தீக்காயங்கள் என்ன செய்ய வேண்டும்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தீக்காயங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

தீக்காயங்கள் யாருக்கும் எப்போதும் ஏற்படலாம். அந்த பதற்றமான நேரத்தில் என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது எனத் தெரியாமல் அவசர கதியில், உடன் இருப்பவர்கள் செயல்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களின் நன்மைக்காக இவர்கள்
செய்யும் சில விஷயங்களே மேலும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். உடலில் தீப்பிடித்தாலோ, தீக்காயம் ஏற்பட்டாலோ செய்யவேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் பற்றிப் பேசுகிறார் சரும மருத்துவ நிபுணர் மாயா வேதமூர்த்தி.

தீப்பிடித்தால் ஏற்படும் பாதிப்பை விட, அதனை முறையாக கையாளாததால் ஏற்படும் பாதிப்புகளே அதிகம்.
பலர் உடலில் தீப்பட்டவுடன் பயத்தில் ஓட்டம் எடுப்பார்கள். அவ்வாறு ஓடும் போது காற்றின் வேகத்தால் தீ இன்னும் அதிகரிக்கும். அதனால் இன்னும் அதிகமாக பாதிப்பு ஏற்படும்.

உடலில் தீப்பிடித்தால் தரையில் படுத்து உருள வேண்டும். மண் தரையில் உருள்வது இன்னும் நல்லது. உடனடியாக
தீ அணையும் அல்லது தீப்பிடித்த உடன் அருகில் தண்ணீர் இருந்தால் எடுத்து உடனடியாக உடல் முழுவதும் ஊற்ற வேண்டும். தண்ணீர் பட்டால் செப்டிக் ஆகும் என்பதும் தவறான நம்பிக்கையே.

தண்ணீரை எடுத்து ஊற்றி உடனே தீயை அணைக்கத்தான் பார்க்க வேண்டும். தீப்பட்டவுடன் துணிகளை கொண்டு போர்த்தினால், மேலும் அந்த துணியிலும் தீப்பிடிக்க வாய்ப்புண்டு. கம்பளி போன்ற தீயை அணைக்கும் திறனுடைய மிக தடிமனான துணி வகைகளை பயன்படுத்தலாம்.

ஓரளவு தடிமனான துணிகளை பயன்படுத்தினால், அதிலும் தீப்பிடிக்கக் கூடும். தீக்காயம் பட்ட இடத்தில் சிலர் தோசை
மாவு ஊற்றுதல், பற்பசை வைத்தல், இங்க் ஊற்றுதல், கரித்தூள் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதெல்லாம் காயம் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள இவை தடையாக இருக்கும்.

அதாவது, நெருப்புக் கொப்புளம் வடிந்த பின் உள் காயம் எந்த அளவு உள்ளது என்று ஆராயும் போது, அந்த இடத்தில் வைக்கப்படும் இந்த பொருட்களின் காரணமாக காயத்தின் நிலை சரியாக தெரியாது. காயம் முதல் டிகிரி தீக்காயமா, இரண்டாவது டிகிரி தீக்காயமா என கண்டறிதல் கடினமாகிவிடும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் தீக்காயம் பட்டுவிட்டால், அந்த இடத்தில் ஐஸ் வாட்டர் ஊற்றலாம். ஐஸ் கட்டிகளை நேரடியாக வைக்கக் கூடாது. கை, கால்களில் தீக்காயம் பட்டு விட்டால் ஓடுகிற தண்ணீரில் வைத்திருக்கலாம்.
தீக்காயத்தால் உரிந்திருக்கும் தோலை நாமாகவே பிய்க்கக்கூடாது.

உடலோடு துணி ஒட்டி இருந்தாலும் அவற்றை நாமாக பிடித்து இழுக்கக்கூடாது. கை வைத்தியம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்வதே நல்லது. கரன்ட் ஷாக், மின்னல் ஷாக் ஏற்பட்ட நேரங்களில் அவர்களைச் சுற்றி சூழ்ந்து கொள்ளாமல் அவர்களுக்கு காற்று விட வேண்டும்.

உடைகளை தளர்த்தி அல்லது அவிழ்த்து விட வேண்டும். ஆபத்தான நிலையில் இருந்தால், உடனடியாக அவசர ஊர்திக்கு போன் செய்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். சிறிய தீக்காயங்கள் என்றால் சில்வரெக்ஸ் (Silverex) மருந்து தடவலாம். தீக்காயங்களால் உள்ளிருக்கும் திசுக்கள் பாதிக்கப்படும்.

மேலே ஆறியது போல இருந்தாலும், உள்ளிருக்கும் திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் காயம் ஆறும் நிலையில் இருக்கும் போது அதன் மீது அனல் படாமல், வெப்பம் தாக்காமல் பாதுகாக்க வேண்டும். டீ வடிகட்டும் போது மற்றும் இட்லி எடுக்கும் போது வெளிப்படும் நீராவி போன்றவையும் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சுடுநீரில் குளிக்கக்கூடாது. தீக்காயம் பட்ட இடத்தின் மீது தடிமனான துணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். பெரிய தீக்காயங்களின் போது ஏற்படும் வடுக்கள் தவிர்க்க முடியாதவை. சிறிய தீக்காயத்தால் வடுக்கள் ஏற்படாமல் தடுக்க எண்ணெய் அல்லது க்ரீம் தடவ வேண்டும்.

தலையில் நெருப்புப்பட்டதால் முடி வளராதோ என்று சிலர் நினைப்பார்கள். நெருப்புக் காயம் எந்த நிலையில் இருந்தது மற்றும் என்ன விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது ஆகியவற்றைப் பொறுத்தே மறுபடி முடி வளரும் வாய்ப்புகள் அமையும். அதற்கு மருத்துவர் எழுதித் தரும் மருந்து அல்லது எண்ணெய்களையே பயன்படுத்த வேண்டும்.

"தீக்காயம் பட்ட இடத்தில் சிலர் தோசை மாவு ஊற்றுதல், பற்பசை வைத்தல், இங்க் ஊற்றுதல், கரித்தூள் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இவற்றினால் ஒரு பலனும் இல்லை. தீங்குதான் உண்டு!"
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.