பனிக்கால பயம் தேவையே இல்லை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பனிக்கால பயம் தேவையே இல்லை


டாக்டர். வி. விக்ரம்குமார்
காலங்கள் என்று நம் மனதில் பதிந்து போயிருப்பதெல்லாம் நான்கு பருவக் காலங்களே. அவை, வசந்தம், கோடை, இலையுதிர், குளிர். ஆனால், இவற்றில் இலையுதிர் காலம் நமக்கு உண்டா? தெரியாது. காரணம், இது நம் நிலத்துக்கான பருவகாலம் அல்ல, மேற்குலக நாடுகளுக்கானவை.
உலகப் பருவகாலப் பகுப்புக்கு முன்னோடி நம் முன்னோரின் காலப் பிரிப்பே. நம்முடைய தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்பக் கார்காலம், கூதிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனக் காலநிலைகளை ஆறு பகுதிகளாக நம் முன்னோர் பிரித்திருந்தனர். ஒவ்வொரு காலத்தையும் பெரும்பொழுது என்றும் அழைத்தனர்.

முன்பனிக் காலம்
ஒவ்வொரு பெரும்பொழுதுக்கும் இரண்டு தமிழ் மாதங்கள் உயிரூட்டுகின்றன. இதில் முன்பனிக் காலம் என்பது மார்கழி, தை மாதங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு பெரும்பொழுதிலும் நலமோடு வாழக் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகளை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் மூதாதையர்கள் வடிவமைத்துள்ளனர். அவர்களுடைய முன்பனிக் கால வாழ்க்கை முறைதான் என்ன?

தேவை நல்ல கோதுமை
எகிப்திய நாகரிகத்திலும் சரி, நம்முடைய சிந்து சமவெளி நாகரிகத்திலும் சரி, கோதுமை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோதுமை ரொட்டிக்கு, திராட்சை சாற்றைத் தொட்டுச் சாப்பிடுவது கிரேக்க நாகரிகத்தில் செழித்திருந்த உணவு முறை. முன்பனிக் காலத்தில் உடலுக்குத் தேவையான பித்தத்தைக் கொடுத்து உடலை உறுதியாக்கும் தன்மை கோதுமைக்கு உண்டு.

உடல் பருமனைக் குறைக்கவும், சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவான கோதுமை, பனிக் காலத்துக்கு ஏற்ற உன்னதமான உணவு. கோதுமைக் கஞ்சியைக் குடித்தால் சுரமும், ஐயமும் விலகும் என்கிறது அகத்தியர் பாடல். அடை, தோசை, ரொட்டி, கஞ்சி எனப் பல்வேறு பரிமாணங் களில் உலா வரும் கோதுமையில், `பிளீச்’ செய்யப்பட்ட மைதா கலப்படம் இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்.

பனிநீர் தரும் பயன்கள்
முன்பனிக் காலத்தில் கிடைக்கும் அற்புதமான இயற்கை மருந்து பனிநீர். மிகக் குறைவாகவே கிடைக்கும் பனிநீர், பல வகை நோய்களைப் போக்கும் திறன் கொண்டது.

மார்கழி, தை மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும் பனிநீரின் சுவையை உணர்ந்து, இயற்கையோடு உறவாடி நோய்களைக் களையலாம். அன்றாட பணிச் சுமைகள் ஏற்படுத்தும் நெருக்கடிக்கு இடையில், பனித் துளியின் கனமின்மையையும் உணரலாம்.

நீரில் கலந்த சுற்றுச்சூழல் மாசு காரணமாக, தூய்மையான நீருக்காக ஏங்கி அலைந்து கொண்டிருக்கிறோம். பனிக் காலத்தில் கிடைக்கும் தூய்மையான பனிநீரைக் காய்ச்சிக் குடித்தாலே, பல்வேறு நோய்கள் ‘சூரியனைக் கண்ட பனியைப்போல’ கரைந்துவிடும். பனிநீரைப் பருகுவதால் தோல் நோய்கள், சில வகை வாத நோய்கள், நீரிழிவு நோய் நீங்குவதாகச் சித்த மருத்துவ நூல்கள் உரைக்கின்றன. சொறி, சிரங்கின் மேல் பனிநீரைத் தடவிவர, நல்ல குணம் கிடைக்கும்.

சேகரிக்கும் முறை: அழகான முன்பனிக் கால இரவில், சுத்தமான வெள்ளைத் துணியைப் புல் தரைகளிலும், சிறிய தாவரங்களின் மீதும் பரப்பி வைத்துவிட்டு, காலையில் சூரிய உதயத்துக்கு முன் எடுத்து துணியைப் பிழிந்து நீரைச் சேகரித்துக் கொள்ளலாம்.

பனியும் மிளகும்
‘பனியில் நனைந்ததால், மூக்கில் சளி வடியுது…’ எனப் பனியைக் குற்றம் சொல்லிக்கொண்டு டாக்டரிடம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம். பனியிடம் குற்றமா, இல்லை நம் உடலில் குற்றமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்’ என்ற முதுமொழியோடு, ‘பத்து மிளகிருந்தால் பனிக்கால நோய்களையும் தவிர்க்கலாம்!’ என்ற புதுமொழியையும் சேர்த்துக்கொள்ளலாம். பனிக் காலத்தில், உணவில் மிளகுத் தூளைத் தூவிச் சாப்பிடுவதாலும், பாலில் மிளகுத்தூள் கலந்து பருகுவதாலும், பனிக் காலக் கப நோய்களைத் தடுக்கலாம்.

மிளகில் உள்ள பெப்பரின், பினைன் வேதிப்பொருட்கள், செரிமானச் சக்தியை அதிகரிப்பதுடன், நோய்த் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கின்றன. அல்சர் தொந்தரவு உள்ளவர்கள், மிளகுத் தூளைச் சற்றுக் குறைத்துப் பயன்படுத்துவது நல்லது.

அசைவ உணவு
அசைவப் பிரியர்கள், முன்பனிக் காலத்தில் விருப்பமான அசைவ உணவை அவ்வப்போதுச் சாப்பிடலாம். நோய்களுக்குக் காரணமாக அமையும் கொழுகொழு பிராய்லர் கோழி ரகங்களைத் தவிர்த்துவிட்டு, நாட்டுக்கோழி வகையை உண்ணலாம். மாலைப் பொழுதில் மிளகு, பூண்டு கலந்த ஆட்டுக்கால் சூப், உடலுக்கு வெப்பம் தரும் நண்டு ரசம் ஆகியவற்றை அருந்தலாம். வெயில் காலத்தில் மாமிச உணவை அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல.

வறட்சிக்கு நிவாரணம்
பனிக் காலத்தில் உண்டாகும் உதட்டு வெடிப்புக்கு வெண்ணெய் (அ) நெய் தடவி வரலாம். தோலில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க, குளிர்க் காலத்தில் தாக உணர்வு குறைந்திருந்தாலும், தேவையான அளவு காய்ச்சிய வெந்நீரைக் குடிப்பது அவசியம். வெளிப் பிரயோகமாக அருகன் தைலம், குங்கிலிய வெண்ணெய் போன்ற சித்த மருந்துகளைப் பயன்படுத்தத் தோல் வறட்சியின் தீவிரம் குறையும்.

வாழ்க்கை முறை
முன்பனிக் காலத்துக்கு அவசியமான வெந்நீரை ‘சேமச் செப்பிலிருந்து அருந்தலாம்’ எனும் குறுந்தொகை பாடல் வரி, குடிப்பதற்கு வெந்நீரையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. சுடுநீரை நீண்ட நேரம் வெப்பமாக வைத்திருக்கும் ‘சேமச் செப்பு’ என்கிற வெப்பக்குடுவையை (இக்கால ஃபிளாஸ்க் போல), அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருப்பது, நவீன அறிவியலுக்கான முன்னோடி.

முன்பனிக் காலத்தில் குளிர்ந்த தரையில் படுப்பதையும், நீர்க் காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அடங்கியிருந்த வாத நோய்கள், குளிர்ச்சித் தன்மையால் இக்காலத்தில் அதிகரிப்பது இயல்பு. எனவே, சித்த மருத்துவ எண்ணெய்களை லேசாகச் சூடாக்கி, வலியுள்ள பகுதிகளில் இதமாகத் தடவலாம்.

முகவாதம்
இக்காலத்தில் ஜன்னலோர இருக்கையில் குளிர்க்காற்று படும்படி உட்கார்ந்து நீண்ட தூரம் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சிலருக்குக் குளிர்க்காற்றால் முகவாதம் (Facial paralysis) உண்டாக வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்லாமல், உடலில் வெயில் படும்படி சூரிய ஒளியில் சிறிது நேரம் இளைப்பாறுவது சிறந்தது.

உடலுக்குத் தேவையான சூட்டைத் தந்து, ஈரப்பதத்தால் உண்டாகும் நுண்கிருமிகளையும் அழிக்க ஆதவனின் ஒளி உதவுகிறது. வீட்டு ஜன்னல்களை முழு நேரமும் அடைத்து வைக்காமல், பகலில் திறந்து வைப்பதன் மூலம் கிருமிகளை அழிக்கும் சூரிய ஒளியை வீட்டுக்குள் வரவேற்க முடியும். அது நம் ஆரோக்கியத்தையும் சேர்த்து பாதுகாக்கும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு:
drvikramkumar86@gmail.com
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.