தொடர் கதையாகும் மாணவர் மரணங்கள்... தடுக்க &#29

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,193
Likes
21,414
Location
Germany
#1
[h=1]தொடர் கதையாகும் மாணவர் மரணங்கள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்!?[/h]


டெல்லியில் தொடரும் மாணவர்களின் மரணங்களில் இவ்வளவு ஒற்றுமை இருக்கமுடியுமா? அந்த ஒற்றுமை நமக்குச் சொல்ல வரும் செய்திகள் என்னென்ன? இந்த மரணங்களைச் சுற்றி இவ்வளவு சர்ச்சை எதற்காக...?2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி, டெல்லி எய்ம்ஸில் படித்துக்கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர், மர்மமான முறையில் மரணமடைந்தார். “எனது மகனின் மரணம் மர்மம் அல்ல. அவனை விஷ ஊசி போட்டுக் கொன்றுவிட்டனர். எங்கள் குமுறல்களைக் கண்டுகொள்ளாமல் சரவணனின் மரணத்தைத் தற்கொலை என்று கூறி வழக்கை முடிக்கப் பார்க்கிறது டெல்லி காவல்துறை. நாங்கள் சரவணன் மரணம்குறித்து வழக்குத் தொடுத்துள்ளோம்” என்றார் அவரின் தந்தை.


2018 ஜனவரி 17-ம் தேதியன்று டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவ அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மாணவர், மர்மமான முறையில் மரணமடைந்தார். “சரத் பிரபுவின் அறையில் சில மருந்துகள் மற்றும் ஊசி போடப்பட்டதற்கான காலியான நீடில் (syringe) கிடைத்திருக்கிறது.

அதுகுறித்துத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதுகுறித்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே கூறமுடியும்” என்று தெரிவித்துள்ளது டெல்லி காவல்துறை. `இந்த மரணத்தையும் தற்கொலை என்று கூறி வழக்கை முடித்துவிட வாய்ப்புள்ளது' என்று சரவணின் தந்தை, சரத் பிரபுவின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.


சரத் பிரபுவின் உறவினர் நவநீத கிருஷ்ணன் அளித்த பேட்டியில், "சரத் பிரபு நிச்சயம் தற்கொலை செய்துகொள்ளக்கூடியவர் அல்ல. அவர், எப்போதும் அதுபோன்ற மன நிலைக்குச் செல்லாதவர்” என்று கூறியுள்ளார்.


சரவணன், சரத் பிரபு இருவரின் மரணங்களுமே ஒரே மாதிரியான 'மர்ம மரணங்கள்' எனலாம். இருவருமே மருத்துவக் கல்லூரி மாணவர்கள். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த, சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர், அவரின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம்குறித்து முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், "என் மகன் என்னுடன் மரணமடைவதற்கு முந்தையநாள் வழக்கம்போல தொலைபேசியில் பேசினான். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தளவுக்கு அவன் கோழையும் கிடையாது'' என்றார்.


மரணமடைந்த மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வந்து மர்மமான முறையில் இறந்த அல்லது தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பட்டியல் இன்னும் நீளக்கூடும். ரோஹித் வெமுலாவையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

`இந்த மரணங்களை எல்லாம், ஒன்று தற்கொலை என்று குறிப்பிட்டு வழக்கை முடிப்பது அல்லது மர்மமான மரணம் என்று அறிவிப்பது' என்பது சிக்கலான காலகட்டங்களில் காவல்துறை கடைப்பிடிக்கும் போக்கு. ஆனால், டெல்லியில் தொடர்ந்து நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கும், இதுபோன்ற போக்கைக் கடைப்பிடிப்பது ஆபத்தானதாக அமையும்.


“தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் மரணம்குறித்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டுப் பிரச்னைக்கான உண்மையான காரணம் என்னவென்று விசாரிக்க வேண்டும்" என்று சரவணின் தந்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் என்ன தெரியுமா?


“தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் அரசிடம் பதிவு செய்துவிட்டுச் செல்லவேண்டும். பதிவு செய்யாமல் செல்வதால்தான், இவ்வளவு குழப்பமும் ஏற்படுகிறது. ஆயினும் வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்பதுதான்.


`டெல்லியில் நடக்கும் மரணங்களைத் தடுக்க, அரசாங்கத்திடம் பதிவு செய்துவிட்டுப் போனால் போதும் என்பதுதான் தீர்வு' என்பதை, பிள்ளைகளை இழந்து அழுதுகொண்டிருக்கும் அந்தப் பெற்றோர்களிடம் எப்படிச் சொல்ல முடியும்?
தமிழக மாணவர்களின் இறப்புகள், மர்மமான மரணங்களா? கொலைகளா அல்லது தற்கொலைகளா? என்ற கேள்விகளையெல்லாம் தாண்டி, நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.

தொடர்ந்து இதுபோன்ற மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால், 'அந்த இடத்தில் மாணவர்களுக்கான இயல்புநிலை இல்லை' என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பிரச்னையின் வேர் என்பது அரசாங்கப் பதிவேடுகளிலோ, கல்லூரிப் பதிவேடுகளிலோ இல்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநிலையிலேயே உள்ளது. அங்குள்ள கல்விக்கூடங்களின் அரசியலில் உள்ளது

. 'பாகுபாடுகளும், பிரிவினைகளும் ஏகபோகத்துக்கு கல்விக்கூடங்களில் மலிந்துகிடக்கின்றன' என்பதை முத்துக்கிருஷ்ணனும், ரோகித் வெமுலாவும் வெளிப்படையாகவே எழுதி விட்டுத்தான் இறந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற மாணவர்களுக்கான உடனடிப் பாதுகாப்பு என்பது கல்வி-அரசியல் விடுதலையும், அதற்கான விசாரணைகளும், நீதியும்தான். இவற்றைத் தனிப்பட்ட மரணங்களின் விசாரணையாகக் கருதமுடியாது. ஏனெனில் இந்த மரணங்களின் பின்னணியில் உள்ள ஒற்றுமை நமக்கு உரைக்கும் செய்தி, 'இது தனிப்பட்ட பிரச்னை அல்ல; ஒற்றுமையாக, ஒட்டுமொத்தமாக கல்விக்கூடங்களில் நிகழ்த்தப்படவேண்டிய மாற்றங்கள் என்பதுதான்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.