நெருஞ்சி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நெருஞ்சி​
கு.சிவராமன்
சித்த மருத்துவர்
வரப்பு ஓரத்தில் வளர்ந்து, முதிர்ந்து, தலைசாய்ந்து நிற்கும் நெல் கதிரைப் பார்த்தபடி, வெறுங்கால்களுடன் நடக்கும் வாய்ப்பு, நகர்ப்புறத்துக் குழந்தைகளுக்கு இல்லை. அப்படி வெற்றுக்கால்களில் நடக்கையில், ‘சுருக்’ எனக் குத்தி ரணப்படுத்தும் நெருஞ்சி முள்தான் இந்த வார நாட்டு மருந்துக் கடை நாயகன்.

மூலிகை என்றதும் நம்மில் பலர், மூன்று கடல், மூன்று மலை தாண்டிப் போனால், அங்கு உள்ள ஜடாமுடிச் சித்தர் காட்டும் ஏதோ ஒரு செடி எனக் கற்பனை செய்கிறோம். உண்மையில் வரப்பு ஓரங்களிலும், வேலி ஓரப் புதர்களிலும் மிகச் சாதாரணமாய்த் தென்படும் நோய் தீர்க்கும் மூலிகைகளுள் ஒன்று நெருஞ்சி.

‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்’ எனப் பெண்ணின் பாத மென்மைக்கு அலாதியாய் ஓர் உவமையைச் சொன்ன வள்ளுவன் காலம் தொட்டு நம் தமிழர் வாழ்வில் இடம் பெற்ற மருத்துவ மூலிகை நெருஞ்சி. “மேகவெட்டை, நீர்ச்சுருக்கு வீறுதிரி தோடப்புண், வேகாசுரம் தாகம் வெப்பம் விட்டொழியும்” என அகத்தியர் குணவாகடத்தில் அடுக்கடுக்காய் பல நோய்களை அகற்றும் என அறுதியிட்டுச் சொன்ன நெருஞ்சி கோடை காலத்து ஸ்பெஷலிஸ்ட்.

சாதாரணமாய்க் கோடையில் வரும் நீர்ச்சுருக்குக்கு, நெருஞ்சி முள்ளை ஒன்றிரண்டாய் இடித்து, தேநீர் வைப்பது போல் கஷாயமிட்டு, காலை மாலை என ஐந்து நாட்கள் குடித்துவந்தால் நீர்ச்சுருக்கு குணமாகும். சிறுநீர்ப் பாதைத் தொற்று என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் அவஸ்தை தரும் பிரச்னை.

ஆன்டிபயாடிக் சிகிச்சை எடுத்தால், இரண்டு வாரங்கள் அமைதியாய் இருக்கும் இந்தக் கிருமிகள், மீண்டும் அவதாரம் எடுத்து ஆட்டிப்படைக்கும். சில நேரத்தில் பிறப்புறுப்பில் வரும் அரிப்பு பாக்டீரியாவாலா, பூஞ்சையாலா எனக் குழப்பத்தில் இருக்கும் நோயாளிகளும் உண்டு. அவர்களுக்கு எல்லாம் நெருஞ்சி மூலிகை ஒரு வரப்பிரசாதம்.

நெருஞ்சியுடன் கொத்துமல்லி விதை (தனியா) சம அளவு சேர்த்து, ஒன்றிரண்டாக உடைத்துக் கஷாயமிட்டு, தினம் இரு வேளை 60 மி.லி தந்தால் ஆண்களுக்கு வரும் புராஸ்டேட் கோள வீக்கத்துக்கும் அதனைத் தொடரும் கிருமித்தொற்றுக்கும் பயனளிக்கும்.

மேகச்சூட்டினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு, நெருஞ்சி முள் மற்றும் அதன் வேரைப் பச்சரிசியுடன் சேர்த்து, வேகவைத்து வடித்து, கஞ்சியாகக் கொடுக்கலாம். வெள்ளைப்படுதலுடன், சூதகபாதையில் (Salphynx) ஏற்படும் அழற்சிக்கும், நெருஞ்சி கசாயம் பயனளிக்கும்.

சிறுநீரகக் கற்களுக்கு நெருஞ்சி முள் மிகச் சிறந்த மருந்து. நெருஞ்சி, நீர்முள்ளிச் செடி, மாவிலங்கப்பட்டை, சிறுகண்பீளைச் செடி இந்த நான்கையும் சமபங்கு எடுத்து 400 மி.லி நீர் ஊற்றி, 60 மி.லியாகக் குறுக்கிக் காய்ச்சி வடித்து, காலை மாலை என இருவேளை 45 நாட்கள் கொடுத்துவந்தால், 5-10 மி.மீ உள்ள கற்கள் உடைந்து நீங்கும்.

நீண்ட நேர பேருந்துப் பயணத்துக்குப் பிறகு ஏற்படும் கால் வீக்கம் சிலருக்கு வாடிக்கையாக வரும் தொல்லை. இந்த வீக்கத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பின் தொடக்க நிலைகூடக் காரணமாக இருக்கலாம். அந்த சமயத்தில், பிற மருந்துகளுடன், நெருஞ்சி உதவிடும். சிறுநீரைப் பெருக்கி, வீக்கத்தைப் போக்கிடும் மருத்துவ குணமும் நெருஞ்சிக்கு உண்டு.

நவீன வேளாண்மையில், ரசாயன களைக் கொல்லிகளால் விரட்டி, வதைத்து எறியப்படும் ஏராளமான மூலிகையில் நெருஞ்சி மிக முக்கியமானது. அதுவும் மானாவாரி, தேரி நிலமான தூத்துக்குடி மாவட்டத்து நெருஞ்சிமருத்துவச் சத்துக்களைக் கூடுதலாய்க் கொண்டது என்பது, தென் தமிழகத்து மக்களுக்கு இனிக்கும் செய்தி.

-
[HR][/HR]
வம்ச விருத்திக்கு நெருஞ்சி!

ஸ்டாஃபிலோகாக்கஸ் ஏரெஸ் (Staphylococcus aureus) பாசிலஸ் சப்டீலிஸ் (Bacillus subtilis), இ-கோலி (E coli), டிப்தீரியா என அத்தனை வகை பாக்டீரியாவையும் கேன்டிடா அல்பிகன்ஸ் (Candida albicans) எனும் பூஞ்சையையும் தனி ஆளாய் நின்று எதிர்க்கும் ஆற்றல் நெருஞ்சிக்கு உண்டு என சமீபத்திய ஆய்வுகள் சான்று அளித்துள்ளன.

நெருஞ்சியின் மிக முக்கியப் பயன், ஆண், பெண் இருபாலருக்கும், ஹார்மோன்கள் குறைவால் ஏற்படும் குழந்தைப்பேறின்மையைச் சரிசெய்வது. டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனை நெருஞ்சி உயர்த்தும் என்பதும், ஆண் விதைப்பையில் உள்ள விந்துவின் தாய் செல்களான செர்டோலி செல்களை ஊக்குவித்து, விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதையும் நவீன அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.