நோ டென்ஷன் ப்ளீஸ் - No Tension Please!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#1
நோ டென்ஷன் ப்ளீஸ்!​

 


டென்ஷன். இந்த வார்த்தையை உச்சரிக்காமல் ஒரு நாளாவது இருந்திருக்கிறீர்களா என்று யோசித்துப்பாருங்கள். 'மச்சான், பயங்கர டென்ஷனா இருக்குடா’, 'ஏங்க... எப்பப் பார்த்தாலும் டென்ஷனாவே இருக்கீங்க?’ போன்ற பேச்சுகளை இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகக் கேட்க முடிகிறது. காலை எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும்வரை ஏதோ நம்முடைய உடல் உறுப்புகளில் ஒன்றுபோல டென்ஷனையும் கூடவே சுமந்து திரிகிறோம். மாறிவிட்ட வாழ்க்கைமுறையும் வேலைச் சூழலும்தான் இதற்கு முக்கியமான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதுபற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரியும் உளவியல் நிபுணருமான ஆனந்த் பிரதாப் நம்மிடம் பகிர்ந்துகொண்டதில் இருந்து...

'காலையில் அலுவலகத்துக்குக் கிளம்புகிறார் ஒருவர். 9 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஆனால், அவரோ 8 மணிக்குத்தான் படுக்கையை விட்டே எழுந்திருக்கிறார். நேரத்தைப் பார்த்தபடியே அவசர அவசரமாக பாத்ரூமுக்கு ஓடினால், உள்ளே அவர் மகன் குளித்துக்கொண்டிருக்கிறான். அவனை வசைபாடி சீக்கிரம் வெளியே வருமாறு கத்துகிறார். ஒருவழியாகக் கிளம்பி வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது 'மகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிடுங்கள்’ என்று வந்து நிற்கிறார் மனைவி. வேறு வழி இல்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு மகளை ஸ்கூலில் விட்டுவிட்டு அலுவலகம் செல்கிறார். கொஞ்ச நேரத்தில் மேனேஜரிடம் இருந்து முக்கியமான ஆவணத்தைக் கேட்டு போன் வருகிறது. பேன்ட் பாக்கெட்டில் கைவிடுகிறார். அலுவலகத்தில் உள்ள பீரோவுக்கான சாவி அதில் இல்லை. மேனேஜர் என்ன சொல்வாரோ என்ற டென்ஷன் தொற்றிக் கொள்கிறது.


காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டால் இந்த டென்ஷன் வந்திருக்குமா? நம்மில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான். எதையும் சரியாகத் திட்டமிடாமல் தேவையே இல்லாமல் டென்ஷனாகித் திரிகிறோம். திட்டமிடல் மட்டுமல்ல, பொறுமை இன்மை, எப்போதும் பதட்டத்துடன் இருப்பது, நினைத்தது எல்லாம் உடனே நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது என இவை எல்லாமே டென்ஷனுக்கான கச்சாப்பொருட்கள். டென்ஷனில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாமாக உருவாக்கிக் கொள்வது, மற்றொன்று சூழ்நிலைகளால் ஏற்படுவது.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் இவர்களுக்கு மட்டும்தான் டென்ஷன் வரும் என
வகைப்படுத்தமுடியாது. ஆனால், மனம் பலவீனமானவர்கள், பெற்றோர் கவனிப்பு இல்லாதவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், தவறான முன்னோடிகளைக் கொண்டிருப்பவர்கள், போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் ஆகியோர் மற்றவர்களை விட எளிதாக டென்ஷன் ஆவார்கள்.

எதையுமே எளிதாக எடுத்துக்கொள்ளாமல் சீரியஸாக எடுத்துக்கொள்பவர்களும் டென்ஷனால் பாதிக்கப்படுவார்கள். வீடு மற்றும் அலுவலகத்தினால் ஏற்படும் நெருக்கடிகளாலும் அழுத்தத்தினாலும் டென்ஷன் வரும். குறிப்பாக, அதிக வேலைப்பளு இருப்பவர்களுக்கு டென்ஷன் வருவது சகஜம். அதிலும், இத்தனை நாட்களுக்குள் இந்த டார்கெட்டை முடிக்க வேண்டும் என்ற கெடுவுடன் வேலை செய்பவர்களுக்கு டென்ஷன் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

பொதுவாக டென்ஷனாக இருப்பவர்கள், காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். சம்பந்தமே இல்லாமல் பிறர் மீது எரிந்து விழுவார்கள். மற்றவர்களுடன் சேராமல் தனித்தே இருப்பார்கள். எப்போதும் சோகம் கவ்விய முகத்துடன் வாட்டமாகக் காணப்படுவார்கள். ஒழுங்காகச் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனேயே இருப்பார்கள்.'

'டென்ஷன் ஆவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் டாக்டர்?'
'அட்ரீனல் (Adrenal), , அசிட்டைல் கோலைன் (Acetylcholine), டோபமைன் (Dopamine),செரட்டோனின் (Serotonin) போன்றவற்றின் சுரப்பு அதிகரிக்கும். டோபமைனுக்கு ஆக்ரோஷத்தைத் தரும் பண்பு உள்ளது. டோபமைன் அளவு அதிகரிக்கும்போது நம்முடைய ஆக்ரோஷமும் அதிகரிக்கும். அதேபோல, செரட்டோனினுக்குத் துயரத்தைத் தரும் பண்பு இருக்கிறது. செரட்டோனின் அளவு அதிகமாகும்போது துயரமும் அதிகமாகிறது. இப்படி ஒவ்வொரு சுரப்பும் அதிகமாகும்போது நம்முடைய குணநலன்களும் மாற்றம் அடைகின்றன. நம்முடைய மூளையில் 'காபா’ (Gaba) என்றொரு வேதிப்பொருள் சுரக்கும். இதன் அளவு குறையும்போது நமக்குக் கோபம் வரும். அதிகமானால் மனம் அமைதியாகும்.

டென்ஷன் ஆகும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயம் வேகமாகத் துடிக்கும். சிலருக்கு வாய் உலர்ந்து போகும். அடிக்கடி சிறுநீர் பிரியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். கழுத்தில் வலி உண்டாகும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் அல்லது மூச்சு இரைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். சிலருக்கு எடை கூடும். தோல் சம்பந்தமான நோய்கள் வரும்.

இப்படி டென்ஷன் வருவதால் பல்வேறு நோய்களும் வரிசை கட்டி வந்து நிற்கும். ஆனால், டென்ஷன்தான் இதற்கெல்லாம் காரணம் எனத் தெரியாமல் நாம் வருடக்கணக்கில் அந்த நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்போம். நீங்கள் எத்தனை வருடங்கள் சிகிச்சை எடுத்தாலும் அந்த நோய்களைக் குணப்படுத்த முடியாது. முதலில் மனநல மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து டென்ஷனுக்குச் சிகிச்சை எடுக்க வேண்டும். பெரும்பாலும், டென்ஷனுக்கான சிகிச்சையிலேயே அதனால் வரும் மற்ற நோய்களும் குணமாகிவிடும்.'

'டென்ஷனைத் தவிர்ப்பது எப்படி?'
'சுயகட்டுப்பாடுதான் மிகப் பெரிய மருந்து. எதன் மேலும் அதிகப் பற்று வைக்கக் கூடாது. 'நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்ற மனப்பக்குவம் வேண்டும். 'இப்படி ஆயிடுச்சே... இனிமே நான் என்ன செய்யப்போறேன்’ என்ற எதிர்மறைச் சிந்தனையை விட்டொழிக்க வேண்டும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். டென்ஷனை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து வருந்துவதைவிட,
நிகழ்காலத்தை அனுபவித்து


வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு நொடியையும் ஆராதித்து வாழும்போது வாழ்க்கை இன்பமானதாக இருக்கும். 'துன்பத்தை ஏற்றுக்கொள்’ என்றார் புத்தர். அறுசுவைகளும் சேர்ந்த உணவுதான் உண்ண ஏற்றது; உடலுக்கும் ஆரோக்கியமானது. அதேபோல, கோபம், அழுகை, விரக்தி, மகிழ்ச்சி, துக்கம் எல்லாம் சேர்ந்த கலவைதான் வாழ்க்கை. ஆனால், அதை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

சிலருக்கு ஓவியம் வரைவது பிடிக்கும். சிலருக்கு இயற்கையை ரசிக்கப் பிடிக்கும். சிலருக்கு விதவிதமான ஊர்களுக்குப் பயணம் செல்வது பிடிக்கும். இப்படி உங்களுக்குப் பிடித்த செயல்களை ஈடுபாட்டுடன் செய்யுங்கள். அறிஞர்கள் எழுதிய வாழ்வியல் அனுபவங்கள்பற்றிய நூல்களைப் படிக்கலாம். மனதுக்கு அமைதி தரக் கூடிய இசையைக் கேட்கலாம். 'செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு மன இறுக்கம் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.’ எனவே, உங்களுக்கு விருப்பமான செல்லப்பிராணியை வளர்க்கலாம்.

நிதானம் மிக அவசியம். பதற்றத்துடன் ஒரு காரியத்தைச் செய்யும்போதுதான் தவறாக ஏதாவது நிகழ்ந்து டென்ஷனை உருவாக்கிவிடுகிறது.
எல்லா வேலைகளையும் ஒருவரே செய்துவிட முடியாது. 'யாருக்கும் எந்த வேலையும் செய்யத் தெரியாது. நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன்’ என்று இழுத்துப் போட்டுக்கொண்டால் டென்ஷன்தான். எனவே, யாருக்கு என்ன வேலை செய்யத் தெரியுமோ அவர்களிடம் வேலைகளைப் பிரித்துக் கொடுக்கலாம். வீணான எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வதும் நல்லது'' எனச் சொல்லும் டாக்டர் முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார். 'டென்ஷன் என்பது சத்தத்தைப் போன்றது. சத்தத்தை உருவாக்கத்தான் இரண்டு கைகளையும் தட்ட வேண்டும். டென்ஷன் இல்லாமல் இருப்பது என்பது அமைதியைப் போன்றது. அமைதியை உங்களால் உருவாக்க முடியாது. காரணம், அது ஏற்கெனவே இருக்கிறது!'

தியானத்தில் ஈடுபடுவது எப்படி?
அண்ணாதுரை, யோகா பயிற்சியாளர்.

'தியானம் செய்யும்போது பல வேதியல் மாற்றங்கள் நடைபெற்று உடலைத் தளர்வாக்குகின்றன. இதனால் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம், மூளையின் வேதியல் செயல்கள் எல்லாமே சீராகின்றன என்று ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சரி, எப்படித் தியானம் செய்வது? முதலில் யோகா, பின்னர் பிரணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி, கடைசியில்தான் தியானம். இந்த முறைப்படி செய்வதுதான் முழுமையான தியானமே தவிர, ஒரே இடத்தில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டிருப்பது மட்டும் தியானம் அல்ல. யோகாவில் உள்ள பத்மாசன நிலைதான் தியானம் செய்வதற்கு ஏற்றது. தியானம் செய்யும்போது உடல், மனம் - இந்த இரண்டைப் பற்றியும் எந்த நினைவு களும் வரக்கூடாது. ஆரம்பத்தில் வேண்டுமானால் அவ்வாறு நிகழலாம். ஆனால், போகப்போக மனதைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். டென்ஷனைத் தவிர்க்க வஜ்ராசனம், பத்மாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம் போன்றவற்றையும் செய்யலாம். ஆனால், பயிற்சி பெற்ற நிபுணரின் ஆலோசனைப்படி இவற்றைச் செய்ய வேண்டியது அவசியம்.'
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.