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக வேண்டும்.


* காயமடைந்த நபரை மெதுவாக திருப்ப வேண்டும். திருப்பும்போது ஒருவர் காயமடைந்தவரின் தலையை பிடித்து கொள்ள வேண்டும்.


* காயமடைந்த நபரை தூக்குவதற்கோ, திருப்புவதற்கோ குறைந்தது 2 பேர் தேவை. 4 பேர் இருப்பது நல்லது. கழுத்து எலும்பில் அசைவு ஏற்படாமல் தூக்கவேண்டும். காயம் அடைந்த நபர் தரையில் இருந்தால் மெதுவாக அவரை ஒரு புறமாக திருப்பிவிடவோ, அல்லது விரித்த போர்வையிலோ மாற்ற வேண்டும்.


* கழுத்தில் ஏதேனும் காயம் இருந்தால் ஒரு கையால் தாடையையும், மற்றொரு கையால் பின் மண்டையையும் பிடித்துக்கொண்டு மெதுவாக கழுத்தை இழுத்து பின்பு தலையைத் தூக்கிக்கொண்டு உடம்பை திருப்ப வேண்டும். தலையை ஒரு புறமாக சாய விடக்கூடாது காயமடைந்த நபரை திருப்பிய பின்பு அவரின் கழுத்து பக்கத்தில் மணல் மூட்டை கொண்டோ, அல்லது மடித்த போர்வையை கொண்டோ தலை அசையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை எனில் ஒரு `காலர்’ (கழுத்துப்பட்டை) அணிவித்து தான் கொண்டு செல்ல வேண்டும்.


* பாதிக்கப்பட்டவரின் முதுகு எப்பொழுதும் நேராக வைத்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவரின் தலையை நகர்த்தக் கூடாது. ஒருபோதும் தலை கீழே தொங்கிவிடக்கூடாது.


* அருகில் எங்கே மருத்துவமனை இருக்கிறதோ அங்கு உடனடியாக சேர்த்து, அங்கு காயம் அடைந்த நபருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

அதன் பின்னர்தான் அரசு மருத்துவமனைக்கோ அல்லது வேறு மருத்துவமனைக்கோ மாற்ற வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.