நமது மூலிகைகள்- Herbs for cure

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#1
நமது மூலிகைகள்


அன்புள்ள தோழமைகளுக்கு ,

வணக்கம். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மூலிகைகளை பற்றி, படங்களுடன் விபரம் அளிக்க இருக்கிறேன். அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி !!
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#2

மூலிகையின் பெயர் :
- அறுகம்புல்.

தாவரப்பெயர் :- cynodon dactylon.

தாவரக்குடும்பம் :- poaceae.

பயன் தரும் பாகங்கள் :- சமூலம். (முழுதும்)

வளரியல்பு :- அறுகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடுச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் :- அறுகங்கட்டை உடல் தாது வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கும் உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும், மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.

கணுநீக்கிய அறுகம்புல் சமூலம் 30 கரிம் வெண்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும். அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.

அறுகம்புல் சமூலம் 30 கிராம், கீழாநெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில் கலக்கிக் காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர்கடுப்பு, சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

அறுகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும்.

வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சழ் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, வேனல் கட்டி தீரும்.

அறுகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். ( மருந்து வீறு கடும் மருந்து களை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்)

அறுகு சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில் வைத்து 45, 90, 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.

ஒரு கிலோ அறுகம் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காச்சி வடித்து எடுத எண்ணெயை (அறுகுத்தைலம்) கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும்.

அறுகம் வேர், நன்னாரி வேர், ஆவரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#3

மூலிகையின் பெயர்
– அகத்தி.

தாவரவியல் பெயர் - sesbania grandiflora.

தாவரக் குடும்பம் – fabaceae.

பயன் தரும் பாகங்கள் –: இலை, பூ, வேர், பட்டை மற்றும் மரம்.

வளரியல்பு – அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக வளர்க்கப் படும் சிறு லேசான மரவகை. இதற்குக் கிளைகள் கிடையாது. நேராக சுமார் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் வரிசையில் அமைந்திருக்கும். இலைகள் 15 – 30 செ.மீ. நீளம் உடையது 10 -20 சதையாக இருக்கும். ஒரு இலையில் 40 – 80 சிறு இணைக்குகள் இருக்கும். ஒரு இணுக்கு 1.5 – 3.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். இதன் இலை, பூக்கள் சமையலுக்குக் கீரையாகப் பயன் படுத்துவார்கள். இதன் பூக்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் லேசாக நீளமாக பீன்ஸ் போன்று இருக்கும். இவை முற்றியதும் விதைகள் வெடித்துச் சிதரும். விதை 8 எம்.எம். நீளத்தில் இருக்கும். அகத்தியின் தாயகம் மலேசியா. பின் வட ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. அகத்தி வெப்ப மண்டலத்தில் வளரக் கூடியது. பனிப் பிரதேசத்தில் வளராது. அகத்தி விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

அகத்தியின் மருத்துவப் பயன்கள் -:

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.
அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது.
அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.

அகத்தியின் மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்படுகிறது.
அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் பயன் படுகிறது.
அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது
வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன் படுகிறது.

. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.

"மருந்திடுதல் போகுங்காண் வன் சிரந்தி – வாய்வரம்

திருந்த வசனம் செரிக்கும் – வருந்தச்

சகத்திலெழு பித்தமது சாந்தியா"


அகத்திக் கீரையை உண்ண இடு மருந்து நீங்கும். கிரந்தி வாய்வு உண்டாகும். மருந்தை முறிக்கும் தன்மையுண்டு. புழுவை வெளியேற்றும்ம். எளிதில் சீரணம் தரும். அகத்தி, செவ்வகத்தி, சாழையகத்தியென வேறு இனமும் உண்டு. செவ்வகத்தியின் வேரைத் தண்ணீர் விட்டு அரைத்து வாத வீக்கங்களுக்குப் போம்.

‘அகத்திக்குப் பெரும்பாடு தீரும்’

‘அகத்திக்கு வேக்காடுதனை யகற்றும்.’ (போ.நி.1500)

பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிள்ளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன் படும்.

கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அல்லைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காப்பபி டீ இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்தி மரப்பட்டையும், வேர் பட்டையையும் குடிநீராக்கிக் குடித்து வர சுரம், தாகம், கைகால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்கடுப்பு, நீர்தாரை எரிவு, அம்மைசுரம், ஆகியவை தீரும்.

இலைச்சாறும் நல்லெண்ணையும் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து பதமுறக் காச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழங்கு, விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#4

அக்கரகாரம்.


1) மூலிகையின் பெயர் -: அக்கரகாரம்.

2) தாவரப்பெயர் -: ANACYCLUS PYRETHRUM.

3) தாவரக்குடும்பம் -: COMPOSITAE.

4) வேறு பெயர்கள் -: அக்கார்கரா, ஸ்பானிஷ்பெல்லிடோரி,அக்கரம் முதலியன.

5) தாவர அமைப்பு -: அக்கரகாரம் என்னும் மூலிகைச் செடி கருமண்கலந்த பொறைமண்ணில் நன்கு வளரும். இதன் அமிலத்தன்மை 5 - 6 சிறந்தது. வட ஆப்பிரிக்க வரவான இது ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப் பட்ட மூலிகையாகும். தமிழ் நாட்டில் 1000 முதல் 1500 அடி வரை உயரம் உள்ள மலைப் பிரதேசங்களில் பயிரிடலாம். இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு உடையது. இலைகள் 15 செ.மீ. நீளமானதாகவும் ஆரம்பத்தில் இளம்பச்சை நிறமாகவும், முதிர்சியாகின்ற தருணத்தில் லேசான ஊதா நிறத்திற்கும் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு செடியிலும் சுமார் 7-10 பூக்கள் இருக்கும். வேர்களில் சல்லி வேர்கள் அதிகம் காணப்படும். வேர்கள் 5 - 10 செ.மீ. நீளமானதாக இருக்கும்.
ஜெர்மனி, எகிப்து, கனடா, நாடுகளில் பயிர் செய்யப்படிகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாசலம் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. வேர்களில் அனாசைக்ளின்பெல்லிட்டோரின், எனிட் ரைன் ஆல்கஹால், ஹைடிரோகரோலின்,இன்யூலின், ஆவியாகும் தன்மை உள்ள எண்ணெய், செசாமையின்I, II, III, IV, அமைடுகள் ஆகியவை குறைந்த அளவில் வேரில் உள்ளன. இதில் இருந்து பெல்லிட்டோரின் அல்லது பைரித்திரின் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது நட்ட ஆறு மாதத்தில் அறுவடை செய்யலாம். ஒரு மாத வயதுடைய நாற்றை நடவேண்டும். இலைகள் பழுப்பு நிறமாக மாறி, பூக்கள் காய்ந்து விடும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். வேர்களை நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் பரப்பி பத்து நாட்கள் உலர்த்த வேண்டும். இது பயிரிடஏற்ற பருவம் ஏப்ரல், மே மாதங்களாகும். அக்கரகாரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6) பயன் படும் பாகங்கள் -: வேர்கள் மட்டும்.

7) மருத்துவப் பயன்கள் -: மருந்துப் பொருட்கள் செய்யப் படுகின்றன.இந்திய மருத்துவத்தில் ஆம்பர் மெழுகு மருந்துப் பொருள் செய்யப்பயன்படுகிறது. வாதநோய் நிவாரணத்திற்கும், நரம்புத்தளர்ச்சி நோயால் ஏற்படும் காக்காய் வலிப்பு நோயிக்கும் உடனடி நிவாரணமாகும். மூளையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.


"அக்கரகாரம் அதன்பேர் உரைத்தக் கால்
உக்கிரகால் அத்தோடம் ஓடுங்காண் - முக்கியமாய்
கொண்டால் சலம் ஊறும் கொம்பனையே! தாகசுரம்
கண்டால் பயந்தோடுங் காண்."

அக்கரகாரத்தால் பயங்கரமான வாத தோஷமும் தாக சுரமும் நீங்கும். இதன் வேர் துண்டை வாயிலடக்கிக் கொள்ளின் சலம் ஊறும்.

உபயோகிக்கும் முறை - :இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க நாவின் அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் தாகம் இவைகள் போம். ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒருபாண்டத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காச்சி வடிகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட்டு அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும். இப்படி தினம் 2 - 3 முறை மூன்று நாட்கள் செய்ய வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு முதலியவைகள் போம். இதனைத் தனியாக இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பற்றேயித்து வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும் நீங்கும், இதனைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் குழித்தைல முறைப் படி தைலம் வாங்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்க்க உணர்ச்சி உண்டாகும். ஆண்குறிக்கு லேசாகப் பூச தளர்ச்சி நீங்கி இன்பம் அதிகரிக்கச் செய்யும். அக்கரகாரச் சூரணத்திற்கு சமனெடை சோற்றுப்புக் கூட்டிக் காடிவிட்டு அரைத்து உண்ணாற்கிற்றடவ அதன் சோர்வை நீங்கும். இதனை நாவிற்தடவ தடிப்பை மாற்றும். இதன் தனிச் சூரணத்தை மூக்கிலூத மூர்ச்சை தெளிவதுடன் பற்கிட்டலையும் திறக்கச்செய்யும். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி உபயோகப் படுத்து வதுண்டு.

தளகண்டாவிழ்தம் -: அக்கரகாரம், அதிமதுரம்,சுக்கு, சிற்றரத்தை, கிராம்பு, திப்பிலி, திப்பிலிமூலம், பவளம், மான்கோம்பு, ஆமைஓடு இவைகளை தனித்தனி சந்தனக் கல்லின் பேரில் தாய்ப்பால் விட்டு ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு புளியங்கொட்டைப் பிரமாணம் சந்தனம் போலுறைத்து ஒரு கோப்பையில் வழித்துச் சேகரமு செய்யவும். அப்பால் முன் போல் அந்தச் சந்தனக் கல்லின் பேரில்தாய்ப் பால் விட்டு உத்திராட்சம், பொன், வெள்ளி, இவைகளிலொவ் வொன்றையும் 30 - 40 சுற்றுறையாக உறைத்து அதனாலேற்பட்ட விழுதையும் வழித்து முன் சித்தப் படுத்திய கோப்பையில் சேர்க்கவும். இதற்குமேல் கறுப்புப் பட்டுத் துணியில் மயிலிறகை முடிச்சுக் கட்டித்தேனில் தோய்த்து ஒரு காரம் படாத சட்டியின் மத்தியில் வைத்து அடுப்பிலேற்றி எரித்து நன்றாகக் கருகின பின் அதனில் அரைவிராகனெடை நிறுத்து ஒரு கல்வத்தில் போட்டு அத்துடன் முன்கோப்பையில் சித்தப்படுத்தி வைத்துள்ள கற்கத்தை வழித்துப் போட்டு அப்பட்டமான தேன் விட்டுக் குழம்புப் பதமாக அரைத்து வாயகண்ட கோப்பையில் பத்திரப படுத்துக. வேண்டும் போது விரலாலெடுத்து நாவின் பேரில் அடிக்கடி தடவிக் கொண்டு வர சுர ரோரகத்தில் காணும் நாவறட்சி, விக்கல், வாந்தி, ஒக்காளம், இவை போம். இன்னும் சில நூல்களில் இச்சரக்குகளுடன் வில்வப் பழத்தின் ஓடு, விழாம் பழத்தின் ஓடு இவற்றை உறைக்கும் படி கூறப் பட்டிருக்கின்றன. இவையும் நற்குணத்தைக் கொடுக்கக் கூடியனவே.

அக்கரகார மெழுகு - :அக்கரகார கழஞ்சி 10, திப்பிலி கழஞ்சி 7,கோஷ்டம் கழஞ்சி 4, சிற்றரத்தை கழஞ்சி 8, கிராம்பு கழஞ்சி 7, இவைகளைத் தனித்தனி இடித்துச் சூரணம் செய்து கல்வத்திலிட்டு அதனுடன் சிறு குழந்தைகளின் அமுரியால் (மூத்திரம்) 2 நாழிகை சுறுக்கிட்டு 2 விராகனெடை பூரத்தைக் கூட்டி தேன் விட்டுக் கையோயாமல் மெழுகு பதத்திலேயே 2 சாமம் அரைத்து வாயகண்ட சீசாவில் பத்திரப் படுத்துக. இதனை வேளைக்கு அரை அல்லது ஒரு தூதுளங்காய்ப் பிரமாணம் தினம் இரு வேளை மூன்று நாள் கொடுக்க எரிகுன்மம், வலிகுன்மம், நாவின் சுரசுரப்பு, தோஷாதி,சுரங்கள் தீரும். இந்த மெழுகை நீடித்துக் கொடுக்கக் கூடாது. நோய்பூரணமாகக் குணமாகாவிடில் மீண்டும் ஒரு வாரம் சென்ற பின்கொடுத்தல் நன்று. ( இம்மருந்தை உண்ணும் காலத்தில் புளி தள்ளி இச்சாப் பத்தியமாக இருத்தல் வேண்டும்.)
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#5
அணலிவேகம்.
[TABLE="class: tr-caption-container, align: center"]
[TR]
[TD]
[/TD]
[/TR]
[/TABLE]மூலிகையின் பெயர்
- அணலிவேகம்.

இந்த மூலிகைச் செடி கேரளா திருச்சூரிலிருந்து எனது நண்பர் வின்செண்ட் பால்ராஜ் என்பவர் நாற்றாக வாங்கி வந்தார். இதை அவர்கள் பாம்புக் கடியை குணப்படுத்தும் அறிய மூலிகைச் செடி என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் இதன் தாவரவியல் பெயர் மற்றும், குடும்பப் பெயர். தெறியவில்லை. இதைப் பற்றித் தெறிந்தவர்கள் உதவினால் மிக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்.

Astonia macrophylla or Astonia venenata

botanical name of Analivegam is Alstonia venenata R. and
common english name is Poison Devil Tree....
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#6
அதிமதுரம்.அதிமதுரம் செடி

மூலிகையன் பெயர் –: அதிமதுரம்.

தாவரவியல் பெயர் –: GLYCYRRAIZA GLABRA.

தாவரக்குடும்பம் –: FABACEAE.

பயன் தரும் பாகங்கள் –: இலை மற்றும் உரித்த வேர்கள்.

வேறு பெயர்கள் –: அதிங்கம், அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதூரம். போன்றவை.

வளரியல்பு –: அதிமதுரம் ஒரு வகை செடியைச் சேர்ந்தது. காடுகளில் புதர் செடியாக வளரும். அதற்கு மித சீதோஸ்ணமான கால நிலை வேண்டும். வளமா மண்ணில் நன்கு வளரும். ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளில் பயிர்களுக்கு இடையே களையாக வளரும். இது சுமார் 1.5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலைகள் கூட்டிலையைக் கொண்டது. ஊதா நிரமான சிறு பூக்கள் தண்டின் கணைக்களில் காணப்படும். காய்கள் 3 செ.மீ.நீளமானவை. சிறு முட்களும் காணப்படும். வேர்கள் சிறிது பெரிதுமாக இருக்கம். உடபுரம் மஞ்சள் நிறமாகவும் வெளிப்புரம் பழுப்பு நிறமாகக் காணப்படும். இதில் அதிகம் மருத்துவத்திற்குப் பயன்படுவது வேர்களே. இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், இமாச்ச்சில், உத்திரப்பரதேசம் போன்ற மாநிலத்தில் வணிக ரீதியாகப் பயிரிடுகிறார்கள். அதிமதுரம் நாட்டுமருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும். இது விதை மூலம் இன விருத்தி செய்யப் படுகிறது.

அதிமதுரத்தின் மருத்துவப் பயன்கள் –: இது பித்தம், வாதம், இரத்த தோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சி போக்கி இலைகள் இனிப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டவை. வேர்கள் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. வேர், புண்கள், தாகம், அசதி, கண் நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சல் காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை ஆகியவற்றை கட்டுப்படுத்தும். முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையை பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு.

முக நூலுக்கு நன்றி.

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்:-

அதிமதுரம்-1 Athimadhuram

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன் படுத்தப் பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும் மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்…

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க…

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க…

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க…

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க…

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.

சுகப்பிரசவத்திற்கு ...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு…

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க…

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க…

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக…

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க…

அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்… உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக….

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க…

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க…

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க….

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க…

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர…

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

தாது விருத்திக்கு…

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்…

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்
.
வழுக்கை நீங்கி முடி வளர...

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க…

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்

தொண்டை கரகரப்பு நீங்க…

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்… தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த…

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்

அதிமதுரத்தின் வேர்கள். 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#7
அத்தி.


1. மூலிகையின் பெயர் :- அத்தி.

2. தாவரப்பெயர் :- ficus glomerata, ficus auriculate.

3. தாவரக்குடும்பம் :- moraceae.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன.

5. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு மரவகை. அத்தி கல்க மூலிகைகளில் ஒன்றாகும். தெய்வ அருள் பாவிக்கும் மரமும் ஆகும். பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது அதனால் இதை காணாமல் பூப் பூக்கும் கண்டு காய்காய்க்கும். என்ற விடுகதையிலும் சொல்வர். அடிமரத்திலும் மற்றும் கிழைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். துவர்ப்பும் இனிப்பும் உடைய இதன் பழம் குருதி விருத்திக்கு உறுதுணை யாகும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள், பட்டையில், செரில்பெஸ்ரஹென்னேட், லுப்பியால், எ-அமிரின் மற்றும் 3 இதர கூட்டுப் பொருடகள், ஸ்டீரால் மற்றும் க்ளானால் பழத்திலும், பீட்டா சிஸ்ஸடீரால் இலைகளிலும் உண்டு. விதை மற்றும் பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

அத்திப்பாலை மூட்டு வலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிசர்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.

அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர்- காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20 என்ற அளவில் சாப்பிடலாம். காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம். பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து-தேனில் போட்டு சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.

அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை, பாளையில் பால் சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

இதன் அடிமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து 30-50 மி.லி.குடித்து வர பெரும்பாடு, குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண் குணமாகும், கருப்பை குற்றம் தீரும். பட்டையைக் கசாயமிட்டு அருந்தலாம்.

அத்தி மரத்தின் துளிர் வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம், வாந்தி குணமாகும். உலர்த்தி சூரணமாகவும் சாப்பிடலாம்.

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#8
அந்தரத்தாமரை.
1. மூலிகையின் பெயர் -: அந்தரத்தாமரை.

2. தாவரப் பெயர் -: PISTIA STRATEUTES.

3. தாவரக்குடும்பம் -: ARACEAE.

4. வேறு பெயர்கள் -: ஆகாயத்தாமரை.

5. பயன் தரும் பாகங்கள் -: இலைகள் மட்டும்.

6. வளரியல்பு -: அந்தரத்தாரமரை நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடிகள். சுத்தமான தண்ணீரில் வளரக்கூடியது. இலைகள் நீளம் சுமார் 13 செ.மீ. இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் ஜோடியாக இருக்கும். இதற்கு காம்புகள் (ஸ்டெம்) கிடையாது. கூடை வடிவ இலை இழம்பச்சை நிறமாக இருக்கும். அதில் மொசுப்பான முடிகள் இருக்கும். இது முதன் முதலில் ஆப்பிரிக்காவில் ‘Lake Victoria’ என்ற ஏரியில் தோன்றியதாகச் சொல்வர். இது அமரிக்காவில் 1765 ம் ஆண்டில் ‘புளோரிடா’ என்ற இடத்தில் ஏரிகளில் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்வர். இதை ஆங்கிலத்தில் ‘Water Cabbage’ மற்றும் ‘Water Lettuce’ என்றும் கூறுவார்கள். இதன் வேர்கள் குஞ்சம் போல் இருக்கும். தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. பூக்கள் செடி நடுவில் மிகச் சிறிதாகத் தென்படும். இது இன விருத்திக்கு தாய் செடியுடன் சிறு குட்டிச் செடிகள் நூல் இழை போன்று தொடர்ந்து பெருகிக் கொண்டே போகும்.

7. மருத்துவப் பயன்கள் -: இது வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றை துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.

25 மி.லி. இலைச்சாற்றை சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாட்கள் கொடுக்க மார்பிலும் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

அந்தரத்தாமரையிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து வர மூல மூளை அகலும்.

இதன் இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணைய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி வகைக்கு 10 கிராம் போடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத்தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#9
அம்மான்பச்சரிசி

1) வேறுபெயர்கள் -: சித்திரப்பாலாடை.

2) தாவரப்பெயர் -: Euphorbia hirta.

3) தாவரக்குடும்பம் -: Euphorbiaceae.

4) வகைகள் -: பெரியமான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி,சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி,வயம்மாள் பச்சரிசி.

5) வளரும் தன்மை -: ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். சிறு செடி. எதிர் அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன் கூடியஈட்டி வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.

6) பயன்தரும் பாகங்கள் -: இலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை.

7) பயன்கள் -: அம்மான் பச்சரிசிக்கு எரிபுண், மல பந்தம், பிரமேகக்கசிவு, சரீரத்துடிப்பு, நமச்சல் ஆகியவை போகும்.

இந்த மூலிகையை சுமார் நெல்லிக்காய் பிரமாணம் நன்றாய் அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேழை மூன்றுநாட்கள் கொடுக்க அரத்த பிர்ழியம், மலபந்தம், நீர்கடுப்பு,தேகநமச்சல், ஆகியவை நீங்கும். இதன் பாலை நக சுற்றிக்குஅடிக்க குணமாகும்.

சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம்,ஆகியவை போகும். சுக்கில தாது விர்த்தியாகும். இதைவெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.

இதை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 - 7 குன்றி எடை வீதம் மோரில் கொடுக்க குழந்தைகளுக்கு மலத்தை போக்கும், வயிற்று உபத்திரவத்தையும், கிருமிக் கூட்டத்தையும் ஒழிக்கும். இந்த இலையை அரைத்து சுமார் 1- 1.5 கழற்சிக்காய்ப் பிரமாணம் பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுக்க வேட்டை, வெள்ளை, மருந்துகளின் உஷ்ணம் ஆகியவைபோகும். அரைத்து ஊறலுடன் பரவுகின்ற படைகளுக்குப்பூச குணமாகும்.

இது வயிற்றுப்பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும்,வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம்குறைப்பானாகவும், செயற்படும்.

இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு, ஆகியவற்றில் வெடிப்பு ரணம் தீரும்.

தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத்தாது உடல் பலப்படும்.

கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இரு வேழையும் எருமைத் தயிரில் உண்ணஉடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்புதீரும்.

பூவுடன் 30 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய் பால்பெருகும்.

பாலைத் தடவி வர முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும். இலையை நெல்லிக்காய் அளவு நன்கு அரைத்துபசும் பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்கச் சிறு நீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, உடம்பு நமச்சல் ஆகியவை தீரும்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#10
அரசு.


1. மூலிகையின் பெயர் -: அரசு.

2. தாவரப் பெயர் -: Ficus religiosa.

3. தாவரக் குடும்பப் பெயர் -: Moraceae.

4. பயன்தரும் பாகங்கள் -: கொழுந்து, பட்டை, வேர், பழம் மற்றும் விதை முதலியன.

5. வளரியல்பு -: அரசு பெரிய மரவகையைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா, பங்களாதேஸ், நேபால், பாக்கீஸ்தான், சைனாவின் தென்மேற்குப்பகுதி, வியட்னாவின் கிழக்குப்பகுதி மற்றும் இந்தோசைனா. இது சுமார் 90 அடிக்குமேல் வளரக்கூடியது. இந்த மரத்தின் அடிபாகம் சுற்றளவு சுமார் 9 அடி வரை பெருக்கும். இதன் ஆரம்ப ஆண்டு 288 பி.சி க்கு மேல் இருக்கும். இலைகள் நீழ் வட்டமாகவும் கூர்நுனியாக இருக்கும். ஊர் ஏரிகள், குளக்கரைகள், ஆற்றோரங்கள் ஆகிய இடங்களில் காணப்படும். இது ஜைனம், புத்த, இந்து மதங்கள் புனித மரமாகக் கருதிகிறார்கள். புத்தர் ஞானம் அடைந்தது இந்த மரத்தடியில் தான். கணவம், போதிமரம் என்றும் சொல்வர்கள். இந்த மரத்தின் காற்று தூய்மையான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. அதனால் கல்பக விருட்ச்சமாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் தெய்வ சிலை வைத்து வழிபடுவதன் நோக்கம் அறியலாம். இதன் பூக்கள் சிறிதாகச் சிவப்பாக இருக்கும். பிப்ரவரிமாதங்களில் பூக்கும். மே, ஜூன் மாதங்களில் பழங்கள் விடும். பழங்கள் சிறிதாக இருக்கும் பறவைகளுக்கு நல்ல உணவு. விதைகள் சிறிதாக அதிகமாகத் தென்படும். பறவைகள் இதன் பழத்தைச் சாப்பிட்டு எச்சத்தை இடும் இடங்களில் செடிகள் உற்பத்தியாகும் முக்கியமாக கட்டிடங்களின் இடுக்குகளில் செடிகள் பெருகும். தெய்வ நம்பிகையுள்ளவர்கள் இந்த மரத்துடன் வேப்பமரத்தையும் சேர்த்து வளர்ப்பார்கள். பல கிராமங்களில் இந்த அரச மரத்தைச் சுற்றி மேடையமைத்து ஊரில் உள்ள வயதானவர்கள் அரட்டையடித்துப் பொழுது போக்குவதும் அங்குதான். உதாரணம் கெம்பனூர் போன்று. இந்த மரத்தினடியில் இருந்து காற்றை அனுபவித்தால் இருதயநோய் வராது என்பது எந்த அளவுக்கு உண்மையென்று தெறியவில்லை. விதைகள் மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் -: அரச மரத்தின் இலைக் காற்று குளிர்ச்சியை உண்டாக்கி வெப்பத்தைப் போக்கி கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. ஆண்மை பெண்மையாக் காப்பாற்றும். வேர்பட்டை, மரப்பட்டை கிருமிகைளை அழித்து புண்ணாற்றும், பழவிதை குடல் புண்ணாற்றும், மலச்சிக்கலைப் போக்கும், தாது பெருக்கி விந்தினைக் கட்டும். பழம் ஆஸ்த்துமாவைக் கட்டுப்படுத்தும், வேர் அல்சரைக் குணப்படுத்தும், தோல்வியாதிகளைக் குணப்படுத்தும், இருதயத்தைக் குணமாக்கும்.

அரச மரத்துக் கொழுந்து இலையைக் கைப்பிடி எடுத்து அரைத்து, நெல்லிக்காயளவு எருமைத் தயிருடன் சேர்த்து அதிகாலையில் சாப்பிட்டு வர, தொண்டை வறட்சி, தாகம் நீங்கும். குரல் வளத்தைத் தரும். சீதபேதியைக் கட்டுப்படுத்தும்.

“அரசம் வேர் மேல் விரணமாற்றும். அவ்வித்து
வெருவரும் சுக்கில நோய் வீரட்டும்-குரல்வளை
தாகம் ஒழிக்கும், கொழுந்து தாது தரும். வெப்பகற்றும்,
வேக முத்தோடம் போக்குமென்” ---- கும்பமுனி.


அரச மர வேரின் பொடி தொண்டைப் புண்ணை ஆற்றும். விதை சுக்கில குறைபாட்டை நீக்கி மலட்டை அகற்றி கருத்தரிக்க வைக்கும், கொழுந்து கசாயம் தொண்டைப் புண்ணை ஆற்றும், தாகம் தணிக்கும். கொழுந்து அரைத்துச் சாப்பிட நீர்த்துப் போன விந்து கெட்டியாகும், தாது ஊறும், உடல் வெப்பம் தணியும். வாத, பித்த, சிலேத்தும நோய்களைப் போக்கும்.

அரச தளிரை அரைத்துப் பூசினால் கால்வெடிப்பு குணமாகும். இதன் பாலைத் தடவினாலும் குணமாகும்.

அரசு மரப்பட்டையை உலர்த்தி எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர சொறி, சிரங்கு குணமாகும், பிற புண் ஆறும். இப்பொடியை சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைத்தால் தீங்கு செய்யும் நுண்ணுயிர்க் கிருமிகள் வீட்டில் தங்கா.

வேர் பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி பால் சர்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச் சூடு, தினவு, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.

அரசு பட்டைத் தூள் 2 சிட்டிகை வெந்தீரில் கொதிக்க வைத்து ஆற விட்டு வடித்துக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.

அரச மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்து சுத்தப்படுத்தி நன்கு காயவைத்துப் பொடியாகச் செய்து சூரணமாக வைத்துக் கொள்ள வேண்டும். 5-10 கிராம் இப்பொடியை நாளும் காலை மாலை பாலில் கலந்து சர்கரையும் சேர்த்து காப்பி போல 48-96 நாள் சாப்பிட வேண்டும். ஆண் விந்து கட்டும், ஊறும். ஆண்மை பெருகும். ஆண் மலடு நீங்கும்.

அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியவை தீரும்.

உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாள்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.

அரசு இலைக் கொழுந்து ஒரு பிடி எடுத்து மண் சட்டியில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காசாயமிட்டுச் சாப்பிடலாம். இலைக் கொழுந்தை அரைத்து நெல்லியளவு பாலில் கலந்து சாப்பிடலாம். 48 நாள் சாப்பிட பெண்மலடு நீங்கி கருத்தரிக்கும். புளி உணவைக் குறைக்க வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.