தேமல், படர்தாமரை ஏற்படுவது ஏன்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தேமல், படர்தாமரை ஏற்படுவது ஏன்?

டாக்டர் கு. கணேசன்
ஓவியம் : வெங்கி
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்குத் தோலில் தோன்றும் நோய்களுள் ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

தேமல் ஏன் வருகிறது?
தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். ‘மலேசேசியாஃபர்ஃபர்’ (Malassezia furfur) எனும் கிருமியால் இந்தப் பாதிப்பு உண்டாகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது.

மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு.

வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டுவருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.

சிகிச்சை என்ன?
இன்றைய நவீன மருத்து வத்தில் தேமலைப் போக்கப் பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன. தினமும் இரு வேளை குளித்து, தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்தக் களிம்பு / பவுடர்களில் ஒன்றைச் சில வாரங்களுக்குத் தொடர்ந்து பூசிவந்தால், தேமல் விடைபெற்றுக் கொள்ளும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தேமலுக்கான மாத்திரைகளையும் சாப்பிட்டுவர வேண்டும். அப்போதுதான் தேமல் மறுபடியும் வராது.

காளான் படை வருவது ஏன்?
சுயச் சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் பருமன், நீரிழிவு உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகம் புழங்குபவர் களுக்கும் காளான் கிருமிகள் பாதிக்கிற வாய்ப்பு அதிகம்.

இந்தக் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு.

காளான் நோய்க்கு ‘டீனியா தொற்று’ (Tinea infection) என்பது மருத்துவப் பெயர். இதை ஏற்படுத்தும் கிருமிகள் பல. அவற்றுள் மைக்ரோஸ்போரம், டிரைகோபைட்டன், எபிடெர்மோபைட்டன் முக்கியமானவை. முதல் இரண்டு கிருமிகள் தோலையும் முடியையும் பாதிக்கின்றன. மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கிருமி தோலையும் நகங்களையும் பாதிக்கக்கூடியது.

நோயின் வகைகள்
இந்தக் கிருமிகள் பாதிக்கிற இடத்தைப் பொறுத்து நோயின் பெயர் மாறும். தலை படை, முகப் படை, உடல் படை, தொடை இடுக்கு படை, நகப் படை, கால் படை என்று காளான் படைக்குப் பல பெயர்கள் உள்ளன.

தலை படை
பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளுக்கு இது வருகிறது. இது வருவதற்கு முக்கியக் காரணம், சுயச் சுத்தக் குறைவு. சரியாகச் சுத்தப்படுத்தாத கத்தியால் மொட்டை போடும்போது, இந்த நோய் பரவுகிற வாய்ப்பு அதிகம். மேலும் இந்த நோய் உள்ளவர் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதன் வழியாகவும் இது ஏற்படுவதுண்டு.

இந்த நோய் பாதிப்புள்ளவருக்குத் தலையில் ஆங்காங்கே சிறிதளவு முடி கொட்டியிருக்கும். வட்ட வட்டமாகத் தலையில் சொட்டை விழுந்திருக்கும். அரிப்பு எடுக்கும். சிலருக்குச் சீழ்க் கொப்புளங்கள் ஏற்பட்டிருக்கும்.

முகப் படை
இந்த நோய் மூக்கு, கன்னம், தாடி வளரும் இடம் என முகத்தில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பெரும்பாலும் இது சுத்தப்படுத்தப்படாத கத்தி, பிளேடு போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்தைச் சவரம் செய்யும்போது பரவுகிறது.

முகத்தில் வட்ட வட்டமாகப் படைகள் தோன்றுவதும், தாடி வளர வேண்டிய இடங்களில் முடி இல்லாமல் இருப்பதும் அரிப்பு எடுப்பதும் இதன் முக்கிய அறிகுறிகள். தேமலுக்குச் சொன்ன சிகிச்சையே இதற்கும் பொருந்தும். புதுப் பிளேடு அல்லது நன்றாகக் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கத்தியால் முகத்தைச் சவரம் செய்தால் இந்த நோய் வராது.

படர் தாமரை
உடல் படைக்கு இன்னொரு பெயர் படர் தாமரை (Ring worm). பொதுமக்களிடம் மிகச் சாதாரணமாகக் காணப்படும் நோய் இது. உடல்பருமன் உள்ள பெண்களிடம் இது அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக, வீட்டு வேலை செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பைச் சுற்றி, இந்தத் தொற்று இருக்கும்.

இவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்பதாலும், ஈரம் அதிகம் இருக்கும் இடங்களில் அதிக நேரம் பணி செய்வதாலும் கை, கால்களில், ஈரத்தில் இருக்கும் காளான் கிருமிகள் எளிதாகத் தாக்கி நோயைத் தருகின்றன. வீட்டில் ஒருவர் உடுத்திய சேலை, சுடிதார், உள்ளாடை போன்றவற்றை அடுத்தவர் உடுத்தும்போது, இது மிக எளிதில் பரவிவிடுகிறது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
படர்தாமரையில் எத்தனை வகைகள்?

டாக்டர் கு. கணேசன்


தொடை இடுக்கு படை

சுத்தமில்லாத இடங்களில் படுத்து உறங்குவதன் மூலமும், அசுத்தமான துணிகள் மூலமும் தொடை இடுக்குகளில் வட்ட வட்டமாகப் படையும் அரிப்பும் தோன்றுகிறது. பாமர மக்கள் இதை ‘கக்கூஸ் பத்து’ என்றும் ‘வண்ணான் படை’ என்றும் அழைக்கின்றனர்.

நீரிழிவு நோய் கட்டுப்படாதவர்களுக்குத் தொடை இடுக்குகளில் இது அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். காரணம், இங்கு ஏற்படுகின்ற அரிப்பு இரவு நேரத்தில்தான் ரொம்பவும் தீவிரமாக இருக்கும்.

தூக்கத்தில் அதை சொரியச் சொரிய நகங்களில் இருக்கிற பாக்டீரியாக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். இது ரத்தச் சர்க்கரையை இன்னும் அதிகரித்துவிடும். இதனால் நோய் தீவிரமடையும். ரத்தச் சர்க்கரையைச் சரியாக வைத்திருக்காவிட்டால், நோய் குணமாக அதிக நாள் ஆகும்.

அதிலும் கோடையில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

வழக்கமாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், தொப்புள், இடுப்பு, தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி, விரல் இடுக்குகள்... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு அதிகமாகத் தெரியும்.

இந்த இடங்களில் பாக்டீரியா தொற்றும்போது ஏற்படும் நோயை ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) என்கிறோம். பொதுவாக இந்த இடங்களில் உராய்வு அதிகமாக இருக்கும் என்பதால், மேல் தோல் அடிக்கடி சிதைந்துவிடும். இதன் வழியாகக் காளான் கிருமிகள் உடலுக்குள் நுழைவது எளிதாகிவிடும். இது தோல் மடிப்பு நோய்க்கு வழிவிடும்.

நகப் படை
இது பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் மட்டுமே ஏற்படுகிறது. நகத்தின் கடினமான பகுதியைக் காளான் கிருமிகள் பாதிக்கும்போது, நகம் தன் இயற்கை நிறத்தை இழக்கிறது. மினுமினுப்புத் தன்மையும் கடினத் தன்மையும் குறைகின்றன.

நகம், முதலில் வெள்ளையாகவும் அதைத் தொடர்ந்து மாநிறம் அல்லது கறுப்பு நிறத்துக்கும் மாறிச் சொத்தை ஆகிறது. இதனால் எளிதில் உடைந்துவிடுகிறது. இந்த நோய்க்குப் பொறுமையாகச் சிகிச்சைபெற வேண்டும். கை விரல் நகப் படைக்கு ஆறு மாதங்கள்வரைக்கும் கால் விரல் நகப் படைக்கு ஒரு வருடம்வரைக்கும் தொடர்ந்து சிகிச்சை எடுத்தால்தான் நோய் குணமாகும்.

கால் படை
‘சேற்றுப் புண்’ (Athlete’s foot) எனப் பாமரர்களால் அழைக்கப்படும் காளான் நோய் இது. கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பும் வலியும் தொல்லை தரும். கொப்புளங்கள் வெடித்துப் புண் உண்டாகும். சிலருக்கு இது கை விரல் இடுக்குகளில் ஏற்படுகிறது.

ஈரமான இடத்தில் அதிக நேரம் கால்களை வைத்திருப்பதாலும் கை விரல்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதாலும் இந்த நோய் உண்டாகிறது. பெரும்பாலும் தண்ணீரில் அதிகம் புழங்கும் விவசாயிகள், தோட்ட வேலை, பண்ணை வேலை செய்கிறவர்கள் இந்த நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

என்ன சிகிச்சை?
எல்லாக் காளான் நோய்களுக்கும் தேமலுக்குச் சொன்னதுபோல் காளான் படைக் களிம்புகளை / பவுடர் களைத் தொடர்ந்து பூசி, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தகுந்த மாத்திரைகளைச் சாப்பிட்டுவந்தால் குணப்படுத்திவிடலாம். சிலருக்கு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் தேவைப்படலாம்.

தடுக்க என்ன வழி?
சுயச் சுத்தம் மிக முக்கியம். தினமும் இரண்டு முறை சோப்பு போட்டுக் குளிக்க வேண்டியது அவசியம்.

முதல் நாள் உடுத்திய உடைகளைச் சோப்பு போட்டுத் துவைத்து, வெயிலில் உலர வைத்து, இஸ்திரி போட்டு மறுபடியும் உடுத்த வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர் உடுத்திய உடைகளை உடுத்தக்கூடாது.

அடுத்தவரின் சோப்பு, சீப்பு, ஷாம்பு, கைக்குட்டை போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது

இறுக்கமான கால் சட்டைகள், உள்ளாடைகளை அணியக்கூடாது.
பருத்தித் துணியாலான ஆடைகளே நல்லது.

வியர்வையை விரைவில் வெளியேற்ற முடியாத செயற்கை இழைகளால் ஆன ஆடைகளைஅணியக்கூடாது.

மழையில் நனைந்துவிட்டு வீட்டுக்கு வந்ததும், நனைந்த ஆடைகளை உடனே களைந்துவிட்டு, உடலைச் சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும். அதிக ஈரத்துடன் ரொம்ப நேரம் இருக்கக் கூடாது.

இறுக்கமான காலணிகள்/ காலுறை கள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

கம்பளியில் தயாரிக்கப்பட்ட உடைகள், காலணிகளைத் தேவை யில்லாமல் அணிய வேண்டாம்.

அசுத்தமான இடங்களில் குழந்தை களை விளையாடவிடக் கூடாது.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்தச் சர்க்கரை அளவை எப்போதும் சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கை, கால் விரல் இடுக்குகளில் அதிகம் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

காளான் படை உள்ளவர்களைத் தொட்டுப் பழகுவதும் நெருங்கிப் பழகுவதும் கூடாது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.