பாதாம், பிஸ்தா மற்றும் வேர்க்கடலை!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பாதாம், பிஸ்தா மற்றும் வேர்க்கடலை!

By அருணா ஷ்யாம்


நிறைய புரதம், சிறிது கொழுப்புச் சத்து, வைட்டமின் பி இவை ஒன்றாக அமைந்து ஆரோக்கியத்தை அளிக்கும் அதிசய உணவு நட்ஸ் எனப்படும் கொட்டைவகைகள். இந்தப் பெயரைக் கேட்டாலே பாதாம், பிஸ்தா, முந்திரி என்று கண் முன் வந்து காட்சிகள் நிற்கிறதா?

மணிபர்ஸை காலி செய்யும் அயிட்டங்களாயிற்றே என்று நினைக்கிறீர்களா? சற்றுப் பொறுங்கள்!

உங்கள் மனக்கண் முன் வேர்க்கடலை உருண்டைகளை கொண்டு வந்து நிறுத்துங்கள். இவற்றின் சுவையும் மணமும் மறந்துவிட்டீர்களா?

வேர்க்கடலையில் தையாமின் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளது. வேர்க்கடலை தூள், சட்னி, வெல்லம் சேர்த்து உருண்டைகளாகவும் தயாரித்து எல்லா வயதினரும் உட்கொள்ளலாம். வறுத்த வேர்க்கடலை சிறிது உப்பு, மிளகாய் வற்றல் தூள் செய்து வைத்துக் கொண்டால் நாம் தினமும் வீட்டில் செய்யும் பொரியலில் இறக்கி வைக்கும் முன் ½ டீஸ்பூன் சேர்த்து பரிமாறினால் சுவைக்கு சுவை, சத்துக்குச் சத்து.

மதுகலை படிப்பு படிக்கும் போது, தேர்வு எழுதச் செல்லும் முன் என் பாட்டி, முந்தைய நாள் இரவு ஊற வைத்த நான்கு பாதாம் பருப்பை அம்மியில் வைத்து விழுதாக்கி அதை பாலுடன் கலந்து சூடாக்கி குடிக்க வற்புறுத்துவார். ‘எதுக்கு பாட்டி இதெல்லாம்’ என்று கேட்க, அவர், ‘படித்தது எல்லாம் ஞாபகம் வரவேண்டும் இல்லையா?’ என்று கூறுவார். பாதாம் பருப்பில் ஒமேகா கொழுப்பு அமிலம் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஒமேகா கொழுப்பு அமிலம் மூளைக்கு மற்றும் இதயத்துக்கும் சிறந்த பாதுகாப்பை தருகிறது.

கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி உடம்பின் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இருதய நோயாளிகளும் வாரத்திற்கு மூன்று முறை 4-5 பாதாம் பருப்புக்களை உட்கொண்டால் ரத்த நாளங்கள் சீராக செயல்படும்.

பிஸ்தா பருப்பில் தாவரக் கூட்டுப் பொருளான பைட்டோஸ்டெரோல்ஸ் தாராளமாக காணப்படுகிறது. இத்துடன் பொட்டாஷியம், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், கரோடின் போன்ற சத்துக்களும் உள்ளதால் இதனை அளவோடு உட்கொண்டால் சருமம் பொலிவும் உடல் ஆரோக்கியமும் பெருகும்.

பிஸ்தா பருப்பில் இருக்கும் பைட்டோஸ்டெரோல்ஸ் என்ற தாவரக் கூட்டுப் பொருள் இதயத்தைப் பாதுகாக்கும். நல்ல கொலஸ்ட்ராலை ரத்தத்தில் பெருக்குகிறது. உப்புச் சேர்க்கப்பட்ட முந்திரி, பாதாம், பிஸ்தாவை (salted nuts) ரத்த அழுத்தம் உள்ளவர்களும், இதய நோய் உள்ளவர்களும் தவிர்ப்பது நல்லது.

உலர்ந்த பழவகைகளில் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம் போன்றவற்றில் அதிக இரும்புச் சத்து, நார்ச்சத்து உள்ளதால் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் ரத்தசோகை, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகளைத் தவிர்க்கலாம். தினமும் ஒரு கப் துருவிய காரட்டுடன் நான்கு உலர்ந்த திராட்சையை சேர்த்து சாப்பிட ரத்த சோகை நோய் முற்றிலும் குணமடையும்.

எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும், அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் என்று பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும், தினமும் நான்கு பாதாம் பருப்பு, இரண்டு முந்திரி, ஐந்து நிலக்கடலை சேர்த்து அரைத்து பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் கொடுத்து வர எடை கூடி அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுவதை தவிர்க்கலாம்.

வெள்ளை எள் ஒரு சத்தான உணவு. இதை உப்பு, புளி, பூண்டு இவற்றுடன் சிறிதளவு புளி சேர்த்து வாணலியில் வதக்கி துவையல் போல் தயாரித்து இட்லி தோசையுடன் சேர்த்து உட்கொள்ளலாம். இதைப் போன்ற எண்ணெய் வித்துக்களை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியம் பெருகும்.

அப்பளம், வடை என்று உணவை எண்ணெயில் பொரித்து எடுக்கும் போது தேவையான அளவு எண்ணெயை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அடிக்கடி அதே எண்ணெயை சூடு செய்து உபயோகிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். அதுபோலவே உபயோகித்த எண்ணெயுடன் புது எண்ணெயை சேர்த்து உபயோகிக்கக் கூடாது.

பூச்சி கொள்ளிகளின் தாக்கத்திலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவ வேண்டும். திராட்சை பழங்களை உப்பு தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைத்த பின்புதான் உட்கொள்ள வேண்டும். முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ஊட்டச் சத்துடன் கூடிய உணவு உடல் ஆரோக்கியத்தை அளிக்கும்.

தொடர்புக்கு - அருணா ஷ்யாம் : 9884172289

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.