நீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா? தனிச்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா? தனிச்சீர் உணவா?


அக்கு ஹீலர்
அ.உமர் பாரூக்


ஒரு உணவின் பெயரைச் சொன்னால் அது எந்த நோய்க்கு உகந்தது என்றும், எந்த நோயாளிகளெல்லாம் அதைச் சாப்பிடக் கூடாது என்றும், கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பாட்டியால் சொல்ல முடிகிறது. உடலைப் பற்றிய எந்த அடிப்படை மருத்துவ அறிவும் இல்லாத, கல்வி யறிவு பெறாத இப்படிப்பட்ட பல நபர்களை - உணவுகளைப் புரிந்து கொண்ட நபர்களாக நாம்பார்க்கிறோம். பேச்சுவாக்கில் நாம் ஒரு உடல்நலத் தொந்தரவு பற்றிச் சொன்னாலோ, அல்லது பேசிக்கொண்டிருக்கும்போது லேசாக இருமினாலோ, அதற்கு விதவிதமான உணவுகளை அவர்கள் மருந்துகளாகப் பரிந்துரைப்பதை நாம் கவனிக்க முடியும். குறிப்பிட்ட அந்த நோய்க்கும், சொல்லப்படும் உணவிற்கும் என்ன சம்பந்தம்?

தொந்தரவிற்கும், அதற்குப் பரிந்துரைக்கப்படும் உணவிற்கும் ஒரு ரகசியத் தொடர்பு உண்டு. அதை அறிந்தவர்கள் இக்காலத்தில் அரிதுதான். ஆனாலும், பழக்கத்தின் அடிப்படையில் உணவுப் பரிந்துரைகள் மட்டும் இன்னும் தொடர்கின்றன. உதாரணமாக, மலச்சிக்கல் என்றவுடன் வாழைப்பழம் பற்றிப் பேசாத நபர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் வாழைப்பழம் எந்த அடிப்படையில் மலச்சிக்கலுக்கான மருந்தாக மாறியது?இப்படி உணவிற்கும் உடல் தொந்தரவிற்கும் இருக்கும் அடிப்படைத் தொடர்பை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால், நம் முன்னோர்களின் ‘தனிச்சீர்’ உணவுமுறை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அது என்ன தனிச்சீர்? நவீன அறிவியலின் அடிப்படையில் உண்ணப்படும் உணவு முறையின் பெயர் - சமச்சீர் உணவுமுறை. ஒரு மனிதனுக்கு எந்தெந்த அளவில், என்னென்ன சத்துகள் வேண்டுமோ அவை சமமாகக் கலந்திருக்கும் உணவை தேர்வு செய்து சாப்பிடுவதுதான் சமச்சீர் உணவுமுறை. ஒரு நபருக்கு கால்சியம் ஒரு அளவிலும், புரோட்டீன் ஒரு அளவிலும், வைட்டமின்கள் ஒவ்வோர் அளவிலும் தேவையிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவை அனைத்தையும் கொண்டுள்ள உணவுகளைச் சாப்பிடுவதுதான் நவீன காலத்தின் சமச்சீர் உணவு முறை.

தனிச்சீர் உணவுமுறை இதற்கு நேரெதிரானது. ஒரு குறிப்பிட்ட உணவில் இந்த வகையான சத்துகள் இருக்கின்றன என்று நம்மால் பிரித்து அறிய முடியும். ஆனால், நாம் வெறுமனே அதைச் சாப்பிட்டாலே போதுமானதா? நம்முடைய உடல் அந்த உணவிலிருந்து குறிப்பிட்ட அந்த சத்துக்களை எடுத்துக்கொண்டு விட்டதா என்பதை எப்படி அறிய முடியும்? உதாரணமாக, இரும்புச்சத்துக் குறைபாடு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்படுகிறது. இரும்புச் சத்து கொண்ட ஒரு சிறப்பு உணவு அவருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த உணவில் சத்து இருப்பதும், அவர் உடலுக்கு அது தேவையாக இருப்பதும் உண்மைதான். ஆனால், ‘அந்த நோயாளியின் உடல் இரும்புச்சத்துள்ள அந்த உணவிலிருந்து தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டதா?’ என்று பரிசோதித்துப் பார்த்தால் மிகப்பெரிய வேறுபாடு அதில் இருக்கும்.
கண்களுக்குத் தேவையான ஒரு வைட்டமின் கேரட்டில் இருப்பதாக நம் பாடங்கள் சொல்கின்றன. ஒரு நோயாளிக்கு கண்களில் அக்குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவருக்கு கேரட் பரிந்துரைக்கப்படுகிறது. கேரட்டில் அந்நோயாளிக்குத் தேவையான அந்த வைட்டமின் இருப்பது உண்மைதான். ஆனால், தொடர்ந்து கேரட் சாப்பிட்டும் அவருடைய வைட்டமின் தேவை முழுமை பெறவில்லை என்றால், இதனை எப்படிப் புரிந்து கொள்வது?

இங்குதான் சமச்சீர் முறை உணவுக் கோட்பாடு பயனற்றுப் போகிறது. ஒவ்வொரு மனிதனும் தனித்தனியானவன். ஒவ்வொருவரின் தேவையும் தனித்தன்மையானது. பலருடைய தேவைகளைக் கூட்டி, வகுத்து உருவாக்கப்படும் பொதுவான சராசரிகளுக்கு மனித உடல் முரணானது. வெறும் கணக்குகளுக்குள் உடலின் இயக்கத்தை அடக்கிவிட முடியாது என்பது தான் தனிச்சீர் உணவுமுறையின் அடிப்படை.

ஒவ்வொரு மனிதனின் உடலும் தனக்குத் தேவையான ஆற்றலை உணவின் மூலம் கோரிப் பெறுகிறது. இப்படி ஒவ்வொரு தனிநபரும் தனக்குத் தேவையான உணவை சரியாகத் தேர்வு செய்யும் முறைதான், தனிச்சீர் உணவுமுறை. இந்த உணவு முறை சுவைகளை அடிப்படையாகக் கொண்டது. தமிழில் ‘உணவு’ என்ற சொல்லை தனியாக எங்கும் காண முடியாது. ‘அறுசுவை உணவு’ என்றே சொல்வார்கள். அந்த அளவிற்கு சுவையும், உணவும் பிரிக்க முடியாதது.

அறுசுவை என்ற சொல்லே ஆறு சுவைகள் இருக்கின்றன என்ற செய்தியைச் சொல்லி விடுகிறது. இந்த ஆறு சுவைகளும் தனித்தனியாக ஒவ்வொரு உடல் உறுப்போடு தொடர்பு கொண்டவை. ‘சுவைத் தேவையை நம் உடல் எவ்வாறு அறிவிக்கும்’ என்பதையும், ‘சுவைகளுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பதையும் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு கர்ப்பிணி பெண்ணைக் கவனித்திருக்கிறீர்களா? அவர் அடிக்கடியும், அதிகமாகவும் சாப்பிடும் சுவைகள் என்னென்ன என்று தெரியுமா? புளிப்பு, துவர்ப்பு, உப்பு - இந்த மூன்று சுவைகளும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி தேவைப்படும் சுவைகளாகும். ஏன் இந்த மூன்று சுவைகள் மட்டும் தேவைப்படுகின்றன?

நம் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. அந்த உறுப்புகளுக்கு ஆற்றல் தேவைப்படும்போதெல்லாம் குறிப்பிட்ட சுவையை அதிகம் கேட்கின்றன.

ஆறு சுவைகள் என்பவை எவை?

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்), உவர்ப்பு (உப்பு), கசப்பு

இந்த ஆறு சுவைகளும் எந்தெந்த உறுப்புகளோடு தொடர்பு கொண்டிருக்கின்றன தெரியுமா?

இனிப்பு - இரைப்பை
புளிப்பு - கல்லீரல்
துவர்ப்பு - மண்ணீரல்
கார்ப்பு - நுரையீரல்
உவர்ப்பு - சிறுநீரகம்
கசப்பு - இதயம்

இந்த சுவைகளின் பட்டியலை வைத்துக்கொண்டு, மறுபடியும் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிடித்த சுவைகளைப் பார்ப்போம். கர்ப்பப்பையில் சிசு வளர்கிறபோது நம்முடைய மரபுவழி அறிவியலின்படி மூன்று உறுப்புகள் சிசு பராமரிப்பில் பங்கேற்கின்றன. அவை சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல்.

சிறுநீரகத்தின் சுவை, உப்பு. கல்லீரலின் சுவை, புளிப்பு. மண்ணீரலின் சுவை, துவர்ப்பு. இம்மூன்று உறுப்புகளும் தங்களுக்கு சக்தித் தேவை ஏற்படுகிறபோது இச்சுவைகளைக் கேட்டுப் பெறுகின்றன. அதனால்தான் கர்ப்பிணிகளுக்கு மிகப் பிடித்த சுவைகளாக இவை இருக்கின்றன. இதேபோல நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் பல சுவைகள் தேவைப்படுகின்றன. நம்முடைய ருசித் தேவையை நாம் கவனிக்கத் தவறுகிறபோது, குறிப்பிட்ட சுவை தேவைப்படுகிற உறுப்பு பலவீனம் அடைகிறது. இன்னொருபுறம், கிடைக்கிற சுவையை அதிகமாகச் சாப்பிடுகிறபோது, தேவைக்கு மீறி கிடைக்கிற சுவையால் குறிப்பிட்ட உள்ளுறுப்பு பாதிப்படைகிறது. ‘மிகினும் குறையினும் நோய்’ அல்லவா?

நம்முடைய பாரம்பரிய சுவை மருத்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது தான். நம்முடைய உணவுப் பழக்கத்தில் இருக்கும் ரகசிய ஃபார்முலாவின் அடிப்படையும் இதுதான்.
அடுத்ததாக ‘இந்த சுவைகளை வைத்துக்கொண்டு முழு உடலையும் சமப்படுத்துவது எப்படி?’
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: நீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா? தனிச

உடலின் உண்மையான ராஜா யார்?


அக்கு ஹீலர்
அ.உமர் பாரூக்


நம் உணவின் ஒவ்வொரு சுவையும் நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உள்ளுறுப்போடு தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பார்த்தோம். சுவைகளையும், உள்ளுறுப்புகளையும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம்.

இனிப்பு - இரைப்பை
புளிப்பு - கல்லீரல்
துவர்ப்பு - மண்ணீரல்
கார்ப்பு - நுரையீரல்
உவர்ப்பு - சிறுநீரகம்
கசப்பு - இதயம்

நம்முடைய பாரம்பரிய மருத்துவங்கள் இந்த ஐந்து உறுப்புகளுக்கும் மிக முக்கிய இடத்தைக் கொடுக்கின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவங்கள் இவற்றை ‘ராஜ உறுப்புகள்’ என்கின்றன. அக்குபங்சர் என்ற சீன மருத்துவம் ‘இன் உறுப்புகள்’ என இவற்றை அழைக்கிறது.

நம் உடலின் ராஜாக்கள் யார் தெரியுமா? இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல். மரபுவழி மருத்துவ அறிவியலின் படி, இந்த ராஜ உறுப்புகள் சரியாக இருந்தால் நம் உடலின் பிற உறுப்புகள் சரியாக இருக்கும். அதாவது, இந்த ஐவர்தான் நம் முழு உடலையும் பாதுகாப்பவர்கள். நம் உடலில் எந்த நோய் ஏற்பட்டாலும் இவர்களுக்குத் தெரியாமல் ஏற்படாது. சொல்லப் போனால், எந்த நோய் ஏற்பட்டாலும் அதற்குக் காரணமாக இருப்பது இவர்களாகத்தான் இருக்கும். ‘‘அதெல்லாம் சரி... முக்கியமான உறுப்புகள் என்று சொல்லி ஒரு பட்டியலை நீட்டுகிறீர்கள். அதில் ‘தலைமைச் செயலகம்’ என்று அழைக்கப்படும் மூளையின் பெயரைக் காணோமே’’ என்று கேள்வி எழ வேண்டுமே!

ஆமாம். நம் மரபுவழி மருத்துவங்கள் மூளையைப் புறக்கணிக்கின்றன. ‘அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான உறுப்பு இல்லை’ என்றே கூறுகின்றன. இதென்ன பெரிய சிக்கலாக இருக்கிறதே? நம் பள்ளிப் பாடங்களிலிருந்து இப்போது வரை ‘நம் உடலை இயக்கிக் கொண்டிருப்பது மூளை’ என்றுதானே நம்பிக் கொண்டிருக்கிறோம். திடீரென்று நம் மருத்துவங்கள் மூளையை மதிப்பதில்லை என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நவீன மருத்துவத்தில்கூட இது முடிவற்ற சர்ச்சையாகத் தொடர்கிறது. ‘இதயம் முக்கியமா... மூளை முக்கியமா...’ என்ற கேள்வியோடு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் நடத்தும் விவாதங்களுக்கு நம் ஊர் பட்டிமன்றங்கள் போல தீர்ப்புகள் அவ்வப்போது கிடைக்கின்றன.

நம் உடலின் எல்லா உறுப்புகளோடும் தொடர்பில் இருப்பதும், அவற்றை இணைத்துப் பணியாற்றுவதும் மூளைதான். நமது உடலை ஒரு போர்ப் படையாகக் கருதிக்கொண்டால், வியூகங்கள் அமைத்து இந்தப் படையை இயக்கும் தளபதி மூளைதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் நாம் நினைப்பது மாதிரி மூளை முதலாளி இல்லை. ஒரு படைத்தளபதி என்றால், அவருக்குக் கட்டளையிடும் மன்னரோ, அமைச்சரோ இருப்பார்கள் இல்லையா? அப்படித்தான் மூளைக்கும் மேலே சில முதலாளிகள் இருக்கிறார்கள். யார் அவர்கள்? நமக்கு ஏற்கனவே அறிமுகமான ராஜாக்கள்தான். மேலே சொன்ன ஐந்து ராஜ உறுப்புகளும்தான் மூளையை இயக்குகின்றன. மூளை இயங்குவதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கின்றன.

இதனைப் புரிந்து கொள்வதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்... ஒரு மனிதர் நாடு முழுவதும் நடைபெறும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், தன் அன்றாடக் கடமைகளில் ஒன்றான மது அருந்துவதைத் தொடர்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மனிதர் மது அருந்தியவுடன் அவர் உடலின் சமநிலை தவறுகிறது - தள்ளாடுகிறார். பேச்சு குழறுகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன?

நாம் சொல்கிறோம், ‘அவருடைய சிறுமூளை மது போதையால் பாதிக்கப்பட்டு, இந்த நிலை ஏற்படுகிறது’ என்று. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் குடித்த மது நேரடியாக சிறுமூளைக்கா சென்றது? இல்லை. அது இரைப்பையை அடைந்து, அங்கிருந்து மதுவின் பாதிப்புகள் கல்லீரலைச் சென்றடைகின்றன. ஏன் கல்லீரலுக்குச் செல்கிறது தெரியுமா? நம் உடலில் எந்த ரசாயனம் சென்றாலும் அது நேராக கல்லீரலுக்குத்தான் செல்லும். உடலுக்குள் நுழையும் ரசாயனம் எதுவானாலும், அதை அலசிப் பார்த்து, அதன் குணங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியை எடுப்பது கல்லீரல்தான். விஷமே வந்தாலும், அதன் நச்சுக்களை அகற்ற கல்லீரல்தான் போராடுகிறது. முடியாதபட்சத்தில் முதலில் பாதிக்கப்படுவதும் கல்லீரல்தான். ஆங்கில மருத்துவத்தின் ரசாயன மருந்துகளால் ஏற்படும் பின் விளைவுகளாகக் குறிப்பிடப்படும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, கல்லீரல் பாதிப்பு. நம் உணவுகளில் கலக்கப்படுகிற ரசாயனங்கள் முதல், நாம் விரும்பிச் சாப்பிடுகிற மாத்திரைகள் வரை கல்லீரலைத்தான் பதம் பார்க்கின்றன.

அதே போல, ஒரு மனிதர் அருந்துகிற மதுவும் கல்லீரலைப் பாதிக்கிறது. அந்த பாதிப்பின் எதிரொலிதான் சிறுமூளை போதையால் பாதிக்கப்பட்டு தள்ளாட்டம், பேச்சு குழறுவது எல்லாமே. கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் அது மூளையில் எதிரொலிக்கிறது.
இன்னொரு உதாரணம்... நம்முடைய எல்லா உறுப்புகளுமே மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன என்று சொல்கிறோம். ஒருவேளை மூளை பாதிக்கப்பட்டால் எல்லா உறுப்புகளும் என்ன ஆகும்? ‘மூளைதான் தலைமைச் செயலகம். அது இயங்கினால்தான் எல்லா உறுப்புகளும் இயங்கும்’ என்று சொல்கிற நாம், மூளைச் சாவு என்ற கோமாவில் இருக்கும் நபரைப் பார்த்தால் உண்மை விளங்கும். மூளையின் உத்தரவின்றி இதயம் துடிக்காது, ரத்த ஓட்டம் நடக்காது, சிறுநீரகங்கள் வேலை செய்யாது... இப்படியெல்லாம் நம்பிக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

கோமாவில் இருக்கும் நபரின் எல்லா உள்ளுறுப்புகளும் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும். மூளை செத்து விட்டதே என்று எந்த உறுப்பும் கட்டளைக்காகக் காத்திருக்கவில்லை. மாறாக, எல்லா உறுப்புகளும் தங்கள் இயல்பான வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் சரியாகச் சொன்னால், மூளை வேலை செய்யாத நேரத்தில் எல்லா உறுப்புகளும் கூடுதலாக வேலை செய்கின்றன. இப்போது சொல்லுங்கள்... நம் உடலின் உண்மையான ராஜா யார்? மூளையா?

"நம்முடைய எல்லா உறுப்புகளுமே மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன என்று சொல்கிறோம். ஒருவேளை மூளை பாதிக்கப்பட்டால் எல்லா உறுப்புகளும் என்ன ஆகும்?"

"மரபுவழி மருத்துவ அறிவியலின்படி, இந்த ராஜ உறுப்புகள் சரியாக இருந்தால் நம் உடலின் பிற உறுப்புகள் சரியாக இருக்கும்!"

(தொடர்ந்து பேசுவோம்...)
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: நீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா? தனிச

அமிலமா காரமா? நீங்கள் சாப்பிடும் உணவு

நம் உடலில் உள்ள ராஜ உறுப்புகள் ஐந்திற்கும் தனித்தனி சுவைகள் இருக்கின்றன என்பதைப் பார்த்தோம். இந்த ஐந்து ராஜ உறுப்புகளோடு இரைப்பையையும் சேர்த்து ஆறு உறுப்புகளை உணவில் இருக்கும் அறுசுவைகள் தூண்டுகின்றன. இந்த ஆறு உறுப்புகளும் இயல்பாக இயங்கினால் பிற உறுப்புகளில் எவ்வித நோய்களும் ஏற்படாது என்பது மரபுவழி மருத்துவங்களின் கோட்பாடு.ஆறு உறுப்புகள் மற்றும் அறுசுவைகள் - இவற்றின் சமன்பாடுதான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளும், உணவு சார்ந்த மருத்துவமும் இதை உணர்ந்ததாக இருந்தன. இந்த சமன்பாடு புரியாமல் சமச்சீர் முறை என்ற அடிப்படையில் சத்துகளுக்காக நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது உடல்நலத்தைத் தராது.


இந்த சமன்பாட்டைக் கொண்டு எவ்வாறு உணவுகளைத் தேர்வு செய்வது? ராஜ உறுப்புகளோடு சேர்த்து நம் உள்ளுறுப்புகள் அனைத்தும் முறையாக இயங்க வேண்டும் என்றால் அறுசுவையையும் தினமும் சாப்பிடத்தான் வேண்டுமா? மரபுவழி அறிவியலின் தனிச்சீர் உணவு முறை, நம் உணவுக் கோட்பாட்டைத் தெளிவாக வரையறுத்திருக்கிறது. நாம் பார்த்த ஆறு சுவைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது நம் உணவுக் கோட்பாடு.ஒரு பிரிவு, அமிலச் சுவைகள்; மற்றொரு பிரிவு, காரச் சுவைகள்.

இதில் அமிலம் என்பதைப் புரிந்துகொள்வதில் குழப்பம் ஒன்றுமில்லை. ஆனால், காரம் என்ற சொல்லில் ஏற்கனவே ஒரு சுவையின் பெயரும் இருப்பதால் இச்சொல்லை தெளிவுபடுத்திக் கொள்வோம். இங்கு நாம் அமிலம், காரம் என்று குறிப்பிடுவது சுவைகளை அல்ல... தன்மைகளை. ஆங்கிலத்தில் ஆசிட், அல்கலைன் என்று அழைக்கப்படும் அமில, காரத் தன்மைகளைத்தான் நாம் தமிழில் அமிலம், காரம் என்று பிரிக்கிறோம்.

அதே போல, ‘ஒரு உணவுப்பொருளில் அமிலம் இருக்கிறதா? அல்லது, காரம் இருக்கிறதா?’ என்று நவீன பரிசோதனைகளில் நாம் அறிய முடியும். ‘லிட்மஸ் பேப்பர் பரிசோதனை’ என்று அழைக்கப்படும் டெஸ்ட் பற்றி நாம் பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம். நம் உணவுப்பொரு ளின் ஹைட்ரஜன் அளவைக் கொண்டு (பி.ஹெச்) அவ்வுணவில் அமிலம், காரம் இரண்டில் எது மிகுந்திருக்கிறது என்று அறிய முடியும். ஆனால், தனிச்சீர் உணவு முறையில் நாம் சொல்லும் அமிலம், காரத் தன்மைகள் என்பவை உணவின் தன்மை அல்ல. மாறாக, உணவை நாம் உட்கொண்டவுடன் நம் உடலில் ஏற்படும் தன்மை.

உதாரணமாக, தண்ணீரை நவீன உணவியல் ‘அமிலமும் காரமும் சமநிலையில் இருக்கும் பொருள்’ (நியூட்ரல்) எனக் குறிக்கிறது. ஆனால், மரபுவழி உணவியல் ‘காரத் தன்மையை ஏற்படுத்தும் பொருள்’ எனக் குறிக்கிறது. நவீன உணவியலில் குறிப்பிடப்படுவது பொருளில் இருக்கும் தன்மை. தனிச்சீர் உணவு முறையில் குறிப்பிடப்படுவது உணவின் விளைவால் உடலில் ஏற்படும் தன்மை.

அமிலம், காரம் - இவ்விரண்டு தன்மைகள் எப்படி உணவில் உள்ளனவோ, அதே போல நம் உடலிலும் உள்ளன. நம் உடலில் ஏற்படும் தொந்தரவுகளை மரபுவழி மருத்துவங்கள் அமில நோய்கள், கார நோய்கள் என்று இரு வகையாகப் பிரிக்கின்றன. திடீரென்று தோன்றி மறையும்- சில நாட்களே நீடிக்கும் நோய்களை கார நோய்கள் என்றும், நீண்ட காலமாக இருக்கும் நோய்களை அமில நோய்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

நாம் ஏற்கனவே நம் உடலில் தேங்கும் கழிவுகளைப் பற்றி வாசித்திருக்கிறோம். நம் உடலில் உருவாகும் கழிவுகள் முறையாக வெளியேறாமல் தேங்குவது புதிய புதிய தொந்தரவுகளை ஏற்படுத்தும். இக்கழிவுகள் வழியாக அமிலம், காரத்தன்மைகளைப் புரிந்து கொள்வோம். உடலில் உருவாகி, தற்காலிகமாகத் தேங்கி, வெளியேற்றப்படும் கழிவுகள்... காரத்தன்மையால் ஏற்படும் கழிவுகளாகும். அதே போல, நீண்ட காலமாகத் தேங்கியுள்ள கழிவுகள் அமிலத்தன்மையால் ஏற்படும் கழிவுகளாகும்.இந்த அடிப்படையில்தான் நம்முடைய பாரம்பரிய உணவு முறை புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. நாம் உண்ணும் உணவுகளும், உடலில் தோன்றும் நோய்களும் அமில, காரத்தன்மை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன.

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு - இவை மூன்றும் அமிலச் சுவைகள். காரம், உப்பு, கசப்பு - இவை மூன்றும் காரத்தன்மையுள்ள சுவைகள்.

உதாரணமாக, நாம் காரத்தன்மையுள்ள சுவைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் தற்காலிகக் கழிவுகள் தோன்றும். இவற்றை உடல் உடனே வெளியேற்றி விடும். இப்படி உடலால் உடனடியாக வெளியேற்றப்படும் கழிவுகளால் ஏற்படும் தொந்தரவுகள் காரத் தன்மை நோய்கள் என்று அழைக்கபடுகின்றன. காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற உடனடி தொந்தரவுகள் இவ்வகையைச் சார்ந்தவை.

அதே போல, அமிலச் சுவைகளை அதிகமாகச் சாப்பிடும்போது உருவாகும் கழிவுகள் உடலில் தேங்கி விடுகின்றன. இவற்றை வெளியேற்ற உடல் முயற்சி செய்யும். ஆனாலும் நாம் வாய்ப்பு தராமல் தொடர்ந்து அளவுகளை மீறிக் கொண்டிருப்போமானால் நீண்ட காலத் தொந்தரவுகள் ஏற்படும். இவை அமிலத்தன்மை நோய்கள் என்று புரிந்து கொள்ளப்படுகின்றன.காரத்தன்மை அதிகரிப்பால் தொந்தரவுகள் ஏற்படும்போது அமிலச் சுவைகளும், அமிலத்தன்மை அதிகரிப்பால் தொந்தரவுகள் ஏற்படும்போது காரச்சுவைகளும் உணவில் பரிந்துரைக்கப்பட்டன. இந்த அடிப்படையில்தான் உணவு மருத்துவம் பயன்படுத்தப்பட்டது.

நம்முடைய அன்றாட உணவுகளிலும் இந்த இரு தன்மைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு எந்த வகையான தொந்தரவுகள் ஏற்படும் என்பதையும் புரிந்து கொள்ளலாம். ஒரு நாள் உணவை நாம் இப்படிப் பிரித்துப் பார்க்கலாம்...காலையில் எழுந்தவுடன் நாம் குடிக்கும் பால் உணவுகள் (டீ, காபி) அமிலத்தன்மை உடையவை. காலை உணவாக நாம் பயன்படுத்தும் இட்லி, தோசை போன்ற மாவுப் பொருள் உணவுகள் அமிலத்தன்மை உடையவை. அப்புறம் பதினோரு மணிக்கு மறுபடியும் அமிலத்தன்மையுள்ள டீ.மதிய உணவிலும் அமிலத்தன்மையே மிகுந்து காணப்படுகிறது.

அந்தக் கால உணவில் இரண்டு தன்மைகளும் சமமாக இருந்தன. உதாரணமாக, சாதம் - அமிலம், சாம்பார் - அமிலம், பொரியல் - காரம், புளிக்குழம்பு - அமிலம், ரசம் - காரம், அப்பளம் - காரம். இப்படி ஒவ்வொரு உணவும் இன்னொரு உணவோடு கூட்டு சேர்ந்து அமில, காரத்தன்மைகளை சமப்படுத்தும் விதத்தில் நம் உணவு முறை அமைந்திருந்தது. ஆனால், இப்போது முழுமையான அமில உணவுகளையே நாம் எடுத்துக்கொள்கிறோம்.

சிறு தானிய வகைகள் பெரும்பாலும் காரத்தன்மை உடையவை. நம்முடைய இன்றைய உணவில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை மிகுந்திருக்கிறது. நம் உடலில் தற்காலிக நோய்களை விட, அமிலத்தன்மை மிகுதியால் ஏற்படும் நீண்ட கால நோய்களே இப்போது அதிகமாக இருக்கின்றன.ஒரு உணவைச் சமைப்பதற்கு முன்பாக ‘இது அமிலமா? காரமா?’ என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். இரு தன்மைகளையும் சமப்படுத்தும் முறையையே சமையல் என்று அறிவியல் ஆக்கினார்கள். தங்கள் உடலிற்குத் தேவையான தன்மையுள்ள சுவையை தேர்வு செய்து சாப்பிட்டார்கள்.

இவை அனைத்திலுமே அமில, கார சமநிலைகள் இருந்தன.இப்போது நமக்கு எந்த உணவு, எந்த தன்மையுள்ளது என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது. உணவுகளைப் பகுத்து சமப்படுத்தித் தரும் சமையல் முறையும் காலாவதியாகி விட்டது. உணவுத் தயாரிப்பிலேயே ரசாயன நஞ்சுகள் மிகுந்து அதன் உயிர்த்தன்மையை சிதைக்கின்றன. இந்த நவீன சூழலில் நம்முடைய உணவுமுறையை எப்படி சீர்படுத்துவது? அதிகரித்திருக்கும் அமிலத்தன்மையை சீர் செய்து கொள்ள நாம் என்னதான் செய்வது? வாருங்கள்... நிறைவுப் பகுதியில் விவாதிப்போம்.

ஒரு உணவைச் சமைப்பதற்கு முன்பாக ‘இது அமிலமா? காரமா?’ என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். இரு தன்மைகளையும் சமப்படுத்தும் முறையையே சமையல் என்று அறிவியல் ஆக்கினார்கள்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.