பள்ளியைக் கண்டால் பயமா

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பள்ளியைக் கண்டால் பயமா?

டாக்டர். ஆ. காட்சன்
ஓவியம்: முத்து
சில மாதங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் எனக் கூறி மனநல ஆலோசனைக்கு என்னிடம் அழைத்து வந்திருந்தார்கள். அந்த மாணவி மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து அழுதுகொண்டே இருந்தாள். சமீபத்தில் கையில் பிளேடால் பலமுறை கீறப்பட்ட அடையாளங்கள் இருந்தன.

பெற்றோரிடம் கேட்டபோது, பள்ளிக்குச் செல்ல அவள் மறுப்பதாகவும், வேண்டுமென்றே இப்படிச் செய்வதாகவும் புகாரை அடுக்கினார்கள். ‘இவள் இருப்பதைவிட, செத்துவிட்டால் நல்லது’ என்கிற அளவுக்குத் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண்ணைப் பரிசோதித்துப் பார்த்ததில், டிஸ்லெக்சியா (Dyslexia) என்ற கற்றல்திறன் குறைபாடு பிரச்சினையால் அவள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கற்றல்திறன் குறைபாடு
கற்றல்திறன் குறைபாடு கொண்டவர்களின் மனவளர்ச்சியும் அறிவுத்திறனும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இவர்களுக்கு எழுத்து வடிவங்கள் மற்றும் கணிதக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல், வாசித்தல் ஆகியவற்றில் அதீதப் பிரச்சினைகள் இருக்கும். வாய்மொழியாகப் பாடங்களை எளிதாகச் சொல்லும் இவர்களால், அதை எழுத முடிவதில்லை. அப்படியே எழுதினாலும் கேலிக்குள்ளாகும் அளவுக்கு எழுத்துப்பிழைகள் இருக்கும்.

'தங்கமீன்கள்' படத்தில் ‘W' என்ற கதாபாத்திரம் மூலம், இதை அழகாகக் காண்பித்திருப்பார் இயக்குநர். ‘மற்ற எல்லாவற்றிலும் நன்றாகத் திறமைகளை வெளிப்படுத்துகிறான். ஆனால், பரீட்சை பேப்பரில் மட்டும் ஒன்றுமே இருப்பதில்லை’ என்பதுதான், இப்படிப்பட்ட மாணவர்களுடைய பெற்றோர் சொல்லும் முக்கியப் புகார்.

பாதிப்பின் தீவிரம்
பத்து வயதுக்குள் கண்டறியப்பட்டுத் தீர்வு காணப்பட வேண்டிய விஷயம், கற்றல்திறன் குறைபாடு. ஆனால், ஆரம்பத்திலேயே இதைக் கண்டறியாமல் போவதாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொதுத்தேர்வு நடத்தப்படும் பத்தாம் வகுப்புக்குள் நுழையும்போதுதான் பிரச்சினை பூதாகரமாகிறது. சுமார் 5-10 % மாணவர்கள், இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் குறைபாடு உள்ள வளரிளம் பருவத்தினரின் மீது அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு திணிக்கப்படுவதால், பலவகை மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பைக் ரேஸ் பந்தயத்தில் ஒருவருக்கு சைக்கிளைக் கொடுத்து ஓட்டச் சொல்வதைப் போன்றது இது.

மேலே கூறப்பட்ட சம்பவத்தில் அந்தப் பெண், பள்ளியைப் புறக்கணிக்க வழிதெரியாமல், ஒரு மாதமாகத் தினசரி காலையில் பள்ளிக்குப் புறப்படுவதுபோல, பையை எடுத்துக்கொண்டு அவள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டைமாடியிலுள்ள தண்ணீர் தொட்டியின் கீழ் பகல் நேரம் முழுவதையும் கழித்துவிட்டு, மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்புவதுபோல் கீழே வந்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்குத் தெரியவந்ததும், அவளுடைய பிரச்சினையை அவர்கள் புரிந்துகொள்ளாமல் போனதன் விளைவே, தற்கொலை முயற்சி.

சலுகைகள் என்னென்ன?
இதுபோன்ற கற்றல்திறன் குறைபாடு மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய இளம் வயதினருக்கு அரசு பொதுத் தேர்வுகளில் பல சலுகைகள் வழங்கப்படுவது பற்றி பலருக்கும் தெரியாது. சம்பந்தப்பட்ட மாணவ / மாணவிக்குக் குறிப்பிட்ட பிரச்சினை இருப்பது மருத்துவக் குழு மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டால் சலுகைகளைப் பெறலாம்.

பிரச்சினையின் தீவிரத்துக்கேற்ப ஒரு மொழிப் பாடத்திலிருந்து விலக்கு அளித்தல், எழுத்துப் பிழைகளுக்கு மதிப்பெண்ணைக் குறைக்காமல் கருத்தின் அடிப்படையில் விடைத்தாளைத் திருத்தம் செய்யப் பரிந்துரைத்தல், ஒரு மணி நேரம்வரை கூடுதல் நேரம், சொல்வதை எழுதுவதற்கு எழுத்தர்களை நியமித்தல் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, மேற்பட்ட சலுகைகளோ வழங்கப்படும்.

பாலியல் தொந்தரவுகள்
சில நேரங்களில் வளரிளம் பெண்கள் பள்ளி செல்லும் வழியில் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவது உண்டு. கேலிப் பேச்சு மூலமாக மன உளைச்சலுக்கு ஆளாதல், சக மாணவர்களால் காதலிக்கக் கட்டாயப்படுத்தப்படுதல் போன்ற வெளிப்படையாகச் சொல்ல முடியாத காரணங்களும் பள்ளியைப் புறக்கணிக்கக் காரணமாக இருக்கலாம். இந்த இடத்தில்தான் வளரிளம் பெண்ணுக்கும் தாய்க்குமான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி பள்ளியைப் புறக்கணிப்பதாகச் சொல்லிப் பெற்றோர் அழைத்து வந்தார்கள். பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் அவளுக்கு வயிற்றுவலி, வாந்தி வந்துவிடுவதாகவும், அதனால் அடிக்கடி விடுப்பு எடுப்பதாகவும் காரணம் கூறினார்கள். பல முறை ஸ்கேன், மற்றப் பரிசோதனைகளை எடுத்துப் பார்த்ததில் வயிற்றுப் பகுதியில் எந்தத் தொந்தரவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்ததில், அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு பையன் அடிக்கடி பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வதாகவும், அதனால்தான் பள்ளிக்குப் போகவே பயமாக இருப்பதாகவும் கூறினாள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், அவள் பல முறை இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் அம்மாவோ ‘நீ ரோட்டில் ஒழுங்காகச் சென்றால், யார் உன்னைத் தொந்தரவு செய்யப்போகிறார்கள்' என்று அந்தப் பெண்ணின் மீதே பழியைப் போட்டு, தட்டிக் கழித்துள்ளார்.

எனவே, பெற்றோர் நம்மைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, தங்களுக்கு நேரிடும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை வளரிளம் பெண்கள் தைரியமாகச் சொல்வார்கள். ஆரம்பக் கட்டத்திலேயே அதைச் சரியாகக் கையாளும்போது, பல பிரச்சினைகளைத் தடுத்துவிடலாம். இல்லையென்றால் மேற்கண்டதுபோல மனரீதியான பாதிப்புகள், உடல்ரீதியான பாதிப்புகளாக வெளிப்படும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.