நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&#2991

Yaazhini15

Friends's of Penmai
Joined
Mar 22, 2015
Messages
220
Likes
575
Location
Kovai
#1
நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கியம்

ஏன் இன்று முதியோர் இல்லங்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது? என்கிற காரணத்தை இந்த பதிவு புரிய வைக்கும் என நம்புகிறேன்.

நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கியம்.
நன்றி - எழுத்தாளர் ஜெயமோகன்


சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள். இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.அவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்து மணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தாலே அதிகம் தான்.
‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர். இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக் கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.


அவர் மகன் ஒருவாரம் கழித்து மிக நீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னை பலகோணங்களில் சிந்திக்க வைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.


ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக் கொடுப்பதுண்டு. பள்ளிக்கூடப் படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்க முழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கிலமொழியறிவுக்கும் கணிதத் திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில் கூட கொண்டாட்டம் இல்லை. படிப்புதான்.


‘சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக் காலத்தைப் பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சி கூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக் கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக் கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது. படிப்பு படிப்பு படிப்புதான்’
‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். ’தனியார் பள்ளி அது. மிக உயர் மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. அங்கே பிள்ளைகளைச் சேர்க்க வரிசைகட்டி நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள். பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’

அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை.


‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.


அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனித வாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது. அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’


‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரை மணிநேரம் என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டு வருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் மனம் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள் போல தெரிகிறார்கள்’
‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை. படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக் கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேச நினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. இப்போது கூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம் காட்ட மட்டுமே அவர்களால் முடிகிறது.
புத்தகம் வாங்காதே, பயணம் செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்தது போல என்னை வாழச் சொல்கிறார்கள்’

‘நீங்களே சொல்லுங்கள், அரை மணிநேரம் கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவு தான் செயற்கையாக முயன்றாலும் பேசிக் கொண்டிருக்க முடியுமா?

முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவு நாள் வாழ முடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். அதற்கு மேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப் பருவம் முழுக்க வீணாகி விட்டது என்று தான் நினைக்கிறேன்’


அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லி விடமுடியாது’ என்றேன்.


அவர் புரிந்து கொள்ளாமல் ‘நன்றி கெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்.


‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்த பின் அந்த நினைவுகளைத் தான் கொண்டாடிக் கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு விட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.
வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதுதான். அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.
நாளை முக்கியம்தான், இன்று அதைவிட முக்கியம்.
[தினமலர் தீபாவளி மலருக்கு எழுதிய கட்டுரை]
நன்றி - எழுத்தாளர் ஜெயமோகன்


பின்குறிப்பு:
ஏன் இன்று முதியோர் இல்லங்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது? என்று இந்த பதிவு புரிய வைத்திருக்கும் என நம்புகிறேன்.
 

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#3
Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

சரியான சவுக்கடி கட்டுரை ......thanks for sharing friend.
பந்தயக் குதிரையாக பிள்ளைகள் ஓடுறாங்க ........பாவம்.
syllabus இந்த சமச்சீர் கல்வி வந்தால் குறையும் என நான் எண்ணினேன் .......ஆனால் பனிரெண்டு பாடம் இருபத்திரண்டு ஆயிருக்கு......எல்லா பள்ளிகள் ,அரசும் பிள்ளைகளை வைத்தே நம்மை corner பண்றாங்க.
பிள்ளைகள் விளையாட நேரமே இல்லை.
ஏற்கனவே இயற்கையும் அழிச்சுட்டு வாறோம்.
இயந்திர வாழ்க்கைக்கு பழக்க படுத்திவிட்டு ...........குறை சொல்லி என்ன ஆவது.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#4
Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

யாழினி,
அருமையான பதிவு. விழித்திக்கொள் , இல்லாவிட்டால் நாளை உன் நிலைமையும் இதுவே என்று முகத்தில் அறைந்து, சொல்வது போல் உள்ளது.


தேனு @thenuraj நீங்க முதியோர் புறக்கணிப்பைப்பற்றி எழுதி இருந்தீங்கள்ள. கார்த்தி சொல்ற மாதிரி நாணயத்தின் மறுபக்க பதிவு இது.
 

Yaazhini15

Friends's of Penmai
Joined
Mar 22, 2015
Messages
220
Likes
575
Location
Kovai
#5
Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

உண்மை தான். உண்மையான எதிர்பார்ப்பற்ற அன்போடு வளர்க்கும் பிள்ளைகளுக்கும் எதிர்ப்பர்புகளோடு வளர்க்கப்படும் குழந்தைக்கும் இருக்கும் வித்தாயசம்.
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#6
Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

போன தலை முறைக்கும் இந்த தலை முறைக்கும்
பல தலை முறை இடைவெளி என்பதே நிதரிசனம்


நல்ல பகிர்வு.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S
#7
Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

நல்லதொரு பதிவு யாழினி....
படிப்பு வாழ்க்கைக்கு அவசியம் .... முக்கியம்... எல்லாம் சரி... ஆனா அது மட்டுமே வாழ்க்கையாகி விடாது.... இதை சில பெற்றோர்கள் புரிந்துக் கொள்ளாததன் விளைவே மேலே உள்ள பையனின் நிலை...!!


ரதி @RathideviDeva

பெற்றோரிடம் இருந்து எந்த பாசமும் கிடைக்கவில்லை... சிறுவயதிற்கே உரிய அனைத்து சந்தோஷங்களையும் இழந்து, வெறும் இயந்திரமாகி படிப்பை மட்டுமே பிராதானமாக்கிய பெற்றோர் & ஊரின் மீது இப்போது எனக்கு எந்த பிடிப்பும், பிணைப்பும் வரவில்லை என்று கூறியிருப்பது சரியே..!!

ஆனால் அதையே தானே இவனும் அந்த பெற்றோருக்கு தருகிறான்... அவர்கள் காட்டாத பாசத்தை இவன் அவர்கள் மேல் காட்டலாமே...! இதுதான் வாழ்க்கை என்று புரிய வைக்கலாமே...! படிப்பும், பணமும், வசதியும் நிறைவான வாழ்க்கையை தராது என்பதை அவர்களுக்கு உணர்த்தி இருக்கலாமே..., அதை விட்டு ஒதுங்கி இருந்து அவன் சாதிப்பது என்ன..??

அவன் பெற்றோர்கள் இவனுக்கு நேற்று தந்ததை..., நாளை இவன் பிள்ளைகளுக்கு அவன் தரப் போகிறான்... அமெரிக்க வாழ்க்கை உறவுகளை கொடுத்து விடுமா..?
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S
#8
Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

யாழினி,
அருமையான பதிவு. விழித்திக்கொள் , இல்லாவிட்டால் நாளை உன் நிலைமையும் இதுவே என்று முகத்தில் அறைந்து, சொல்வது போல் உள்ளது.


தேனு @thenuraj நீங்க முதியோர் புறக்கணிப்பைப்பற்றி எழுதி இருந்தீங்கள்ள. கார்த்தி சொல்ற மாதிரி நாணயத்தின் மறுபக்க பதிவு இது.நாணயத்தின் மறுபக்க பதிவு தான்....
ஆனா இதிலும் எனக்கு சில கருத்துக்கள் இருக்கு ரதி... அது சரியா தப்பான்னு தெரியலை... எனக்கு தோனுச்சு.... மேலே உள்ள பதிவில் பாருங்க...
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#9
Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

பெற்றோரிடம் இருந்து எந்த பாசமும் கிடைக்கவில்லை... சிறுவயதிற்கே உரிய அனைத்து சந்தோஷங்களையும் இழந்து, வெறும் இயந்திரமாகி படிப்பை மட்டுமே பிராதானமாக்கிய பெற்றோர் & ஊரின் மீது இப்போது எனக்கு எந்த பிடிப்பும், பிணைப்பும் வரவில்லை என்று கூறியிருப்பது சரியே..!!

ஆனால் அதையே தானே இவனும் அந்த பெற்றோருக்கு தருகிறான்... அவர்கள் காட்டாத பாசத்தை இவன் அவர்கள் மேல் காட்டலாமே...! இதுதான் வாழ்க்கை என்று புரிய வைக்கலாமே...! படிப்பும், பணமும், வசதியும் நிறைவான வாழ்க்கையை தராது என்பதை அவர்களுக்கு உணர்த்தி இருக்கலாமே..., அதை விட்டு ஒதுங்கி இருந்து அவன் சாதிப்பது என்ன..??
//அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லி விடமுடியாது’ என்றேன். அவர் புரிந்து கொள்ளாமல் ‘நன்றி கெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்.//

இப்போது கூட தன் தவறை உணராமல் பிடிவாதமாக இருக்கும் தந்தையிடம் மாற்றத்தை எதிர்ப்பார்த்து ஏமாறுவது வீண் என்று அந்த மகன் நோக்கத்தில் தவறில்லை என்றே தோன்றுகிறது. அவனால் முடிந்தது அந்த ஐந்து நாட்கள் ... அவன் ஒரு அடி எடுத்து வைத்துள்ளான். இதற்கு மேல் அவன் தந்தை தான் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். தான் நின்ற நிலையிலேயே இருந்து கொண்டு, தனக்காக மற்றவர் புரிந்து மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லை. இப்போது கூட இந்த தந்தை உணர வில்லை என்றால்..... இழப்பு இவருக்கு தான்.

அவன் பெற்றோர்கள் இவனுக்கு நேற்று தந்ததை..., நாளை இவன் பிள்ளைகளுக்கு அவன் தரப் போகிறான்... அமெரிக்க வாழ்க்கை உறவுகளை கொடுத்து விடுமா..?
அவன் பெற்றோர் செய்த தவறை தானும் செய்யக்கூடாது என்று தான் தன் வாழ்க்கையை பிள்ளைகளோடு நிறைவாக இன்று வாழ முயற்சி செய்கிறான்.
 
Last edited:

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S
#10
Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

//அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லி விடமுடியாது’ என்றேன். அவர் புரிந்து கொள்ளாமல் ‘நன்றி கெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்.//

இப்போது கூட தன் தவறை உணராமல் பிடிவாதமாக இருக்கும் தந்தையிடம் மாற்றத்தை எதிர்ப்பார்த்து ஏமாறுவது வீண் என்று அந்த மகன் நோக்கத்தில் தவறில்லை என்றே தோன்றுகிறது. அவனால் முடிந்தது அந்த ஐந்து நாட்கள் ... அவன் ஒரு அடி எடுத்து வைத்துள்ளான். இதற்கு மேல் அவன் தந்தை தான் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். தான் நின்ற நிலையிலேயே இருந்து கொண்டு, தனக்காக மற்றவர் புரிந்து மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லை. இப்போது கூட இந்த தந்தை உணர வில்லை என்றால்..... இழப்பு இவருக்கு தான்.

அவன் பெற்றோர் செய்த தவறை தானும் செய்யக்கூடாது என்று தான் தன் வாழ்க்கையை பிள்ளைகளோடு நிறைவாக இன்று வாழ முயற்சி செய்கிறான்.நான் அவனை குறை சொல்லவில்லை....
ஆனால் பெற்றோர்கள் தங்கள் தவறை உணரவில்லை என்பதற்காக..., இவன் தவறு செய்துவிடக் கூடாது என்று தான் சொல்கிறேன்.

தான் நின்ற நிலையிலேயே இருந்து கொண்டு, தனக்காக மற்றவர் புரிந்து மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லை.


இங்கு எதிரெதிர் முனையில் நிற்பது மகனும்.. தந்தையும்... யார் அடுத்த அடி எடுத்து வைப்பது என்று இங்கு போட்டி இருக்க கூடாது... அதுபோல ஈகோவும் இருக்க கூடாது... "தான்" என்ற வார்த்தையை விட்டு, "தாம்" "நாம்" என நினைக்கணும்...

பெற்றோரின் மேல் தவறு இருந்தால், அதற்காக அவர்களை அப்படியே விட்டு விடலாமா...?? நீ என்னைக் கவனித்துக் கொண்டதற்கு, உனக்கு ஐந்து நாட்கள் போதும் என்று நாள் கணக்கு பேசலாமா...? எனக்கு புரியவில்லை...அவன் பெற்றோர் செய்த தவறை தானும் செய்யக்கூடாது என்று தான் தன் வாழ்க்கையை பிள்ளைகளோடு நிறைவாக இன்று வாழ முயற்சி செய்கிறான்.

நான் சொன்னது அவன் பிள்ளைகளோடு வாழ்வதை அல்ல.... பெற்றோர் இவனிடம் காட்டாத அன்பை, அவர்கள் மேல் இவனும் காட்டாமல் செய்யும் தவறை சொன்னேன்.. இதில் முழுக்க முழுக்க அந்த பெற்றோரின் மீதே தவறு இருந்தாலும், இவன் செய்வதும் 100% சரி என்று சொல்ல முடியாதே...!!

அவனுக்கு வருத்தம் இருக்கலாம்... ஆனால் அந்த வாட்டத்தை மீண்டும் பெற்றோரிடம் காமிப்பது தவறு...!!
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.