தினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
யாருக்கு மீண்டும் மறுபிறவி கிடையாது?

1525843742802.png

மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..

பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.



தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.

இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,293
Likes
545
Location
chennai
புரிதலை விட தெளிதல் அவசியம்

சிவ பக்தனான அந்த குடியானவனுக்கு திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகியிருந்தது. தன்னுடைய வேலையை முடிக்கும் குடியானவன், அதன் பிறகு தினமும் கோவிலுக்குச் சென்று, அங்கு நடக்கும் திருவாசகத்தின் சொற்பொழிவைக் கேட்பான். அதன்பிறகே வீட்டிற்குத் திரும்புவான். இதனால் அவன் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வருவதற்கு இரவு வெகுநேரமாகிவிடும்.

ஆரம்பத்தில் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்த மனைவி, பின்னர் செல்லச் செல்ல நயமாகச் சொல்லிப் பார்த்தாள். ‘என்னங்க.. வீட்டிற்கு சீக்கிரம் வந்து விடுங்கள்’ என்பாள். ஆனாலும் அந்த குடியானவன், திருவாசக சொற்பொழிவைக் கேட்டு விட்டுத்தான் வீடு திரும்புவான். அவனுக்கு திருவாசகத்தின் மீது அப்படியொரு ஈர்ப்பு.

பொறுமையாக இருந்து வெறுப்பாகிப் போன அவனது மனைவி, ஒருநாள் வீட்டிற்குள் நுழைந்த கணவனை தடுத்து நிறுத்தி, ‘அப்படி என்னதான் அந்த திருவாசகத்துல கொட்டிக் கிடக்கு?. ஒரு நாளாவது நேரத்தோடு வீட்டிற்கு வர வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா? சரி.. தினமும் அங்கப் போய் திருவாசகம் கேட்டு விட்டு வருகிறேன் என்கிறீர்களே? அதில் உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க?’ என்று ஒரு பிடிபிடித்து உலுக்கினாள்.

அதற்கு அந்தக் குடியானவன், ‘எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் போய் கேட்டு விட்டு வருவது நன்றாக இருக்கு’ என்றான்.

அவனது பதிலைக் கேட்டு மேலும் ஆத்திரம் அடைந்த குடியானவன் மனைவி, ‘முதல்ல வீட்டில் இருக்கும் சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொண்டு வாங்க’ என்றாள்.

குடியானவனும் மனைவி எதற்காகவோ சொல்கிறாள் என்று நினைத்து சல்லடையில் தண்ணீர் எடுத்து வந்தான். அதைக் கொண்டு வரும்போது வீடு முழுவதும் சிந்தியது. மனைவியிடம் வந்தபோது சல்லடையில் தண்ணீர் இல்லாமல் போயிருந்தது.

அதைப் பார்த்த மனைவி, ‘தினமும் வீட்டிற்கு தாமதமாக வருகிறீர்கள். ஏனென்று கேட்டால், திருவாசகம் கேட்கப் போனேன் என்கிறீர்கள். என்ன சொன்னாங்கன்னு கேட்டாலும், ஒன்றும் தெரியலைன்னு சொல்றீங்க. நீங்க திருவாசகம் கேட்கிற லட்சணம், இதோ இந்த சல்லடையில் ஊத்திக் கொண்டு வந்த தண்ணீர் மாதிரிதான். எதுக்கும் பயன்படாமல் வீணாகத்தான் போகிறது’ என்றாள்.

அதைக் கேட்டு அமைதியாக இருந்த அந்த குடியானவன், மனைவியைப் பார்த்துச் சொன்னான். ‘நீ சொல்வது சரிதான். சல்லடையில் தண்ணீர் வேண்டுமானால் நிரப்ப முடியாமல் போயிருக்கலாம். ஆனால் மிகவும் அழுக்காக இருந்த சல்லடை இப்போது எப்படி நல்லா சுத்தமாகியிருக்கு பாரு!. அதுபோலத்தான் என்னோட மனசுல இருக்கிற அழுக்கை எல்லாம் படிப்படியாக, திருவாசகம் அகற்றுவதை என்னால் நன்றாக உணர முடிகிறது’ என்றான்.

ஆம்.. எப்போதும் புரிதலை விட மனம் தெளிதலே அவசியமும், முக்கியமானதும் ஆகும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
பந்தயத்தில் வெற்றிபெறுவதென்பது, அதைக் குறித்துப் பல கோணங்களில் சிந்திப்பதில் இருக்கிறது.

ஒருவருடைய ஆசை என்ன, விருப்பம் என்ன, எதில் அவா என்பதையெல்லாம் அறிந்துகொண்டு, அதற்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் பணியில் முன்னேறுகிறார்கள்.

இது சரியா, தவறா என்பது, வேறு பிரச்னை.

மக்களுக்குக் கண்ணில் தெரிவதுதான் மகத்தான சாதனை என எண்ணப்படுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

கடவுளுக்குக்கூடப் பிடித்தமானதை வைத்துப் படைக்கிறோம். பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, கிருஷ்ணனுக்குச் சீடை, பாடிகாட் முனியப்பனுக்குச் சுருட்டு என்று நமக்குப் பிடித்ததை கடவுள் பெயரைச் சொல்லிப் படைத்து அனுபவிக்கிறோம்.

ஒருவரை வெல்ல அல்லது கவர, அவர்களுக்கு என்ன பலவீனம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


வேகமாக ஓடக்கூடிய புருஷாமிருகத்தை வெல்வதற்கு, அதன் பலவீனத்தை அறிந்துவைத்திருந்தான் பீமன். புருஷாமிருகம் மிகச்சிறந்த சிவ பக்தன். எங்கேயாவது சிவலிங்கத்தைப் பார்த்துவிட்டால், சிவ பூஜையை முடித்துவிட்டுத்தான் அது பயணத்தைத் தொடரும்.


மகாபாரதத்தில் இந்த உத்தியை பீமன் எப்படிக் கையாண்டான் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. தர்மர் ராஜசூய யாகம் செய்யத் தொடங்கினார். யாக சாலையைத் தூய்மை செய்வதற்காக, அவர் பீமனை அழைத்து, 'பீமா! நீ போய் புருஷாமிருகத்தை அழைத்து வா!' என உத்தரவிட்டார்.


புருஷாமிருகம் என்பது, அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு. புதுமனை புகுவிழாவின்போது பசுவையும், கன்றையும் புதுமனையில் உலாவரச் செய்வதைப்போல, யாக சாலையில் புருஷாமிருகத்தை உலா வரச்செய்வார்கள்.

அதை முன்னிட்டே தர்மர் அந்த மிருகத்தை அழைத்து வருமாறு பீமனிடம் சொன்னார். பீமனும் சென்று புருஷாமிருகத்தை அழைத்தான். அது வருவதற்கு ஒப்புக்கொண்டது. என்றாலும், ஒரு நிபந்தனை விதித்தது.

'பீமா! நான் உன் பின்னால் வருகிறேன். ஆனால், உனக்கும் எனக்கும் எப்போதும் நான்கு காத தூரம் இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளி குறைந்தால், நான் உன்னைப் பிடித்துக் கொன்று தின்றுவிடுவேன். இதற்கு நீ ஒப்புக்கொண்டால், உன்னுடன் வருகிறேன்' என்றது. பீமன் ஒப்புக்கொண்டான்.

புருஷாமிருகம், 'அப்படியென்றால் சரி, நீ முன்னால் ஓடு! நீ நான்கு காத தூரம் தாண்டியதும், நான் இங்கிருந்து புறப்படுவேன்' என்றது.

மிருகமாக இருந்தாலும், என்னவொரு நீதி, நியாயம்?!


ஓட்டம் துவங்கியது. வேக வேகமாக ஓடிய பீமனைப் பின்தொடர்ந்து ஓடிய புருஷாமிருகம், ஒரு கட்டத்தில் பீமனை நெருங்கிவிட்டது. உடனே பீமன், புருஷாமிருகத்தின் பார்வையில் படும்படியாக ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு, மேலே ஓடினான். புருஷாமிருகம் சிவலிங்கத்தைப் பார்த்ததும், தனது வழக்கப்படி சிவபூஜையைச் செய்துவிட்டு, மீண்டும் ஓட்டத்தைத் தொடங்கியது.

அதற்குள் பீமன் வெகு தூரம் ஓடிவிட்டான். எனினும், சற்று நேரத்துக்குள்ளாகவே புருஷாமிருகம் பீமனை நெருங்கிவிட்டது. பீமன் மீண்டும் ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு, ஓட்டமாய் ஓடினான். புருஷாமிருகமும் சிவ பூஜையை முடித்துவிட்டு, பிறகு ஓட்டத்தைத் தொடர்ந்தது.

இதே உத்தியைக் கையாண்டு வேக வேகமாக ஓடிய பீமன், தனது எல்லைக்குள் ஒரு காலை வைத்தான். அடுத்த கால், எல்லைக்கு வெளியே இருந்தது. புருஷாமிருகம், பீமனின் அந்தக் காலைப் பிடித்துக்கொண்டு, 'பீமா! உன்னைப் பிடித்துவிட்டேன். இனி நீ, எனக்கு உணவாக வேண்டிதுயதான்' என்றது.


பீமனோ அதை மறுத்தான். 'இல்லை, இல்லை! என் எல்லைக்குள் நான் காலை வைத்துவிட்டேன்' என்று வாதாடினான்.

முடிவாக, 'தர்மரிடம் போய்ச் சொல்லலாம். தர்மம் தவறாத அவர் என்ன தீர்ப்பு சொல்கிறாரோ, அதன்படி செய்யலாம்’ என்று ஏகமனதாக முடிவானது.

பீமனும் புருஷாமிருகமும் தர்மரிடம் போய், நடந்ததைச் சொன்னார்கள். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த தர்மர், 'பீமா! உன்னுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லையில் இருக்கும்போது, அது உன்னைப் பிடித்துவிட்டதால், உன் உடலில் சரிபாதியை புருஷாமிருகத்திடம் கொடுத்து விடுவதுதான் நியாயம்!' என்று தீர்ப்பு வழங்கினார்.

சொந்தத் தம்பியாக இருந்தாலும், அவனுக்குச் சாதகமாக பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்காமல், தர்ம நெறிப்படி நடந்துகொண்ட தர்மரை அனைவரும் பாராட்டினார்கள். புருஷா மிருகமும் தர்மரைப் பாராட்டி விட்டு மறைந்தது.

தர்மரின் நடுநிலை தவறாத தன்மை, பீமனின் உயிரைக் காத்தது. தந்திரத்தோடு இயங்குவதற்கு பீமனும், தந்திரம் தோற்கும்போது நியாயமே வெல்லும் என்பதற்கு தர்மரும் உதாரணமாகிறார்கள்.


1526789719817.png
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.