பத்திய உணவுகள் !!

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
அருணா ஷ்யாம்


உணவியல் மற்றும் சத்துணவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். சென்னை தரமணியில் உள்ள வாலன்டரி ஹெல்த் சர்வீஸஸ் மையத்தில் சத்துணவுத் துறையில் சிறப்பு விரிவுரையாளராகப் 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்.
தேசிய அளவிலான பல்வேறு சத்துணவியல் திட்டங்களில் பங்காற்றி வரும் இவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சத்துணவு குறித்து சமுதாயம் சார்ந்த 'நலம் பெறுவாய் தோழி' என்ற திட்டத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்று பல சேவைகளைச் செய்துள்ளார்.
வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் உணவியல் குறித்து ஆலோசனைகளும், சமச்சீர் உணவு தொடர்பான நேயர்களின் சந்தேகங்களுக்குப் பதில்களும் அளித்து வருகிறார். அண்ணா எஃப்.எம். என்ற சமுதாய வானொலியில் சிறப்பு ஆலோசனையாளராகப் பல நிகழ்ச்சிகளில் பங்காற்றி வருகிறார்.
இவர் எழுதியுள்ள பத்திய உணவுகள், ஜூஸ்கள்-சாலட்டுகள் என்ற இரு புத்தகங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. வாழ்வியல் சார்ந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்த சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள சத்யானந்தா யோகா மையம் மூலம் யோகப் பயிற்சியும் அளித்து வருகிறார்.
‘உடம்பார் அழியின்
உயிரார் அழிவர்
திடம்பட மெஞ்ஞானம்
சேரவும் மாட்டார்’
என்று திருமூலர் கூறியதில் எவ்வளவு உண்மை அடங்கியுள்ளது. உடம்பும் உயிரும் ஒருங்கிணைந்து இருப்பதால்தானே மெஞ்ஞானத்தை அடையமுடிகிறது. உடம்பு இல்லை என்றால் வாழ்க்கை ஒரு ஓட்டைப் படகில் பயணம் செய்வதுபோல் ஆகிவிடும். இதைத்தான் ஒளவையாரும் ‘கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என்று நமது உடலை முதன்மைப்படுத்தித்தான் கூறியுள்ளார்.
வாழ்க்கை என்பது இந்தப் பூமியில் ஏற்றுக்கொண்ட பயணம் போன்றது. கடவுள் இந்தப் பூமிக்கு நம்மை அனுப்பும்போதே, திரும்பிச் செல்வதற்கான பயணச் சீட்டையும் நம்மிடம் கொடுத்துவிடுகிறார். ஆனால், தேதியை மட்டும் குறிப்பிடுவதில்லை. இந்த, வாழ்நாள் என்ற குறுகிய பயணத்தைச் செம்மையாகச் செய்வதற்கு உணவு ஓர் அத்தியாவசியத் தேவை. நூறு வயது வரை வாழ்வது பெரிதல்ல. ஆனால், வாழ்ந்த வாழ்க்கையின் தரம் எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியம்.
உடல்வாகை வைத்துத்தான் நாம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். என்னதான் பொன்னும் பொருளும் இருந்தாலும்கூட, உண்ண சுவையான உணவு நேரத்துடன் கிடைக்காவிட்டால், சுவர் இல்லாத சித்திரம்போலத்தான் வாழ்க்கை இருக்கும்.
பல உணவுகளை, நாகரிகம் என்ற பெயரில் தரம் உயர்ந்த உணவுகள் என்றும், தரம் கெட்ட உணவுகள் என்றும் பிரிக்கிறோம். இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், வெளிநாட்டு உணவுப் பழக்கவழக்கங்கள் நம் நாட்டுக்குள்ளும் மக்களின் மனத்துக்குள்ளும் ஊடுருவிய காரணம்தான்.
தென்னிந்தியர்களுக்கு இப்போது ஒரு அபார நம்பிக்கை, சமீப காலத்தில் ஏற்பட்ட ஒரு ஞானோதயம், அரிசியைவிட கோதுமை ஒரு சிறந்த தானியம், உணவில் அரிசிக்குப் பதிலாக கோதுமையைச் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோய் வராது என்றும், உடல் எடை குறைவாக இருக்கும் என்றும் பல தவறான கருத்துகளும் நம்பிக்கைகளும் மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது.
 
Last edited by a moderator:

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#2
re: பத்திய உணவுகள் !!

சிந்தித்துப் பாருங்கள்… கோதுமையை உணவாகக்கொள்ளும் அமெரிக்கர்களுக்கும் நீரிழிவு நோய் வரத்தான் செய்கிறது. சப்பாத்தி உண்ணும் வட இந்தியனையும் இதய நோய் தாக்குகிறது, அரிசி உண்ணும் தென்னிந்தியர்களையும் உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு நோய் போன்ற கோளாறுகள் விட்டுவைப்பதில்லை.
ஒரு நண்பர் ஒரு சுவாரசியாமன விஷயத்தைச் சொன்னார். திருநெல்வேலி மாவட்டத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் பெண் பார்க்கச் செல்லும்போது, சிறிது நேரம் பேசி முடித்தவுடன், பெண் வீட்டாரின் சமையலறையை நோட்டம் விடுவார்கள். ஏன் என்றால், சமையலறையை வைத்துத்தான் அக்குடும்ப நாகரிகத்தையும், பெண்ணின் குணத்தையும், அவளுடைய தாயாரின் வளர்ப்பையும் எடை போடுவார்களாம்.
உண்மையில் சமையலறையை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்வதும், உடலுக்கு நன்மை பயக்கும் சுவையான உணவை காலம் தாழ்த்தாமல் செய்யும் கலாசாரமும்தான் நாகரிகத்தை அளக்கும் அளவுகோலாக அமைகின்றன.
உணவு சுவையுடையதாக இருந்தால் மட்டும் போதுமா? உணவை யார் தயார் செய்கிறார்கள், எப்படிப்பட்ட மனோபாவத்துடன் அதைச் சமைக்கிறார்கள். ஆனால், அதை எவ்வளவு முக்கியம் என்பதைப் பார்ப்போம். உணவு என்பது எலும்பு, தசை, ரத்தம் ஆகியவற்றை உருவாக்கும் வெறும் மூலப்பொருள் மட்டுமல்ல. உடலை உன்னதமாக்கி உள்ளத்தை உயர்த்தும் தெய்வீக வித்து. இதனால்தானோ என்னவோ, குடும்பத்தில் உணவு தயாரிக்கும் பொறுப்பை தொன்றுதொட்டே ஒரு தாய் எடுத்துக்கொண்டாள். யாரைக் கேட்டாலும் ‘எங்க அம்மா சமையல்போல வருமா’ என்றும் ‘பாட்டி கை சமையல் தனி ருசிதான்’ என்றும் பெருமிதம் கொள்வார். அத்துடன் குடும்பத்தலைவியின் அன்பு நின்றுவிடவில்லை. குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு நிலாவைக்காட்டி, இந்த நிலத்தின் கதையெல்லாம் சொல்லி ஊட்டிய ஒவ்வொரு பருக்கையும், உடல் ஆரோக்கியம் மற்றும் அக புத்துணர்ச்சிக்கும் எழுச்சிக்கும் விடப்பட்ட வித்துகளாக இருந்தன.
இன்று நிலாவை ரசிக்கவோ, பொன் விளையும் நிலத்தை பார்க்கவோ நேரமில்லாமல் போய்விட்டது. உணவு சாப்பிடும்போது தொலைக்காட்சிப் பெட்டியும், கணினிப் பெட்டியும்தான் தோழமை வழங்குகின்றன.
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#3
re: பத்திய உணவுகள் !!

ஒரு முறை ரயில் வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு இடத்தில் வண்டி நின்றுகொண்டிருந்தது. தூரத்தில் ஒரு சிறுவன் நின்றுகொண்டிருக்கும் காட்சி தென்பட்டது. அவன் கரும்பை மென்று வயலில் துப்பிக்கொண்டிருந்தான். உடனே என் மனதில் சிறுவயதில் கிராமத்துக்குச் சென்று பொங்கல் கொண்டாடி கரும்பு மென்ற நினைவுகள் மலர்ந்தன. இந்தக் காட்சியைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தேன். என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு நபர் அதைப் பார்த்து, ‘அய்யய்யோ இது என்ன கொஞ்சம்கூட நாகரிகமே இல்லாமல் இப்படி கரும்பை மென்று துப்பிக்கொண்டு இருக்கிறான்’ என்று சலித்துக்கொண்டார். கரும்பு சாப்பிடுவதில் இவர் என்ன நாகரிகக் குறைவைக் கண்டார் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. கரும்பை பல்லால் கடித்து மென்று துப்பத்தான் வேண்டும். அதை ஸ்பூனும் ஃபோர்க்கும் வைத்தா சாப்பிட முடியும்? எனக்குள் சிரித்துக்கொண்டேன்.
இந்திய நாட்டில் தொற்றுநோய்களை எதிர்த்து போராடி அவற்றை ஒருவழியாக கட்டுப்படுத்திவிட்டோம். ஆனால் நாம் மற்றொரு மிக அபாய காலகட்டத்தில் சிக்கியிருக்கிறோம். இன்று உயிர்க்கொல்லிகளாக வாழ்க்கை முறையால் ஏற்படுகின்ற நோய்கள் தலைவிரித்து ஆடுகின்றன (lifestyle diseases). 2020-ல், இந்தியா நீரிழிவுத் தலைநகரமாக திகழும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று பத்தில் நான்கு பேர் நம் நாட்டில் அதிக உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவு உட்கொள்கிறோம், எவ்வித உணர்வுகளுடன் சாப்பிடுகிறோம் மற்றும் எங்கு சாப்பிடுகிறோம் என எல்லாமும் மிக மிக முக்கியம்.
உணவை சாப்பிடும்போது தொலைபேசியில் பேசிக்கொண்டோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது. முக்கியமாக குழந்தைகளிடம் அவர்களுடைய தேர்வு மதிப்பெண்களைப் பற்றியோ அல்லது அவர்களுக்கு மன அழற்சி உண்டாக்கும் விவாதங்களைச் சாப்பிடும் நேரத்தில் உருவாக்கக்கூடாது. மனநிலையைப் பொறுத்துத்தான் செரிமான ஆற்றலும் அமையும்.
‘சாப்பிடும்போது பேசாதே’ என்று வீட்டில் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அது எவ்வளவு உண்மை! சாப்பிடும்போது நினைவெல்லாம் உணவின் மீது மட்டுமே குவிய வேண்டும். அப்போதுதான் உடலில் உணவின் ஈர்ப்புத்தன்மை அதிகரிக்கும்.
உணவை மென்று நிதானமாக உட்கொள்ள வேண்டும். இதைத்தான் உணவியல் நிபுணர்கள் chew count என்று ஒவ்வொரு உணவுக்கும் நியமித்துள்ளனர். ஒரு உணவை இத்தனை முறை மென்று விழுங்க வேண்டும் என்ற கணக்கு உண்டு. இதை உணவின் chew count என்பர் நிபுணர்கள். மென்று திண்ணும் எண்ணிக்கை அதிகமாக உள்ள உணவுகள் உடல் நலத்தைக் காக்கும். இவ்வாறு மென்று தின்பதால் உடல் எடை சமமாக இருக்கும். உடலில் சர்க்கரை அளவு மிதமாக இருக்கும், கொழுப்புச் சத்து அதிகம் சேராது. அடிக்கடி பசிக்காது.
டயட் என்ற வார்த்தை என்றாலே என்ன நினைக்கிறார்கள் என்றால் குறைவான, உப்பு சப்பு இல்லாத, உடல் நோய்வாய்ப்பட்டு எழுந்திருப்பவர்கள் சாப்பிடும் உணவு என்று நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. புத்திசாலித்தனமாக சாப்பிடுவதே டயட் என்ற வார்த்தைக்கான முழு விளக்கம்.
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#4
re: பத்திய உணவுகள் !!

இயற்கையோடு ஒன்றிய ஆரோக்கியமான வாழ்வே இன்றைய உடனடி தேவை. நம் நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றனவோ, எத்தனை மொழிகள் இருக்கின்றனவோ, அத்தனை வித்தியாசமான உணவுப் பழக்கங்கள் உள்ளன.
கனியன் பூங்குன்றனார் கூறிய கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
உடல் நலத்தைப் பேணுவதும், அதைக் கவனக்குறைவாக விட்டுவிடுவதும் நம் கையில்தான் உள்ளது. அப்படி உண்ணுகின்ற உணவில் நமது உடல் நலத்துக்கும் மன வளர்ச்சிக்கும் ஏற்ற சத்துப்பொருட்கள் உள்ளனவா என்று சற்று யோசித்துச் சாப்பிடுவது நல்லது.
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#5
re: பத்திய உணவுகள் !!

உணவும் மரபும் மறந்த செய்தி
நாம் வாழும் இடத்தைப் பொறுத்துதான் நம்முடைய உணவு பழக்கங்கள் அமைகின்றன. குறிப்பாக உணவு பொருட்களின் பெயர்களும் அந்தந்த மொழிகளிலிருந்தே பிற மொழிகளுக்குச் சென்று உலகம் முழுவதும் பரவலாக உபயோகப்படுகிறது. இதற்கு வரலாற்றிலும் பல சாட்சிகள் உண்டு.
‘அரிசி’ என்ற தமிழ் சொல்லின் உதயமே ‘ரைஸ்’ என்ற ஆங்கிலச் சொல். ‘மாங்காய்’ தான் ‘மேங்கோ’ என்று திரிந்தது. தேங்காய், தெங்கம் என்று தென்நாட்டில் இருந்ததாகவே குறிக்கும். மிளகு தண்ணீர் ரசத்தைதான் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் ‘மல்லிகடாணி சூப்’ (Mulligawtawny soup) என்று பெயரிட்டு ருசித்தார்கள்.
நாலாயிரம் ஆண்டுகளாக மொகஞ்ஜதாரோ மற்றும் இந்து நதி நாகரிகத்திலிருந்து ஊறிய ஒரு கலாச்சாரத்தினால் ஏற்பட்ட மாற்றங்களில் ஒரு முக்கிய பகுதியே நம்முடைய மரபணுக்களின் வேலைப்பாடு ஆகும். இவைதான் நம்முடைய உணவின் தேவை வேலைப்பாட்டுத் திறன் ஆகியவற்றை நிர்ணயிப்பதில் பெரும்பங்கை ஏற்கிறது. மரபணுக்களின் இந்த மொழியைப் புரிந்து கொள்ளாமல், அதற்கு ஒத்துப் போகாமல் மாற்று பழக்கங்களை உருவாக்கும் போதுதான் உடல் நோய் என்ற அறிகுறியை வெளிப்படுத்துகிறது.
கென்யா (Kenya) நாட்டைச் சார்ந்த ஒவ்வொரு குடிமகனும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று தன் நாட்டை உலக அட்டவணையில் முதலிடம் பிடிக்கவேண்டும் என்று தன் சிறுவயதிலிருந்தே கனவு காணுகிறான். ஐரோப்பியர்கள் வாழ்க்கை தரத்தையும், மனித வாழ்க்கை, மாறும் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அயராது பாடுபடும் அறிவியல் மனோபாவத்தை பெற்றவர்கள். ஆசியர்கள் ஒவ்வொரு உயிரும் தன் முழுத்தன்மை உணர்ந்து மெய்ஞானம் அடையவேண்டும் என்று உள்நோக்கிச் சென்று உட்தேடுதலை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இப்போது என்ன சொல்ல வருகிறேன் என்று கேள்வி எழுப்புகிறீர்களா? அல்லது ஆசியனாகப் பிறந்தவன் ஓட்டப்பந்தயத்தில் சிறந்து விளங்க முடியாதா? இதைச் சற்றே கூர்ந்து கவனிக்க வேண்டும் மரபணுக்களைப் பொறுத்துதான் உடல் அமைப்பு, மனம் மற்றும் உடலின் வேலைப்பாட்டுத்திறன் அமையும். இவையே நாம் செய்பவற்றிற்கு ஒத்துழைக்கும் என்று கூறுகிறேன்.
அதனால் தான் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர் உயரம், எடை நிறம் ஆகியவற்றால் வித்தியாசப்படுகிறார்கள். இதற்கு ஏற்பத்தான் உணவின் அளவு மற்றும் தரம் அமையும் இதைத்தான் ‘சமச்சீர் உணவு’ என்று உணவியல் நிபுணர்கள் மனிதனின் உணவுத் தேவையை விளக்குகிறார்கள்.
1. சக்தி தரும் உணவுகள் என்று அழைப்படும் தானிய வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, வெல்லம் போன்றவை.
2. உடல் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய உணவுகள், பருப்பு வகைகள், பால், இறைச்சி மற்றும் கொட்டை வகைகள்.
3. உடலை பாதுகாக்கும் (Protective foods) காய்கறிகள், பழங்கள், பால், தயிர் போன்றவை.
இந்த மூன்று வகை உணவுகளையும் நம்முடைய தினசரி உணவுமுறையில் தக்க அளவில் உட்கொண்டால், அதைச் சமச்சீர் உணவு என்கிறோம்.
சமச்சீர் உணவு என்றால் உணவியல் ரீதியில் உடல் வேலைப்பாடுகளுக்கு சக்தி மற்றும் போஷாக்கை அளிக்கக் கூடிய ‘கார்போஹைட்ரேட்’ என்று அழைக்கப்படும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்தும், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் புரதச் சத்து மற்றும் நோய் இல்லாமல் காப்பாற்றும் உயிர்சத்துக்களும், உப்புச்சத்துகளும் (Vitamins and minerals) சேர்ந்து இருப்பதே.
இந்த சமச்சீரை சீர் குலைக்கும் போதுதான் உடல் சீரற்றுப் போகிறது. இந்த சமச்சீர் உணவு எதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது என்றால் ஒருவர் வாழும் இடம், செய்யும் வேலை, வயது, தட்பவெட்ப நிலை, மரபுக் குழுவின் தன்மை போன்றவற்றால் அமையும். அதனால்தான் மரபணுக்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்தே விரிவாக விளக்குகிறேன்.
உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ளக் கூடாது என்றும் பிற நாடுகள் பின்பற்றும் உணவு முறைகளை விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் நான் கூறுவதில்லை. யானைக்கும் குரங்குக்கும் மரம் ஏறும் போட்டி வைத்தால் அது நியாயமான போட்டி ஆகாதே என்றுதான் வலியுறுத்துகிறேன்.
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#6
re: பத்திய உணவுகள் !!

கலோரி
ரேமண்ட் என்ற ஐரோப்பியர், முதன்முதலில் 1894-ம் ஆண்டு மருத்துவப் புத்தகங்களில் ‘கலோரி’ என்ற சொல்லை உபயோகித்தார். இன்று கலோரி என்ற சொல்லை பரவலாக எல்லோரும் பயன்படுத்தும் ஒரு சரளமான வார்த்தை ஆகிவிட்டது.
இந்த கலோரி என்றால் என்ன? நாம் உண்ணும் உணவுக்கும் கலோரிக்கும் என்ன தொடர்பு?
ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். நீங்கள் ஒரு துணிக்கடைக்குச் சென்று துணி வாங்கும்போது கடைக்காரர் உங்களைப் பார்த்து துணி எத்தனை மீட்டர் வேண்டும் என்று கேட்பார். நீங்கள் ஒரு மீட்டர் அல்லது இரண்டு மீட்டர் என்று உங்கள் தேவைக்கேற்ப கேட்பீர்கள். அந்த ‘ஒரு மீட்டர்’ என்பது அளவுகோல். அதேபோலத்தான், உணவு நம் உடம்புக்குள் சென்று வெப்பமாக மாறி சக்தியை அளிக்கிறது. இந்தச் சக்தியை அளக்கும் அளவுகோல்தான் ‘கலோரி’ என்று அழைக்கப்படுகிறது.
வாகனங்களுக்கு தேவைப்படும் எரிபொருள்போலச் செயல்படும் உணவு, உடம்புக்குள் சென்று கலோரி சத்தாக மாறி உடல் இயக்கத்தை துவங்குகிறது. உடல் ஓய்வு எடுத்துக்கொள்ளும்போதும் சில உறுப்புகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இதயம் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. ரத்த ஓட்டம் நிற்பதில்லை. காற்றை சுவாசித்துக்கொண்டேதான் இருக்கிறோம். இத்தனை வேலைப்பாடுகளுக்கும் நமக்கு சக்தி அல்லது ‘கலோரி’ தேவைப்படுகிறது.
ஒவ்வொரு உணவும் உற்பத்தி செய்யும் ‘கலோரி அளவில்’ வேறுபாடு உண்டு. கலோரியை அதிகம் கொடுக்கக்கூடிய உணவுகளாக கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்துகளும், எண்ணெய் வகைகளும் உள்ளன.
சர்க்கரை, வெல்லம், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய வகைகள், உருளை, சேப்பங்கிழங்கு, பீட்ரூட் போன்ற கிழங்குவகைகள், வாழைப்பழம் போன்ற பழங்களில் இருந்து நமக்கு மாவுச்சத்து கிடைக்கிறது.
நெய், வெண்ணெய், சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களில் இருந்தும் நமக்கு கலோரிகள் கிடைக்கிறது
எல்லா உணவுகளும், ஒரே அளவு சக்தியையும், கலோரியையும் தருவதில்லை. 100 கிராம் அரிசியை சாதமாக்கி உட்கொண்டால், நமக்கு 340 கலோரி கிடைக்கும். ஒரு கிராம் சர்க்கரை உட்கொண்டால், அது முழுவதும் குளுக்கோஸாக மாறி 4 கலோரியைத் தரும். ஒரு கிராம் எண்ணெய் (எந்த எண்ணெய் வகையாக இருந்தாலும்) 9 கலோரியை தரும்.
இதில் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், அரிசியில் மாவுச்சத்து மட்டும்தான் உள்ளதா அல்லது வேறு புரதமோ, உயிர்ச்சத்தோ இல்லையா என்ற சந்தேகம் எழும். எல்லா உணவுகளுமே பல சத்துகள் கூடிய கலவைதான். ஆனால், பெருமளவு மாவுச்சத்து இருப்பதால் அதை ‘மாவுச்சத்து உணவு’ என்று வரிசைப்படுத்துகிறோம்.
ஒரு கிராம் புரதம் 4 கலோரியை தரவல்லது. பருப்பு வகைகள், பால், மீன், முட்டை, இறைச்சி, கொட்டை வகைகளில் புரதம் அதிகம் இருக்கிறது. இவை உடல் வளர்ச்சிக்கான புரதத்தை பெருமளவு அளிக்கிறது. அப்படியென்றால், ஒரு கிராம் பாலைக் குடித்தால் 4 கலோரி உடம்பில் உற்பத்தி ஆகுமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லமுடியும். ஒரு கிராம் புரதம்தான் கலோரியை அளிக்கும். பாலில் புரதத்துடன் மாவுச் சத்து, சுண்ணாம்புச் சத்து போன்ற ஊட்டச்சத்துகள் சேர்ந்திருக்கின்றன.
புரதத்தின் வேலை, உடம்பின் வளர்ச்சிப் பணியை மேற்கொள்வதுதான். ஆனால், போதுமான கலோரி உடம்பில் கிடைக்காதபோது, புரதமும் கலோரியை அளிக்கும் பணியை மேற்கொள்ளும்.
ஒவ்வொரு உணவிலும் என்ன சத்துகள் இருக்கின்றன என்பதை நாம் தெரிந்துகொண்டால், அந்த உணவின் கலோரி சக்தியைக் கணக்கிட முடியும்.
உணவின் மூலம் கலோரி உடம்புக்குள் செல்கிறது என்பதை நாம் புரிந்துகொண்டோம். இந்த கலோரி எதற்காக உபயோகிக்கப்படுகிறது என்றால், நாம் அன்றாடம் செய்யும் வேலைப்பாடுகளுக்கும், உடல் தடையின்றி இயங்குவதற்கும் உதவுகிறது. இப்படி உணவு மூலம் கிடைக்கும் கலோரி, உடற்பயிற்சி மற்றும் வேலைப்பாடு மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது அல்லது பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம். உள்ளே செல்லும் கலோரி அளவு சரியாக பயன்படுத்தப்பட்டால்தான், உடம்பு சமச்சீர் நிலையில் இருக்கும்
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#7
re: பத்திய உணவுகள் !!

[h=1]அத்தியாவசிய ஐந்துஅத்தியாவசிய ஐந்து என்று அழைக்கப்படும் உணவு வகைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். இவ்வுணவுகளின் தன்மையைப் பற்றிய சரியான புரிதல் நமக்கு ஏற்பட்டால்தான் இவற்றை எந்த அளவுக்கு தினசரி உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளவேண்டும், இவற்றால் என்ன நன்மை கிடைக்கும் என்ற தெளிவு நமக்கு ஏற்படும்.
அத்தியாவசிய ஐந்து என்பது தானிய வகைகள், பருப்பு வகைகள், காய்கறி பழ வகைகள், பால் மற்றும் பாலைச் சார்ந்த உணவு வகைகள், சர்க்கரை மற்றும் எண்ணெய் வகைகளைக் குறிக்கும். அன்றாட உணவில் இந்த ஐந்தும் இடம் பெற்றிருந்தால் தான் அந்த உணவிற்கு சமச்சீர் உணவு என்று பெயர். இந்த சமச்சீர் உணவிலிருந்து நமக்கு கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துக்களை மாவுச்சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து, உயிர்ச்சத்து மற்றும் உப்புச் சத்து என ஐந்து வகைப்படும். இவ்வாறு உண்ணும் சமச்சீர் உணவே உடல், மனம், பிராணன், புத்தி, ஆன்மா என்ற ஐந்து அங்கங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி உடலுக்கும் உள்ளத்துக்கும் வலிமையைத் தருகிறது.
அத்தியாவசிய அல்லது அடிப்படை ஐந்தில் முதலிடம் பெற்றது தானிய வகைகள்தான். தானிய வகைகளை உணவாகக் உட்கொள்ளும் பழக்கம், வரலாறு கூறும் நிகழ்வுகளிலிருந்து நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஓங்கி இருந்தது என்பதற்கு சாட்சிகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் நெல்வகை பயிரிடப்படுகிறது. உலகம் முழுவதும் பயிரிடப்படும் வகைகள் இரண்டு லட்சங்களுக்கு மேற்பட்டவை. ஜப்பான் நாட்டினர் (chop sticks) சாப்ஸ் ஸ்டிக்ஸ் கொண்டு உணவு உண்பதால் அதற்கு ஏற்றவாறு அங்கு பயிரடப்படும் நெல் ரகங்கள் நீளமாகவும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும் தன்மையும் உடையவை. இந்தியர்கள் கையால் உண்ணும் பழக்கத்திற்கு ஏற்றவாறு பளிச்சென்று மல்லிகைப் பூப்போல ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிர்ந்த ரகத்தை பயிரிட்டனர். கோதுமையும் நம் நாட்டில் பரவலாக உபயோகித்தனர் மக்கள். இத்துடன் சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு என்று தானியங்கள் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப உணவாக உட்கொண்டனர்.
சிறிது யோசித்துப் பாருங்களேன் நாம் நான்காயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்ற உணவு பழக்கங்கள் திடீரென இன்று மட்டும் நோய் வரக் காரணமாகுமா? 1500 கிபியில் சிந்து நதி நாகரிகமே அழிந்துவிட்டது அதன் பின்னும் அன்று மேற்கொண்ட அந்த உணவு அடிப்படை பழக்கங்களை நம் மக்களிடையே காணப்படுகிறது. இத்தனை காலம் உயிர் கொடுத்த ‘அன்னம்’ எனப்படும் அரிசி இன்று பரவலாக பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது. அரிசி சாப்பிட்டால் எடை கூடும். தொப்பை விழும், சர்க்கரை நோய் ஏற்படும் என்று அப்பப்பா எத்தனை விமர்சனம்.
ஆறுமாத குழந்தைக்கு முதன்முதலில் திட உணவைச் சேர்க்கும் போது, சாதத்தை ஊட்டும் சடங்கிற்கு ‘அன்னபிரசானம்’ என்று பெயரிடப்பட்டது. சாதத்தின் நார் சத்தும், புரத அளவும் குறைவாக இருப்பதாலும், உடம்புக்கு எளிதாக கிடைக்கக் கூடிய இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் B அதிகம் இருப்பதாலும்தான் இது குழந்தைகளுக்கு ஒரு உன்னதமான திட உணவு என்பதை நம் முன்னோர்கள் அறிவியல் நுணுக்கங்களுடன் கூடிய பழக்கத்தைத்தான் ஏற்படுத்தினர் என்று சொன்னால் அது மிகையாகாது. அரிசியை மற்ற தானியங்களுடன் ஒப்பிடும் போது எளிதில் செரிமானம் அடைந்துவிடும். நார் சத்து குறைவாக இருப்பதால் மற்ற உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது மற்ற உணவுகளில் உள்ள சத்துக்களும் எளிதில் உட்கொள்ளப்படுகிறது.
இன்றைய பிரச்னை அரிசி இல்லை. அரிசியை அதிகமாக பதப்படுத்தப்படுவதுதான். குறைந்த அளவில் பாலிஷ் மற்றும் பதப்படுத்தப்பட்ட அரிசி வகைகள் பரவலாகக் கிடைக்கின்றன, அவற்றை வாங்கி உபயோகிக்கலாம். புழுங்கல் அரிசியில் தானியத்தின் மேல் பாகத்தில் உள்ள வைட்டமின் மற்றும் உப்புச்சத்து உட்புறத்துக்கு ஊடுருவுவதால் பச்சரிசியில் கிடைக்காத சில ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. முக்கியமாக B வைட்டமின் பச்சரிசியில் பாலிஷ் செய்வதன் மூலம் அழியப்படுகிறது. ஆனால் புழுங்கல் அரிசியில் மணமும் நிறமும் எல்லோருக்கும் விருப்பமானதாக இருக்காது.
எந்த உணவையும் பரிந்துரைப்படுகின்ற அளவை எடுத்துக்கொண்டு, உண்டால் நோயின்றி வாழ வழி வகுக்கலாம். எல்லா தானியவகைகளை முக்கியமாக முழு தானிய வகைகளை சேர்த்துக் கொண்டால் எல்லா வகையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. 100 கிராம் தானியத்தை உட்கொண்டால் அது அரிசியாக இருந்தாலும் சரி கோதுமையாக இருந்தாலும் சரி ஒரே அளவு கலோரியைத் தான் கொடுக்கும். வியப்பாக உள்ளதல்லவா?

[/h]
 

premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,397
Likes
6,995
Location
Doha,Qatar
#8
re: பத்திய உணவுகள் !!

Hi Shasun
All the facts you have told about the food and tradition of each country / region's food habits are very true. They suit that particular part's climate , work habits etc.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#9
re: பத்திய உணவுகள் !!

அனைத்து விவரங்களுக்கும் மிக்க நன்றி .
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#10
[h=1]சூடான இட்லி சாம்பார்
புரதச் சத்து பற்றிப் பேசும்போதே, புலால் உணவின் புரதத்தைப் பற்றிதான் அதிகம் சொல்கிறார்கள். சமீபகாலத்தில், செய்யாறு பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுவன், மரத்தடி நிழலில் முளைத்த காளான்களைப் பறித்துக்கொண்டு, எதிரில் இருந்த அவனுடைய குடிசைக்குள் புகுந்தான். இதை எதற்குப் பறிக்கின்றாய் என்று அவனைக் கேட்க, ‘அம்மா பறிக்கச் சொன்னாங்க. கூட்டு செய்யத்தான்என்று பதிலளித்தான்.
மலைவாழ் மக்களும், சில கிராம மக்களும் பல காலமாக உணவாக உபயோகிக்கும் காளான்களை இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் உணவியல் நிபுணர்களும் மிகச்சிறந்த புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருளாக சிபாரிசு செய்கிறார்கள். இப்போது இந்தக் காளான்களை திருமண வீடுகளில்கூடப் பரிமாறுகிறார்கள். இதில் நீர்ச் சத்தும் முழுமையான புரதச் சத்தும் உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், முதியோர்கள் என்று எல்லா வயதினரும் இதைச் சாப்பிடலாம்.
நம் உணவில் பருப்பு வகைகள் முக்கிய அளவு புரதத்தைத் தருகின்றது. ‘ஏழையின் இறைச்சிஎன்று மேல் நாட்டினரால் அழைக்கப்படும் பருப்பு வகைகள், நம் உணவு முறையில் முக்கியத்துவம் வகிக்கிறது. பருப்பு வகையில் இறைச்சி, முட்டை, பால் ஆகிய உணவைவிட புரதத்தின் தரம் குறைவாக இருக்கலாம். ஆனால், இயற்கை நமக்கு தேவையான அளவு மற்ற உணவுகளில் பருப்பு வகைகளில் இல்லாத அமினோ அமிலங்களைப் படைத்திருக்கிறது. இயற்கைக்குத்தான் நம் மீது எத்தனை கருணை. பருப்பு மற்றும் அரிசியின் கலவையில் நாம் சமைக்கும் உணவுகள், புரத அளவிலும் தரத்திலும் முழுத்தன்மை அடைகிறது. நாம் இந்த நுணுக்கங்களை பெரிதாக ஆராயாமல் இருக்கலாம்.
அன்றாடம், சராசரி குடும்பங்களில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் உட்கொள்கிறார்கள். காலை உணவாக பிரசித்தி பெற்ற இட்லி மற்றும் தோசையின் கலவையைக் கவனிப்போம். அரிசியில் லைசீன் (lysine) குறைவாக உள்ளது. உளுந்து வகையில் மிதியோநைன் (methonine) என்ற அமிலோ அமிலம் குறைவாக உள்ளது. இவை இரண்டும் 4:1 என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து, இட்லி, தோசை என்று உபயோகிக்கும்போது தேவைக்கேற்ப புரத அளவு முழுமையாக உடலுக்குக் கிடைக்கிறது.
1980-களில் அரிசிக்கும் கோதுமைக்கும் போட்டி. 90-களில் சீரியல்ஸ் என்று பதப்படுத்தப்பட்ட தானிய வகைகள் பிரசித்தி பெற்றது. 2000-ல் காலை உணவாக வெறும் பழங்களோ அல்லது ஓட்ஸ் கஞ்சிக்கு மாறியது. இன்று 2015-ல், மறுபடியும் உலக அளவில் மிக ஊட்டச்சத்துமிக்க காலை உணவு என்று இட்லி, தோசை, பொங்கலை வரிசைப்படுத்தி உணவியல் நிபுணர்கள் அழுத்திச் சொல்கிறார்கள்.
இந்தசுடச்சுட இட்லி சாம்பார்’, இவ்வளவு நல்லதை தருகிறதா என்று ஆச்சரியமாக உள்ளதா? எல்லா வகை காலை உணவுகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவை தானியம் மற்றும் பருப்பு வகைகளின் கலவையில் இருந்தே தயார் செய்யப்படுகிறது. உதாரணமாக இட்லி, பொங்கல், ஆப்பம், என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் தேவையான கலோரியுடன் உடம்பின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் தேவையான புரதச் சத்தும் சரிவிகிதத்தில் கொடுப்பதால், நாள் முழுவதும் வேலை செய்வதற்கு தெம்பும் சுறுசுறுப்பும் அளிக்கிறது.


[/h]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.