படிப்பது எப்படி?- How to Study?

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#1
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நினைவு சக்தி மனிதர்களுக்கு அதிக அளவில் பயன்படுகிறது. கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து நிகழ்காலத்தை ரசித்து, எதிர்காலத்தைபற்றி சிந்தித்து செயலாற்றும் போதுதான் வாழ்க்கையில் வெற்றி எளிதாக கிடைக்கிறது.


“கார் ஓட்டும்போது முன்பக்கம் மட்டும் பார்த்து காரை ஓட்டினால் விபத்துக்களை தவிர்த்துவிடலாம். விரைவாகச் சென்றுவிடலாம்” என்று ஆலோசனை சொல்பவர்களும் உண்டு. ஆனால் – முறையாக கார் ஓட்டும் பயிற்சியைப் பெற்றவர்கள் சொல்லும் ஆலோசனை சற்று வித்தியாசமானது.“முன்பக்கம் பார்த்து கார் ஓட்டும்போதே பின்பக்கத்தைக் காட்டும் கண்ணாடிகள் மூலம் வலது மற்றும் இடதுபுறங்களில் வருகின்ற வாகனங்களையும், பின்பக்கமாக வரும் வாகனங்களையும் கவனித்து கார் ஓட்டினால்தான் விபத்து இல்லாமல் முறையாக கார் ஓட்ட முடியும்” – என அறிவுரை வழங்குவார்கள்.


இதேபோலத்தான், பாடங்களை படிக்கும்போது அந்தந்த வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை மட்டும் படித்து தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. கடந்த காலங்களில் கற்ற பாடங்களையும் நினைவில் வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு செயல்படுவதும் அவசியமாகும்.“கடந்தகால தகவல்களை நினைவில் நிறுத்தி செயல்பட்டால்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்” என்பதால் பள்ளி பருவத்திலேயே முறைப்படி பாடங்களை படித்து நினைவாற்றல் கலையை வளர்த்துக் கொள்வது மாணவ – மாணவிகளின் அடிப்படை கடமையாகும்.பள்ளி – கல்லூரிகளில் படிக்கும்போது பல்வேறு திறமைகளை மாணவ – மாணவிகள் வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.இருந்தபோதும் அவர்களின் நினைவுக்கலையை வளர்ப்பதற்கான பயிற்சிகள்தான் இந்தக் கல்வி நிலையங்களில் மிக அதிகமாக வழங்கப்படுகிறது.“நினைவுக்கலை” என்பது ஒரேநாளில் கற்றுக்கொள்ளக்கூடிய வித்தை அல்ல. இந்தக்கலையை நாள்தோறும் முறையான பயிற்சி மூலமே வளர்த்துக் கொள்ள இயலும்.“உலகம் நம் உள்ளங்கையில்” என்று சொல்வார்கள்.


உலகத்திலுள்ள அனைத்துத் தகவல்களையும், செய்திகளையும் மிக அதிகமாக தெரிந்துகொண்டு அதனை சரியான நேரத்தில் நினைவுக்குக்கொண்டுவந்து வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். சிறந்த புகழும் பெறுகிறார்கள்.இளம் வயதில் பள்ளி – கல்லூரிகளில் பயிலும்போது வாழ்க்கைக்கு வேண்டிய கருத்துக்களையும், தகவல்களையும் எவ்வாறு சேகரிக்க வேண்டும்? என்னும் கலையை கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை மனமகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்டதாக அமையும்.


படிக்கின்ற காலத்தில் படிப்பதன் நோக்கத்தை தவறாகப் புரிந்து கொண்டவர்களால் சரியான முறையில் தங்கள் படிக்கும் பழக்கத்தை அமைத்துக் கொள்ள முடிவதில்லை. இதனால் பாடத்தில் கவனம் இல்லாமலும், படிப்பில் ஆர்வம் குறைந்தும், மனவேதனையோடு பள்ளி – கல்லூரிகளில் காலத்தை கடத்தும் மாணவ – மாணவிகளும் உண்டு.படிப்பதன் நோக்கம் என்ன? என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். “பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், அறிவை பெருக்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பழக்கங்ளை நீக்கிக் கொள்வதற்கும், ஆளுமையை மேம்படுத்துவதற்கும் முழுமையாகப் பயன்படுவதுதான் படிப்பதன் முக்கிய நோக்கம்” – என்பதை பள்ளிப் பருவத்தில் அறிந்து கொண்டவர்கள் தங்கள் படிக்கும் பழக்கத்தை நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்.


எவ்வாறு படிக்க வேண்டும்? என்பதை அறிந்துகொள்வது தான் படிக்கும் பழக்கத்தின் முதல்படி ஆகும். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களின் கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். வெவ்வேறு விதமான படிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி “கற்றல்” (Learning) கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தான் கற்கும் முறை சரியானதுதானா? என்பதுகூட தெரியாமல் சில மாணவ – மாணவிகள் பள்ளிகளில் பாடங்களை படிப்பதும் உண்டு. எனவே முறைப்படி கற்கும் கலையைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும்.ஒரு நிகழ்வில் இருந்துகூட பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் விளையாட்டாக விளையாடும்போதும் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக – நாம் பார்க்கும் பார்வைகள் (Sight), கேட்பவைகள் (Hearing), செய்யும் செயல்கள் (Doing) ஆகியவற்றின்மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.“மெய்”, “வாய்”, “கண்”, “மூக்கு”, “செவி” – என்னும் இந்த ஐம்புலன்களும் (Five Senses) நம்மைச் சுற்றி நடக்கின்ற பல்வேறு தகவல்களை நம் மனதினுள் கொண்டுவருகிறது. இந்தத் தகவல்களை முறைப்படுத்தி தேவையானவற்றை மட்டும் உள்வாங்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் படிக்கும் காலத்திலேயே “நெறிவாழ்க்கை” வாழ்வதற்கான பயிற்சியை எளிதாகப் பெற்றுவிடலாம்.“பார்த்தல்”, “கேட்டல்”, “செய்தல்” – ஆகிய 3 முறைகளையும் பயன்படுத்தி முறையாக கல்வி கற்க வேண்டும்.


“பார்த்தல்” எனப்படும் “பார்வை” என்பதுதான் கற்பவருக்கு அவர் படித்தத் தகவல்களை எளிதான முறையில் நினைவில் கொண்டுவருவதற்கு உதவுகிறது. எனவே பாடத்தை கவனமுடன் படிக்கும்போது எவற்றையெல்லாம் படிக்க வேண்டும்? என்பதை மனதிற்குள் முதலில் காட்சிப்படுத்திக் (Visualisation) கொள்ள வேண்டும்.“காட்சிப்படுத்துதல்” என்பது செய்யவேண்டிய செயல்களை மனக்கண்ணில் கொண்டுவந்து ஒவ்வொன்றாக சிந்தித்து பார்ப்பது ஆகும். உதாரணமாக – “இன்று மாலை படிக்க வேண்டும்? என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் காட்சிப்படுத்துதல் முறையில் இதனைப்பற்றி இப்படி கீழ்க்கண்டவாறு சிந்திக்கலாம்.நான் பள்ளியைவிட்டு 4 மணிக்கு வீட்டுக்கு புறப்பட வேண்டும். சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும்போது மணி 4.30 ஆகிவிடும். முகம் கழுவ வேண்டும். அம்மா டீ தருவார்கள். அதனை சாப்பிட்டு முடிக்கும்போது மணி 5 ஆகிவிடும். அதன்பின்னர் முதலில் ஆங்கிலம் பாடத்தை படிக்கவேண்டும். ஆங்கிலப் பாடத்தை படித்தபின்பு அறிவியல் பாடத்தை முடிக்க வேண்டும். பின்பு “ஹோம் வொர்க்”கை செய்துமுடிக்க வேண்டும். இரவு 7 மணி வரை படித்தபின்பு கொஞ்சநேரம் டி.வி. பார்க்க வேண்டும் 7.30 மணிக்கு சாப்பிட்டுவிட்டு செய்தித்தாள்கள் படிக்கவேண்டும். சாப்பிடும்போது அம்மாவிடமும், தங்கையிடமும் இன்று நடந்த செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். 8.30 மணியிலிருந்து 10.30 மணிவரை மீண்டும் பாடங்களைப் படிக்க வேண்டும்” – என்று காட்சிப்படுத்துதல் முறையில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.ஒரு திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள்போல செய்யவேண்டிய பணிகளை முறைப்படுத்தி மனதிற்குள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதைத்தான் “காட்சிப்படுத்துதல்” என அழைப்பார்கள்.படிப்பது மட்டுமல்ல, எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் “காட்சிப்படுத்துதல்” அந்த செயல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். செய்ய வேண்டிய செயல்களை காட்சிப்படுத்துதல் மூலம் முன்கூட்டியே திட்டமிட்ட பின்பு அதனை நடைமுறைப்படுத்துவது எளிதாகும்.


காட்சிப்படுத்துதலை அடுத்து எப்படி படிக்க வேண்டும்? என்பவற்றையும் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும். படிப்பதற்காக நேரம் ஒதுக்கி வீட்டில் படிக்கும் நேரத்தில் தேவையான நோட்டுப் புத்தகங்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தேவையான புத்தகங்களும், நோட்டுகளும் எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் “தேடுதல் வேட்டை”யில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகிவிடும்.


வகுப்பில் பாடவேளையில் எடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்ட நோட்டுகளையும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குறிப்பு நோட்டுகளில் குறிக்கப்பட்ட மிகவும் முக்கியமான குறிப்புகளை மட்டும் கலர் பென்சில் கொண்டு அடிக்கோடு இட்டுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் முக்கியக் குறிப்புகளை மனதில் எளிய முறையில் பதியச் செய்யலாம்.வகுப்பில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களையும் காட்சிப்படுத்துதல் முறையில் அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். தேவையான இடங்களில் படங்கள் வரையவும், வரைபடங்களை பயன்படுத்தவும் பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.


சிலவேளைகளில் பாடங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்கவில்லையென்றால் இண்டர்நெட்டை பயன்படுத்தி இணையதளங்கள் மூலம் படிக்கும் பாடத்திற்கு உதவும் வகையில் அதிக தகவல்களை அதிகமாக சேகரித்துக் கொள்வதன் மூலமும் பாடங்களை எளிதில் கற்க இயலும்.சிறந்த முறையில் படிப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு ஆடியோ சி.டிக்கள் (CD) வெளிவந்துள்ளன. அதைப்போலவே வீடியோ சி.டி.க்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாடத்தை எளிதாக கற்கும் வகையில் அந்தவகை சி.டி.க்கள் உதவுவதால் அவைகளையும் பயன்படுத்தி கற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.தனியாக இருந்து அறையில் படிக்கும்போது படித்தவற்றை திரும்ப ஒருமுறை புத்தங்களைப் பார்க்காமல் சொல்லிப்பார்த்து நினைவாற்றலை வளர்க்கலாம். மேலும் நெருங்கிய வகுப்பு நண்பர்களை சந்தித்தும் தான் படித்த பாடங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டு பாடம் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.வகுப்பில் ஆசிரியர்கள் சிலவேளைகளில் குழு விவாதம் (Group Discussion) மூலம் பாடங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவார்கள். அந்தவேளைகளில் ஆர்வத்தோடு மற்ற குழு உறுப்பினர்களோடு சேர்ந்து கருத்துக்களை பரிமாறுவதற்கும், முரண்பாடுகள் இல்லாமல் மற்ற குழு உறுப்பினர்களோடு பழகுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும்.
குழு விவாதத்தின்போது ஒருவர் தனது பகுப்பாய்வு திறனையும் (Analytical Skill), முடிவெடுக்கும் திறனையும் (Decision Making Skill), பிறறோடு இணைந்து பழகும் திறனையும் (Interpersonal Skill) வளர்த்துக் கொள்வதற்கு அருமையான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு குழு விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும். அப்போதுதான் அறிவாற்றலையும், மற்றவர்களோடு பிரச்சினை இல்லாமல் இணைந்து பழகும் திறனையும் வளர்க்க இயலும்.அறையில் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து பல மணிநேரங்கள் படிக்கும்போது களைப்பு ஏற்படலாம். இந்தக் களைப்பைப் போக்குவதற்கு இடையிடையே எழுந்துநின்று கொள்ளலாம்.சிலவேளைகளில் புத்தகத்தை மூடிவைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக கொஞ்சநேரம் நடந்தும் வரலாம். தொடர்ந்து படிக்கும்போது ஏற்படும் களைப்பை நீக்குவதற்கு இடையிடையே இடைவெளிவிட்டு (Breaks) படிப்பது நல்லது.படித்த பாடங்கள் எளிதில் நினைவில் நிற்கும் வகையில் படித்தவற்றை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப்பார்ப்பது நல்லது. இதேபோல் அறிவியல் பாடங்களில் உள்ள சோதனைகளை (Experiments) வீட்டில் தனியாக செய்து பார்த்து அந்தப் பாடம் பற்றி மேலும் கற்றுக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டும்.படிப்பது என்பது நினைவுக்கலையை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி என்பதை புரிந்துகொண்டவர்கள் சிறுவயது முதலே பாடங்களை ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்.மனதை ஒருமுகப்படுத்தவும், திறமைகளை வளர்க்கவும், வாழ்க்கையை வளப்படுத்தவும் கல்விதான் மிகப்பெரிய துணை என்பதை அனைவரும் புரிந்துகொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்.நன்றி: நெல்லை கவினேசன்.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
மாணவர்களுக்கு மிகவும் உபயோகமான டிப்ஸ் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.