நிழலாய் தொடர்வேன் - Nizhalai Thodarven By DurgaC

Status
Not open for further replies.

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
217
Likes
442
Location
Chennai
#21
நிழலாய் தொடர்வேன்....

நிழல் 11




காலையில் கண் விழித்த சகியைப் பக்கத்துக்கு ஊரில் உள்ள அருவிக்கு அழைத்தனர் தோழியரும் அவர்களின் காதலர்களும். தனக்கு வேலை இருப்பதாகவும் பாட்டிக்குச் சந்தேகம் எழாமல் இருக்க அவர்களுடன் வருவது போல் வந்து, பின் தனது வேலையைப் பார்க்கச் செல்வதாகவும் கூறி விட்டாள். அதன்படி குளித்துத் தயார் ஆகி அவர்களுடனேயே கிளம்பி வெளியே சென்று, சற்று தூரம் சென்ற பின் காரில் இருந்து இறங்கி அவர்களைப் போகச் சொன்னாள். கார் மறையும் வரை பார்த்து விட்டு, அந்தப் பெரிய வீட்டிற்குச் செல்லும் பாதையில் நடக்கத் துவங்கினாள்.

வீட்டை அடைந்து தன் அலைபேசி எங்கேனும் விழுந்து கிடக்கிறதா என்று தேடத் துவங்கியவள், தனக்குப் பின்னல் யாரோ வருவது போல இருக்கத் திரும்பிப் பார்த்தாள். அங்கு அவள் நிழலைத் தவிர யாரும் இல்லை. மீண்டும் தன் தேடலைத் தொடர்ந்தாள். 'ஒரு வேள ஜன்னல் வழியா உள்ள விழுந்திருக்குமோ?' என்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள். “சகிஇஇஇ...” என்று யாரோ தன்னை அடிக்குரலில் அழைப்பது கேட்டுப் பதறித் திரும்பினாள். அவளது பயந்த முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அங்கு ருத்ரன் நின்றிருந்தான். “நீ இங்க வருவன்னு எனக்கு தெரியும்” என்றவனுக்கு ஒரு முறைப்பை மட்டும் கொடுத்து விட்டு நடக்க துவங்கினாள். “இத தேடி தான வந்த...” என்று அவன் கேட்டதும் அவனை திரும்பித் பார்த்தவளின் கண்கள், அவன் கையில் இருந்த தன் அலைபேசியில் நிலைத்தன. அவள் அதை வாங்கப் போகையில், அவன் தன் கையைப் பின்னுக்கு இழுத்து, “அதுக்கு முன்னாடி எனக்கு ஒன்னு தெரியணும்...” என்றான். 'என்ன' என்பது போலப் பார்த்தவளிடம், “அன்னைக்கு பாதில நிறுத்துனது....” என்று அவன் சொல்லும் போதே அவனை முறைத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள். “சரி சரி... இந்தா.. எவ்ளோ கோவம் வருது.. என் பாடு கஷ்டம் தான் போல..” என்று கூறி அவளிடம் அவள் அலைபேசியைக் கொடுத்தான். எதுவும் கூறாமல் வெடுக்கென அவன் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டாள். “இனிமேல் எங்கயும் தனியா போகாத... உனக்கு அவ்ளோ ஆர்வமா இருந்துச்சுன்னா என்ன கூப்டு, நான் வர்றேன்..” என்றவனை முறைத்து விட்டு, “சார்க்கு ஏகப்பட்ட வேல இருக்கும்... என் கூடவே சுத்துறது தான் வேலையா?” என்று அவன் நேற்று கூறியது போல் கூறினாள். அதைக் கேட்டவன், “சாரி சகி... நான்....” என்றவனைப் பாதியிலேயே மறித்து, “திடீர்னு நல்லா பேசுற... திடீர்னு எரிஞ்சு எரிஞ்சு விழுற.. எனக்கு ஒவ்வொரு தடவையும் எப்டி இருக்கு தெரியுமா..” என்று கூறியவளின் கண்கள் குளம் கட்டின. அதைக் கண்டு பொறுக்க முடியாத ருத்ரன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். “சாரி டா குட்டிமா... நான் எதோ டென்ஷன்ல... நீ இவ்ளோ கஷ்ட பட்டிருப்பன்னு எனக்கு தெரியல... ரியலி சாரி” என்று மென்மையாகக் கூறினான். சிறிது நேரம் அப்படியே இருந்தவர்களை சகியின் அலைபேசிச் சத்தம் கலைத்தது. எடுத்துப் பேசியவள், “எந்த லோனும் வேண்டாம்” என்று கூறித் துண்டித்தாள். 'இந்த நேரத்துலயா அந்த லோன்காரன் கால் பண்ணனும்...' என்று நொந்து கொண்டான் ருத்ரன்.

இருவரும் அமைதியாகச் சிறிது தூரம் நடந்தனர். “ஆமா நீ எப்டி உன் ஃபிரெண்ட்ஸ் இல்லாம தனியா வர்ற? அவங்களுக்கு சந்தேகம் வராதா?” என்று அமைதியை கலைத்தான். “ஊஹும்ம்ம்” என்று தலையை ஆட்டிய சகி, தன் தோழிகளின் காதலைப் பற்றியும், பாட்டிக்குச் சந்தேகம் வராத படி அவர்களுடனேயே வெளியே வருவது பற்றியும் விளக்கினாள். அதைக் கேட்ட ருத்ரனுக்கு மால்-இல் அவளைக் கண்ட போது நடந்ததும், நேற்று காலை சூர்யா சொன்னதும் இப்பொது தெளிவாக விளங்கியது. “அவங்க எப்போ வருவாங்க?” என்றவனுக்கு “ஈவினிங் ஆகும்...” என்று பதில் அளித்தாள். “டெய்லி ஈவினிங் வர இப்டித்தான் ஊர்ல தனியா சுத்திடிருகியா?” என்று முகம் இறுகக் கேட்டான். “நான் எங்க தனியா சுத்துறேன், அதான் நான் போற எடத்துக்கெல்லாம் நீ வந்து என்ன திட்டி அனுபிட்றியே” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். “சரி சரி... நான் இந்த கேஸ் விஷயமா தான் அலைஞ்சுட்டு இருக்கேன், நீயும் என் கூடவே வா.. தனியா இப்டி சுத்தாத..” என்று கூறினான். “ஹ்ம்ம்... இப்போ எங்க போறோம் AC சார்?” என்றாள் நக்கலாக. “என் வீட்டுக்கு போய் சாப்பிட்டு, இதுவரைக்கும் இருக்க கேஸ் ஹிஸ்டரி உனக்கு தர்றேன்” என்றான். அதன் படி இருவரும் அவன் வீட்டிற்கு நடந்தனர்.

அங்கு சென்று முன்னறையில் அமர்ந்து வழக்கம் போலத் தன் பையில் இருந்த பிஸ்கட்டை எடுத்துக் கொறிக்க ஆரம்பித்தாள் சகி. ருத்ரன் 'என்ன இது' என்பது போல் அவளைப் பார்க்க, “அவங்க இல்லாம லஞ்ச்க்கு வீட்டுக்கு போனா மாட்டிக்குவேன்ல.. அதான்... நீயும் எடுத்துக்கோ” என்று அவனிடம் நீட்டினாள். அவளை முறைத்த ருத்ரன், “அதுக்காக டெய்லி இத போய் சாப்பிட்டா உடம்பு என்ன ஆகும்? அறிவுங்கிறது கொஞ்சம் கூட கிடையாது” என்று அவளைப் பொறிந்து கொண்டே உள்ளே சென்று இரு தட்டுகளில் உணவை வைத்து எடுத்து வந்து, அவளிடம் ஒன்றை நீட்டினான். “கொஞ்சம் சிரிச்சுகிட்டே குடுத்தாத்தான் என்ன...” என்று முணுமுணுத்துக் கொண்டே அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் முணுமுணுத்தது அவன் காதுகளில் விழ, “சிடு மூஞ்சின்னா அப்டி தான் இருக்கும்..” என்று அவன் கூறிய பதிலில் சகிக்குப் புரை ஏறியது. 'ஒரு வேள ஃபோன்ல இருக்கிறதா பாத்துட்டானோ...' என்று அவனைப் பார்க்க, அவன் ஒன்றும் தெரியாதது போலச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்த சகி, “சாப்பாடு சூப்பர்.. சமையலுக்கு யாரும் வர்றாங்களா?” என கேட்டதற்கு, “நான் தான் செஞ்சேன்... நாளைல இருந்து நீ வந்து சமைச்சு போடு” என்றான். திரு திருவென விழித்தவள், “எனக்கு சமைக்க தெரியாது...” என்று மெல்லிய குரலில் சொன்னாள். “சரி விடு, எனக்கு ஓரளவு தெரியும் சமாளிச்சுக்கலாம்...” என்றதும், அவள், “என்ன சமாளிக்கணும்?” என்று கேட்டாள். “எப்பயும் கேக்குறது தான்... அன்னைக்கு சொன்னத சொல்லு...” என்றதும் “சரி சரி.... கேஸ் ஹிஸ்டரி எக்ஸ்பிளைன் பண்ணு.. டைம் ஆச்சு” என்றாள். 'ஃப்ராடு' என்று நினைத்துக் கொண்ட ருத்ரன், இதற்கு முன் நடந்த கொலைகளின் வெவ்வேறு அறிக்கைகளையும் அவளிடம் காட்டி விளக்கினான். அதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டவள், அவனிடம் விடைபெற்றுக் கிளம்பினாள். “சகி ஒன் மினிட்.. நானே ட்ராப் பண்றேன்” என்று பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அதைக் கிளப்பி, “ஏறு..” என்றான். அவள் சற்று தயங்கியதைக் கண்டு அவன் முகம் இறுக, 'அச்சச்சோ... மறுபடியும் முருங்க மரம் ஏறிட போறான்' என்று அவன் பின்னே அமர்ந்து கொண்டாள்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்-ஐ நிறுத்தியவன், அவளை இறங்கச் சொல்லித் தானும் இறங்கி பைக்-இல் சாய்ந்து நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “என்னாச்சு?” என்று சகி கேட்டதற்கு, “வீட்லயே கேக்கணும்ன்னு நினைச்சேன், மறந்துட்டேன். நேத்து என்ன எதோ சொல்லிட்டு ஓடுனியே..” என்றபடி அவளை நெருங்கினான். அவன் முன்னே வர வரப் பின்னே சென்ற சகி, அதற்கு மேல் போக முடியாமல் ஒரு மரத்தில் சாய்ந்து நின்றாள். தன் இரு கைகளையும் மரத்தில் ஊன்றி அவளை அங்கேயே சிறை பிடித்த ருத்ரன், “சொல்லு டி... நேத்து என்ன சொன்ன?” என்று குனிந்து அவள் முகம் பார்த்துக் கேட்கச் சகிக்குப் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தது. “போடான்னு... தெ... தெரியாம.. சாரி... இனிமேல் சொல்ல மாட்டேன்..” என்று வார்த்தைகளை மென்று விழுங்கினாள். “அப்போ சொன்னதுக்கு பனிஷ்மென்ட் குடுக்க வேணாமா?” என்று கூறி மேலும் அவன் நெருங்கக், கண்களை மூடிக் கொண்டாள். சிறிது நேரம் அப்படியே இருந்த சகி, கண்களைத் திறந்து பார்த்தபோது ருத்ரன் அவளைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து கோபமடைந்த சகி, அவனைத் தள்ளி விட்டு முறைத்து கொண்டே விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். “ஹே சகி.. சகி.. சும்மா தான... நில்லு” என்று அவள் கையைப் பற்றித் தடுத்து, “நீ அப்டி கூப்பிட்டது எனக்கு புடிச்சு தான் இருந்துச்சு.. என்னோட சகிக்கு இல்லாத உரிமையா...” என்றான். அதை கேட்ட சகி கண்கள் விரித்துப் பார்த்தாள். “இப்டிலாம் பாக்காத... பயமா இருக்கு” என்றவனை, “போடா” என்றாள் செல்லமாக. அவன், “என்னடா ருத்ரா உன் நிலைமை இப்டி ஆகிருச்சே..” என்று சிரித்துக்கொண்டே வண்டியைக் கிளப்பினான். வீட்டிற்குச் சற்று முன்பாகவே இறங்கிக் கொண்டு, அவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் சகி. ருத்ரனும் அவள் உள்ளே செல்லும் வரை பார்த்துவிட்டு வீடு திரும்பினான்.

ருத்ரனின் நினைவுகளால் சகியின் உதடுகளில் உறக்கத்திலும் சிறு கீற்றுப் புன்னகை தவழ்ந்தது. அப்போது அவளது அலைபேசி அலற, அதை எடுத்து காதிற்குக் கொடுத்தவள், அதில் கேட்ட செய்தியில் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள். ருத்ரன் அந்தப் பெரிய வீட்டில் மூச்சற்று விழுந்து கிடப்பதாகவும், அவனது அலைபேசியில் சகியின் எண் கிடைத்ததாகவும், விரைந்து அங்கே வரும் படியும் அந்தப் பெயர் தெரியாதவன் கூறினான். சகிக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டியது. தனது அலைபேசியை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்கு விரைந்தாள். அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. 'என் ருத்ராக்கு ஒன்னும் ஆகியிருக்க கூடாது கடவுளே' என்று வேண்டிக்கொண்டாள். அந்த வீட்டின் தோட்டத்திற்குள் நுழைந்தாள். நிலவொளியில் யாரோ ஒரு மரத்தடியில் விழுந்து கிடப்பது தெரிந்ததும் அங்கே விரைந்தாள். குப்புறக் கிடந்தவனை, “ருத்ரா...” என்று அழைத்துத் திருப்ப, வீல் என்று கத்திக் கொண்டு வீட்டின் வெளியே ஓடியவள், ஏதன் மீதோ மோதி நின்றாள். நிமிர்ந்து பார்த்தால், அங்கு ருத்ரன் நின்று கொண்டிருந்தான். “ருத்ரா... ருத்ரா... உனக்கு ஒன்னும் ஆகலேல்ல... நான் பயந்தே போய்ட்டேன் தெரியுமா.. என்ன விட்டு போக மாட்டேல்ல..” என்று ஏதேதோ உளறிக்கொண்டு அவனை இறுக அணைத்து, அவன் மார்பில் ஒன்றிக் கொண்டு அழுதாள். “சகி என்னமா.. என்னாச்சு.. எதுக்கு இப்டி அழுற?” என்று அவன் அவளது முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். தோட்டத்தில் கண்ட காட்சி நினைவிற்கு வர, “ருத்ரா, அங்க யாரோ...” என்று அந்த மரத்தைச் சுட்டிக் காட்டினாள். “அங்க என்ன... வா..” என்று அவளைத் தன் தோளோடு அணைத்தவாறே கூட்டிச் சென்றான்.

அங்கே கிடந்தது ஒரு பிணம். இது வரை நடந்ததைப் போலவே கண்கள் விரிய, வாய் பிளந்து வெளிறிப் போய் இருந்த உடல். அதைக் கண்டு அதிர்ந்தவன், தன் அலைபேசி மூலம் அந்த ஊரின் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தான். அந்த உடலைச் சற்று உற்றுப் பார்த்த சகி, “இது ரகு... எங்க ஆஃபீஸ்ல வேல செஞ்சான்.. அன்னைக்கு கூட உன்ன இன்டர்வியு பண்ணானே அவன் தான்..” என்றாள். “அவன் எப்படி இங்க....” என்று யோசித்தவன், அங்கு காவல் துறையும் தடயவியல் நிபுணர்களும் வரவே அவர்களிடம் நடந்ததை விளக்கி விட்டுச் சகியைத் தனியாகச் சற்று தள்ளி அழைத்துச் சென்றான். “சகி இந்த டைம்ல நீ எதுக்கு இங்க வந்த?” என்று கேட்டவனிடம் நடந்ததைச் சொன்னாள். “என்னடி... எனக்கு ஒரு ஃபோன் பண்ணி பாத்திருக்கலாம்ல.. எவனோ சொன்னத வச்சு நடு ராத்திரில இப்படியா வருவ.. உனக்கு ஏதாச்சு ஆகிருந்தா..” என்று அக்கறையுடன் கேட்டான் ருத்ரன். “எனக்கு அப்போ பயத்துல அதெல்லாம் தோணவே இல்லடா... என் ருத்ராக்கு ஒன்னும் இருக்க கூடாதுன்னு தான் மைன்ட்ல இருந்துச்சு..” என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கின. அவள் 'என் ருத்ரா' என்று கூறியது அவன் மனதில் இனிக்க, அவள் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். சிறிது நேரம் கழித்து, “சரி வா... விடிய போகுது, அதுக்குள்ள உன்ன வீட்ல விட்டுறேன்” என்று அவளை வண்டியில் அழைத்துச் சென்று வீட்டின் முன் நிறுத்தினான். அவள் இறங்கிச் சற்று தூரம் நடந்ததும், “சகி..” என்று அழைக்க, அவனைத் திரும்பிப் பார்த்தாள் சகி. “பத்திரமா இரு...” என்று கூறியவனுக்கு, “என்ன பத்திரமா பாத்துக்க தான் நீ இருக்கியே..” என்று தலையைச் சாய்த்துப் புன்னகைத்துக் கூறியவள் உள்ளே சென்று விட்டாள். அவள் பதிலில் குளிர்ந்து போன ருத்ரன் சிறிது நேரம் அங்கேயே நின்று, பின் கிளம்பிச் சென்றான்.

மீண்டும் பிரேத பரிசோதனையில் அதே முடிவுகள். உண்மையைக் கண்டறிவானா ருத்ரன்?


நிழல் தொடரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
217
Likes
442
Location
Chennai
#23
நிழலாய் தொடர்வேன்....

நிழல் 12





நடந்து முடிந்த ஏழாவது கொலை விஷயமாக ருத்ரன் மதுரை செல்ல வேண்டியதாக இருந்தது. இரண்டு நாட்கள் அவன் கால்களில் சக்கரம் கட்டிப் பறந்து கொண்டிருந்தான். சகியின் நினைவுகள் அவ்வப்போது வந்தாலும் அவளுடன் பேச நேரம் கிடைக்கவில்லை. இங்கு சகி தன் தோழிகளுடன் நேரத்தைக் கழித்தாள். தனியாக எங்கும் செல்லக் கூடாதென்றும் முக்கியமாக அந்தப் பெரிய வீட்டுப் பக்கம் போகவே கூடாதென்றும் ருத்ரன் கண்டிப்பாக அவளிடம் கூறி விட்டுச் சென்றிருந்தான். ருத்ரனைப் பார்க்காமல் பேசாமல் இருந்தது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. சூர்யாவும் விஷ்ணுவும் கூட கிளம்பி விட்டிருந்தனர்.

ஒரு நாள் இரவு பாட்டியுடன் மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பாட்டியிடம் சகி, “பாட்டி இந்த ஊர்ல பேய் கதைலாம் ஒன்னும் இல்லையா?” என்று கேட்டாள். “இவ ஒருத்தி.. பேய் பேய்ன்னு எப்போ பாத்தாலும்” என்று நிலா நொந்து கொள்ள, “அதான.. அடியே அதெல்லாம் இப்ப நைட் தேவையா? பேசாம இரு” என்று லட்சு ஒத்து ஊதினாள். “சும்மா இருங்கடி, நைட் கேட்டா தான் நல்லா இருக்கும்.. நீங்க சொல்லுங்க பாட்டி” என்று பாட்டியை ஊக்குவித்தாள் சகி. பாட்டி, “அதெல்லாம் நிறைய இருக்கு கதை... ஆனா பெரும்பாலும் இந்த ஊர்ல பேச பட்றது அந்த பெரிய வீடு பொன்னிய பத்தி தான்” என்றதும், “அந்த ஊர் எல்லைல இருக்க வீடா பாட்டி?” என்று கேட்டாள் சகி. “ஹ்ம்ம் ஆமா... ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னாடி, அந்த வீட்ல ஒரு குடும்பம் இருந்துச்சு. வசதியான பண்ணையார் குடும்பம். பண்ணையார் அவர் மனைவி அப்புறம் பொன்னின்னு அவங்க பொண்ணு.. மூனு பேருதான். அந்த பொண்ணுக்கு ஒரு பதினெட்டு வயசு இருக்கும்போது பண்ணையார் நோய்வாய் பட்டு இறந்துட்டாரு. அவரோட மனைவியும் அந்த கவலைலயே ஒரு வருஷத்துல இறந்துட்டாங்க. சொத்து மேல ஆச பட்ட சொந்தக்காரங்க பொன்னிய ரொம்ப கொடும படுத்தி எல்லா சொத்தையும் எழுதி வாங்கிட்டாங்க. உயில்படி அந்த வீடு மட்டும் அவ கல்யாணத்துக்கு அப்பறம் புருஷனோட சேந்து கையெழுத்து போட்டா தான் விக்க முடியும்ன்னு இருந்தனால சொந்தத்துலயே ஒரு பையன அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவ அப்பா அம்மா இருந்த வீடுன்னு அத விக்க மாட்டேன்னு சொல்ல, அவன் அவள பண்ண கொடும கொஞ்சம் நஞ்சம் இல்ல.. ஒரு நாள் அந்தப் பாவி அவள என்ன செஞ்சானோ, கோவத்துல அவன சுத்தியாலயே அடிச்சு கொன்னுட்டு, பொன்னியும் அந்த வீட்லயே தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா.. அன்னைல இருந்து அந்த வீட்டை யாரும் சொந்தம் கொண்டாட கூடாதுன்னு அவ ஆவி அந்த வீட்டையே சுத்தி வர்றதாவும், பொண்ணுக்கு தீங்கு நினைக்கிறவன சும்மா விடமாட்டா பொன்னினும் ஊருக்குள்ள பேச்சு” என்று முடித்தார் பாட்டி.

ஆர்வமாகக் கதை கேட்ட சகி, “பாவம்ல பாட்டி... எவ்ளோ கஷ்ட பட்ருப்பாங்க... நீங்க அந்த பொன்னிய பாத்திருக்கிங்களா பாட்டி.. அவங்க எப்படி இருப்பாங்க?” என்று பொன்னிக்காக வருந்தி அவளைப் பற்றிக் கேட்டாள். பாட்டி “ஹ்ம்ம் அப்போ எனக்கு இருபது வயசு.. எங்கள விட சின்ன பொண்ணுனாலும் எங்க கூடயே தான் சுத்திட்டு இருப்பா.. உன்ன மாதிரி தான் சகி, ரொம்ப சுட்டியான பொண்ணு.. கல கலன்னு பேசுவா.. இதோ நாங்க ஃபிரண்ட்ஸ்லாம் சேந்து அப்போ ஊர்ல புதுசா ஆரம்பிச்ச ஃபோட்டோ ஸ்டுடியோல போய் ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்.. இதுல நாலாவதா நிக்கிறா பாரு, அவதான் பொன்னி” என்று அவர்களிடம் அந்தப் பழைய புகைப்படத்தை நீட்டிக் கூறினார். அதை வாங்கிப் பார்த்த தோழியரை, “சரி சரி, போய் படுங்க.. நேரம் ஆச்சு” என்று எழுந்து சென்றார் பாட்டி. மேலே செல்லும் போது சகி மனதில் குறும்பு தலை தூக்க, “லட்சு, நீ அன்னைக்கு அந்த வீட்ல யாரையோ பாத்தேன்னு சொன்னியே... ஒருவேள பொன்னியா இருக்குமோ?” என்று நோகாமல் கொளுத்திப் போட, லட்சு அழாத குறையாக, “ஏன்டி... நானே எப்படி தூங்க போறோம்ன்னு தெரியாம உக்காந்திருக்கேன்... நீ வேற” என்று அவளை அடிக்கத் துரத்தினாள். “சரி சரி, சண்ட போடாதீங்க.. வாங்க இன்னைக்கு மூனு பேரும் சேந்தே தூங்குவோம்” என்று நிலா இருவருக்கும் இடையில் வெள்ளைக் கோடி பறக்க விட, “இங்க பாருடி, தனியா படுக்க பயமா இருக்குனு எப்படி பிட்டு போட்றான்னு” என்று சகி சொல்ல, அங்கு சிரிப்பலை பரவியது. அன்று இரவு பொன்னியைப் பற்றி வெகு நேரம் சிந்தித்துக் கொண்டே படுத்திருந்த சகி நள்ளிரவில் கண் அயர்ந்தாள்.

அடுத்த நாள் சோலை குறிச்சி திரும்புவதாக ருத்ரன் சகிக்கு அலைபேசியில் தகவல் அனுப்பி இருந்தான். அதி காலையிலேயே விழித்த சகி, ருத்ரனைச் சந்திக்க அவன் வீட்டிற்குச் சென்றாள். முன்னறையில் அவளுடன் அமர்ந்த ருத்ரன், “என்ன மேடம் இவ்ளோ சீக்ரம் வந்திருக்கீங்க? என்ன விஷயம்?” என்று கேட்டான். “ஹ்ம்ம்... அந்த ரகு மேட்டர் என்னாச்சுன்னு தெரியாம எனக்கு தூக்கமே வரல ருத்ரா.. அதான் சீக்கிரமே கிளம்பி வந்துட்டேன்... சொல்லு சொல்லு” என்று கதை கேட்கத் தயாரானாள் சகி. “அதன பாத்தேன், எங்க என்னதான் பாக்க வந்தியோன்னு சந்தோஷப்பட்டேன்.. நீ கத கேக்கத்தான் வந்தியா” என்று நொந்து கொண்டான். “கத கேக்றதுனா ஃபோன்லயே கேட்ருக்கலாம், நேர்ல ஏன் வரணும்.. சரியான ட்யூப் லைட்” என்று அவள் வந்த காரணத்தை மறைமுகமாய்ச் சொல்ல, அதைப் புரிந்து கொண்ட ருத்ரன், அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான். “சகி அன்னைக்கு உனக்கும் ரகுக்கும் சண்டை வந்து உங்க ஆஃபீஸ்ல இருந்து அவன டிஸ்மிஸ் பண்ணாங்கல்ல, அதுல இருந்து உன் மேல கோவமா இருந்திருக்கான். நீ எங்க போற, என்ன செய்ற எல்லாத்தையும் நோட் பண்ணிருக்கான். நீ இந்த ஊருக்கு வந்தது, என் கூட சேந்து இந்த கேஸ பாக்குறது எல்லாம் தெரிஞ்சிருக்கு அவனுக்கு.. அன்னைக்கு நைட் உன்ன அவன் தான் கால் பண்ணி அந்த வீட்டுக்கு வர சொல்லிருக்கான்.. உனக்கு கால் பண்ணிட்டு அவன் ஃபிரண்டுக்கு கால் பண்ணி அத பத்தி சொல்லிருக்கான்.. அவன் மொபைல்ல இருந்து ட்ரேஸ் பண்ணி அவன் ஃபிரண்ட புடிச்சு விசாரிச்சதுல எல்லாம் சொல்லிட்டான்.. நீயும் யோசிக்காம லூசு மாதிரி உடனே ஓடிருக்க.. ஒரு வேள அவன் சாகலேனா என்னாயிருக்கும்..” என்று கவலையுடன் அவளை நோக்கினான் ருத்ரன். “சாகலேனா உன் கையால செத்திருப்பான்” என்று சிரித்துக் கொண்டே கூறிய சகி, “உன்ன பத்தி அப்டி கேட்ட அப்பறம், எனக்கு ஏதும் ஆபத்து வருமான்னுல்லாம் யோசிக்க தோனலடா...” என்றாள். அவளது விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்ட ருத்ரன், “என்ன அவ்ளோ புடிக்குமா சகி?” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான். சகிக்கு வார்த்தையே வரவில்லை, தலையை மட்டும் ஆம் என்று ஆட்டினாள்.

“சகி அன்னைக்கு பாதில நிறுத்துனியே.. என்ன சொல்ல வந்த.. ப்ளீஸ் இப்போ சொல்லேன்” என்று அவன் கேட்டதும் சகிக்குக் குறும்பு தலை தூக்க, “என்னைக்கு என்ன சொன்னேன்?” என்றாள். “ஹேய் விளையாடாத சொல்லு” என்றான் விடாமல். “எனக்கு இப்போ ஞாபகம் இல்ல, அப்பறம் வந்தா சொல்ரேன்.. இப்போ கெளம்பனும் டாட்டா” என்று கூறிக் கிளம்ப எத்தனித்தவளை இழுத்துச் சுவற்றில் சாய்த்துச் சிறை பிடித்து, “இன்னைக்கு உன்ன விட்றதா இல்ல..” என்றான். “ருத்ரா ப்ளீஸ் இன்னொரு நாள் சொல்றனே...” என்றவளைக் கண்டு கொள்ளாமல், அவள் பதிலை எதிர் பார்த்துக் குனிந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அவனைத் தள்ளி விட முயற்சித்துக் கொண்டிருந்தவள் தோற்று, “நீ வெளிய போன்னு சொன்னதுக்கு அப்பறமும் அங்கயே நிக்க, நான் என்ன உன்னோட பொண்டாட்டியான்னு கேக்க வந்தேன்.. போதுமா டா.. சரியான போலீஸ்காரன்” என்றாள் முகம் சிவக்க. “ஹ்ம் தெரியும்டி. இருந்தாலும் உன் வாயால கேக்கலாம்ன்னு தான்..." என்றான் ருத்ரன். “கேட்டுட்டேல்ல தள்ளு...” என்று அவனைத் தள்ள முயன்றவளை மேலும் நெருங்கி, “இன்னும் இருக்கு.. உன் ஃபோன்ல என் நம்பர என்னன்னு சேவ் பண்ணி வச்சிருக்க?” என்று கேட்டான். “அதான் அன்னைக்கே பாத்துட்டேல்ல அப்புறம் ஏன் கேக்குற? சும்மா எரிஞ்சு எரிஞ்சு விழுந்தா வேற என்ன பண்றது... அதான் அப்டி பண்ணேன்” என்றாள் மெல்லிய குரலில். “மேடம் மட்டும் என்ன என்கிட்ட கொஞ்சி கொஞ்சியா பேசிட்டு இருந்திங்க...” என்றான் நக்கலாக. ஏதோ ஞாபகம் வந்தவளாக, “ஆமா நீ என் நம்பர் என்னன்னு சேவ் பண்ணிருக்க?” என்று கேட்டவள், அவனது அலைபேசியைப் பிடுங்கி அவன் எண்ணுக்குத் தன் அலைபேசியில் இருந்து அழைத்தாள். அதில், “பொண்டாட்டி காலிங்...” என்று மின்னியத்தைக் கண்டு அவளுக்குப் பேச்சே வரவில்லை.

அவன் 'என்ன' என்பது போல் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டான். பின் அவனே தொடர்ந்தான். “சகி உன்ன ஃபர்ஸ்ட் டைம் ஒரு மால்-ல பாத்தேன்.. ஒரு ஐஸ் கிரீம சாப்ட்டுட்டு அழகா எஸ்கலேட்டர்ல போயிட்டு இருந்த... அப்போவே என்னவோ உன்ன புடிச்சு போச்சு.. அப்புறம் இங்க வந்து உன்ட பழகுன அப்புறம், நீ என்னோட சகின்னு முடிவே பண்ணிட்டேன். சகி, ஐ லவ் யு!” என்று ருத்ரன் தன் காதலைச் சொன்னான். அதைக் கேட்டு முகத்தைக் குனிந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் சகி. அவளிடம் பதில் இல்லாமல் போகவே, அவள் நாடியை மென்மையாகப் பற்றி அவள் முகத்தை உயர்த்திய ருத்ரன், “சகி ஏதாச்சு பேசுமா... உனக்கு இஷ்டமில்லயா?” என்றான் கண்களில் ஏக்கத்தோடு. அவன் முகம் சுருங்குவதைக் கண்ட சகி, “எனக்கு எப்போவோ உன்ன புடிச்சிருந்துச்சு ருத்ரா.. அந்த மால்-ல தான் நானும் உன்ன பாத்தேன்.. நான் எனக்கு வரப் போறவன் எப்படி இருக்கணும்னு மனசுல நினைச்சு இருந்தனோ, அப்டியே நீ இருந்த... ஆனா நீ என்கிட்ட காரணமே இல்லாம எரிஞ்சு விழுந்தப்போ உனக்கு என்ன புடிக்காதுன்னு முடிவு பண்ணிட்டேன்” என்று முகம் சுருங்கச் சொன்னாள். “லூசு... உன்ன புடிக்காமதான் உன்னையே சுத்தி சுத்தி வந்தனாடி... கொஞ்சம் கூட அறிவே இல்ல” என்று செல்லமாகத் திட்டி அன்று மால்-இல் அவன் கண்டதையும் பிறகு சூர்யா இங்கு வந்தபோது அவன் நினைத்ததையும் கூறினான். “எனக்கு நீ கிடைக்க மாட்டேன்னு என் மேலயே கோவம்.. அத உன் மேல காட்டிட்டேன்.. சாரி டா.. உனக்கு தெரியுமா சகி, அன்னைக்கு நான் உன்ன நினைச்சுட்டே பைக்ல வந்தப்போ தான் உன்ன இடிச்சுட்டேன்” என்றான். அவனையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “என்ன கதையா சொல்றேன்... ஆஆஆஆன்னு பாத்துட்டே இருக்க... நான் சொன்னதுக்கு பதில் சொல்லுடி..” என்று செல்லமாகக் கடிந்து கொண்டான். “அப்பறம் பாக்கலாம், எனக்கு பசிக்குது... என்ன சமைச்ச” என்று அவனைத் தள்ளி விட்டுச் சமையல் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். “உன்னல்லாம்ம்ம்ம்... என்ன படுத்துறதுக்குன்னே வந்து சேந்திருக்கா, சரியான ராட்சசி” என்று அவளைச் செல்லமாகத் திட்டி விட்டு உணவை எடுத்து வைத்தான்.

ருத்ரன் அவளுக்கு உணவை ஊட்டி விட, அவள் சாப்பாட்டு மேசை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு பாட்டி சொன்ன பொன்னியின் கதையை அவனிடம் கூறினாள். “இதெல்லாம் நீ நம்புறியா?” என்று ருத்ரன் கேட்டதற்கு, “தெரியல ருத்ரா... ஆனா எனக்கு சில விஷயங்கள் மட்டும் புரியல... பொன்னி செத்து போய் அம்பது வருஷம் ஆச்சு, ஆனா எல்லா கொலையும் இந்த ஒரு வருஷமா தான நடக்குது.. அப்டியே பொன்னி தான் கொன்னானாலும் செத்தவங்கள்ல ரகு தவர யாரை பத்தியும் பேட் ரெகார்டஸ் இல்லையே.. அப்பறம் நீ இதுக்கு முன்னாடி இருந்தவங்க ஃபோட்டோஸ் காட்டுனியே, அதுக்கும் ரகுவோட பாடிக்கும் கொஞ்சம் வித்யாசம் இருந்த மாதிரி இருக்கு.. அப்பறம் இதுக்கு முன்னாடி இறந்த ஆறு கேஸ்ல டெட் பாடிஸ் எதுவுமே அந்த பெரிய வீட்ல இல்ல, அவங்க அவங்க இடத்துல தான் இருந்துச்சு.. ரகுவோடது மட்டும் அந்த வீட்ல கெடந்துச்சு.. மே பி என் ரிப்போர்ட்டர் மூள கொஞ்சம் ஓவரா திங்க் பண்ணுதோ என்னவோ... பட் எனக்கு தோணுறத சொன்னேன்” என்றாள். அவள் சொன்னது அனைத்தையும் கவனமாகக் கேட்டவனுக்கு ஏதோ பொறி தட்டியது. “பரவால்ல சகி... உனக்கும் கொஞ்சம் இருக்குன்னு ப்ரூவ் பண்ணிட்ட” என்று அவள் தலையைத் தட்டிக் காண்பித்தவனை முறைத்தவள், “போடா... உன்ட போய் சொன்னேன் பாரு...” என்று கோவித்துக் கொண்டாள். “சும்மா டி... என் செல்ல பொண்டாட்டி...” என்று அவள் மூக்கைத் திருகிக் கொஞ்சியவன், “சகி எனக்கு மதுரைல ஒரு முக்கியமான வேல இருக்கு.. உடனே போகணும் நான் உனக்கு நைட் கால் பண்றேன்.. பத்திரமா வீட்லயே இரு.. தனியா எங்கயும் போகாத” என்று கூறி, அவன் போகும் வழியில் சகியைப் பாட்டி வீட்டில் விட்டுச் சென்றான்.


நிழல் தொடரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
217
Likes
442
Location
Chennai
#25
நிழலாய் தொடர்வேன்....

நிழல் 13



அடுத்தநாள் அதிகாலை நான்கு மணி. ரோந்து பணியில் இருந்த அந்த ஊர் காவல் துறை அதிகாரி ஒருவர் அந்தப் பெரிய வீட்டு மரக்கிளையில் ஏதோ தொங்குவது போல் இருக்க, அருகில் சென்று டார்ச் வெளிச்சத்தில் அதைப் பார்த்து அதிர்ந்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் சோலை குறிச்சி கிராமமே பரபரப்பாக அந்தப் பெரிய வீட்டின் முன் கூடி இருந்தது. காவல் துறை, தடயவியல் நிபுணர்கள், பல்வேறு ஊடகங்களும் இருந்தன. அதே மாதிரியான பிணம், அந்தப் பெரிய வீட்டின் ஒரு மரக்கிளையில் அதன் கால்கள் கட்டப்பட்டுத் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இருந்தது. லட்சுவும் நிலாவும் சொல்லச் சொல்லக் கேட்காமல் அவர்களையும் தர தரவென்று இழுத்துக் கொண்டு அங்கு சென்றாள் சகி. அந்தப் பிணத்தை வெவ்வேறு கோணங்களில் தன் கேமராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த அதிகாரி சொன்ன தகவல்களைக் குறிப்பெடுத்துக் கொண்டாள். அங்கு ருத்ரன் வந்திருக்கின்றனா என்று தேடி, அவன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு வீடு திரும்பினாள்.

வீட்டிற்கு வந்து ருத்ரனுக்கு அழைத்து அந்தக் கொலையைப் பற்றிக் கூறினாள். “நீ எங்க அங்க போன?” என்று அவன் உறுமியதற்கு, “ஊர்ல எல்லாரும் தான் இருந்தாங்க.. நான் நிலா லட்சு கூடதான் போனேன்.. சும்மா சும்மா திட்டாத” என்று அவள் கோவித்துக் கொள்ள, “நான் உன்ன விட்டுட்டு இங்க இருக்கேன்ல, எனக்கு பயமா இருக்குமா அதான்.. என் செல்லம்ல...” என்று கொஞ்சினான். “சரி சரி... எப்போ வருவ?” என்று சகி கேட்டதற்கு, “நான் இப்போ வேற ஒரு முக்கியமான கேஸ் பாக்குறனால அத அந்த ஊரு இன்ஸ்பெக்டரே பாத்துக்குறாரு. சோ, நான் இனிமே அங்க அந்த கேஸ் சம்பந்தமா வர்றது டவுட் தான்...” என்று பதிலளித்தான். அந்தப் பதிலில் சற்று முகம் சுருங்கிய சகி, “அப்போ வர மாட்டியா? எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு...” என்றாள் சிறுபிள்ளை போல. “அந்த கேஸ் சம்பந்தமா வர்றது டவுட்ன்னு தான சொன்னேன், என் பொண்டாட்டிய பாக்க வர முடியாதுன்னா சொன்னேன்... எப்போ வரணும்னு சொல்லு” என்று சிரித்துக் கொண்டே கூறினான். “சும்மா... நீ எவ்ளோ பிஸியா இருப்பன்னு எனக்கு தெரியும்... இதுல இங்கயும் அங்கயும் வேற அலைய வேணாம்.. அப்போ அப்போ ஃபோன் மட்டும் பண்ணு” என்று சகி கூறியதற்கு, “சரிங்க மேடம்” என்று சிரித்துக் கொண்டான். சகி “ஓகே ருத்ரா... நான் வைக்கிறேன், டாட்டா...” என்றவுடன், “சகி ஒன் மினிட்... நேர்ல தான் சொல்ல மாட்ட... ஃபோன்லயாச்சு சொல்லேன்டி” என்றான் ஏக்கமாக. “வெவெவெவ... போடா.. பை” என்று அழைப்பைத் துண்டித்தாள். 'கொஞ்சமாச்சு மரியாதை இருக்கா பாரு.. எனக்கு வாய்ச்சது அவ்ளோதான்...' என்று தன்னவளை நினைத்துச் சிரித்துக் கொண்டு மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தான் ருத்ரன்.

அன்றைய எல்லா ஊடகங்களிலும் சோலை குறிச்சியில் நடந்த கொலை, 'ப்ரேக்கிங் நியூஸ்'-ஆக வந்தது. 'மக்கள் சொல்வது போல் இது அந்தப் பெரிய வீட்டுப் பேயின் பலிகளா?' என்று விவாதிக்கவும் தவறவில்லை. தோழியர் வீட்டிலிருந்து அவர்களுக்கு அழைத்து மதுரைக்குத் திரும்பும்படி கண்டிப்பாகக் கூறி விட்டனர். அவர்களும் நாளை ஒரு நாள் பொறுத்து, நாளை மறுநாள் கிளம்பி வருவதாக ஒப்புக் கொண்டனர்.

அன்று இரவு சகி இதுவரை தான் திரட்டிய செய்திகள், புகைப்படங்களை எல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அரைக் கதவைத் தள்ளிக் கொண்டு வந்த தோழியர் இருவரும், அந்த மேசை முழுவதும் பரப்பி கிடந்த படங்களைப் பார்த்தனர். “ஹேய் சகி, இதெல்லாம் என்ன? நீ இந்த கிராமத்தோட இயற்கைய பத்தி ஆர்ட்டிகிள் எழுதுறேன்னு தான சொன்ன...” என்று நிலா கேட்க, லட்சுவும் சகியை முறைத்துக் கொண்டிருந்தாள். மாட்டிக்கொண்ட குழந்தையாகத் திரு திருவென விழித்த சகி, வேறு வழியின்றி அவர்களிடம் தான் வந்த காரணத்தையும், ருத்ரன் தனக்கு உதவியதையும் மட்டும் கூறினாள். “ஓஓஓஓஓஓ.. ஒரு சாதாரண ரிப்போர்ட்டருக்கு ஹெல்ப் பண்ற அளவுக்கு ரொம்ப நல்ல அசிஸ்டன்ட் கமிஷனரோ? ஒழுங்கா எதையும் மறைக்காம சொல்லு...” என்று லட்சு விடாமல் கேட்க, சகி தானும் ருத்ரனும் ஒருவரையொருவர் விரும்புவதையும் கூறினாள்.

அதைக் கேட்ட நிலா, “அடி பாவி.. நமக்கு தெரியாம இவ்ளோ நடந்திருக்கு பாரேன் லட்சு.. சரியான அமுக்குனி... நம்மள கூட நம்பலாம், ஆனா இந்த சிங்கிள்ன்னு சொல்லிட்டு சுத்துறவங்கள நம்பவே கூடாது..” என்றதற்கு, “நான் அவன பாத்த அப்பறம் எப்போயாச்சு சிங்கிள் சிங்கிள்ன்னு சொல்லிக்கிட்டனா? நீங்க ட்யூப் லைட்டா இருந்தா நான் என்னடி பண்றது...” என்றாள் சகி. “அடிங்க.. இதுல வேற எங்களையும் அந்த வீட்டுக்குள்ள கூட்டு போய் கொல்ல பாத்துருக்க... பிசாசு..” என்று அவளை மொத்தினாள் லட்சு. “அப்போ சூரிய அன்னைக்கு அதான் இருக்க சொன்னியா... அப்பறம் ஏதோ எங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பாட்டி கிட்ட என்னன்னவோ புளுகி எங்களையெல்லாம் வெளிய கிளப்பி விட்டு, வேலைய பாத்திருக்க” என்று நிலா முறைத்து கொண்டே கேட்டதற்குத் தன் இரு தோள்களையும் குலுக்கி, “ம்ம்ம்.. டெபனெட்லி... டெபனெட்லி...” என்றாள் சகி. அவளை அடிக்கத் துரத்தி, மூன்று பேரும் மாடி முழுதும் ஓடிக் களைத்து மூச்சு வாங்கச் சிரித்தனர். சகி, “எங்க வீட்டுக்கோ சூரிக்கோ தெரிய வேணாம்... ப்ளீஸ் டா செல்லங்களா... ஊருக்கு போய் நானே சொல்லிக்கிறேன்” என்று கெஞ்சினாள். “அப்போ ட்ரீட் குடு” என்று கேட்டாள் நிலா. “ஆமா ஆமா... நீ பொய் சொல்லி இங்க வந்து வேல பாத்ததுக்கு ஒன்னு, அப்புறம் ருத்ரன் அண்ணாவ லவ் பண்றதுக்கு ஒன்னு... ரெண்டு ட்ரீட்...” என்று லட்சு கணக்கு கூற, “அப்பறம் அந்த வீட்ல பேய் கிட்ட உன்ன கோத்து விட்டு கொல்ல பாத்தாளே லட்சு, அதுக்கு ஒன்னு...” என்று எடுத்துக் கொடுத்தாள் நிலா. தலையில் அடித்துக் கொண்ட சகி, “எல்லாம் என் நேரம்.. தந்து தொலையுறேன் ட்ரீட் பைத்தியங்களா..” என்றாள். மூவரும் சிறிது நேரம் கலகலத்துவிட்டுத் தங்கள் காதலர்களோடு பேசச் சென்றனர்.

தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த சகிக்குக் காலை நடந்த அந்தச் சம்பவம் சற்று குழப்பமாகவே இருந்தது. ருத்ரனிடம் கேட்கலாம் என்று தோன்ற, உடனே அலைபேசியை எடுத்து ருத்ரனின் எண்ணிற்கு அழைத்தாள். அவள் அழைப்பை ஏற்ற ருத்ரன், “என்னடி கொஞ்ச நேரம் முன்னாடிதான் பேசிட்டு வச்ச.. ஒரு வேள அத சொல்லப் போறியா?” என்றான் ஆர்வமாக. “அதில்லடா.. இது வேற.. எனக்கு ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு.. ஏதோ இடிக்குது.. இதுவரைக்கும் நடந்த கொலைல எல்லாம் ஃபர்ஸ்ட் போலீஸ் அப்பறம் போலீஸ் சம்பந்தபட்ட சில டிபார்ட்மெண்ட்ஸ்ன்னு கொஞ்சம் பேரு தான் வருவாங்க. பட் இன்னைக்கு எப்டி இவ்ளோ மீடியா பீப்பிள் வந்தாங்க? அதுவும் காலங்காத்தால நாலு மணிக்கே. அவ்ளோ சீக்ரம் அவங்களுக்கு யாரு தகவல் சொல்லிருப்பாங்க? எப்போயும் யாராச்சு ஊர் மக்கள் பாப்பாங்க, பட் இந்த தடவ ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தான் பாத்திருக்காரு, அப்போ அந்த விஷயம் கான்ஃபிடென்ஷியலா இல்லாம எப்டி வெளிய லீக் ஆச்சு?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் சகி. அதைக் கேட்டுக் கடுப்பான ருத்ரன், “அடியே நைட் மூனு மணி ஆகுதுடி... எதோ ஆசையா சொல்ல போறன்னு ஃபோன எடுத்தா, நொய்யி நொய்யின்னு கேள்வியா கேக்குற... உன்ன கட்டிக்கிட்டு என்ன பாடு பட போறனோ... இனிமேல் அதுல கன்ஃப்யூஷன், இதுல கன்ஃப்யூஷன்னு ஃபோன் பண்ண, தோல உரிச்சிருவேன்... ஃபோன வைடி...” என்று பொறிந்து விட்டு அழைப்பைத் துண்டித்தான். 'ப்பே... சிடு மூஞ்சி... இதுக்கு போய் கால் பண்ணோம் பாரு, நம்மள சொல்லணும்...' என்று அலைபேசியில் இருந்த அவனது படத்திற்கு இரண்டு அடி வைத்தாள்.

மறுபடியும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு மேலும் ஒரு சந்தேகம் எழுந்தது. இதனை பேர் வந்தும் ஏன் ருத்ரன் வரவில்லை? இதை விட என்ன முக்கியமான வேலையாக இருக்கும்? நம்மிடம் எதுவும் மறைகின்றானோ இல்லை, நாம் தான் அளவுக்கு மீறி கற்பனை செய்து கொள்கிறோமோ? என்று வெகு நேரம் யோசித்துக் கொண்டே கண்ணயர்ந்தாள்.

சகியின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?


நிழல் தொடரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
217
Likes
442
Location
Chennai
#27
நிழலாய் தொடர்வேன்....

நிழல் 14




அன்று அதிகாலையே தோழியர் மூவரும் பாட்டியிடம் விடை பெற்று மதுரை வந்து சேர்ந்தனர். சகி சாப்பிட்டுக் கிளம்பி, அலுவலகம் செல்லத் தயாரானாள். கீழே இறங்கி வந்தவளிடம் பத்மா, “சகி நீ கேட்ட டைம் முடிஞ்சுது. வாசு மாமா கொண்டு வந்த வரன், JP அண்ணா சொன்ன பையன் ரெண்டு பேரு ஜாதகமும் உன் ஜாதகத்தோட பொருந்துது. நீ யாருன்னு செலக்ட் பண்ணா, மேற்கொண்டு பேசலாம்” என்று அவளிடம் இரு புகைப்படங்களை நீட்டினார். “உங்களுக்கு இந்த சிரமமே வேண்டாம் மா... நானே ஒருத்தர செலக்ட் பண்ணிட்டேன்” என்று தன் காதல் விவகாரத்தை வீட்டில் பட்டெனப் போட்டுடைக்க, நடராஜன் சிரித்தார் என்றால், சூர்யா அதிர்ந்தான். “என்னடி சொல்ற... யாரு அது? வேலைக்கு போறேன் போறேன்னு இத தான் செய்றியா? என்னங்க, அவ என்ன சொல்றா... நீங்க சிரிச்சுட்டு உக்காந்திருக்கிங்க” என்று பதற ஆரம்பித்தார். “பத்மா... கொஞ்சம் இரு... இப்போ உனக்கு அவ கல்யாணம் பண்ணிக்கணுமா, இல்ல நீ பாத்த பையன தான் கல்யாணம் பண்ணிக்கணுமா?” என்று நடராஜன் கேட்டதும் பத்மா வாயை மூடிக் கொண்டார்.

சகியிடம் திரும்பிய நடராஜன், “சொல்லு குட்டிமா, யாரு அவர்? உனக்கு எப்டி தெரியும்?” என்று கேட்டார். “மதுரை அசிஸ்டன்ட் கமிஷ்னர் ருத்ரன். நான் சோலை குறிச்சிக்கு வெகேஷன் போகல... அங்க நடந்த கொலைகள பத்தி ஆர்டிகிள் எழுத போனேன். அப்போ பழக்கம். ரொம்ப நல்லவர் பா... எனக்கு வர போறவன் எப்டிலாம் இருக்கனும்ன்னு நினைச்சனோ அப்டியே இருக்காரு பா... நீங்கல்லாம் அவர்கூட பேசி பாருங்க, உங்களுக்கும் கண்டிப்பா புடிக்கும் பா...” என்று தன் செல்லத் தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள். காவல் துறை அதிகாரி என்ற வார்த்தையிலேயே நடராஜன் மனதில் ருத்ரன் உயர்ந்து விட, தன் செல்ல மகளின் மனதையே கவர்ந்திருக்கிறான் என்றால், அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அதற்குள் JP-யிடம் இருந்து, தொலைக்காட்சியில் செய்திகள் பார்க்கச் சொல்லி அழைப்பு வர, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள் சகி.

அனைத்து செய்தி அலைவரிசைகளும் சோலை குறிச்சி கொலைகள் பற்றிய செய்தியைத் தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. “சோலை குறிச்சி மர்மங்கள் அம்பலம் - மனித உடல் உறுப்புகளைத் திருடும் மாபெரும் மருத்துவ மோசடி. வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார் மதுரையின் வெற்றி நாயகன், ருத்ரன் ஐ.பி.ஸ்” என்று மீண்டும் மீண்டும் அதே செய்தித் தொகுப்பை விளக்கிக் கொண்டிருந்தனர். அந்த ஊரில் இதுவரை மர்மமான முறையில் கொல்லப்பட்டவர்களின் உடல் உறுப்புகளைத் திருடிக் கடத்தப்பட்டதாகவும், மதுரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், பிரேத பரிசோதனைக் குழுவும் இதற்க்கு உடந்தை எனவும், செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஒரு வருடமாக மூடியிருந்த இந்த மர்மத்தை, வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த, மதுரையின் அசிஸ்டன்ட் கமிஷ்னர் ருத்ரன் ஐ.பி.ஸ்-இற்குப் பிரதமர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று ஒவ்வொருவரின் வாழ்த்துச் செய்திகளும் திரையின் கீழ்ப் பகுதியில் ஓடிக் கொண்டு இருந்தன.

சிறிது நேரத்தில் திரையில் ருத்ரன் வந்தான். அவனை முதல் முறையாக காக்கிச் சீருடையில் பார்க்கும் சகி விழி விரித்தாள். 'போலீஸ் யூனிஃபார்ம்ல என் ருத்ரா எவ்ளோ கம்பீரமா இருக்கான்' என்று மனதிற்குள் பெருமைப்பட்டுக் கொண்டாள். தேசிய ஊடகங்கள் முதல் மதுரையின் சின்னச் சின்ன ஊடகங்கள் வரை அனைத்து மைக்களும் அவன் முன்னே வைக்கப் பட்டிருந்தன. ருத்ரன் பேச ஆரம்பித்தான். “இந்த மெடிக்கல் மாஃபியா ஒரு வருஷமா மதுரைல நடந்துட்டு வருது. சோலை குறிச்சில பேசப்பட்ற பேய்க் கதைய சாதகமா பயன்படுத்தி இத பண்ணிருக்காங்க. இன்னைக்கு தான் சம்பந்தப்பட்டவங்கள அரெஸ்ட் பண்ணி விசாரிச்சுட்டு இருக்கோம். அவங்க வாக்கு மூலங்களோட சீக்ரம் கோர்ட்ல ப்ரட்யூஸ் பண்ணுவோம். மேலும் இந்த கேஸ்ல எனக்கு உதவி செஞ்சு, முக்கியமான க்ளூஸ் குடுத்த 'உங்கள் தமிழகம்' பத்திரிக்கை ரிப்போர்ட்டர் சக்திக்கு நன்றி. சின்ன பொண்ணா இருந்தாலும் கொஞ்சம் கூட பயம் இல்லாம இந்த கேஸ்ல இன்வால்வ் ஆனாங்க. எனது பாராட்டுக்கள்... நிறைய வேலைகள் இருக்கு.. நோ மோர் க்வெஸ்டின்ஸ் ப்ளீஸ்” என்று கூறி அவன் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டான்.

சகி அவன் தன் பெயரைச் சொல்லுவான் என்று துளியும் எதிர் பார்க்கவில்லை. தன் மகளின் பெயரைச் சொல்லும்போது அவன் முகத்தில் தோன்றிய சந்தோஷத்தைக் குறித்துக் கொண்டார் நடராஜன். இதுவரை சமாதானம் அடையாத பத்மாவோ, “என் மாப்பிள்ளைய பாத்தா சுத்தி போட சொல்லுடி... ஊரு கண்ணு எல்லாம் அவர் மேல தான் இருக்கு..” என்று கூறிப் பச்சைக் கொடி காட்டினார். “ஓஓஓஓஹோ.. இப்போ மட்டும் உன்ன்ன் மாப்பிள்ளையா...” என்று 'உன்'-இல் அழுத்தம் கொடுத்துச் சொன்னாள் சகி. அதைக் கேட்டுச் சிரித்த நடராஜன், “மாப்பிள்ள இன்னைக்கு பிஸியா இருப்பாரு... நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு வரச் சொல்லுமா... பேசலாம்” என்றார். சந்தோஷமாகத் தலையை ஆட்டிய சகியின் தலையில் கொட்டிய சூர்யா, “இதுக்கு தான் என்ன அங்க தங்க வச்சியாடி... நான் கூட நம்ம தங்கச்சிக்கு நம்ம மேல அவ்ளோ பாசமான்னு அசந்து போய்ட்டேன்” என்றான். தலையைத் தேய்த்துக்கொண்டே அவனை, 'இருடா உனக்கு இருக்கு...' என்று பார்த்த சகி, “ஏன் மா... ஜஸ்ட் ஒரு மாசமா லவ் பண்ற என்ன இந்த நோண்டு நோண்டுறியே, உன் சீமந்த புத்ரன் ஏழு வருஷமா லவ் பண்ணிட்ருக்கான். அத மொதல்ல கவனி...” என்று தன் பணியைச் செவ்வனே செய்து முடித்தாள் சகி.

சூர்யாவின் பக்கம் திரும்பிய பத்மா, “ஏன்டா நீயுமாடா? யாருடா சொல்லு...” என்றார். சகியை முறைத்த சூர்யா, தானும் நிலாவும் விரும்புவதைச் சொல்லி முடித்து, “சகி இருக்கும் போது எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்க தோனல மா.. அதான் இவளுக்கு கல்யாணம் முடிவானதும் சொல்லலாம்ன்னு இருந்தேன்” என்று மன்னிப்புக் கூறினான். “அவ்ளோ பாசக்காரனாடா நீ?” என்ற சகியின் காதைத் திருகியவன், “ஏன்டி, நானே நேரம் பாத்து சொல்லிருக்க மாட்டனா... எதுக்கு மாட்டி விட்ட..” என்றான். “ஆமா நல்லா பாத்தியே நேரம் ஏழு வருஷமா... நீயெல்லாம் ஒரு லாயர்... போடா” என்று பதில் கொடுத்தாள். “இன்னும் இந்த வீட்ல எனக்கு தெரியாம என்னலாம் திருட்டுத்தனம் நடக்குது? எல்லாத்தையும் இப்போவே சொல்லிருங்க” என்று புலம்பினார் பத்மா. “எங்க மேட்டர் அவ்ளோ தான் மா. எதுக்கும் அப்பாவ விசாரி... கடைல உக்காந்து எப்போ பாரு ஒரே வாட்ஸாப் ஃபேஸ்புக் தான்” என்று நடராஜனை இழுத்து விட்டான் சூர்யா. அவர் சூர்யாவிடம், "டேய்... உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்..." என்றுவிட்டு, அவரை முறைத்துக் கொண்டிருந்த பத்மாவைப் பார்த்து, “பத்தும்மா, அப்டிலாம் எதுவும் இல்லமா.. உன்ன விட அழகா எனக்கு யாரு கிடைப்பா சொல்லு...” என்று ஒரு பெரிய ஐஸ் கட்டியைப் பத்மா தலையின் மீது ஏற்றித் தப்பித்துக் கொண்டார்.

சகி அன்று அலுவலகம் சென்றதும் அவளுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. JP மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். மேலும், “உங்க அப்பா சொன்னான்மா... ருத்ரன் நல்ல சாய்ஸ்.. கங்க்ராட்ஸ்.. ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வா உன் ஆள..” என்று அவள் தலையைப் பாசத்துடன் வருடினார். “தேங்க்ஸ் அங்கிள்... கண்டிப்பா வர்றோம்” என்றாள் சிரித்துக் கொண்டே. எல்லோரிடமும் பாராட்டுக்களைப் பெற்றுவிட்டு ருத்ரனுக்கு அழைத்து, “AC சார்... ஒரே நாள்ல ஹீரோ ஆகிட்டிங்க... எங்களல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றாள். “என்னடி கொழுப்பா... நாளைக்கு நேர்ல பேசிக்கிறேன் உன்ன..” என்று நாளைக் காலை அவள் வரவேண்டிய இடத்தைச் சொன்னான். “சும்மா டா... கங்க்ராட்ஸ்.. நாளைக்கு மீட் பண்லாம்.. நானும் ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

சூர்யா நிலாவைத் தான் விரும்புகிறான் என்று அறிந்த பெற்றோர் நிம்மதி அடைந்தனர். அன்று மாலையே அருணாச்சலம்-ஈஸ்வரியிடம் பேசிச் சூர்யாவிற்கும் நிலாவிற்கும் உறுதி செய்தனர். பின் மூவரின் பெற்றோரும் ஒன்றாய் அமர்ந்து பேசி, ருத்ரன் வீட்டில் பேசிவிட்டு மூன்று திருமணங்களையும் ஒன்றாய் நடத்த முடிவு செய்தனர்.

அந்தப் பெரிய வீட்டில் இருக்கும் 'அவள்' யார்?


நிழல் தொடரும்.!! (அடுத்த நிழலில் முற்று பெறும்)
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
217
Likes
442
Location
Chennai
#29
நிழலாய் தொடர்வேன்...

நிழல் 15



அடுத்த நாள் ருத்ரனைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சியில் சகிக்குத் தூக்கமே வரவில்லை. வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள், அதிகாலையில் தான் கண்ணயர்ந்தாள். காலை அலாரம் சத்தம் கேட்டு உற்சாகமாய் எழுந்தவள், கட கடவெனக் கிளம்பி ருத்ரன் வரச் சொன்ன உணவகத்திற்குச் சென்றாள். ருத்ரன் அவளுக்காக அங்கு காத்திருந்தான். இருவரும் காலை உணவு உண்டு முடித்த பின் ருத்ரன் தன் வண்டியைக் கிளப்ப, சகி, “எங்க போறோம்?” என்று கேட்டாள். “பாக்கத்தன போற இரு...” என்றான். வண்டி நெடுஞ்சாலையில் சீறிப் பாய ருத்ரனைப் பின்னிருந்து அணைத்து, அவன் வலிய தோளின் மீது தன் முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் வளவளத்துக் கொண்டே வந்தாள் சகி. ருத்ரனுக்குத் தான் பேச்சே வரவில்லை. சகி இதற்க்கு முன் அவனோடு வண்டியில் வந்திருக்கிறாள் தான், ஆனால் அவள் அவனை இப்படி உரிமையோடு அணைத்துக் கொண்டது இதுவே முதல் முறை. சகியோ, “வாய திறக்குறானா பாரு.... சரியான ஊமக்கொட்டான்” என்று சத்தமாக மூணுமுணுத்தாள். அதற்கு அவன், “ஒரு முப்பது வருஷ ப்ரம்மச்சாரிய, ஒரு அழகான பொண்ணு இப்டி இறுக்கமா கட்டி புடிச்சுட்டு வந்தா, எப்டி பேச்சு வரும்?” என்றான். அதைக் கேட்ட சகியை வெட்கம் ஆட்கொள்ள, அவனிடம் இருந்து விலகப் போக, அவள் கைகளைப் பற்றி இழுத்து மீண்டும் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

வண்டி செல்லும் பாதையில் இருந்தே அவன் சோலை குறிச்சிக்குத் தான் செல்கிறான் என்று புரிந்து கொண்டாள் சகி. ருத்ரன், சோலை குறிச்சி பெரிய வீட்டின் வெளியே இருந்த பாதையில் வண்டியை நிறுத்தினான். அங்கு ஆள் நடமாட்டமே இல்லை. வண்டியில் இருந்து சகியை இறங்கச் சொல்லித் தானும் இறங்கித் தன் வண்டியின் மேல் சாய்த்து நின்றான். “இங்க எதுக்கு வந்திருக்கோம் ருத்ரா?” என்று கேட்டாள் சகி. “இதுக்காக தான நம்ம ரெண்டு பேருமே இந்த ஊருக்கு வந்தோம்... க்ளோஸ் ஆனோம்.. அப்போ இங்க வரும் போதுலாம் உன் கூட இப்டி ரிலாக்ஸ்டா பேச முடிஞ்சது இல்ல.. அதான் இப்போ உன்ன இங்க கூப்டு வரணும்ன்னு தோணுச்சு” என்று சகியை அருகில் இழுத்து, அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டான். சிறிது நேரம் அப்படியே அமர்ந்து வயல்களையும் தென்னந்தோப்பையும் பார்த்துக் கொண்டிருந்தனர். “சொல்லு எதோ முக்கியமான விஷயம் பேசணும்னெனு சொன்னியே” என்று மௌனத்தைக் கலைதான் ருத்ரன். “ஹ்ம்ம்... அந்த மெடிக்கல் மாஃபியா...” என்று அவள் ஆரம்பித்தவுடன் கடுப்பாகி எழப் போனவனை, “என்னாச்சு” என்று அவன் கையைப் பற்றித் தடுத்தாள் சகி. “பின்ன என்னடி... இதான் அந்த முக்கியமான விஷயமா? நீ லவ்வ சொல்லுவேன்னு எதிர்பாத்து நைட்டெல்லாம் தூக்கம் வராம, எப்படா விடியும்ன்னு எந்திச்சு வந்தா, நீ என்னத்தையோ பேசுற” என்று கடிந்து கொண்டான் ருத்ரன். சகி “சும்மா, உன்ன கோவப் படுத்தி பாக்கலாம்ன்னு தான்... சாரி சாரி.." என்று அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்.

“அப்பறம் சொல்லு... நெக்ஸ்ட் என்ன ப்ளான் உன் லைஃப்ல?” என்று கேட்ட ருத்ரனிடம், “நெக்ஸ்ட் என்ன கல்யாணம் தான். ஒன் இயரா வீட்ல பாத்து ரெண்டு பேர ஃபைனலைஸ் பண்ணி வச்சிருந்தாங்க... அதுல ஒருத்தன் அமெரிக்கால இருக்கான்.. நான் தான் சோலை குறிச்சி போயிட்டு வந்து சொல்றேன்னு சொன்னேன்.. நேத்து கேட்டதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்” என்று சகி சொன்னதும், அவளை விட்டு விலகி அமர்ந்த ருத்ரனின் முகத்தில் இறுக்கமும் கோவமும் போட்டி போட்டன. “இத மொதலையே சொல்லி தொலஞ்சிருந்தா நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு போயிருப்பேன்.. இப்போ புரியுதுடி லவ்ன்னு சொல்லாமயே சேஃப் சைடுல இருந்துகிட்ட.. நான் தான் பைத்தியக்காரன் மாதிரி உன்ன பத்தி வீட்லலாம் சொல்லி... ச்ச...” என்று கோவமாகக் கத்தினான் ருத்ரன். சகி மிகவும் கடினப்பட்டுத் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டே, “வீட்ல பையன்லாம் பாத்தாங்க... என்ன பண்றது, எனக்கு இந்த சிடு மூஞ்சிய தான் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்.. இன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு கூப்டு வர சொன்னாங்க” என்று பொய்யாகச் சலித்துக் கொண்டு தன் தோளால் அவன் தோளை இடித்தாள். அவள் சொன்னதன் அர்த்தம் சில நொடிகள் கழித்தே அவனுக்கு விளங்க, அவன் மனம் துள்ளிக் குதித்தது. இருப்பினும் அதை வெளியே காட்டாமல், “அப்டி ஒன்னும் நீ சலிச்சுக்கிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்க வேணாம்... அந்த அமெரிக்காகாரனையே கட்டிக்கோ போ” என்றான். அதற்குச் சற்றும் அசராத சகி, “சரி விடு.. நீயே சொல்லிட்ட, அவனையே ஓகே பண்ணிட்றேன்... கொஞ்சம் இரு, இப்போவே அப்பாக்கு கால் பண்ணி சொல்லிடறேன்.. அப்பறம் அவசரப்பட்டு அந்த பையன வேண்டாம்ன்னு சொல்லிற போறாங்க” என்று தன் பையில் இருந்து அலைபேசியை எடுக்கப் போனாள். “அடிங்க... உனக்கு வாய் கொழுப்பு கூடிட்டே போகுது... இனிமேல் சும்மா விட கூடாது” என்று அவளை இழுத்து அணைத்து அவள் இதழ்களில் இதழ் பதித்தான். சில நிமிடங்களுக்கு நிலைத்த அந்தச் சிறையில் இருந்து ருத்ரன் அவளை மெல்ல விடுவித்தான். சகிக்கு அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வெட்கம் பிடுங்கித் தள்ள, அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்து, “லவ் யு ருத்ரா... லவ் யு சோ மச்” என்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் ஒற்றினாள். “லவ் யு டூ செல்லம்.. எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா” என்று அவளை அணைத்துக் கொண்டான். “இத ஃபர்ஸ்டே சொன்னா கொறஞ்சா போய்டுவ... அதுக்குள்ள அமெரிக்கா.. அது இதுன்னு.. மனுஷன கடுபேத்தி பாக்குறதுல அவ்ளோ சந்தோசம்” என்று அவள் தலையில் கொட்டினான். “நீ மட்டும் என்னடா.. எதோ நான் யாரோங்ற மாதிரி, 'உன் லைஃப்ல அடுத்து என்ன பிளான்'ன்னு கேக்குற... அதான் உன்னையும் கடுப்பேத்துனேன்” என்று அவன் மார்பில் செல்லமாகக் குத்தினாள் சகி. “ஹா ஹா கண்டு புடிச்சுட்டியா... சரி விடு” என்று அவளைச் சமாதானப் படுத்தினான் ருத்ரன்.

சகி, “ருத்ரா நான் ஒன்னு கேப்பேன், கோச்சுக்க கூடாது... எனக்கு அது தெரியாம தலையே வெடிச்சிரும்” என்று ஆரம்பித்தவளை மறித்த ருத்ரன், “நீ என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும்.. அந்த மாஃபியா பத்தி தான” என்றதும் தயங்கிய படியே ஆம் என்று தலையை ஆட்டினாள். “என் ஆர்வக்கோளாறு ரிப்போர்ட்டர் என்ன நினைப்பான்னு எனக்கு தெரியாதா என்ன...” என்றவரிடம், “இல்ல நியூஸ்ல நான் உனக்கு எதோ முக்கியமான க்ளூஸ் குடுத்து ஹெல்ப் பண்ணேன்னு சொன்னியே, அதான்..” என்று தன் மனதில் அரித்துக் கொண்டிருந்ததைக் கூறினாள். “ஹ்ம்ம் சொல்றேன்... பட் இப்போ நான் இத சொல்லப் போறது என் பொண்டாட்டி கிட்ட, ரிப்போர்ட்டர் கிட்ட இல்ல... போலீஸ் சைடுல இருந்து அஃபிஷியலா நியூஸ் வர்ற வர, இத வெளிய யார்கிட்டயும் சொல்ல கூடாது” என்று அவளிடம் சம்மதம் வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“எனக்கும் ஃபர்ஸ்ட் இந்த கொலைகள பத்தி எதுவும் புரியல. போஸ்ட்மார்டெம் ரிபோர்ட்ஸும் ஒரே மாதிரி இருந்தது ரொம்பவே குழப்பமா இருந்துச்சு. ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சப்போ எனக்கு கிடைச்ச ஒரே க்ளூ அந்த கொலைகளுக்கு நடுல இருந்த டைம் கேப்ஸ் தான். ஒவ்வொரு கொலைக்கு நடுவுலயும் கரெக்ட்டா ஃபார்ட்டி ஃபைவ் டேஸ் கேப் இருந்துச்சு. பட் அந்த ஃபாரினர் கொலைக்கும் ரகு கொலைக்கும் நடுவுல அப்டி இல்ல... ரொம்ப ஏர்லியராவே நடந்திருச்சு... அப்போ மறுபடியும் குழம்பிடுச்சு. கிடைச்ச ஒரு க்ளூவும் வேஸ்ட்ன்னு நான் உக்காந்திருக்கும் போதுதான், நீ எனக்கு ஹெல்ப் பண்ண. அன்னைக்கு பாட்டி சொன்னாங்கன்னு ஒரு பேய் கத சொல்லிட்டு, அதோட உன் மனசுல இருக்க சில விஷயங்கள சொன்ன,ய, ஞாபகம் இருக்கா? அம்பது வருஷமா கொல்லாத பேய், திடீர்னு ஒன் இயரா ஏன் கொல்லணும்.. அப்பறம் மத்த பாடீஸ்க்கும் ரகு பாடீக்கும் எதோ டிஃபரென்ஸ் இருக்குன்னு நீ கேட்டதுல்லாம் தான் எனக்கு பெரிய க்ளூஸ்ஸா இருந்துச்சு. ஒன் இயரா இந்த ஊர சுத்தி என்ன மாறிருக்குன்னு யோசிச்சேன்... மதுரை கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல ஒன் இயர் முன்னாடி தான் புது டீன் ஜாய்ன் பண்ணிருந்தாரு... அவர பத்தி அவர் வேல செஞ்ச மத்த ஊர்ல விசாரிச்சப்போ கொஞ்சம் தப்பா இருந்துச்சு. ரகுவோட பாடிய இன்னோரு தெரிஞ்ச டாக்டர் கிட்ட சீக்ரெட்டா ரீ-போஸ்ட்மார்டெம் பண்ண சொன்னப்போ அவன யாரோ கழுத்த நெருச்சு கொன்னுருக்காங்கன்னு தெரிஞ்சுது. அந்த ஃபாரினரோட பாடீய இந்த கேஸ் முடியுற வரை யாருக்கும் தெரியாம பாதுகாப்பா ப்ரிசர்வ் பண்ணி வச்சிருந்தனால, அதையும் அந்த டாக்டர் கிட்ட ரீ-போஸ்ட்மார்டெம்க்கு குடுத்தோம். அப்போ அந்த பாடீல சில ஆர்கன்ஸ் லைக், கிட்னி, லிவர், அப்பறம் கொஞ்சம் போன்ஸ் இதெல்லாம் இல்லன்னு தெரிய வந்துச்சு. சோ, அப்போவே அந்த கவர்மென்ட் ஹாஸ்பிடல் போஸ்ட்மார்டெம் டீம் தான் காரணம்ன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு. பட், கையும் களவுமா புடிக்கும்ன்னு, அன்னைக்கு தூக்கு போட்டு சூசைட் பண்ணிக்கிட்டவன் ஒருத்தன் பாடீய அந்த வீட்ல நைட்டோட நைட்டா தொங்கவிட்டோம். நாங்க எதிர் பாத்தபடியே போஸ்ட்மார்டெம் ரிப்போர்ட் சேம்மா வந்துச்சு, புடிச்சுட்டோம். நீ சொன்னது மாதிரி ரகுவ தவர மத்த பாடீஸ்லாம் அவங்க அவங்க எடத்துல போட்டதுக்கு காரணம், பேயோட பலின்னு பேச பட்டாலும், அந்த பெரிய வீட்டு மேல போலீஸோட கவனமோ மீடியாவோட கவனமோ திரும்ப கூடாதுன்னு தான். அதான் லாஸ்ட்டா நாங்க அங்க பாடீய தொங்க விட்டப்போ, நாங்களே மீடியாக்கும் இன்ஃபார்ம் பண்ணோம். அரெஸ்ட் பண்ணவங்கள விசாரிச்சப்போ, ரஷ்யால இருந்த ஒரு கும்பலோட அந்த டீன் டீல் பேசிருக்காருன்னு தெரிஞ்சுது. அந்த நாட்டுல இருந்து பாடீ பார்ட்ஸ் தேவ பட்ற பேஷண்ட்ஸ, இங்க டார்கெட் பண்ற விக்டிமோட மேட்ச் ஆகுரவங்களா பாத்து செலக்ட் பண்ணி, ஃபார்ட்டி ஃபைவ் டேஸ் கேப்ல இங்க கூப்டு வந்து, இங்க எடுக்குற பாடீ பார்ட்ஸ் வச்சு ஆப்பரேட் பண்ணிட்றாங்க. செத்தவங்க எல்லாருமே எதோ ஒரு வகைல மதுரை ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்தவங்க தான்.. சோ, ப்ளட் குரூப்ப வச்சு அதுக்கு மேட்ச் ஆகுற மாதிரி பேஷண்ட்ஸ செலக்ட் பண்ணிகிட்டாங்க. கொல்றதுக்கு ஒரு விதமான ரஷ்யன் கம்பனி ட்ரக்க (Drug) இஞ்செக்ட் பண்ணிருக்காங்க... அது கொல்றது மட்டும் இல்லாம, செத்ததுக்கு அப்பறமும் ஒருத்தரோட ஆர்கன்ஸ ஒன் டே வரைக்கும் கெடாம ப்ரிசர்வ் பண்ணும்... சோ, போஸ்ட்மார்டெம்க்கு பாடீ வரும்போது, ஆப்பரேட் பண்ணி ஆர்கன்ஸ எடுத்துக்குறாங்க... பேயோட பலின்னு காட்ட, அந்த வீட்ட சுத்தி ஒரு பொண்ண பேய் மாதிரி உலவ விட்ருக்காங்க... தென் விக்டிம்ஸ் செத்ததுக்கு அப்பறம் அவங்க வாய பிழந்து, கண்ண விரிச்சு வச்சிருக்காங்க... அந்த ட்ரக்கோட எஃபெக்ட்டால, பாடீஸ் வெளுத்து போய் தெரிஞ்சுது” என்று அனைத்தையும் விளக்கிக் கூறினான்.

அனைத்தையும் விழி விரித்துக் கேட்ட சகி, “ஓய்... அப்போ நான் அன்னைக்கு நைட் உன் கிட்ட கேட்ட டௌட்ஸ்லாம் கரெக்ட் தான... நீ தான் திட்டிட்டு ஃபோன வச்சுட்ட” என்று கோவித்து கொண்டாள். “அடியே, நான் எவ்ளோ கஷ்டப்பட்டு மூளைய கசக்கி ஸ்கெட்ச் போட்டா, நீ இப்டி டக்கு டக்குன்னு எல்லாத்தையும் கண்டுபுடிச்சு என்கிட்டயே சொன்னா மனுஷனுக்கு கடுப்பாகுமா ஆகாத? ஆனாலும் என் பொண்டாட்டிக்கு இவ்ளோ அறிவு இருக்க கூடாது... அன்னைக்கு நானே அசந்து போய்ட்டேன் தெரியுமா... மேற்கொண்டு நீ எதையும் கெஸ் பண்ணிற கூடாதுன்னு தான், உன்ட வாய குடுக்காம கட் பண்ணிட்டேன்” என்றான்.

“சரி.. அப்போ நீ சொல்றத பாத்தா, அந்த ரகு....” என்று சகி இழுத்தவுடன், “ஹ்ம்ம்.. அந்த ரகுவ இவங்க கொல்லல... விசாரிச்சுட்டு இருக்கோம்... இப்போ அத வெளிய சொல்லி மறுபடியும் மக்கள் மனசுல பீதிய கிளப்ப வேணாம்ன்னு விட்டுட்டோம்” என்று அவன் முடித்துத் தன வண்டியைக் கிளப்பினான். 'அப்போ ரகுவ யார் கொன்னுருப்பாங்க?' என்று யோசித்தவளுக்கு, 'பொண்ணுக்கு தீங்கு நினைக்குறவன சும்மா விடமாட்டா பொன்னி...' என்று பாட்டி சொன்னது ஞாபகம் வர, அந்தப் பெரிய வீட்டைப் பார்த்தாள். அந்த வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த பொன்னி, சகியைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையின் அர்த்தம் புரிந்து கொண்ட சகியின் இதழ்களிலும் புன்னகை பூத்தது. அதற்குள், “ஓய் என்ன வேடிக்கை பாத்துட்டு நிக்குற... ஏறு...” என்று ருத்ரனின் குரல் கேட்கவே, வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு, பொன்னியைப் பார்த்து கை அசைத்துக் கொண்டே சென்றாள் சகி, 'உயிருடன் பல பேய்கள் இங்கு சுற்றிக்கொண்டு இருக்க, இந்த தேவதைக்கு ஏன் பேய் என்று பெயர் சூட்டினர்' என்று மனதில் நினைத்தவாறே...

பெண் என்பவள் உன்னில் பாதி, அவளை அழிக்க நினைத்தால் நீ அழிந்துவிடுவாய்!!

பெண்களை நிழல் போல் என்றும் தொடர்ந்து காத்துக் கொண்டே இருப்பாள் பொன்னி..!!


_________
 
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.