நீங்கள் வாதமா... பித்தமா... கபமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நீங்கள் வாதமா... பித்தமா... கபமா?

நாம் நாமாக இருப்பதற்குக் காரணம்... நாம் சாப்பிடும் உணவு. சாப்பாட்டு விஷயத்தில் கவனம் செலுத்தினாலே நோய் வராமல் தடுக்க முடியும் என்கிறது ஆயுர்வேதம். ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆயுர்வேதம் காட்டும் வழிகள் குறித்து மதுரையைச் சேர்ந்த ஏவிஎன் ஆரோக்கிய ஆயுர்வேத மையத்தின் இயக்குனர் டாக்டர் ரமேஷ் ஆர். வாரியாரிடம் பேசினோம். விதவிதமான உணவு வகைகளைச் செய்துகாட்டி, அலங்கரித்து நம் முன் வைத்த டாக்டர் ரமேஷ், ஆயுர்வேதம் காட்டும் வழிகள் பற்றி விரிவாகப் பேசினார்.

'நல்ல உணவு, கெட்ட உணவு என்று எதுவும் இல்லை. நெய் நல்லதா? கெட்டதா? என்று கேட்டால் ஒருவருக்கு அது நன்மை பயப்பதாக இருக்கும். உடல் பருமன், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ள வேறொருவருக்கு அதுவே விஷமாகத் தெரியும். ஒருவரது உடலின் தன்மை, அவர் சாப்பிடும் உணவுப் பொருட்களின் தன்மை, தயாரிப்பு முறை, எதனுடன் சேர்த்துத் தயாரிக்கப்பட்டது அல்லது சாப்பிடப்படுகிறது, சாப்பாட்டின் அளவு, சாப்பிடும் நேரம், இடம் என்பனவற்றைப் பார்த்தால்தான் எது யாருக்குச் சிறந்த உணவு என்பதைத் தீர்மானிக்க முடியும்.'' என்ற அவர் விரிவாகப் பேசினார்.

உடல் தன்மை:
உடலை இயங்க வைப்பது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும்தான். இதில் எது அதிகமாக உள்ளது என்பதைப் பொருத்து உடலமைப்பைப் பித்த உடம்பு, வாத உடம்பு, கப உடம்பு என்று மூன்றாகப் பகுத்துப் பார்க்கிறோம். சிலருக்குப் பித்தம்- வாதம்- கபம் ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்கும். இப்படி உடல் அமைப்பைப் பிரிப்பதை 'பிரகிருதி’ என்று கூறுவோம். அந்தந்த உடல்வாகுக்கு ஏற்ப குணாதிசயத்தில் இருந்து அனைத்துமே வேறுபடும்.வாத உடலமைப்புக் கொண்டவர்கள் எப்போதும் பரபரப்புடன் வேலை செய்பவர்கள். ஆனால் முடிவெடுக்கும் விஷயத்தில் திணறுவார்கள். உடல் எப்போதும் குளிர்ச்சியாகச் சில்லிட்டு இருக்கும். எனவே வெப்பத்தை அளிக்கும் உணவு வகைகள் இவர்களுக்கு ஏற்றவையாக இருக்கும்.

கப உடலமைப்புக் கொண்டவர்கள் அமைதியானவர்கள், பொறுமையாகச் செயல்படக் கூடியவர்கள். உடலில் ஆற்றல் அதிகமாவே இருக்கும். ஆனால் அதைச் செலவிடுவதில்தான் பிரச்னை. சாப்பிட்ட உணவு அப்படியே உடலில் சேர்ந்துவிடும். இவர்கள் கொஞ்சம் பருமனாகவே இருப்பார்கள்.

பித்த உடலமைப்புக் கொண்டவர்கள் பரபரப்புடன் செயலாற்றுவார்கள், முடிவெடுக்கும் திறனும் உண்டு. ஆனால் இவர்கள் பொதுவாக நடுத்தர உடல்வாகு கொண்டவர்கள். முயற்சித்தால் ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இவர்களால் முடியும்.

இனிப்பு, உப்பு, புளிப்பு வாதத்திற்கு நல்லது. கப உடல்வாகு கொண்டவர்கள் ஏற்கெனவே கொஞ்சம் மந்தமாக இருப்பார்கள். மந்தத்தில் இருந்து வெளிவரக் கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியன நல்லது. பித்த உடல்வாகு கொண்டவர்களுக்குக் கசப்பு, துவர்ப்பு, இனிப்பு நல்லது. நெல்லிக்காய் புளிப்பு, ஆனால் அது பித்தத்தைக் கூட்டாது. தேன் கபத்தைக் கூட்டாது. இதுபோல ஒவ்வொரு சுவையிலும் சில விதி விலக்குகளும் உள்ளன. எனவே, ஓர் ஆயுர்வேத மருத்துவரை அணுகித் தங்களது உடல் அமைப்பைத் தெரிந்துகொண்டால் அதன்படி உணவை எடுத்துக் கொள்ளலாம்.

உணவுப் பொருட்களின் தன்மை
விரைவில் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் உணவுகள், மிகக் குறைந்த வேகத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் உணவுகள் என உணவுகளை இரண்டாகப் பிரிக்கிறோம். உணவின் கலோரி அளவுகள் என இன்னொரு வகைப்பாட்டைச் செய்கிறோம். அரிசி, சர்க்கரை போன்ற உணவுகள் மிக விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். அதுபோல, உஷ்ணமான உணவு, குளிர்ச்சியான உணவு என்று பலவிதமாக உணவுகளைப் பிரிக்கிறோம்.

தயாரிப்பு முறை
உணவுப் பொருட்கள் அதன் தயாரிப்பு முறைகளின்போது தன்னுடைய பழைய தன்மையை இழந்து புதிய தன்மையை அடையும். இதற்கு நல்ல உதாரணம் பால். புளிக்க வைத்துத் தயிராக்கும்போது அது பித்தத்தைக் கூட்டும். அதுவே மோராக மாறினால் வாதம், கபத்தைக் கட்டுப்படுத்தும். தேன் உடலுக்கு நல்லது. அதையே சூடு செய்யும்போதும், வெந்நீரில் சேர்த்து குடிக்கும்போது நஞ்சாக மாறிவிடும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. எனவே, தேன், தயிர் போன்ற சில குறிப்பிட்ட உணவுகளைச் சூடாக்கவே கூடாது.


உடன் கலப்பவை

இரண்டு வெவ்வேறு தன்மை கொண்ட உணவுப் பொருட்களைச் சேர்த்துச் சமைக்கும் போது, அல்லது சாப்பிடும் போது பலன்கள் மாறும்.

அளவு
உணவு வகைகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதும்கூட உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். விரைவில் செரிமானம் ஆகக் கூடிய உணவு என்றால் இரைப்பையின் கொள்ளளவில் பாதிக்குத் திட உணவு, கால் அளவுக்குத் திரவ உணவு எடுத்துக்கொண்டு கால் அளவைக் காலியாக விட வேண்டும். ஜீரணிக்க கஷ்டமான உணவு பாதி அளவுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும்.

நேரம்
ஒருவரின் வயது, பருவம், பகல், இரவு ஆகியவற்றைப் பொறுத்து உடலில் உள்ள பித்தம், கபம், வாதம் ஆகியவற்றின் அளவு மாறும். அதற்கு ஏற்ற வகையில் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. குழந்தை பிறந்தது முதல் வாலிப வயது வரும் வரையில் கபமும், நடுத்தர வயது காலத்தில் பித்தமும், வயதான நிலையில் வாதமும் அதிகரிக்கும். இதனால்தான் குழந்தைகளுக்குச் சளி தொடர்பான பிரச்னைகள் அதிகமாகவும், நடுத்தர வயதினருக்குப் பித்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகமாகவும் ஏற்படுகின்றன. உணவு வகைகளைப் பொருத்தவரையில் சில உணவுகளைக் குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக இரவில் தயிர் சாப்பிடுவது நல்லது அல்ல.

இடம்
நாம் வசிக்கும் இடத்தில் விளையும் காய்கறி- பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. பாரம்பரிய உணவுக்கு ஏற்றபடி நம்முடைய உடல்வாகு ஒத்துழைப்பு அளிக்கும். இதனால்தான் இட்லி சாம்பார் சாப்பிடும் வெளிநாட்டினருக்கும், வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிடும் நமக்கும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. வெளிநாட்டில் விளையும் காய்கறி பழ உணவு வகைளைத் தவிர்த்து, நம்முடைய ஊரில் அந்த அந்தப் பருவத்தில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதே நல்லது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.