தேவையா புரோட்டீன் பவுடர்? Is the Protein Powder necessary?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தேவையா புரோட்டீன் பவுடர்?​
ஸ்ருதிலயா
ஊட்டச்சத்து ஆலோசகர்
“நா
ன் ரொம்பவும் ஒல்லியாக இருந்தேன். இந்த புரோட்டீன் பவுடரைத் தண்ணீரில் கலக்கி, தினமும் குடிக்கிறேன். இப்ப பாருங்கள் எவ்வளவு அழகா ஃபிட்டா ஆயிட்டேன்” என்பது போன்ற விளம்பரங்களைப் பார்த்திருப்போம். இந்த விளம்பரங்களை நம்பி, பலரும் புரோட்டீன் பவுடரை கடையில் வாங்கி சாப்பிடுகின்றனர். உண்மையில் இது அவசியமா? மருத்துவர்கள் பரிந்துரை இன்றி நம் விருப்பத்துக்கு இவற்றைச் சாப்பிடலாமா?

“புரதம், மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து. அமினோ அமிலங்கள், நைட்ரஜன், லிப்பிட்ஸ் போன்றவற்றால் புரதம் உருவாக்கப்படுகிறது. உடல் உறுப்புக்கள், தசை, திசு, எலும்பு போன்றவை உருவாகவும், சரியாக வளரவும், செல்கள் புதுப்பித்துக்கொள்ளவும் புரதம் அவசியம்.

குழந்தைகள் வளர வளரப் புரதத் தேவை அதிகரிக்கும். ஒன்று முதல் மூன்று வயதுள்ள குழந்தைகள், பருவமடையப்போகும் பெண்கள், கருவுற்ற பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்குப் புரதச்சத்து அதிகம் தேவைப்படும். இந்தப் புரதத் தேவையைச் சரிசெய்தால்தான் ஆரோக்கியமான நிலையில் திசுக்கள், எலும்புகள், தசைகள் மற்றும் உறுப்புகள் வளரும். அதற்காகத்தான் வளரும் பிள்ளைகள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடலில் தீக்காயங்கள் இருந்தாலும், அதிக ரத்தம் இழந்தாலும், உள்ளுறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் புரதத் தேவையை இருமடங்காகப் பூர்த்தி செய்து
கொள்வதன் மூலம், காயங்கள் சீக்கிரத்திலேயே குணமாகி புதிய திசுக்கள், சதை வளரும்.

எதில் புரதம் அதிகம்?
சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளில் புரதம் அதிகமாகக் கிடைக்கிறது. பால் பொருட்கள், முட்டை ஆகியவற்றிலும் புரதம் நிறைந்துள்ளது. சைவ உணவில், பயறு வகைகள், பருப்பு வகைகள், நட்ஸ் ஆகியவற்றில் புரதச்சத்து நிறைவாக உள்ளது.

தனித்தனியாகப் புரதங்களை சாப்பிடுவதைவிட, இரண்டு பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் புரதக் கலவை, உடலில் அதிக நன்மைகளைச் செய்யும். அதாவது, பருப்பு, சாதம் எனச் சேர்த்துச் சாப்பிட, அனைத்து வித அமினோ அமிலங்களும் புரதமும் சேர்ந்து கிடைக்கிறது. இதனுடன் நெய் சேர்க்கும்போது, கொழுப்பு அமிலங்களும் சேர்கின்றன.

அவசியமா புரோட்டீன் பவுடர்?
பொதுவாக, இந்திய உணவுமுறைகளில் புரதச்சத்து சிறிது குறைவாகவே இருக்கும். மேற்கத்திய நாடுகளில் அசைவ உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், அவர்களுக்குப் போதுமான புரதச்சத்துக்களின் தேவை பூர்த்தியாகிவிடுகிறது. நம் உணவுப் பழக்கங்களைக் கேட்டறிந்து, மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே, புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்ள வேண்டும். சுயமாக எடுத்துக்கொள்வது தவறு. பாடி பில்டர்கள், விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் மருத்துவரின் வழிகாட்டுதலோடு ஒருநாளைக்கு இரு முறை புரோட்டீன் பவுடர் மிக்ஸை அருந்தலாம்.

புரதம் அதிகமானால்?

உணவு மூலமாகக் கிடைக்கும் புரதம் உடலுக்கு எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. ஆனால், செயற்கையான முறையில் புரதத் தேவையை அதிகப்படுத்தினால், புரதத்தை வெளியேற்ற சிறுநீரகம் அதிக சிரமப்படும். புரதம் உடைக்கப்படுவதால் உண்டாகும் அமோனியாவின் அளவு அதிகரிக்கும். இது, மூளை தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் அதிக அளவில் புரதத்தை எடுத்துக்கொள்வது, பிரச்னையை மேலும் அதிகரித்துவிடும். எனவே, மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டும் புரதத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.ஒரு நாளைக்கான புரதத் தேவை
பெரியவர்கள்: 1 கிலோ எடைக்கு 1 கிராம். அதாவது உடல் எடை 55 கிலோ என்றால், 55 கிராம் புரதம் தேவைப்படும்.

1-14 வயது குழந்தைகளுக்கு: 1 கிலோ எடைக்கு, 1.2 - 1.8 கிராம் அளவு. இதில் 10- 14 வயதுள்ள பெண் குழந்தைகள் எனில், 1 கிலோ எடைக்கு 1.8 கிராம் அளவு புரதம் தேவைப்படும்.

கருவுற்ற பெண்கள்: 1 கிலோ எடைக்கு, 1.2 - 1.5 கிராம் அளவு புரதம் தேவைப்படும்.


புரதச்சத்தைப் பூர்த்தி செய்ய:
தினம் இரண்டு கிளாஸ் பால் குடிக்கலாம். பால் பிடிக்காதவர்கள், மோர், தயிர் சாப்பிடலாம்.

தினம் ஒரு முட்டை சாப்பிடலாம். 40 வயதைக் கடந்தவர்கள் மஞ்சள் கருவைத் தவிர்க்கலாம்.

முளைகட்டிய பயறு வகைகளை, சுண்டலாகச் சாப்பிடலாம். முளை கட்டியதில் வைட்டமின் சி சத்தும், புரதமும் சற்று கூடுதலாக இருக்கும்.

வாயுத் தொல்லை வரும் என நினைப்பவர்கள் பருப்பு, பயறு வேகவைத்த தண்ணீரைப் பயன்படுத்தாமல் தவிர்த்துவிட்டாலே போதும்.

நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். அதிலும் பாதாம், வால்நட்டில் புரதச்சத்துக்கள் அதிகமாகவே உள்ளன.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.