நாவல் பழம் - Black plum

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நாவல் பழம்


சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்


இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என முச்சுவைகளும் கலந்த கனியான நாவலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. கற்பூர மணமும் கருநீல நிறமும் கொண்ட தனித்தன்மை மிக்கது நாவல் பழம் என்பதைப் போலவே அதன் மருத்துவ குணங்களும் தனித்தன்மை கொண்டவையே.
எங்கும் காணக்கூடிய மரமான நாவல், 80 அடி உயரம் வரையிலும் கூட வளரக்கூடிய ஒரு மரமாகும். இதன் இலைகள் சற்று நீளமாகவும், பூக்கள் வெண்மை நிறத்தில் சிறிதாகவும் இருக்கும். Syzygum cumini என்பது நாவல் மரத்தின் தாவரப் பெயர். Black plum என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.வடமொழியில் மஹாபலா என்றும் அரபு மொழியில் ஜாமூன் என்றும் குறிப்பிடுவதுண்டு.நாவலில் இருக்கும் வேதிப் பொருட்கள்நாவல் பழத்தில் எரிசக்தி, மாவுச்சத்து, நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சத்துகளான தயாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் சி ஆகியவற்றோடு தாதுப் பொருட்களான சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், உப்பு, நீர்ச்சத்து ஆகியனவும் மிகுதியாக அடங்கி உள்ளன.


நாவல் பழத்தின் இலைகளிலும் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியன அடங்கியுள்ளன. நாவல் இலைகள் நுண் கிருமிகளைப் போக்கக்கூடிய வலிமை கொண்டவை என்கிறார்கள் நவீன ஆய்வாளர்கள். ஆயுர்வேதம், யுனானி, சீன மருத்துவம், சித்த மருத்துவம் ஆகியவற்றில் நாவல் பழத்தின் கொட்டைகளைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.

முக்கியமாக, சர்க்கரைநோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாவல் பழக் கொட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாவல் பழம் சிறுநீரை பெருக்கும் என்பதைப் போல, நாவல் பழத்தின் கொட்டைகள் சிறுநீரைக் குறைக்கும் தன்மை கொண்டது. பேதியை நிறுத்தவும், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் நாவல் பழக்கொட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

நாவல் மரத்தின் பட்டையும் பல மகத்துவம் கொண்டது. பட்டையைத் தீநீர் இட்டு வாய் கொப்புளித்தால் வாய்ப்புண் ஆறும். புண் உள்ள இடத்தில் விட்டுக் கழுவினால் புண்கள் விரைவில் ஆறும். ரத்த அழுத்தத்தையும் வாய்ப்புண்களையும் தொண்டைப் பகுதியிலுள்ள மென் திசுக்களில் ஏற்பட்ட புண்களையும் குணமாக்கக்கூடியது.

‘ஆசிய நோய் காசம் அசிர்க்கரஞ்சுவாசவினைகேசமுறு பால கிரகநோய் - பேசரியமாவியங்க லாஞ்சனமிவ் வன் பிணி யெலாமேகும்நாவலுற பட்டையத னால்’- என்கிறது நாவல் பற்றிய அகத்தியர் குணபாடம்.நாவல் பட்டையினால் வாய்ப்புண்கள், பல் நோய்கள், இருமல், அதிக குருதிப்போக்கு, ‘பாலகிரக நோய்’ எனப்படும் குழந்தைகளைப் பற்றிய தோஷங்கள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் எல்லாம் விலகிப் போகும் என்பது மேற்கண்ட
பாடலின் பொருள் ஆகும்.

இன்னொரு பாடலில், நாவல் மரத்தின் வேரை மருந்தாகப் பயன்படுத்தும்போது வாதநோய்கள் விலகிப் போகும், சரும நோயின் தொல்லை போகும், எவ்வித ரணமாக இருந்தாலும் விரைவில் ஆறும், கடுமையான காய்ச்சலும் பால்வினை நோய்களும் பறந்து போகும் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்.நாவலின் மருத்துவசெயல்கள் நாவல் பழம் வயிறு தொடர்பான பல கோளாறுகளைத் தீர்க்கக் கூடியது.

வாயுத் தொல்லைகள், சிறுநீர்த் தேக்கம், சீத ரத்த பேதியை நிறுத்தக்கூடியது. நாவல் மரப்பட்டை மற்றும் விதைகளுக்கும் பேதியை நிறுத்தும் ஆற்றல் உண்டு. எருக்கட்டு, மலச்சிக்கல், கணையம் சம்பந்தமான நோய்கள், வயிற்றில் ஏற்படும் காற்று மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றையும் குணமாக்கும் தன்மை நாவலின் மொத்தப் பகுதிகளுக்கும் உண்டு என ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

இந்திய ஆயுர்வேத நூல்கள் நாவல் பட்டையை பேதி, ரத்தக்கசிவு ஆகிய நோய்களுக்கும் விதைகளை ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்கும் பரிந்துரை செய்கின்றன.

நவீன ஆய்வுகளின் மூலம் நாவல் கொட்டை மூட்டுவலிகளை போக்கக்கூடியது, காய்ச்சலைப் போக்கக்கூடியது, வலியை விரட்டக்கூடியது என தெரிய வந்துள்ளது. நாவல் விதைகளைப் பொடித்து அதனின்று பெறப்பட்ட சத்துவத்தை சூரணமாகவோ, தீநீராகவோ தினம் 2 அல்லது 3 வேளைகள் கொடுத்து பரிசோதித்ததில் பலருக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும், சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவும் குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாவல் மருந்தாகும்விதம்

* நாவல் இலையை கொழுந்தாகத் தேர்ந்தெடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனோடு ஒரு ஏலக்காய், சிறிதளவு லவங்கப்பட்டை தூள் ஆகியன சேர்த்து காலை, மாலை என இரண்டு வேளைகள் உள்ளுக்குக் கொடுத்து வர அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகியன குணமாகும்.

* பட்டையைதீநீரிட்டுக் குடிப்பதால் சீதபேதி குணமாகும்.

* நாவல் பழத்தை நசுக்கி வாலையில் இட்டு வடித்து எடுக்க ஒருவித பசுமை நிறம் கொண்ட எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெய் குடற்புண்களைப் போக்கக் கூடியதாகவும் ஜீரணக் கோளாறுகளை சீர் செய்வதாகவும் அமையும்.

* நாவல் பட்டை சூரணத்தை நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து நீர் சுண்டி, குழம்பு பதத்தில் வரும்போது எடுத்து ஆற வைத்து மேல் பூச்சாக,
பற்றாகப் போட்டு வருவதால் வாத நோய் தணியும், வலியும் குறையும்.

* நாவல் பழச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் மற்றும் நெல்லிச்சாறு இவை இரண்டையும் சம அளவாகச் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடல் சோர்வு போகும். ரத்தசோகை குணமாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* அடிக்கடி நாவல் பழத்தை உண்ணுவதால் நுரையீரல் தூண்டப்பட்டு சீராக செயல்படும். சிறுநீர்ப்பை கோளாறுகளும் நீங்கும்.

* நாவல் இலைக் கொழுந்து, மாவிலைக் கொழுந்து இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து புளிப்பில்லாத புதிய தயிரில் கலந்து உள்ளுக்குக் கொடுப்பதால் சீதபேதி, ரத்தபேதி, வயிற்றுக்கடுப்பு, சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.

* நாவல் மரப்பட்டையைத் தூள் செய்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வாய்க் கொப்புளிப்பதால் வாயில் ஏற்பட்ட புண்கள், பல் சொத்தை, ஈறுகளின் வீக்கம் ஆகியன குணமாகும். இதே நீரைக் கொண்டு புண்களைக் கழுவுவதால் விரைவில் புண்கள் ஆறும்.

* நாவல் மரப்பட்டைச்சாறு புதிதாக எடுத்து அதனுடன் வெள்ளாட்டுப்பால் சேர்த்து குழந்தைகளுக்குப் புகட்ட குழந்தைகளை பற்றிய
அதிசாரபேதி குணமாகும்.

* நாவல் விதையை சூரணித்து வேளைக்கு 4 கிராம் என இருவேளை தொடர்ந்து கொடுத்து வருவதால் சர்க்கரைநோய் குணமாகும்.

* நாவல் விதை சூரணத்தோடு மாம்பருப்பு சூரணமும் சம அளவு சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர சிறுநீரைப் பெருக்கும்.இத்துணை நற்பலன்களையும் தரும் நாவல் மரத்தை, ‘நலம் செய்யும் நல்லதோர் மரம்’ என்று எப்போதும் மனதில் நிறுத்திப் பயன்பெறுவோம்.

ஆயுர்வேதம், யுனானி,சீன மருத்துவம், சித்தமருத்துவம் ஆகியவற்றில் நாவல் பழத்தின் கொட்டைகளைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக, சர்க்கரைநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாவல் பழக் கொட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாவல் பழம் சிறுநீரை பெருக்கும் என்பதைப் போல, நாவல் பழத்தின் கொட்டைகள் சிறுநீரைக் குறைக்கும் தன்மை கொண்டது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.