பயணித்தாலே இனிக்கும்!

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,581
Likes
73,713
Location
Chennai
#1

சே. பிருந்தா
வீடு
நடக்கும் திசையெல்லாம்முட்ட நேர்கிற சுவர்கள்
சிலைபோலென்னை
இறுக்குகிற சுவர்கள்
நானொரு சமாதியுள்
நிறுத்தி வைக்கப்பட்டு


பெண் பயணப்படும்போதுதான், அதற்குப் பழக்கப்படும்போதுதான், தன் சுமைகளை ஒவ்வொன்றாக விடும்போதுதான் லேசாகிக் காற்றாகிப் பறக்க முடிகிறது; தொலைதூரங்களை அடைய முடிகிறது. பயணங்கள் இதை அழகாக, இயல்பாகச் செய்துவிடுகின்றன. இயற்கையின் பிரம்மாண்டம் முன் நாம் ஒரு தூசு, நாம் பெண் மட்டுமே அல்ல இயற்கையின் ஓர் அங்கம் என உணர்வதும் அப்போதுதான்.
ஆனால், ஆண் – பெண் இருவருக்கும் உரிமையான பூமியில் ஆண் எங்கும் எப்போதும் எப்படி வேண்டுமானாலும் செல்ல முடியும்; வாழ முடியும். பெண்ணுக்கு அப்படியல்ல. அது யாரால், எதனால், ஏன் இப்படியானது?
பெண்ணுக்கும் பூமி சொந்தம்

பெண்களுக்கெதிராக எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன என்பதைச் செய்தித்தாள்களில் தினமும் பார்க்கிறோம். எங்காவது வரிசையில் நின்றால்கூட எரிச்சலாக இருக்கிறது. தியேட்டருக்குச் சென்றால் முட்டி மோதிக்கொண்டுதான் போகிறார்கள். கோயிலில், பஸ்ஸில், ரயிலில் - கேட்கவே வேண்டாம். பொதுவில் பகலில் எல்லார் முன்பும் இப்படி நடந்துகொள்கிறவர்கள், தனியே ஒரு பெண் இருந்தால் என்ன செய்வார்கள்?
இந்த உலகம் பெண்கள் பயணிக்கத் தகுதி இல்லாமல் இருக்கிறது என்றால், பெண்கள் வாழவே தகுதி இல்லாமல் இருக்கிறது என்றும் அர்த்தம். ஏனென்றால், வெளியில் யாரால் பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறோமோ, அவர்களோடுதான் வீட்டில் தினமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவருமே, யாருக்கோ அண்ணனாகவோ தம்பியாகவோ தகப்பனாகவோ வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தாம்.
குழந்தைகள், பெண்களோடு வீட்டில் ஒரு இயல்பு, வெளியில் ஒரு இயல்பு; குடிக்கும் போது ஒரு இயல்பு, குடிக்காதபோது ஒரு இயல்பு; பச்சை சட்டை போடும்போது ஒரு இயல்பு, வெள்ளை வேட்டி கட்டும்போது ஒரு இயல்பு; படித்தவர்களாக ஆகும்போது ஒரு இயல்பு, படிக்காமல் இருக்கும்போது இன்னொரு இயல்பு – இப்படித்தான் ஆண்கள் இருக்கிறார்கள் என்றால், நமது ஒட்டுமொத்த சமூகத்தையே மாற்ற வேண்டியிருக்கிறது.


வாசல் திறக்கும் பயணம்

‘வீட்டை விட வெளி’ என்ற விஷயம்தான் பொதுவாக எல்லாருக்குமே பிடிக்கும். பேசக்கூட ஆரம்பிக்காத குட்டிக் குழந்தைகளிடம் இதைத் தெரிந்துகொள்ளலாம். தன்னை யார் வெளியே அழைத்துச் செல்கிறார்களோ அவர்களிடம்தான் கூடுதல் அன்பைக் காட்டும்.
நான் பிறப்பதற்கும் ஓரிரு ஆண்டுகள் முன்பு எங்கள் வீட்டின் மொட்டைமாடியை உயர்த்திக் கட்டி வீடாக்கினார்கள். வாழ்வில் நான் ஒரு மொட்டைமாடிக்கு அவ்வளவு ஏங்கி இருக்கிறேன். மொட்டை மாடி இருக்கிற காரணத்துக்காகவே நண்பர்கள் வீடே கதி என்று இருந்திருக்கிறேன். ‘மொட்டைமாடிக்குப் போகலாமா’ என்பதுதான் மனம் பகிர்ந்த பேச்சுகளின் ஆதார சுருதியாக இருந்திருக்கிறது. நினைவில் தங்கிய பேச்சுகள், பகிர்தல்கள் எல்லாம் மொட்டைமாடியிலேயே நிகழ்ந்தன. முகம் மோதிய காற்று மனம் அள்ளிப் பறக்க, வானெங்கும் நட்சத்திரங்கள் என மொட்டை மாடி கொள்ளைகொண்டது.
மொட்டைமாடியில் வானம் பார்ப்பது ஒரு வகை மகிழ்வு என்றால், காட்டில் பச்சை வாசத்துடன் அடர் மரங்கள் வழிவிட ஆங்காங்கே தெரிகிற வானில் நட்சத்திரங்களைப் பார்ப்பது ஒரு அனுபவம். மலைக்காடுகளில் நட்சத்திரங்களின் அடர்த்தியும் எண்ணிக்கையும் இன்னும் அதிகமாகத் தெரியும். அதுவே பாலைவனத்தில் எங்கும் தங்குதடையற்று விரிந்த வானத்தில் நட்சத்திரங்கள் கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பது சுகானுபவம்.
18 வயதில்தான் ரயிலில் முதன்முறையாகப் பயணித்தேன். அதன் பிரம்மாண்டமும் வேகமும் கடலைப் போல ஆட்கொண்டன. தனியே பயணித்தது என்றால் வங்கித் தேர்வுகளுக்காகப் பயணித்தது. வண்டி ஏற்றிவிட ஒருவர்; வருகையில் திரும்ப எதிர்கொள்ள ஒருவர் என்று நகரும் ஒரு பெட்டியில் சென்று திரும்பின மாதிரித்தான் இருக்கும்.
பயணங்களில் விரும்பத்தகாத சம்பவங்களும் நடப்பதுண்டு. எதிர்பாராத விபத்துகளைப் பற்றிச் சொல்லவில்லை. வேண்டுமென்றே நம்மேல் உரசுவது, இடிப்பது, தீண்டுவது என்று பயணிப்பதன் உல்லாச மகிழ்வையே கசக்கச் செய்கிற அனுபவங்கள் அவை. அப்போது எழுந்து நின்று எல்லாருக்கும் கேட்கும் வகையில், ‘ நீங்கள் மேலே படுவது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சொல்வேன். ஒரு தகாத செயலை எந்தக் கூச்சமும் இல்லாமல் செய்ய முடியும்போது, அதைக் கடிந்து சொல்ல நாம் ஏன் தயங்கவோ அச்சப்படவோ வேண்டும்?

பெருகும் உற்சாகம்

பயணிப்பதற்காகவே பயணிப்பது என்று முடிவெடுத்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான். அந்த முடிவே மனதுக்கு அத்தனை உற்சாகத்தை அளித்தது. எனது பயணம் முழுதாகத் தொடங்கியது அப்போதுதான்.
முதல் ட்ரெக்கிங் ராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடர் சென்றோம். அதுவரை வீடு வரைந்துகொண்டிருந்த மகள், அந்தப் பயணத்துக்குப் பிறகு நிறைந்த வண்ணங்களுடன் வீட்டைச் சுற்றி காடுகள் வரைந்தாள். ஒரு பயணம் நம்மை என்ன செய்யும் என்பதற்கான குறியீடு இது.
2016 டிசம்பரில் கோவா சென்றோம். இரவில் சாதாரணமாகத் தெருவில் நடப்பது என்பதே சாத்தியம் இல்லாத இந்த வாழ்வில், கடற்கரை ஓரமாகவே இரண்டு நாட்கள் நடந்து சென்றது அவ்வளவு மகிழ்வைத் தந்தது. கடல் மேல் பலூனில் பறக்கிற ‘பேரா செய்லிங்’ அனுபவத்துக்காக நானும் மகளும் அதற்கு ஆறு மாதங்கள் முன்பு நீச்சல் கற்றுக்கொண்டோம். கடல் மேல் பறந்தபோது, இந்தப் பூமியும் ஆழ் நீலக் கடலும் நுரைத்த அலைகளும் எல்லையே இல்லாத நீல வானமும் என்னை ஒரு பறவையைப் போல உணரச் செய்தன. நினைக்கும் போதெல்லாம் இனிக்கிற அனுபவம் அது.
நினைத்துக்கொண்டால், நானும் மகளும் ஒரு நாள் முழுவதும் இலக்கற்று மின்சார ரயிலில் பயணிப்போம். மற்றொருபுறம் நாளெல்லாம் சோர்ந்து, காரில் வீடு திரும்பும்போது, கேட்டருகே வந்தவுடன் பாடல்கள் கேட்டபடி, இரவின் காற்றோடு உலா வரத் தோன்றினால் மறுபடி ஒரு சுற்று போய் வருவோம். அது மறுநாளை அவ்வளவு உற்சாகமாக்கிவிடும்!
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,581
Likes
73,713
Location
Chennai
#4
வானையும் கடலையும் அளப்போம்!

ங்களது ‘சாவித்திரிபாய் ஃபூலே’ பயணக் குழுவின் விதிகள் அலாதியானவை. நாங்கள் தோழிகளாக இணைந்து காடு, மலை, கடற்கரை, பாலைவனம் என்று பயணிக்கிறோம். பெண்கள் மட்டுமே செல்லும் பயணங்கள். அம்மா, பெண் வரலாம். ஆனால், மகள் என்பதால் அம்மாவிடமும் அம்மா என்பதால் மகளிடமும் எந்தச் சலுகையும் கிடைக்காது. இங்கு அனைவரும் தோழர்கள்தாம். குழு உறுப்பினர்கள் யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது, சண்டை போடக் கூடாது. தமது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லலாம். விருப்பான உணவைச் சாப்பிடலாம். பயணச் செலவைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

நனவாகும் கனவு

பெரும்பாலான பெண்களுக்குப் பயணம் போவது என்பது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கும் போவதாகவே அமைந்துவிடுகிறது. அம்மா, மனைவி, மருமகள், மாமியார், பாட்டி, மகள், சகோதரி என்ற எந்தப் பொறுப்பும் இல்லாமல் சுதந்திரமாகத் தோழிகளுடன் இணைந்து இயற்கையை ரசிப்பதற்கான பயணம், பெண்ணுக்கு எட்டாக்கனவுதான். இந்தக் கனவை நனவாக்குவதே எங்கள் பயணக் குழுவின் நோக்கம்.
நான்காண்டுகளுக்கு முன், உலக உழைக்கும் மகளிர் நாளன்று திண்டிவனம் அருகிலுள்ள பனைமலை, மண்டகப்பட்டு, தளவானூர் ஆகிய தொல்லியல் இடங்களுக்கு ஒரு நாள் பயணமாகச் சென்றோம். அதுதான் முதல் பயணம். ராஜஸ்தானின் ஆரவல்லிமலைத் தொடர் - தார் பாலைவனம், கர்நாடகாவில் தலைக்காவிரி-ஹளபேடு-பேளூர், கோவா, கேரளாவின் பரம்பிக்குளம், கொல்கத்தாவின் சுந்தரவனக் காடுகள், புதுச்சேரி, தமிழகத்தில் ஜவ்வாதுமலை, டாப் ஸ்லிப் என்று குழுவின் பயணம் தொடர்கிறது.
சாவித்திரிபாய் ஃபூலே பெண் பயணக் குழுவின் பயணங்கள் இரண்டுவிதமானவை. ஒன்று, நாங்களாக ஏற்பாடு செய்துகொள்ளும் இரண்டு அல்லது மூன்று நாள் பயணம். இரண்டாவது, யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு ஏற்பாடுசெய்யும் ட்ரெக்கிங் நிகழ்வில் இணைந்து செல்லும் ஏழெட்டு நாள் தொலைதூரப் பயணங்கள். யூத் ஹாஸ்டல் பற்றிச் சொல்லியாக வேண்டும். பயணம் போக விரும்பும் பெண்கள் இந்தத் தன்னார்வ அமைப்பில் உறுப்பினராகி, நாடெங்கிலும் அவர்கள் ஏற்பாடு செய்யும் ட்ரெக்கிங்கில் பங்கேற்கலாம். செலவும் குறைவு, பாதுகாப்பான அமைப்பும்கூட. இவர்களது http://www.yhaindia.org/ என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் பெறலாம்.
மாறும் பார்வை

சக தோழிகளுடன் பயணிப்பது பெண்ணுக்கு மகிழ்வளிக்கிறது. அவளது மனதை மலரச் செய்கிறது. புதிய இடம், இதுவரை பார்த்திராத நிலப்பரப்பு, அறிமுகமற்ற மனிதர்கள், பழக்கமற்ற உணவு வகைகள் என்று எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் குழந்தையைப் போன்ற குதூகலத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. இதுவரை குடும்பத்தினருடன் மட்டுமே பயணம்போன தோழிகள் எங்கள் குழுவில் இணைந்து பயணிக்கும்போது, அவர்களிடம் வெளிப்படும் ஆளுமையும் திறமைகளும் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துகளும் வியக்க வைக்கின்றன. எந்த முகமூடியும் இல்லாமல் பேசிக்கொள்ள நம்பிக்கையான பரந்தவெளியைப் பயணம் உண்டாக்குகிறது. பயணம் போய் வந்தபின் அவர்கள் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமாக, பக்குவமாக எதிர்கொள்வதைக் கவனிக்கிறேன்.
அனுபவம் புதுமை

67 வயது தோழி, தனது நீண்ட வாழ்க்கையில் குடும்பத்தினர் இல்லாமல் வந்த முதல் பயணம் எங்களுடன்தான். 55 வயதுத் தோழி வாழ்க்கையில் முதன்முறையாக ஜீன்ஸ் அணிந்ததும் (மருமகளின் பரிசு) எங்களுடனான பயணத்தில்தான். 57 வயது தோழிக்கு முதன்முறையாக டீஷர்ட்டும் டிராக் பேண்ட்டும் போட்ட சிறப்பு நிகழ்வும் இங்கேதான் நடந்தது. குழந்தைகள் யாஷ்னா, அபிராமி, ஷைலு, நேஹா முதல் டீன் ஏஜில் நுழைந்திருக்கும் ரித்திகா, நிலா, ரித்தி மேகவதிவரை எல்லாருக்கும் குழுவில் சம உரிமை உண்டு. குழுவின் பயணத் திட்டத்தை வடிவமைக்கும்போதும் செயல்படுத்தும்போதும் இவர்களும் பங்கேற்பார்கள்.
ஒரு நிலப்பரப்பைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுவான கருத்துகளைப் பயணங்கள் மாற்றியமைத்திருக்கின்றன. ராஜஸ்தான் என்றாலே வறட்சி என்ற பிம்பம்தான் பொதுவாகத் தோன்றுகிறது. ஆனால், அடர்ந்த பசுமையான காடுகள், நீர் நிரம்பியிருக்கும் ஏரிகள் என ஆரவல்லி மலையேற்றம் அந்த மாநிலத்தின் அழகைக் காட்டியது. கோவா ட்ரெக்கிங்கில் இரண்டு நாள் கடற்கரையோரமாக நடந்தோம். அப்போது ‘பாரா செய்லிங்’ எனப்படும் படகில் இணைத்திருக்கும் பாராசூட்டில் விண்ணில் பறந்தது பரவச அனுபவம்!
பரம்பிக்குளம் சென்றபோது, பெரியாற்றில் ‘பேம்பூ ராஃப்டிங்’ எனப்படும் மூங்கில் மிதவையில் பயணித்தோம். கொட்டும் மழையில் காட்டில் யானை சவாரி சென்றோம். கேரள வனத்துறையினர் உடன் வந்து அனைத்து உதவிகளும் செய்தனர்.
கொல்கத்தா நகரைச் சுற்றியபோது சாப்பிட்ட சாலையோர உணவும் மண்குவளைத் தேநீரும் சுவையோ சுவை, விலையும் மலிவு.
எல்லையில்லாப் பயணம்

ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் ட்ரெக்கிங் சென்றோம். பகலெல்லாம் வெயிலில் நடந்து இரவில் கடும்குளிரில் கூடாரங்களில் தங்கினோம். பாலைவன மணலில் விழுந்து புரண்டு விளையாடிய போதும் ஒட்டகச்சவாரியின் போதும் வயதை மறந்து சிறுமிகளானோம்.
பெண்கள் தனியே பயணம் செல்வது பாதுகாப்பானது அல்ல என்ற நம்பிக்கை தவறு. நாங்கள் சென்ற எந்தப் பயணத்திலும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டதில்லை. ‘ரக்சாக்’ எனப்படும் பையை முதுகில் சுமந்துகொண்டு பயணிக்கும் பத்து, இருபது பெண்களைப் பார்க்கும் மக்கள் புன்னகையுடனும் நட்புடனும் எதிர்கொள்கின்றனர். உதவத் தயாராக இருக்கின்றனர்.
உடைக்கும் நகைக்கும்தான் பெண்கள் செலவழிக்கிறார்கள் என்ற பொய்ப் புகாரைப் புறந்தள்ளி வசதியான பயணத்துக்குப் பணம் ஒதுக்குகிறோம். பேருந்து, ரயில் தவிர விமானத்திலும் பயணிக்கிறோம்.
சுந்தரவனக் காடுகள் சென்றபோது வங்கதேச எல்லையையும் தார் பாலைவன ட்ரெக்கிங்கில் பாகிஸ்தான் எல்லைப் புறத்தையும் பார்த்தோம். பெண்களின் பயணத்துக்கு எல்லையே இல்லை. நம் அடிகளால் பிரபஞ்சத்தை அளப்போம்!
கட்டுரையாளர், ஆவணப்பட இயக்குநர்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,581
Likes
73,713
Location
Chennai
#6
காட்டுக்குள் ஒரு தூய்மைப் பயணம்ந்தியாவைச் சுத்தமும் சுகாதாரமும் மிக்க நாடாக மாற்றுவதாகச் சொல்லி, பிரதமர் மோடி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், அது பல மாநிலங்களிலும் திட்டமாக மட்டுமே இருக்கிறதே தவிர செயல்வடிவம் எடுக்கவில்லை. ஆனால், கேரளாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரியான சுதா, சொல்லைவிடச் செயலில் நம்பிக்கை உள்ளவர். இவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கட்டம்புழா வனச்சரகத்தில், வனச்சரகராகப் பணியாற்றிவருகிறார். கடந்த 2016-ல் அங்குள்ள ஒன்பது ஆதிவாசி குடியிருப்புகளில் கழிவறை கட்டும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.


தடைபோட்ட தயக்கம்

கழிவறை கட்டுவது சாதாரணமான விஷயம்தானே, இதில் என்ன கஷ்டம் இருக்கிறது என்று பலருக்கும் தோன்றலாம். யானைகள் உலாவரும் அடர்ந்த வனப்பகுதியில் ஆள் நடமாட்டமே அரிதாக இருக்கும் இடத்தில் கழிவறை கட்டுவதற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதே இமாலய சாதனைதான். கட்டம்புழா வனச்சரகத்தில் இருக்கும் ஒன்பது ஆதிவாசி குடியிருப்புகளும் 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றன.
அடர்ந்த வனப்பகுதியில் ஒற்றையடிப் பாதைகளை மட்டுமே நம்பியிருக்கும் இந்த மக்கள், ஒரு குடியிருப்பில் இருந்து மற்றொரு குடியிருப்புக்குப் போகக் குறைந்தது மூன்று மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். இப்படிப்பட்ட குக்கிராமப் பகுதியில்தான் 497 கழிவறைகளைக் கட்டி சுதா சாதித்திருக்கிறார்.

அங்குள்ள மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களை மட்டுமே நம்பியிருந்தனர். வனப்பகுதி என்பதால் யானை உள்ளிட்ட விலங்குகளோடு இரவு நேரத்தில் விஷப் பூச்சிகளால் தாக்கப்படும் ஆபத்தும் அங்குள்ள ஆதிவாசி மக்களுக்கு இருந்தது. இந்த நிலையிலும் தங்களுக்குச் சொந்தமாகக் கழிவறை வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு ஏற்படவில்லை. இதற்குக் காரணம் கழிவறை கட்டக் கூடாது என்பதல்ல; கழிவறை கட்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற மனநிலைதான் அவர்களைத் தடுத்தது.
சவால்களின் அணிவகுப்பு

சுதா பஞ்சாயத்து நிர்வாகத்தின் நிதியுதவி, வனத்துறை அனுமதி ஆகியவற்றோடு ஆதிவாசி குடியிருப்புகளில் கழிவறை கட்டும் பணிக்கான அனுமதியையும் வாங்கினார். ஆனால், அதற்கு பிறகுதான் சவால்கள் தொடங்கின. எந்தவொரு கட்டுமான ஒப்பந்ததாரரும் வனப்பகுதிக்குள் கழிவறை கட்டுவதற்கு முன்வரவில்லை. கழிவறை கட்டுவதற்கான பொருட்களை நியாயமான விலையில் வாங்கினாலும், அவற்றைச் சாலை வசதி இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்வது செலவை வெகுவாக அதிகரிக்கும் என்பதுதான் அவர்கள் அனைவரும் சொன்ன காரணம்.
இதற்கு ஒரு சுலபமான தீர்வை சுதா கண்டறிந்தார். வனப்பகுதி வழியாகச் செல்லும் ஆறுகளில் பரிசல் மூலமாகக் கட்டுமானப் பொருட்களை ஆதிவாசி மக்கள் வசிக்கும் காலனிக்கு அருகே கொண்டு சென்றார். சில நேரம் கட்டுமானப் பொருட்களின் பாரம் தாங்காமல் பரிசல் கவிழ்ந்ததும் நடந்திருக்கிறது. ஆனால், அவற்றால் மனம் தளராமல் இலக்கை எட்டிப்பிடித்தார்.


இடைவிடாத உழைப்பு

ஒருவழியாகக் கட்டுமானப் பொருட்களைக் கழிவறை கட்டவேண்டிய பகுதிக்குக் கொண்டு சென்றாகிவிட்டது. ஆனால், அதைக் கட்டுவதற்கு தேவையான ஆட்கள் இல்லை என்பது அடுத்த பிரச்சினையாக உருவெடுத்தது. எர்ணாகுளம் புறநகர் பகுதிகளில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்களை அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச் செல்வது மிகப்பெரிய சவாலாக மாறியது. யானைகள் உலவும் காட்டுக்கு வந்து வேலை செய்ய யார்தான் முன்வருவார்? இதற்கும் வனச்சரகர் சுதா தீர்வு கண்டார்.

ஆதிவாசி குடியிருப்பு பகுதியிலேயே கட்டுமான தொழிலில் ஓரளவு அனுபவம் இருந்தவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் போதிய பயிற்சி பெற உதவினார். இதன் விளைவாகக் கழிவறை கட்டுவதற்கான ஆள் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, ஆகஸ்ட் 2016-ல் கழிவறை கட்டும் பணி தொடங்கியது. தொடர்ந்து மூன்று மாதங்கள் சுதாவின் ஓய்வில்லாத செயல்பாட்டால், 497 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2016 அக்டோபர் மாதம் திறந்தவெளி கழிவறை இல்லாத இந்தியாவின் மூன்றாவது மாநிலம் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்தது கேரளா.
கழிவறை என்றால் என்னவென்றே தெரியாத ஒன்பது ஆதிவாசி குடியிருப்புகளிலும் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து விளக்கினார். வனச் சரகர் வேலையோடு மட்டும் தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் தான் பணியாற்றுகிற வனத்தைச் சுற்றியுள்ள மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக உழைத்த சுதாவுக்கு சிறந்த வனத்துறை அதிகாரிக்கான விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கிக் கவுரவித்தார்.
மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசின் நாரி சக்தி புரஸ்கார் விருதையும் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சுதாவுக்கு வழங்கினார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.